Thursday, July 24, 2008

டகால் பாச்சா!

டல் மிக அமைதியாக இருந்தது.

இந்தப் பகுதிகளில் இப்படி அமைதியாக இருப்பது அசாதாரணம். எந்த வித காற்றும் இல்லாமல், மெல்லிதாக ஒரு குளிரில், நசநசவென்ற உப்புப் படிவம் படிந்த சுற்றுப்புறம். முக்கால் முழு நிலா மற்றொரு நேர்க்கோட்டு இறுதியில் மெல்ல, மெல்ல எழுந்து கொண்டிருக்க, சிறிது சிறிதாக கிளம்பி கரை நோக்கிச் சென்ற அலைகளில் வெண்ணிறக் கதிர்கள் தடவியதில் ஒரு பட்டு நூற்கண்டாய் அவை தளும்பின.

மாபெரும் விளக்கில் எண்ணெய் ததும்புவதாய் கடல் அசைந்திருக்க, திரியில் எரியும் ஜோதியாய் நிலவு ஜொலித்திருக்க, விளக்கில் விழுந்த ஈசல் போல் படகு தள்ளாடித் தள்ளாடி நகர்ந்து கொண்டிருந்த நிலையில், பாச்சா பீடி பற்ற வைத்தான்.

படகின் அடித்தளத்தில் குமாரு, சோசப்பு, முனியன், பீட்டரு தூங்கிக் கொண்டிருந்தனர். இன்றைய இரவில் படகைச் செலுத்தும் பொறுப்பு பாச்சா உடையது. நான்கு நாட்களாய் பார்டரைத் தாண்டிப் போய் இண்டர்நேஷனல் லிமிட்டில் மீன்கள் பிடித்துக் கொண்டு, கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

"இன்னா பாச்சா, எல்புக்கு வரட்டுமா..?" உள்ளே புரண்டு கொண்டிருந்தான் குமாரு.

"இல்ல குமாரு. ஒண்ணியும் வாணாம். நீ தூங்கு. நான் பாத்துக்கறேன்..!"

வெகு தூரத்தில், ஒரு டார்ச் லைட் கற்றையாய் லைட் ஹவுஸ் ஒளி பாய்ச்சிக் கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவின் சென்னை நகரின் வெளிச்சப் புள்ளிகளை விட தலைக்கு மேல் இருக்கும் நட்சத்திரங்கள் அருகில் இருப்பது போல் தெரிந்தன.

இது போன்று அமைதியாய் செலுத்துவது அரிது எனப் பட்டது பாச்சாவிற்கு. சில சமயங்களில் கப்பல்கள் க்ராஸ் செய்யும் போது, பார்த்து ஹேண்டில் செய்ய வேண்டும். பல சமயங்களில் நேவி கார்ட்ஸ் வந்து... ரப்சராய் இருக்கும். பீடியின் நுனியில் இருந்த சிவப்புப் புள்ளி மினுக் மினுக்கென்று காற்றுக்கு உயிர் பெற்று, இறந்தது.

மிச்சப் பீடித் துண்டை சைடு வாக்கில் தூக்கிப் போடும் போது தான் கவனித்தான். இல்லை, அப்படி சொல்லி விட முடியாது. யதேச்சையாய்ப் பார்த்தான். பிறகு உன்னிப்பாக கவனித்தான்.

பளபளப்பாய் ஒரு பெண். பெண் முகம். வட்டமான முகம். நீள கழுத்து. அம்சமான உடல்.....! இடுப்புக்கு கீழே தண்ணீருக்குள்! மிதந்து கொண்டிருந்தாள். பயந்து போனான் பாச்சா..! அவள் இவனையே பார்த்துக் கொண்டிருந்தது, பாச்சாவின் முதுகுத் தண்டுக்குள் ஐஸ் நீர் பாய்ச்சியது.

"டேய்..! எளுந்திருங்கடா..! பேய்..! பேய்!" கத்தினான்.

எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்க,

"அன்பரே! ஏன் இந்த பயம்? என்னைப் பார்த்து பயமா? நான் பேயல்ல..!" என்றாள்.

பாச்சாவிற்கு பயம் கொஞ்சம் களைந்து, இப்போது ஆச்சரியத்திற்குப் போனான்.

அவனுக்கு இந்த சூழ்நிலை இன்னும் அர்த்தமாகவில்லை.

கடல். மாகடல். 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' என்ற பொய்கையாழ்வாரின் கடல். முக்கால் முழு நிலவு. தனியாக விழித்திருக்கிறான். சுற்றிலும் நட்சத்திரங்கள். ஒரு அழகான பெண் கடலில் மிதக்கிறாள்.

"இல்ல.. நீ இன்னா பொண்ணா இல்ல பேயா..? மோகினி க்ரூப்பா..?"

சிரித்தாள். வெண்ணொளிக் கதிர்கள் பட்டு பிரகாசித்தன.

"இல்லை. நானும் ஒரு பெண் தான். கடற்கன்னி என்று கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? அந்த வகை நான்! நீங்கள் டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்ப்பது இல்லையா? "

"டிஸ்கோரியா? அத்த எல்லாம் எங்க பாக்கறது? மிட் நைட் மசாலா பாக்கறதுக்கே பொளுது சரியாப் போவுது! ஆமா, அந்த சேனல் எல்லாம் உனக்கு எப்டி தெர்யும்..?"

"கடலுக்கு அடியில் வந்து தானே படம் எடுக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் மறைந்து இருந்து அவர்களை கவனித்துக் கொண்டே தான் இருப்போம். எங்களை அவர்களால் படம் பிடிக்க முடியாது. கடலின் அடியாழத்தில், மகா இருட்டுக்குள் நாங்கள் வசிக்கிறோம். தனி மாளிகை. முத்துக்களாலும், பாசிகளாலும் கட்டப்பட்ட மாளிகைகள். ஒரு ராஜாங்கம். அழகழகான பெண்கள். நானும் அதில் ஒருத்தி...!"

"நீ யாரா வேணா இருந்துட்டுப் போ! அப்பால போயிடு! எனக்கு பயம் போகல..!"

"பயம் வேண்டாம், அன்பரே! நான் வந்ததற்குக் காரணம் உங்களைக் காண்பதற்குத் தான். உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களது சுருண்ட கேசம். கறுப்பான நிறம். கூரான மூக்கு. இந்த உடை அலங்காரத்தில் இன்னும் அழகாகத் தெரிகிறீர்கள்..!"

பாச்சாவிற்கு கூச்சம் வந்து விட்டது. கடற்காற்று அடிக்கடி கலைத்து விடும் என்று லுங்கி கட்டாமல், முண்டா பனியனும் (அதில் டோரண்டோ), அரைக்கால் ட்ரெளசரும் போட்டிருந்தான். இதிலேயே அழகாக இருக்கிறேனா? இன்னும் என்னோட தீவாளி ட்ரெஸ்ஸான கட்டம் போட்ட புல் ஏண்ட் சட்டையும், கோடு போட்ட கொழாயும் போட்டுகினு வந்தா சொக்கிடுவா போல! அவனுக்கு பரிமளம் ஞாபகம் வந்தது. 'இன்னா பரிமளம்! கேட்டுக்கின இல்ல? இந்த மேக்கப்புக்கே அய்யாவுக்கு மவுசு எங்கயோ இருக்குது! என்னயா புடிக்கலன்ன? சர்தான் போடி!'

"இன்னாடா இது! என்ன போய் சூப்பரா கீறேனு சொல்லுது இந்த பொண்ணு!"

"ஆம்! நான் உங்களை பார்ப்பது இது முதன் முறை அன்று. பலமுறை பார்த்திருக்கிறேன். பெளர்ணமி நாட்களில் பலமுறை! உங்களோடு தனிமையில் பேச வேண்டும் என்று முயன்றிருக்கிறேன். ஆனால் முடிந்ததில்லை. எப்போதும் உங்கள் நண்பர்களோடு தான் இருக்கிறீர்கள். நீங்கள் அறியாமல் உங்களை தொடர்ந்து வந்து, இன்று தான் உங்கள் தனிமையைப் பங்கு போட நேரம் வாய்த்தது..!"

"சரி! இப்ப இன்னா பண்ணனுங்கற..?"

"அன்பரே! நீங்கள் என் மனதைக் கவர்ந்து விட்டீர்கள். என்னோடு வாழ வாருங்கள். உங்களுக்காக ஒரு மாளிகை கடலுக்கடியில் காத்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். முத்துக்களால் ஆன ஒரு மாளிகை. பவழங்களால் ஆன படுக்கைகள். பளிங்கினால் செய்தது போன்ற நான். வேண்டாமா? நாளை முழுப் பெளர்ணமி. என்னுடன் இருக்க வாருங்கள். நான் கிளம்புகிறேன். சத்தம் கேட்கின்றது. நாளை. இதே நேரம். இதே இடத்திற்கு வாருங்கள்! காத்திருப்பேன்..!" சரேலென உள் குதித்து மறைந்தாள்.

"இன்னாடா சத்தம்..? யாருகூட பேசிகினு இருந்த..?" பீட்டர் நெட்டி முறித்தான். சட்டென நழுவப்பார்த்த லுங்கியைப் பிடித்து, ஒரு முனையை வாயில் கவ்வி, மறு முனையை இறுக்கி, முடிச்சு போட்டு கட்டிக் கொண்டான். வெற்று மேலுடம்பில் கடற்காற்று தழுவ சில்லென்றிருந்தது.

நான்கு கம்பி படிக்கட்டுகளைத் தாண்டி வந்து, ரோப்பில் கால் சிக்காமல் தாவி, ரைடிங்க் சீட்டுக்கு வந்தான். செருகி இருந்த பீடிக் கட்டில் இருந்து ஒன்றை உருவி பற்ற வைக்க... இரண்டாம் முயற்சியில் வென்றான்.

பாச்சா ஒன்றும் பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"இன்னாடா கேட்டுகினே இருக்கேன்? கம்முனு இருக்க..? இன்னா ஆச்சு..?"

"இல்ல பீட்டரு..! ஒரு பொண்ணு..கடலுக்குள்ள இருந்து வந்து.."

"ஒங்கிட்ட பேசுனாளா..? இது எல்லாம் சகஜம் தான். நாலஞ்சு நாளா கடலுக்குள்ளயே சுத்திகினு இருக்கோம்ல.. இப்புடி தான் கெட்ட கெட்ட கெனாவா வரும். குப்பத்துக்குப் போனவுடன பரந்தாமனுக்கு ஒரு கால் பண்ணி சொல்லி போய்ட்டு வந்தா எல்லாம் செரியாகிடும்...! நீ இப்ப போய் தூங்கு போ..! இந்த நெலமைல ஒங்கிட்ட போட்ட குடுத்தா எங்கயாவது கவுத்துருவ..! நான் பாத்துக்கறேன். நீ தூங்கப் போ...! ஆமா, நாயித்துக்கெளம இல்ல இன்னிக்கு?"

ஒன்றும் பேசாமல் அடித்தளத்திற்கு வந்து ஆளுக்கொரு மூலையில் சிதறிக் கிடந்தவர்களின் இடையே படுத்துக் கொண்டான் பாச்சா. ஓட்டும் போது நினைவிலேயே இராத மோட்டாரின் ரீங்காரம், உப்புத்தண்ணி ஒழுகிக் கொண்டு ஓட, கவிச்சி நாற்றமும், பீடிப் புகைகளும் அலையடித்துக் கொண்டு பிணமீன்கள் குவிந்திருந்த இந்த இடத்தில், எக்கோ எஃபெக்டில் அவன் காதுகளுக்குள் படையெடுத்துக் கொண்டிருந்தது.

அவள் முகம் கண்களுக்குள் பதிய மெல்ல தூங்கிப் போனான்.

"ப்ப நான் சொல்றத நம்ப மாட்டீங்க, அப்டி தான...?"

வெயில் பலமாகவே அடித்துக் கொண்டிருந்தது. குடிசையின் கீறல்களில் முட்டை வடிவ புள்ளிகளாக வெப்பக் கரங்கள் நீட்டி, சூரியனின் பயணத்திற்கேற்ப நீளமாகிக் கொண்டிருந்தன.

"டேய் குமாரு, கிங்கை எறக்குடா..! மன்சூரு, பாய்கிட்ட அல்லா மீனயும் குடுத்துக்கின இல்ல? துட்ட கரீட்ட எண்ணிக்கிட்டு வாங்கினு வந்தியா? எங்க காட்டு?ஆங்... இந்தா இத்த சேட்டாண்ட.. இன்னாடா முளிக்கற.. புள்ளயாரு கோயிலாண்ட இருக்காருல அவருகிட்ட போய் குடுத்துட்டு, பீட்டரண்ணன் குடுக்கச் சொன்னாருன்னு சொன்னயின்னா, ஒரு பித்தள அண்டா தருவாரு. அத்த என்னோட வூட்டுல.. வூடு தெரியும்லடா... எலெக்ட்ரிக் ட்ரெய்ன் ப்ரிட்ஜுக்கு கீழயே போனயினா, ஐஸ் அவுஸுக்குப் பின்னாடி வர்ற நாலாவது வூடு... இன்னா பிரிஞ்சுதா..? ஓடு.. போ..! இன்னா பாச்சா நீ ஏதோ சொல்லிக்கினு இருந்தியே! இன்னோரு தபா சொல்லு..?"

"இன்னாடா வெள்ளாடறீங்களா..? அதான் பல தபா சொன்னேனடா..! கடலுக்குள்ள ஒரு பொண்ணு, சொம்மா நமீதா கணக்கா, நேத்து வந்து..."

"போச்சு! ஏஸை வுட்டுட்டான். ஏண்டா கொமாரு! எத்தினி தபா ரம்மி ஆடுற..! இன்னும் டெக்னிக்க கத்துக்கலயே நீ! ஒயுங்கா ஆடாட்டி ஒன்ன மன்சூரு க்ரூப்புல சேத்துப்புடுவேன். அப்பால நீ இஸ்கூலு பசங்களோட தான் வெளயாடணும். பாச்சா! நீ சொல்றதெல்லாம் சரிதான். எனக்கு கூட தனியா போட் வுட சொல்ல கடலுக்குள்ள, சொறா சொறாவா தெர்யும். சோசப்பு உனிக்கு இன்னாடா தெரிஞ்சுது..?"

"அத்த ஏன் கேக்கற முனியண்ணே! எனக்கு ஒரு தபா சிலுவ தெரிஞ்சுது..! அப்டியே மெர்சலாயிட்டேன். ஸ்டீரிங்க வுட்டுட்டு, அப்டியே மண்டி போட்டு ஸ்தோத்தரம் சொல்ல ஆரம்பிச்சுட்டன். அப்பால நம்ம கபாலி தான் உசுப்பி உட்டான். ஒரு மாரி...கனவு மாரி தெரிஞ்சுதுண்ணே, அது..!"

"அதான் பாச்சா..! அல்லாம் ப்ரம்மை. வந்தவுடன பரந்தாமனுக்கு ஒரு கால் அடிக்கறேனு சொன்ன.. நீ வேணானுட்ட. இப்ப இன்னும் ஒளறிகினு இருக்க..! டேய் க்யூன் த்ரீ, ஜோக்கர் ஒண்ணு இங்க பாரு..!"

"என்னடா யாருமே நம்ப மாட்டேங்கறீங்க...? நெசமாலுமே நான் ஒரு பொண்ண பாத்தேண்டா..!"

"இன்னா பாச்சா..! இன்னா சொல்ற நீ? கடலுக்குள்ள பொண்ண பாத்தியா? இவனுங்க கிட்ட சொன்னியினா இவனுங்களுக்குப் பிரியாது. ஆட்ட முசுவுல இருக்கானுக. நான் நம்பறேன். ரொம்ப நாளுக்கு மின்னாடி மன்சூரு நைனா, அதான் என் புருசனும் இத்த மாரி சொல்லிகினு இருந்தார் கொஞ்ச நாளா! நான் கூட மெரண்டு போனேன். அப்பால தான் பயந்துகினு அத்த கடலுக்குள்ளயெல்லாம் போ வேணாம். கரயிலயே தொளிலு பாருன்னு இப்ப மீனு விக்குற வேலைக்கு வுட்டுருக்கன். அது பாட்டுக்கு கடலுக்குள்ள பொண்ண புடிச்சேன்னு எவளயாவது வூட்டுக்கு கூட்டிகினு வந்துட்டாருனா இன்னா பண்றது? அதான்."

பாத்திரம் தேய்த்துக் கொண்டு, தேங்காய் நாரைத் தூக்கிப் போட்ட பாயக்கா குடிசையின் சுத்தத்திற்கு உத்திரவாதி. வெற்றிலையை ஜன்னலுக்கு வெளியே துப்பினாள்.

பொளிச்.

பாச்சா அகமகிழ்ந்து போனான். தன் வாதத்திற்கு வலு சேர்க்க மற்றுமொரு ஆத்மா இருப்பது அவனுக்கு நிரம்ப மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

"செரி! இப்போ நைனா எங்க? அவர இட்டாந்து இவனுங்க கிட்ட சொல்ல வெக்கிறன்..!" குரலிலும் ஒரு வலு எதிரொலித்தது.

"அக்காங்! இப்ப அது ஆந்துராவுக்கு இல்ல போயிருக்கு! நம்ம குப்பத்துல இல்லாத மீனெல்லாம் அங்க இருந்து லோடு அட்ச்சுகினு வர போயிருக்கு..! வர ஒரு வாரம் ஆகும்..!"

புஸ்ஸென்று தோற்றுப் போன எம்.எல்.ஏ போல் ஆனான்.

"ஆமா...! ஆந்துரால இருந்து எவளையாவது ஓட்டிகினு வந்தா இன்னா பண்ணுவ..?" முனகினான்.

"அவ சிண்ட புடிச்சி, நாலு அப்பு அப்பி மறுக்கா அங்கயே ஓடிப் போயிறுனு தொரத்தி வுட்டுற மாட்டன்? அப்டி இல்லாம இந்தாளு கடலுக்குள்ள இருந்து புடிச்சினு வந்தன்னு சொல்லி ஒருத்திய கொண்டு வந்து வெச்சா, அவளை மறுபடியும் கடலுக்குள்ள தள்ளி வுட்டுற முடியுமா? வேற வளி இல்லாம வூட்டுக்குள்ளயே வெச்சுக்க வேண்டியதா போய்டும் இல்ல..? நீ சொன்ன மாரி செஞ்சுடுவானா அந்தாளு..?" வரட் வரட் என்று அவள் தேய்த்த தேய்ப்பில் தேங்காய் நாரோடு, அலுமினியத்தட்டு 'க்றீச் க்றீச்' என கதறியது.

"செரி! ஆந்துரால கடலுக்கு போய் புட்ச்சிகினு வந்தன்னு சொல்லி ஒரு பொம்பளய கூட்டினு வந்தா..?"

இதை எதிர்பாராததால், அப்டியே பாத்திரங்களைப் போட்டு விட்டு கன்னத்தில் கை வைத்து குந்தினாள். பாச்சாவைப் பார்த்தாள். அவள் பார்வையில் 'இவனை இனிமேல் அந்தாளு கிட்டக்கவே சேத்துக்க கூடாது' என்ற முடிவு உருவாகி இருந்ததை உணர்ந்து பாச்சா வேகமாய் மறுபடியும் சீட்டாட்ட க்ளப்புக்குத் திரும்பினான்.

"பாச்சா..! ஒண்ணு பண்ணு! நான் சொன்னேன்னு நம்ம காதரு வீடியோ சாப்புல போய் வீடியோ கேமிரா எடுத்துக்கோ! மறுக்கா எப்பயாவது அந்த பொம்பளய பாத்தியினா படம் புட்ச்சுக்கோ! ஒரு அதிசயத்த உண்மனு ஒத்துக்கணும்னா கொறஞ்சுது ரெண்டு பேராவது பாத்துருக்கணும். இல்லாடி அது பொய்யா இருக்க நெறய வாய்ப்பு இருக்குனு யாரும் நம்ப மாட்டாங்க! இன்னா புரிஞ்சுதா? செரி, மறுபடியும் அவள பாப்பன்னு நம்பிக்க இருக்கா உனிக்கு..?"

"இருக்கு! இன்னிக்கு ராத்திரி! நாலாவது மைல்ல! லைட் ஹவுஸ்ல இருந்து முப்பத்தஞ்சு டிகிரி...!" எழுந்து கொண்டான் பாச்சா.

அவனை ஆச்சரியமாக சில செகண்டுகள் பார்த்து விட்டு, "டேய் ஜாக் உன்கிட்ட இருக்கு தான? நான் பாத்துட்டன்..!"

முழுப் பெளர்ணமி எரிந்து கொண்டிருந்தது. இன்று கொந்தளிப்புகள் அதிகமாக இருந்தன. தனியாக போட்டை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான் பாச்சா. வீடியோ காமிராவை எடுத்து வைத்துக் கொண்டு, பட்டன்களைத் தட்டிப் பார்த்தான். காதர் பல முறைகள் சொல்லியும், அவனது மூளையில் எதுவும் பதிவாகி இருக்கவில்லை. எல்லா நியூரான்கள் வழியாகவும், அவளே பாஸாகிக் கொண்டிருந்தாள்.

நடுநிசியைத் தாண்டி, நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.

"அன்பரே..!"

அவளது குரல் தான்.

எட்டிப் பார்த்தான்.

வெண்மையான அலைகள் அசைந்தாடிக் கொண்டிருக்க, ஒரு ஆரஞ்சுத் தாமரை போல் மிதந்து கொண்டிருந்தாள்.

அவன் கொஞ்சம் நிலை மறந்து, மீண்டும் நினைவுக்குத் திரும்பி, காமிரவைத் திருப்ப,

"என்னை படம் பிடிக்கப் போகிறீர்களா..? இந்த மேனி அழகை, சுந்தர திருமுகத்தை, கந்தர்வ காதலியை ஊருக்கெல்லாம் ஒளிபரப்பிக் காட்டப் போகிறீர்களா..? நான் உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே முழுச் சொந்தம் அல்லவா..?"

சில துளிகள் அவள் கண்களில் இருந்து உருண்டு கடலில் கலந்து ஒரு துளி உப்பை அதிகமாக்கியது.

பதறிப் போனான் பாச்சா..! காமிராவைக் கீழே எறிந்தான். அது மரத் தளத்தில் விழுந்து அங்குமிங்கும் சரிந்தது. பாய்ந்து அவள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று ஆவல் கிளர்ந்தது.

"அன்பரே! வாருங்கள். இது நாம் வசந்தம் கொண்டாடும் நேரம். இப்போது கண்ணீர் எதற்கு..? நமது மாளிகை திறந்தே இருக்கிறது. வாருங்கள்...!"

பாச்சா வசியம் செய்யப்பட்டவன் போல் கைகளை நீட்ட, அவள் துள்ளி அவன் கைகளைப் பிடித்து கடலுக்குள் இழுக்கும் போது தான் கவனித்தான். அவள் இடையின் கீழ் வெண்ணிறச் செதில்களால் மீன் உடல்.

போட் தள்ளாடியது.

மோட்டாரின் ரீங்காரம் மட்டுமே வெகு நேரத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தது.

"முரளி...! முரளி...!"

"ம்...ம்..."

"போதும்..! மூக்க மூக்க தேச்சுட்டது போதும். கொஞ்சம் நான் சொல்றத கேக்கறீங்களா..?"

"ம்.. சொல்லு..! என்ன..?"

"அப்பா கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டார்...!"

"அப்படியா..? அம்பத்தஞ்சு வயசுல அவருக்கு என்ன கல்யாண ஆசை? லட்டு மாதிரி ஒரு பொண்ணை பெத்திட்டு மறுபடியும் அவருக்கு கல்யாணம் வேணுமாமா..?"

"என்ன ஜோக்கா? என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சுட்டார்! வரிசையா பசங்க ஃபோட்டோஸா கொண்டு வந்து காட்டறார். எனக்கு பயமா இருக்கு..!"

"இந்த தமிழ் சினிமால எல்லாம் வருமே, 'இப்ப என் கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்'னுட்டு கட்ட வெரலால தரையைப் பேத்திடுவாங்களே! அந்த டயலாக் எல்லாம் நீ சொல்ல மாட்டியா?"

"எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு! 'எனக்குத் தெரியும்! உனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்குத் தெரியும். நீ போட்டோஸ பார்த்து எந்தப் பையனைப் பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு.' அப்படிங்கறார்..! எனக்கென்னவோ நம்ம காதலை பத்தி அப்பாக்கு தெரிஞ்சு போச்சோனு பயமா இருக்கு!"

"ரொம்ப நல்லதாப் போச்சு!"

"பி ஸீரியஸ் முரளி..!"

"சரி, நான் அங்க இருந்து கையை எடுத்திடறேன்..!"

"ப்ச்..! புரிஞ்சுக்கோங்க. இது விளையாடற நேரம் இல்ல. சீக்கிரம் உங்க ப்ரொமோஷனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு முறையா வந்து எங்க வீட்ல பொண்ணு கேளுங்க. உங்க பேரண்ட்ஸோட வாங்க..! என்னிக்கு வர்றீங்க..?"

"இரு..! இரு காவ்யா..! ஏன் இவ்ளோ அவசரப்படற..? இன்னிக்கு என்ன... தர்ஸ்டே! சனிக்கிழமை ஓ.கே.வா? நானும் அதுக்குள்ள என் பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணி அவங்க சம்மதத்தை வாங்கிடறேன்..!"

"ஓ.கே...! போதும். கிளம்பலாம். அங்க தொடாதீங்க. அந்த இளநி கடக்காரன் அப்ப இருந்து நம்மளயே மொறச்சு மொறச்சு பாத்துக்கிட்டு இருக்கான்..!"

"விடு.. இந்த மாதிரி எத்தன லவ்வர்ஸ பாத்திருப்பான்..!"

"ஆமா! ஆனா இந்த மாதிரி மொட்ட வெயில்ல, காலேஜுக்குப் போறேன்னு சொல்லிட்டு பெசண்ட் நகர் பீச்சுல கொதிக்கற மணல்ல, ஸ்டொமக் பெயின்னு ஆஃபீஸுக்கு ஆஃப் டே லீவ் போட்டுட்டு வந்திருக்கற முரளிங்கற ஒரு ராஸ்கலோட சில்மிஷத்தை சமாளிச்சுக்கிட்டே இருக்கற காவ்யாங்கற அழகியை இப்ப தான் பாத்திருப்பான்...!"

கொஞ்ச நேரம் அமைதி.

கண்களைத் திறந்து, வெம்மையை அள்ளி அள்ளி கரையில் நனைத்த அலைகளைப் பார்த்த போது...

"முரளி..! அங்க பாருங்களேன்...!"

ஆச்சர்யமாக கூவினாள் காவ்யா.

முரளியும் அவளை விடுவித்து கடலைப் பார்க்க,

அலைகளில் இருந்து ஈரத்தோடு எழுந்து ஒருவன் நடந்து வந்தான்.

சுருண்ட முடியும், கறுப்பு நிறமும், கூரான் மூக்கும், முண்டா பனியனும் (அதில் டோரண்டோ), அரைக்கால் ட்ரெளசரும் அணிந்திருந்த அவன் கண்களில் களைப்பு தெரிந்தாலும் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் வெட்கம் மிச்சம் இருந்தது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

4 comments:

யோசிப்பவர் said...

சுஜாதா ஸ்டேல்லே குர்நாவ்ல் பட்ச்சா மாத்ரிக் கீது!!;-)

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும்!!!

சிறில் அலெக்ஸ் said...

கதையும் நடையும் சூப்பர். சுஜாதா பாணி எனச் சொல்லிவிடலாம். ஒரு வாக்கியம்கூட சுவாரஸ்யமில்லாமல் இல்லை.

Fantasy எனச் சொல்லலாம். முழுமையா அறிவியல் புனைகதை என வகைப்படுத்த முடியாது என நினைக்கிறேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு சிறில்...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க...!

'முழுமையான' அறிவியல் புனைகதை என வகைப்படுத்தாட்டியும் பரவாயில்லைங்க..! எவ்ளோக்கு எவ்ளோ அறிவியல் இருக்கோ அவ்ளோக்கு அவ்ளோ புக் பக்கங்களை வெச்சு குடுங்கோ...!!!
;-))