Saturday, July 26, 2008

ஹாஸ்டல் டு கேண்டீன் - ஓர் என்ன(ண்ண)ப் பயணம்.

குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை எழுப்ப முயன்று...முயன்று..முயன்று.. வென்றேன்.

"ம்..சொல்லு..!"

"டேய்..! ஏதாவது சயின்ஸ் ஃபிக்ஷன் கான்செப்ட் சொல்லுடா. போட்டிக்கு எழுதி அனுப்பணும். முடிய இன்னும் ஒரு வாரம் கூட இல்லைடா..!"

"டேய்... எல்லாமே அறிவியல் தான்டா..! ஓடும்..இல்லை...பறக்கும் குருவியைப் பார். ஓடும் கூவத்தைப் பார். எல்லாமே ஆனந்தம். எல்லாமே அறிவியல்.சிந்தித்துப் பார். தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்...!" சொல்லி விட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்தி The Mummy போஸில் தூங்கிப் போனான்.

ஹூம்..! இவனைச் சொல்லி குற்றமில்லை. நேற்று இரவு ஒரு பிரபல சாமியாரின் கான்ஃபரன்ஸ்க்கு (இப்படித்தான் சொல்ல வேண்டுமாம்!) போய் வந்து லேட்டாக படுத்த எஃபெக்ட்.

ஆனாலும் இவன் கூற்றிலும் ஓர் அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. எல்லாமே அறிவியல் தானே!

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஹாஸ்டல் ரூமில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம். கண்ணில் என்ன எல்லாம் படுகின்றதோ அதில் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள முயற்சித்து, அதில் ஏதாவது கதைக்கு தேறுமா என்று பார்ப்போம். எழுந்து கிளம்பினேன். எது வரை செல்ல..? யோசித்தேன்.

கேண்டீன் வரை செல்வோம் என்று முடிவெடுத்ததற்கு பசி என்ற மற்றுமொரு காரணியும் இருந்தது உங்களிடம் சொல்வதற்கில்லை.

"வெளிய போறப்ப கதவை பூட்டீட்டு போ! பாலாஜி வர்றேன்னு சொல்லி இருக்கான் ஆறு மணிக்கு! சர்க்யூட் தியரி படிக்கறதுக்கு! கேண்டீனுக்கு போனயினா ரெண்டு செட் பூரி பார்சல் வாங்கிட்டு வந்திரு..!" மம்மியிடம் இருந்து குரல்.

வெற்றிடத்தை இரு செவ்வகங்களாகப் பிரித்து இருந்த கதவுகளை இழுத்துப் சாத்தினேன். அறைக்கு உள்ளே இருக்கும் வெற்றிடத்தை, வெளியே இருக்கும் வெற்றிடத்தில் இருந்து பிரிக்கின்றது கதவு. வெற்றிடம் - வெற்றிடம் = வெற்றிடமா? ஸீரோ - ஸீரோ = ஸீரோ. இன்பினிட்டி - இன்பினிட்டி = இன்பினிட்டி. எனில் ஸீரோவும், இன்பினிட்டியும் ஒன்றா..? இல்லை ஒரு வட்டத்தின் இரு அருகில் இருக்கும் எதிர் முனைகளா? கணக்கு சிந்தனையை ஆரம்பித்து வைத்தது.

லாக்கை எடுத்து மாடி, பூட்டை இழுத்து, சாவியால் பூட்டிய பின் உயிரியல் ஆஜரானது. எல்லாமே இதே தத்துவம் தானே? பூட்டைத் திறத்தல், சட்டையில் பட்டன் போடுதல், ஜன்னல் கொக்கி, பவர் ப்ளக்... எல்லாமே உயிரின் இரண்டாம் அடிப்படை செயலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதா..? இல்லை தற்செயலாக இவ்வாறு அமைந்ததா? இதைப் பற்றி எழுதலாமா?

வேண்டாம்..! தமிழ்நாட்டில் பால் குடித்து விட்டு, க்ரீச்சில் விட்டுப் போகும் அம்மாக்களுக்கு டாட்டா காட்டி விட்டு, தலை மறைந்த உடன் தவழ்ந்து ப்ரெளசிங் சென்டருக்குப் போய் திரட்டியைப் பார்த்து *** கதைகள் படித்து கெட்டுப் போகின்ற பச்சிளம் பாலகர்கள் என் கதையைப் படித்து கெட்டுப் போவானேன்? அவர்களுக்குத் தான் 'மானாட மயிலாட' இத்யாதிகள் இருக்கின்றனவே!

செகண்ட் ஃப்ளோரில் இருந்து கீழே இறங்கி வந்தேன். இயற்பியல் எண்ட்ரி கொடுத்தது. ஏன் படிக்கட்டுகள் இப்படி இருக்க வேண்டும்? ஸ்ட்ரெய்ட்டாக இறங்க என்ன வழி, லிப்ட் தவிர்த்து? பாடி பேலன்ஸ், மாடி பேலன்ஸ், க்ராவிட்டி ஃபோர்ஸ், கொத்தனார் வேலை, தச்சர் வேலை இவைகள் தான் காரணமாக இருக்க வேண்டுமா?

க்ரெளண்ட் ஃளோருக்கு வந்தவுடன் 'க்ரிங்..க்ரிங்..'.

அய்யாசாமி பாய்ந்து வந்து எடுத்து," ஹலோ..! ஆமா.. நைந்த் ப்ளாக் தான். யாரு? மணிகண்டனா..? எந்த ரூம்..? நாப்பத்தஞ்சா..? ஒரு நிமிஷம்..!" ரிஸீவரை வலக்கையில் ஏந்தி, இடக்கையில் ஒரு சுவிட்சைத் தட்டினார்.

"ரூம் நம்பர் நாப்பத்தஞ்சு..! மணிகண்டன்..! ஃபோன் வந்திருக்கு! திண்டுக்கல்ல இருந்து உங்கப்பா கூப்பிடறாங்க..! உடனே வரவும்ம்!" ப்ளாக் முழுவதும் எதிரொலித்தது. "மணிகண்டன்..! மணிகண்டன்...!"

எலெக்ட்ரானிக்ஸ் எட்டிப் பார்த்தது. எங்கிருந்தோ கம்பி வழி வரும் குரல் மறுபடியும் மற்றொரு குரலாய் மாறி, கம்பி வழியே பயணம் செய்து காற்றில் படபடக்கிறதே! செய்தி செல்லும் பாதை ஏன் இப்படி அன்பே சிவம் போல் மாறி மாறி இருக்கின்றது? செல்ஃபோன் இல்லா ஏழைப் பிள்ளைகளுக்கு வேறு ஏதும் வழி? டெலிபதி..! இது கணபதி போல் ஆதி கால கான்செப்ட்! வேறு ஏதாவது..?

ஒன்றும் தோன்றாமல் ரோட்டைக் கடந்தேன். மெஸ்ஸைத் தாண்டினேன்.

'மெஸ்ஸில் ஒரு கிஸ்!'

ஆஹா என்ன ஒரு தலைப்பு!

காலக்ஸியைக் கைக்குள் போட்டுக் கொண்ட மனிதக் குலத்தால், இந்த மெஸ் இட்லியின் ஸ்ட்ரக்சரையும், அவற்றுக்குள் இருக்கும் கெமிக்கல்ஸின் propertiesகளையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி, கடைசியில் ஓர் ஏலியனை கொண்டு வருகிறார்கள், சோதனைக்காக! எல்லா விதமான எக்ஸ்ப்ரிமெண்ட்ஸும் செய்து பார்த்ததால் சோதனை எலிகள் எல்லாம் ஐ.க்யூ.வில் எக்கச்சக்கமாக எகிறிப் போய் ,யூனியன் அமைத்து, ஐ.நா.சபையில் ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டதால், கிடைத்த இளிச்சவாய் ஏலியனின் வாய்க்குள் இட்லிகளைத் திணிக்க, அது தின்று விட்டு ஒரு மாதிரி கிறக்க உணர்வடைந்து, மோக நிலைக்குப் போய் இட்லி பரிமாறிய பெண்ணின் கன்னத்தில் கிஸ் அடித்தது.

இல்லை.. இது மிக குழந்தைத்தனமாக இருக்கின்றது! வேண்டாம். போட்டின்னா இன்னும் கொஞ்சம் கெத்தா யோசிப்போம்!

அடுத்து ஹாஸ்டல் எதிர்ப்பட்டது.

'ஹாஸ்டலுக்கு வந்த போஸ்டல்!'

வெளியே கிளம்பிக் கொண்டிருந்த மதுமிதாவின் கைகளில் ஒரு போஸ்டல் கவர் திணித்து விட்டு சிட்டாய்ப் பறந்து சென்றாள் காவ்யா. அவள், அதன் தலையைப் பார்க்க அதிர்ச்சி. I Know what you did in last Data Structures and Algorithms Exam. அவளுக்கு திக்கென்று ஆனது. வசுவையும், பாரதியையும் பார்த்து எழுதியதா, மிலனுடன் பேப்பர் எக்ஸ்சேஞ்ச் செய்ததா, ரெனால்ட்ஸ் மூடிக்குள் சுருட்டி வைத்த லிங்க்ட் லிஸ்ட் அல்காரிதமா என்று குழம்பினாள். கவரைத் தடவிப் பார்க்க அதில் பெளடர் போல் மெதுமெதுக்க, 'ஆந்த்ராக்ஸாக' இருக்குமோ என்று பயம் கவ்வ, அதை தவற விட்டாள். பின் கூட்டம் கூடி, கவரை அனாதைப்படுத்தி, போலீஸுக்கு தகவல் பறந்து, வந்து ஸ்கேன் செய்து, ஃப்ரம் அட்ரஸ் பார்க்க வைசாக், ஆந்தரப்ரதேஷ் என்றிருக்க, கீதாவுக்கு 'ஆந்த்ராவிலிருந்து வந்த ஆந்த்ராக்ஸ்' என்ற ஹைக்கூ தோன்ற, மெடிஸினரி மக்கள் பாக்கெட்டை பத்திரமாக எடுக்கையில் கை தவறி கீழே விழுந்து Spinz Powder வாசம் பரவியது. எல்லோரும் பயம் நீங்கி சிரிக்க மாலினி மட்டும் 'ஹச்' என்று தும்மினாள். எல்லோரும் அவளையே பயமாகப் பார்த்தார்கள்.

ச்சே..! இது கொஞ்சம் பயமுறுத்தும் வகையில் இருக்கின்றது. வேண்டாம்.

இன்னும் உங்ககிட்ட இருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன் என்றது மனசாட்சி.

ஹாஸ்டலைத் தாண்டி க்ரெளண்டை அடைவதற்கு முன் இருக்கும் ரோட்டை கடக்க முயல்கையில்..

க்றீச்ச்.

"சாவுகிராக்கி.." ஆட்டோவில் இருந்து பாட்ஷா எட்டிப் பார்த்து பொழிந்து விட்டுப் போனார்.

இந்த வார்த்தை என்னை வசீகரித்தது. இதற்குப் பொருள் என்ன? மரணத்திற்கு அவ்வளவு கிராக்கியா? எல்லோரும் விரும்புகிறார்களா? இல்லை சாவுCracki? பைத்தியமா? மொழியியல் வந்து "ப்ரெஸன்ட் சார்" சொன்னது.

மொழி என்பது எப்படி வந்திருக்க வேண்டும்? சைகையில் ஆரம்பித்து, கையில் கல்லில் எழுதி, சொல் வந்து, எழுத்து வந்து, கற்றவர்கள் சேர்ந்து, குருகுலத்தில் மாணவர்கள் கீழ் அமர்ந்து, ஆசிரியர்கள் மேல் இருந்து, சொல்லிக் கொடுத்து, தப்பாக சொன்னால் தலையில்...

ணங்...!

லைட் கம்பத்தில் இடித்துக் கொண்டேன். கெமிஸ்ட்ரி லேபின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த இரு ஃபர்ஸ்ட் இயர் சிட்டுக்கள் சிரித்தன. ஜிவ்வென்று ஆங்காங்கே கிளுகிளுப்பானது.

வேதிகாவா, வேதியியலா?

நகரத்திலேயே பெரும் புள்ளியின் மகள் வேதிகா. எம்.பி. கோட்டாவில் சீட் வாங்கி காலேஜையே அதகளம் செய்து கொண்டிருப்பவள். அவளது ஒவ்வோர் அங்க அழகிலும் பணக்காரத் தனம் செழிப்பாய்த் தெரியும். பள்ளியில் இருந்தே அப்ளிகேஷன் போட்ட பலருக்கும் பல்பு கொடுத்துக் கொண்டு எஸ்கேப்பாகி வந்தவள், கல்லூரியிலும் அதே திருப்பணியைத் தொடர்ந்தாள். ஆனால் அவளே மயங்கும் அளவிற்கு கட்டழகாகவும், கடும் உறுதியோடும் தினேஷ் இருந்தான். அவனிடம் மனம் பறிகொடுத்தவள், ஒரு நாள் தனிமையில் ப்ரபோஸ் செய்தாள். அவன் கொஞ்சம் யோசித்து விட்டு என்னுடன் குடும்பம் நடத்துவது கஷ்டம் எனக் கூற, அவள் ஏன் எனக் கேட்க, கெமிஸ்ட்ரி லேபிற்கு அவளை அழைத்துச் சென்று ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டையும் மெத்தில் ஆல்கஹாலையும் கலந்து குடித்துப் பார்த்து, 'சரக்கு டேஸ்ட் கொஞ்சம் கம்மி தான். இப்பல்லாம் இதிலயும் கலப்படம். உப்பு கம்மியா இருக்கு' என்று சொல்லி ஸோடியம் குளோரைடை ஒரு டீஸ்பூனிலும், பொட்டாசியம் பாஸ்பேட்டை ஒரு டீஸ்பூனிலும் எடுத்து லேசாக மிக்ஸிங் அடித்து ப்யூரெட்டில் போட்டு அடியில் சூடு வைத்து தொட்டுக் கொண்டு, 'ஆஹா..! என்னா டேஸ்ட்! இது தான் என்னோட கட்டழகுக்கு காரணம். இது போல் உன்னால் தினமும் சமைத்து தர முடியுமா?' எனக் கேட்க வேதிகா அதிர்ச்சியில் நின்றாள்.

கெமிஸ்ட்ரி "நாங்களும் இருக்கோம்ல..!" என்றது.

எனக்கு கொஞ்சம் பயம் தோன்ற ஆரம்பித்தது. இத்தனை இயல்களிலும் அறிவியல் புனை கதைகள் எப்படி எழுத முடியும்?

சுழல் கம்பிக் கதவைச் சுற்றி க்ரெளண்டுக்குள் நுழைந்தேன்.

டவுன் ஈஸ்ட்டில் ஃபுட்பால் மேட்ச்சும், டாப் வெஸ்ட்டில் கிரிக்கெட் டோர்னமெண்ட்டும் நடந்து கொண்டிருக்க, ஓர் ஓரமாக ரன்னிங் ட்ராக்கில் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்புக்கான பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருக்க, ஓரப் புல்வெளிகளில் தீயும் வாசனை கிளர்ந்து கொண்டிருக்க, இது எதிலும் கலந்து கொள்ளாமல் ஆங்காங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க... சனிக்கிழமை மாலையிலும் கூட்டம் இருக்கத் தான் செய்தது.

மேலே ஒரு ப்ளைட் பறந்தது.

விமானத்தில் இருந்து, ஒரு தனி இறக்கை பிரிந்து வந்து, நாங்கள் டைம் மெஷின் வைத்திருக்கிறோம். இந்தப் போட்டிகளின் முடிவுகள் என்னவாகும் என்று அறிந்து கொள்ள ஆசையா? இதில் காணலாம். இதன் விலை வெறும் 2700 ரூபாய் மட்டுமே. விற்பனைச் சலுகையாக 100 ரூபாய் கழித்தும், ஆடித் தள்ளுபடியாக 100 ரூபாய் கழித்தும் வெறும் 2500 ரூபாய்க்கே தருவதாகச் சொல்ல, எல்லோரும் கூட்டம் கூடி நின்று பார்க்க, ஒருவன் 'தேர்ட் அஸஸ்மெண்ட்' கொஸ்டீன் பேப்பரும், அதோ, அங்க போறாங்களே ப்ரியா அண்ட் கோபிகா ரெண்டு பேரும் லவ்வர்ஸா கிடைப்பாங்களானு இதில் பார்க்க முடியுமா ?' எனக் கேட்க எல்லோரும் அவனை பொது மாத்து மாத்துகிறார்கள்.

இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்..?

விமானம் - விழுந்த மானம்.

கிரிக்கெட் பந்து சிக்ஸர் அடித்து காலரியில் செட்டில் ஆகி இருந்த ஒரு பேரின் இடையே கரடியாய் விழுந்தது.

"டேய்..! இந்த பாலையும் கொஞ்சம் கவனிச்சு எடுத்துப் போடுடா..!" என்று மைதானத்தில் இருந்து குரல் பறக்க, அவள் தலை குனிந்து ஓடினாள்.

வெயில் இறங்கி, மறைந்து கொண்டே இருக்க, அஸ்ட்ரானமி "நானும் உள்ளே வரலாமா?" என்றது.

ஸாரி, ஸ்க்ரீனில் மிஸ்டேக்!

ஒரு நாளின் இரவு முழுதும் கழிந்து, பகல் விடியும் போது, வெளியே வந்து பார்த்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். வானம் முழுதும் இரத்தச் சிவப்பாக மாறி இருந்தது. வேறு நிறமே வானில் இல்லை. பயந்து போனார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பொலிட் பீரோவில் அவசரக் கூட்டம் போட்டு தங்கள் கொடியின் நிறமே இப்போது வானின் நிறமாகி விட்டதால், பிரபஞ்சமே கம்யூனிஸ தத்துவத்தை ஏற்றுக் கொண்டதாக பாதி பேர் அறிவிக்க, மீதி பேரோ இந்த பிரபஞ்ச சிவப்பு நிறத்தில் தங்கள் கொடியின் நிறமே மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டதால், தனித்துவத்தை இழந்து விட்டோம், எனவே வேறு நிறத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்ல, கட்சி இன்னும் இரண்டாக உடைந்து, கம்(சி), கம்(!சி) என்று மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள, 'உடன்பிறப்பே! பார்த்தாயா உதயசூரியனின் ஆட்சியை! வானெங்கும் நம் கட்சிக் கொடியின் பாதி! பூமியிலே மீதி! கண்மணி எழுந்திடு! பேரன்களை நம்பாமல், பிள்ளைகளை மட்டும் நம்பி கட்சிப் பணிக்கு கரம் கொடுக்க பறந்து வா!' என்று முரசொலியில் கவிதை வர, எல்லோர் மீதும் சிவப்பு நிறம் படிய, பேர் அண்ட் லவ்லி வகையறாக்கள் கருப்பாக மாறும் க்ரீமை ப்ரொடக்ஷனில் துவக்கி, நந்திதா தாஸையும், வில்லியம்ஸ் சகோதரிகளையும் வளைத்துப் போட்டு விளம்பரம் எடுக்க, ஒபாமாவுக்கு இன்னும் செல்வாக்கு கூட, இன்னும் பல மாற்றங்கள் வர, சடாரென ஒரு நோட்டீஸ் எல்லார் வீட்டிலும். 'மன்னிக்கவும்! எனது கனவில் ரெட்டிஷ் எலெக்ட்ரோடு கொஞ்சம் அதிகம் கரண்ட் பாஸ் ஆனதால் ஸ்க்ரீனில் சிவப்பு அதிகமாகத் தெரிகின்றது. சர்வீஸ் போய்க் கொண்டிருக்கின்றது. நாளை காலையில் இருந்து மறுபடியும் பழைய RGB எலெக்ட்ரோடு ட்யூப்கள் ஒழுங்காக வேலை செய்யும். Sorry for the Inconveniences Caused. - கடவுள்!'

அஸ்ட்ரானமியும் அஸ்ட்ராலஜியும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒரு கதை எழுதி விட, பல வித இயல்களின் தாக்குதல்களால் பயந்து போய் காலரியில் இருந்து இறங்கி ஓட ஒருமுறை தடுமாறி விழுந்து, மண்ணில் இறங்கி, எழுந்து துடைத்த போது, லூஸா நீ..? ஏன் இப்படி ஓடற..?" என்று கடந்து போன ஒரு குயில் கேட்க, அறிவு பூர்வமாய் சிந்தித்துக் கொண்டே போனால் லூஸ் என்கிறார்கள் எனில் புத்திசாலியும் முட்டாளும் ஒரே புள்ளியிலா? என்று குழம்ப, எனக்குள்ளிருந்து சாக்ரடீஸ் எழுந்து, தான் போர்த்தி இருந்த பெட்ஷீட்டை எடுத்து விசிறிக் கொண்டு, கானா உலகநாதன் போல் கையை நீட்டி "உன்னை நீ அறிவாய்" என்று ஃபிலாஸபியை வீசினார்.

எந்த நானை அறிந்து கொள்வது?

"நான் சொன்னேன்ல. இன்பினிட்டியும் ஸீரோவும் ஒரு வட்டத்தின் அருகருகாமை புள்ளிகள் என்பது போல் அறிவாளியும், முட்டாளும் ஒரே புள்ளிகள் தான்! அதனால் தான் நீ விழுந்தாய்" என்று கணக்கு சொல்ல, "அதெல்லாம் இல்லை! நீ விழுந்ததற்கு காரணம் உனது புவி ஈர்ப்பு மையம் சமநிலையில் இல்லை. அதனால் தடுமாற்றம்." என இயற்பியல் விளக்க, "ரப்பிஷ்! உன் கால்களுக்கும் மூளைக்கும் இடையே செய்திகள் சரியாகப் பாஸாகவில்லை. பயாலாஜிக்கல் இம்பாலன்ஸ்..!" என்று உயிரியல் முஷ்டியை உயர்த்த, "சரி! அதற்கு யார் காரணம்? கெமிக்கல்ஸ்! கெமிக்கல் சர்க்குலேஷன் பிட்வீன் ஆர்கன்ஸ் சரியாக ஓடவில்லை.!" என்று கெமிஸ்ட்ரி கோதாவில் குதிக்க, "உனக்கு இப்படி இங்கு விழ வேண்டும் என்று இருக்கின்றது. அது விதி. உன் ஜாதகக் கட்டத்தில் கிரகங்கள் சாதகமாக இல்லை. இதனையே இப்போது சயின்ஸில் கேயாஸ் தியரிப்படி ஒத்துக் கொள்கிறார்கள்!" என்று அஸ்ட்ராலஜி அள்ளிப் போட, " நீ பகலில் வந்ததே இதற்கெல்லாம் காரணம். இரவில் நிலவின் க்ரேவிட்டி ஃபோர்ஸ் கொஞ்சம் கூட இருக்கும் போது நீ சமாளித்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன..!" தனது கூட்டணி, மூன்றாம் அணியை விட சீக்கிரம் முடிவுக்கு வந்ததில் கடுப்பான அஸ்ட்ரானமி தன் பங்கு வாதத்தை சொல்ல, நவீன இலக்கியம் தன் பங்கிற்கு,

இயல்களின் இருப்பியல் சிக்கல்களில் சிக்கிக் கொண்ட மனிதனின் இயல்பான இருப்பு பிரபஞ்சத்தில் நிலையான ஓர் இலை வீசுகின்ற எதிர்க்காற்றில் நில்லாமல் அசைந்து கொண்டும் அதே சமயத்தில் காம்பு மூலம் மரத்தோடு தொடர்ந்த தொடர்பில் இருக்கின்றதாயும் உள்ள ஒரு குழப்பமான காலகட்டத்தில், பூக்கின்ற சிந்தனைகளில் எந்த வித பயமும் இல்லாத, பவ்யமும் இல்லாத நடுநிலையான நிஜக் கனவுகளைத் தேடி எட்டுப் போட்டு நடந்து செல்கின்ற பாதங்களின் வலியை மனம் மிக உணர்ந்து கொண்டு அதனால் பாதிக்கப்படக் கூடியதாய் இருந்தாலும் பாதிக்கப்படாமல், நினைத்துப் பார்த்தால், கஷ்டப்படும் ஓர் பார்வையை தாங்கிக் கொள்கின்ற தயக்கமான தர்ம பொழுதுகளில் அது சூழப்பட்டிருக்கின்ற சூன்யவெளியின் புள்ளிக் கோணங்களைத் தாண்டிச் சென்று...

"Stop all the Non-sense...!" என்று கத்தியவாறு கேண்டீனை நோக்கி ஓடினேன்.

நல்ல வேளை..! இந்தக் கடின குழப்பமான மனநிலையிலும் கார்த்திக்குக்காக வாங்க வேண்டிய பூரி செட் ஞாபகத்திற்கு வந்தது.

"என்ன சார் வேணும்..?" கவுன்டரில்.

"முதல்ல கொஞ்சம் சூடான தண்ணி குடுங்க..! அப்படியே ரெண்டு செட் பூரி பார்சல் போட்டிருங்க..!"

கைக்கு அருகில் இருந்த பட்டன் பெல்லை அடித்தார். க்ணிங். இது என்ன ஃப்ரீக்வன்ஸி..? எந்த ஹார்மோனிக்ஸ்..? என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இயற்பியலில் தொலைய இருந்த நேரத்தில்,

"இங்க ரெண்டு பூரி செட் Forsaaale" என்று மொழியியல் வந்து என்னைக் காப்பாற்றியது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

6 comments:

thamizhparavai said...

மிக நன்றாக இருந்தது..வேகம்.மிக வேகம்..ஓரிரு வரி படித்து விட்டு அடுத்த வலைப்பூவிற்கு ஓடுபவர்களைக் கூட கையில் ஆணியடித்தது போன்றதொரு மொழிநடை..

//வநிறத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்ல, கட்சி இன்னும் இரண்டாக உடைந்து, கம்(சி), கம்(!சி) என்று மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள, 'உடன்பிறப்பே! பார்த்தாயா உதயசூரியனின் ஆட்சியை! வானெங்கும் நம் கட்சிக் கொடியின் பாதி! பூமியிலே மீதி! கண்மணி எழுந்திடு! பேரன்களை நம்பாமல், பிள்ளைகளை மட்டும் நம்பி கட்சிப் பணிக்கு கரம் கொடுக்க பறந்து வா!' என்று முரசொலியில் கவிதை வர, எல்லோர் மீதும் சிவப்பு நிறம் படிய, பேர் அண்ட் லவ்லி வகையறாக்கள் கருப்பாக மாறும் க்ரீமை ப்ரொடக்ஷனில் துவக்கி, நந்திதா தாஸையும், வில்லியம்ஸ் சகோதரிகளையும் வளைத்துப் போட்டு விளம்பரம் எடுக்க, ஒபாமாவுக்கு இன்னும் செல்வாக்கு //
இப்பகுதி என்னை மிகவும் ஈர்த்தது..வெற்றி பெற வாழ்த்துக்கள்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

கொஞ்சம் ஓவர் ஸ்பீடாக போய் விட்டதல்லவா..?

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...!

Sridhar V said...

ஓ... அதற்குள்ளாக 2 புதிய கதைகளை எழுதி விட்டீர்களா?

டஜனோடு நிற்குமா இல்லை இன்னமும் வருமா?

உங்கள் நடை வெகு இயல்பாக இருக்கின்றது. எல்லா கதைகளையும் படித்து விட்டேன்.

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் :-)

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!

இன்னும் எவ்வளவு கதைகள் எழுதப்படும் என்பது எனக்கே தெரியாது...!;-)

வெண்பூ said...

நல்ல வேகம் வசந்த். நடுநடுவே அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளையும் சுட்டியிருந்தது நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

போட்டி முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இன்னும் 4 கதைகளாவது எதிர்பார்க்கலாமா?

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...!

இன்னும் நான்கு கதைகள்..? வரும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்...! ;-)