Saturday, April 12, 2008

யாத்ரியான் க்ருப்யான் ஜாந் தீஜியே...

சென்னை செல்லும் மெயில் சாந்தமாக நின்று கொண்டிருந்தது.

அவரவரின் அவசரங்களோடும், பதட்டங்களோடும், விடைபெறல்களோடும் ஜனக்களின் கூட்டம் இரயிலின் ஜன்னல்களிலும், வாசல்களிலும் அப்பிக் கிடந்தது. விதவிதமான ஜனங்கள். ஸ்டேஷனின் நிரந்தர ஜீவராசிகளாகிப் போன ஸ்டேஷன் மாஸ்டர், சிவப்புப் போர்ட்டர்கள், ஆர்.பி.எஃப்., அறிவிப்பாளர், நோட்டீஸ் போர்டின் எல்.ஈ.டி.க்களை மாற்றி மாற்றி ஒளிரச் செய்து காத்திருப்போரின் இதய்த் துடிப்பைக் கையாள்பவர்.

சுற்றுலா வந்த மார்வாடிக் குடும்பம், பறக்கின்ற தலைமுடியோடு பெண்கள், வேட்டிகளை மடித்தும் தாழ்த்தியும் அணிந்து கொண்ட நடை போடும் சேட்டன்கள், காதில் மாட்டிய ஐ-பாட், கையோடு இழுத்துக் கொண்டே வரும் ஸாம்சோனைட் என்று எதிலும் கலந்து கொள்ள விரும்பாத பார்வையை பழுப்பு ரேபானில் புதைத்துக் கொண்ட இளைஞர் கூட்டம்...

TVC இரயில் நிலையம் அதன் வழக்கமான பரபரப்போடு இருந்தது.

அவன் அவ்வளவாக அவசரப்பட்டது போல் தோன்றவில்லை. பொறுமையாக, மிகப் பொறுமையாக தயிர் கடைகையில் மெதுவாக திரண்டு வருமே, அது போல் நடந்து வந்தான். ஸ்டேஷன் வாசலில் நுழைந்தான். இடது புறம் நின்றிருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்ட் வரிசையைக் கண்டான். ஒவ்வொருவரும் வரிசையின் நீளத்தைச் சபித்தவாறும், தங்கள் கைக் கடிகாரங்களைப் பார்த்துக் கொண்டும், மேலே தெரிந்த சிகப்பு எலெக்ட்ரானிக் போர்டில் சறுக்கிக் கொண்டிருந்த கால ரயில்களின் கால அட்டவணையைப் பார்த்துக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

வலது புறம் திறந்திருந்த பழச்சாறு கடையில் நின்றிருந்த சில மாணவிகளைப் பார்த்தான். அதில் குதிரை வால் போட்டிருந்த, மஞ்சள் சுடியும், ஓரங்களில் எம்ப்ராய்ட்ரி கொண்ட துப்பட்டாவை பேருக்கு அணிந்திருந்த பெண்ணின் வலது கன்னத்தின் மேல் பூனை முடியாய்ச் சுருண்டிருந்த காதோரம் ஒரு சின்ன மச்சம் இருந்தால் இன்னும் வசீகரமாய் இருப்பாள் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் அவன் இதற்கெல்லாம் வரவில்லை. அவனுக்கு சில அவசர வேலைகள் ஆக வேண்டி இருந்தன. TVC - Chennai Mail கிளம்புவதற்குள் அவன் செய்தாக வேண்டிய காரியங்கள்.

இப்போது விட்டால் வேறு எப்போதும் செய்ய முடியாத வேலைகள்.

இடது புறம் திரும்பி, குழுமியும் வரிசையிலும் நெருக்கிக் கொண்டிருந்த கூட்டத்தின் இடையில் புகுந்து, நுழைந்து படிக்கட்டுகளில் ஏறினான். நுழைவாயிலில் நுழைந்து பார்க்க இரயில் தன் நீண்ட உடலை நீட்டி நின்று கொண்டிருந்தது. குளிர்பானக் கடையில் 'ஆஃபிஸ் கவர், ஒயிட் பேப்பர் இருக்குமா?' என்று அகஸ்மத்தாக கேட்க அவர் இவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு அருகின் கஸ்டமரைக் கேட்டார். 'எந்தா..?'

கம்பிக் கூண்டுக்குள் மைக்கின் முன் தலை நீட்டி எல்லா மொழிகளிலும் பதில் சொல்லிக் கொண்டிருந்த வெள்ளைச் சீருடை அலுவலரை கேட்க, அவர் சலித்துக் கொண்டே சற்று தொலைவில் இருந்த கடையைக் காட்டினார்.அங்கு சென்று ஒயிட் ஷீட் வாங்கிக் கொண்டான். S8 கோச்சை அடைந்தான். 41 - 48 எண்களை ஒட்டிக் கொண்ட சீட்டுகளை அடைந்தான்.

மிடில் பெர்த் இன்னும் விரிக்கப்படாமல் இருக்க ஜன்னலைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான். எதிர் ஜன்னலில் வெள்ளை டீசர்ட், நீல ஜீன்ஸ் அணிந்த மாடர்ன் யுவதி, இரண்டு குழந்தைகள், வெளிர் பச்சை சுடிதார் அணிந்த இளம் தாய், தொப்பை பிதுங்க இறுக்க கட்டம் போட்ட சட்டை அணிந்த, சொட்டை மினுமினுத்த, கண்களில் குடும்ப கருமை இருக்க, பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

கொண்டு வந்திருந்த தோல் பேக்கை மடியில் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான். மூளையின் அணுக்களில் தேக்கி இருந்த Charlie the Manன் பாடலை பேப்பரில் கொண்டு வந்து முடிக்க, இரயில் நகரத் தொடங்கியது.

வேர்த்து விறுவிறுத்து அவன் அருகில் 'தொப்'பென்று கேன்வாஸ் பேக்கை தூக்கி எறிந்து அமர்ந்த அவனைப் பார்த்தான்.

ரயில் வார்கலை தாண்டி கொல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்பர் பெர்த்தில் ஏறி அமர்ந்து கொண்டு கீழே பார்க்கலானான்.

"எக்ஸ்க்யூஸ் மீ..! நீன்களும் சென்னைக்கு தான் வர்றீங்களா..?" ஆங்கிலத்தில் கேட்டான்.

வெளியிலேயே முழு கவனமும் பதித்திருந்த அந்த யுவதி திடுக்கிட்டு, "பர்டன்..?" என்றாள்.

"இல்ல.. நீங்களும் சென்னை தானே வர்றீங்க..?"

"இல்ல. எதுக்கு கேக்கறீங்க..?"

"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஐ.டி.ல தான ஒர்க் பண்றீங்க? டி.சி.எஸ்? ஐ.பி.எஸ்..?"

"இல்லையே. நான் CETல காம்ப்.ஸி. படிக்கறேன். செகண்ட் இயர். இப்ப ஊருக்குப் போய்ட்டு இருக்கேன். ட்ரிஸூர் பக்கத்தில காலடி. உங்களுக்கு இதுக்கு மேல ஏதாவ்து டீடெயில்ஸ் வேணுமா..?"

"இட்ஸ் எனஃப். ஃபைன். நீங்க ஸ்டூடண்டா..? குட்..."

"எதுக்கு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் வேணும் உங்களுக்கு...?"

"ஒண்ணும் இல்லை. நான் பாத்ரூம் போய்ட்டு வர்றேன். அதுவரைக்கும் என் பேக்கை பாத்துக்கறீங்களா..? மேல ஒருத்தன் ஒரு மாதிரியா பார்த்துக்கிட்டே வர்றான். சோ அது தான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு..."

பலமாகச் சிரித்தாள். "கோ அஹெட்...!"

"வெரி தேங்க்ஸ்...!"

குடும்பம் அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்த மாமா குடும்பத்தைக் காண சென்று விட்டது. சீட்டில் அப்பர் பெர்த்தில் அவன் மட்டுமே இருந்தான். கீழே ஜன்னலோரமாக அவள்.

ஒரு முடிவோடு எழுந்தான். தோல் பையை பெர்த்திலேயே வைத்தான். சைடு கம்பிகளைப் பிடித்து கீழே இறங்கினான். அவள் ஒரு மாதிரி பார்த்தாள். சர்ட் பாக்கெட்டில் இருந்து எட்டாய் மடித்து வைக்கப்பட்டு இருந்த பேப்பரை எடுத்தான்.

"மேடம்.. இப்ப போனாரே அவர்கிட்ட குடுத்திடறீங்களா. ப்ளீஸ். நான் கொஞ்சம் பக்கத்துல போய்ட்டு வந்துடறேன்...!" ஆங்கிலத்தில் அவளிடம் நீட்டினான்.

சற்று தயங்கிக் கொண்டே அவள் வாங்கிக் கொண்டாள்.

அவன் நடந்து போனான்.

ஒரு க்யூரியாசிட்டியில் அவள் அந்த காகிதத்தைப் பிரித்து படிக்கத் தொடங்கினாள்.

அதிர்ந்தாள்.

Don't try to save me
Just leave me be
I've got no reason to live
But I've got reason to die
Nobody ever cared
No one was ever there

Every night and day I cry
My cries fall upon deaf ears
I've got no reason to go on
I want it all to stop
I want to end the pain
I want to end the hurt
Theres no purpose for my life
I've got reason to die

I've tried to do what I can
I tried to find reason to live
But nobody cares, they never did
Just let me die, let me die

I want it all to stop
I want to end the pain
I want to end the hurt
Theres no purpose for my life
I've got reason to die

Oh don't you see
I've no purpose to live
All I would like
Is if you'd let me die
Don't call 911, don't call anyone
Just let me bleed, let me die

அவசரமாக எழுந்து இருபுறமும் பார்த்தாள்.

படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்தான் அவன். விரைந்து வீசிய காற்றில் தலைமுடி சிலுசிலுத்து துடித்துக் கொண்டிருந்தது. வாயில் புகைந்து கொண்டிருந்த வெள்ளைச் சுருள் வேகமாக புகையாகக் கலைந்து கொண்டிருந்தது. இடது கை வெளிக்காற்றைத் துழாவிய படி இருக்க, வலது கை லக்கேஜ் கம்பிகளைப் பிடித்துக் கொண்டிருக்க, இடது கால் வெளியே நீட்டிக் கொண்டிருக்க.. அவளைப் பார்த்தான்.

நடுங்கிக் கொண்டே அவள் தலையாட்ட...

அவளைப் பார்த்து சிரித்தான். பிடித்துக் கொண்டிருந்த புகையை தூர வீசி எறிந்தான். அது காற்றின் வேகக்கரங்களில் அடிபட்டு, ஏரிக்கரைப் பாலத்தின் கம்பங்களில் பேயடி பட்டது. சிதறியது. அதன் சிவந்த முனைகள் காற்றின் அணுக்களில் தெறித்தன.

அவள் குரலெழுப்ப முயல...

வலது கையை கம்பிகளில் இருந்து விடுவித்தான். இரு கால்களையும் காற்றில் மிதக்க விட்டு வெளியில் பாய்ந்தான்.

தடக்... தடக்... தடக்... Back Waters கடந்து கொண்டிருந்த ஆற்றுப் பாலத்தின் பார்வை எல்லைகளில் இருந்து கண நேரத்தில் காணாமல் போனான்.

4 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு....
எக்ஸ்ப்ரஸ் ரெயிலின் வேகம் போல கதை சென்றது.இறுதியில் குண்டு வைத்து விட்டீர்களே...
எதிர்பாராத, திடுக்கிடச்செய்த முடிவு.
கதையோட்டம் பற்றி...
நீங்க எப்படி எழுதினீங்களோ தெரியாது. எனக்கு ராஜேஸ்குமார் நாவல் படித்த உணர்வு.(ஆனால் ராஜேஸ்குமார் 18 அத்தியாயக் கதையில் 17 அத்தியாயம் விறுவிறுப்பாய்க் கொண்டு செல்வார்.கடைசியில் கோட்டை விடுவார்.)
கிட்டத்தட்ட தற்கொலையை மையமாகக் கொண்டு அய்யனார் ஒரு சிறுகதை எழுதி இருப்பார் படித்திருக்கிறீர்களா...?(கதாநாயகன் பெயர் கங்கா என ஞாபகம்)
அதுவும் எனக்கு அதிர்ச்சி தந்த ஒன்று.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக்கு! இராஜேஷ்குமார் அவர்கள் அளவிற்கு ஏற்றி விட்டீர்களே! அதற்கே ஒரு தனி நன்றி சொல்கிறேன்.

அய்யனார் கதையைப் படிக்கவில்லை. லிங்க் கொடுத்தால் நன்று.

thamizhparavai said...

http://ayyanaarv.blogspot.com/2007/07/blog-post_27.html
link for that story...

இரா. வசந்த குமார். said...

கதை ஓ.கே.