இங்கு வந்து பத்து மாதங்கள் ஆகப் போகின்றது. இருந்தும், இன்னமும் பத்மநாபசுவாமி கோயிலுக்குச் செல்லவில்லை. எந்தெந்த ஊர்களுக்கோ போய் சுற்றி விட்டு வந்து கதை எழுதுகிறாய். ஆனால் உள்ளூர் கோயிலுக்குப் போகவில்லை. என்ன பையன்டா நீ? என்று, மனசாட்சியோடு, அலுவலக நண்பர் கார்த்திக் கேட்டுக் கொண்டே இருந்ததால், இந்த வாரம் சனிக்கிழமை சென்றேன்.
அதிகாலை 09.30 மணி அளவில் மஞ்சள் வேட்டி சரசரக்க, வெள்ளை டீஷர்ட்டுடன் கிழக்கு கோட்டை பேருந்து பிடித்து, பத்து மணிக்கு கோயிலை அடைந்தேன்.
கிழக்கு வாசலின் முன் சில டூரிஸ்ட் பேருந்துகள். கல்லூரி மாணவர்கள். குடும்பங்கள். தமிழ், இந்தி, மலையாளக் குரல்கள்.
ஒரு ஷாப்புக்குச் சென்று துண்டு ஒன்று வாங்கிக் கொண்டேன். ஐம்பது ரூபாயாம். பாலியெஸ்டர் ரகம் என்பதால் இது! காட்டன் என்றால் 150.
க்ளோக் ரூமில் வேஷ்டி, துண்டு கொடுக்கிறார்கள். பைசா தான். பெண்களும் ஜீன்ஸ் போன்ற உடைகளை உடுத்தி வந்தால் வேஷ்டியை எடுத்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ள வேண்டும். செல்போன், டீஷர்ட், வீட்டுச் சாவி ஆகியவற்றை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள 18 ரூபாய் வாங்கினார்கள். கோயிலுக்குள் நுழையும் முன்பே கொடுத்து விட வேண்டும்.
கோயிலுக்குள் நுழைந்தேன்.
ஏழு சுற்றுகள் கருவறையைச் சுற்றிலும் என்று சொல்லப்படுகிறது. திருவரங்கம் போலவே! இரண்டிலும் கிடந்த கோலம் என்ற நிலையில் பெருமாள் இருப்பினும், கொஞ்சம் வேறு. அரங்கத்தில் வலதுகையை தலைக்கு அண்டக் கொடுத்து இருக்கிறார். இங்கே வலது கையை அப்படியே தொங்க விட்டுள்ளார். அவர் அரங்கநாதர். இவர் பத்மநாபசுவாமி. நாபியில் தாமரை கொண்டவர் எனலாம்.
சென்னை அடையாறிலும் ஒரு அனந்த பத்மநாபசாமி கோயில் உள்ளது. அடையாறு ஃப்ளை ஓவர் ப்ரிட்ஜ் இரண்டாகப் பிரிகின்ற சிக்னல் அருகே தான் உள்ளது. கேட்டால் சொல்வார்கள். காலேஜ் படிக்கும் போது ஒரு முறை சென்றிருக்கிறேன். மொசைக் தரைகள், தொங்கும் ஷேண்ட்லியர் விளக்குகள், ரவிவர்மா ஓவிய வர்ண ஜெராக்ஸ்கள், பளிங்குத் தூண்கள், அலங்கார நகைகள் என்று கொஞ்சம் போஷாக்கான கோயிலாகத் தான் அது தெரிந்தது. மாமிகளும், அய்யர் அழகுப் பெண்களுமாக அது வேறொரு லோகம் போல் காட்டியது.
இங்கே அவ்வாறான நவீன செயற்கைகள் ஏதும் இல்லாமல், பழமையின் அடையாளமாகத் தான் இருக்கிறது.
உள்ளே நுழையும் முன்பே கையில் அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து விடுகிறார்கள், என்னவோ அது must என்பது போல்! ஆனால் 30 ரூபாய்! கொஞ்சம் தாண்டியவுடன், நான்கு எண்ணெய் நிரம்பிய சிமிழ்க் கிண்ணங்களைக் கொடுத்து, தள்ளி இருக்கின்ற விளக்கில் 'பேர், கோத்திரம் மனசில நெனச்சிண்டு ஊத்துங்கோ' என்று ஊற்ற சிமிழுக்கு ஐந்து ரூபாய் என, இருபது ரூபாய் கறக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் கடந்து உள்ளே நுழைந்தவுடன் கொஞ்சம் குழப்பம் வந்தது. முதலில் சுற்றுவதா, மூலவரைப் பார்த்து விட்டு சுற்றுவதா என்று. அப்போது நேரம் 11 நெருங்கியது. 11.30 மணிக்கு தான் உள்ளே அனுமதிப்பார்கள். காத்திருங்கள் என்றார்கள். ஏனெனில் இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். சில நேரங்கள் மஹாராஜா வம்சத்தினர் தரிசனம் பெற வெரும் நேரமாம். நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு அனுமதி இல்லை.
வரிசை நீண்டது. அழகழகான குழந்தைகள். பெண்கள். ஆண்கள். இந்தி வாலாக்கள். தமிழ்க் கல்லூரியர்கள். கிழவர்கள். பாட்டிமார்கள்.
நடை திறக்கப்பட்டதும், வரிசை நகர்ந்து, கொஞ்சம் அடுத்த வட்டத்திற்குள் போனதும் இந்த்யத்தனம் வேலையைக் காட்டியது. வரிசை கலைந்து, கும்பலாக ஆனது. தடார், புடாரென ஆளாளுக்கு கலந்து, இடித்துக் கொண்டோம்.
வெளியே முப்பது ரூபாய் அர்ச்சனைத் தட்டு வாங்கினோம் இல்லையா? அது போதாதாம். அர்ர்ச்சனை செய்ய வேண்டுமெனில் இங்கே அர்ச்சனைச் 'சீட்டு' வாங்க வேண்டும். அது தனியாக பத்து ரூபாய். இங்கே வாங்கா விட்டால், அர்ச்சனைத் தட்டை அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டியதில்லை. வெளியே போனதும் அவர்களே வாங்கிக் கொள்வார்கள். நல்லது. ஆனால், முப்பது ரூபாய் திருப்பித் தர மாட்டாது. எனவே இங்கே ஒரு பத்து ரூபாய் பழுத்தாக வேண்டும்.
பைசா என்னிடம் காலியாகி, மர்பிஸ் லா போல் சரியாக ஒன்பது ரூபாய் தான் இருந்தது. மர்பிஸ் லாவும் இன்ஃப்ளேஷனுக்குத் தப்பவில்லை போலும். பள்ளியில் படிக்கும் போது, பஸ் டிக்கெட்டுக்கு சரியாக ஐந்து பைசா இல்லாமல் அதிர்ச்சி கொடுத்தது. இப்போது அந்த gap ஒரு ரூபாய் ஆகி விட்டது. தமிழ் நாட்டில் இருந்தல் ஒரு கிலோ அரிசி வாங்கி இருக்கலாம்.
அர்ச்சனைச் சீட்டு கொடுப்பவர் 'ஏ அற்பப் புழுவே!' என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, நக்கலாய்ச் சிரித்தார்கள். போய்த் தொலைகிறார்கள்.
இப்படி இவர்களிடம் வாங்கி, கொஞ்சம் ஒருமாதிரி வரிசையில் நின்று கருவறைக்கு அருகில் சென்றேன். அர்ச்சனைக்கு வாங்கியவர்களுக்கு மட்டுமே முதல் ரவுண்ட் தரிசனம். வாங்காதவர்களுக்கு இரண்டாம் ரவுண்ட். அது கொஞ்சம் தள்ளி.
அப்படி ஒன்றும் இரண்டு இஞ்ச் வித்தியாச தொலைவில் பெருமாள் வித்தியாசமாகத் தெரியவில்லை. இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரி கன்னங்கரியராகத் தான் தெரிகிறார்.
நமக்கு ஒரே சிலாரூபமாகப் பார்த்துப் பழக்கம். இங்கே மூன்று பார்ட்டாக தலை, உடல், கால் என்று பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. உடல் பகுதியின் முன், உற்சவர்கள் குட்டி சிலைகளாக இருந்தனர். தீபாராதனைகள் அவர்களுக்கே!
தேங்காய் உடைத்து கொடுத்தனர். கொஞ்சம் சந்தனம் தெளிக்கப்பட்டது. வெளியே வந்து விழுந்தேன்.
அடுத்த சுற்று சென்று குட்டித் தேவதைகள் கண்டேன். தூன்களில் எல்லாம் தமிழ் வாசம். எல்லா சிலைகளும் மதுரையிலும், நெல்லையிலும் கண்டது போலவே இருந்தன. யாழிகள். விளக்கேந்திய, ததும்பும் கொய்யா மார்க் கன்னிகள்.
நம் மக்களின் கூர்மையான பார்வைக்கு ஓர் உதாரணம் கோயில்களில் காணலாம். இருக்கும் ஆயிரக்கணக்கான தூண்களில், சரியாக முருகனைக் கண்டுபிடித்து, அவன் கால்களைக் கற்பூரங்களால் தீய்த்திருந்தனர்; அனுமரைக் கண்டுபிடித்து, கண்ணனைப் போல் 'வெண்ணெய் உண்ட வாயன்' ஆக்கியிருந்தனர். எப்படி கண்ணனுக்கும், அனுமாருக்கும் வெண்ணெய் பிடித்துப் போனது? கண்ணன் கதை தெரியும். ஆஞ்சநேயர்?
முந்தின நாள் தான் 'இங்கேயும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது' என்று சொல்லி இருந்தேன். பார்த்தால், சனிக்கிழமை முழுதும் கருக்கலிட்டு, இருள் விலகத் தொடங்கிய அதிகாலையில் மழை பெய்திருந்தது. கோயிலில் இருந்த போதும், தூறிக் கொண்டே இருந்தது.
சுற்றி வரும் போது, அம்மன் கோயில் போலும் ஒரு கோயிலின் முன் பல அம்மாக்க்ள் ஸ்தோத்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். புரட்டாசி முதல் சனிக்கிழமை அல்லவா?
தூண்களைத் தவிர்த்து, சுவரோவியங்கள் கேரள பாணியில் இருந்தன.
மதிய உணவு கோயிலிலேயே போடுகிறார்கள் என்று ஒரு வரிசை நின்றது. இணைந்து கொண்டேன்.
பாயசம். ஒரு பொறியல். ஊறுகாய் போன்று ஒரு பதார்த்தம். குண்டு அரிசியில் சாதம். ரசம்.
இருந்த களைப்புக்கும், பசிக்கும் சாப்பிட்டு முடித்தேன். 'பந்திக்கு முந்து' என்கிறார்களே அது எல்லா சமயங்களிலும் ஒத்து வரும் என்று தோன்றவில்லை. நான் சாப்பிடும் போது, எனக்கு முன் 80 பேர்களாவது முடித்திருப்பர். ஆனால் பிறகு தான் வேறொரு வகை பாயசம் வந்திறங்கியது.
பாயசமா, அடுத்த ரவுண்ட் மோர் வாங்குவோமா என்ற ஆர்க்யுமெண்ட்டில் பாயசம் வென்றது. (Ofcourse!)
வெளியே வந்து விட்டேன்.
சரி, கோயில் தரிசனம் முடிந்தது. நெக்ஸ்ட்..?
தம்பானூர் ஜங்ஷன் போய் கொஞ்சம் ஏ.டி.எம்.மில் காசு எடுத்த பின் தான் கொஞ்சம் மூச்சு வந்தது.
நீல. பத்மநாபன் அவர்களின் வீட்டுக்குச் சென்று பேசி விட்டு வரலாமா என்று எண்ணம் வந்தது. கால் அடித்தேன். வழக்கமாக அவர் வீட்டம்மா தான் முதலில் எடுத்துப் பேசுவார். எனவே 'சார் இருக்காருங்களா?' என்ற வசனத்தை மனதிற்குள் கோர்த்து, ரெடியாக இருந்தேன்.
கால் எடுக்கப்பட்டது. 'ஹலோ..!'. இது சார் குரல்.
கொஞ்சம் தடுமாறினேன்.'சார்..! நீங்க இருக்கீங்களா?' என்று கேட்க வந்து விட்டேன். டக்கென்று டயலாக் யோசித்து மாற்றி பேசினேன். மதியம் மூன்று மணிக்கு மேல் வந்து பார்க்கச் சொன்னார்.
மணி இப்போது 12:42. இனி வீட்டுக்குச் சென்று திரும்பலாம் என்றால் லேட்டாகி விடும். ஏற்கனவே லேட்டாகப் போய் திட்டு வாங்கியாகி விட்டது. இந்த முறை சரியாகப் போய் விட வேண்டும். மேலும் ரூமிற்குப் போனால் கண்டிப்பாகத் தூக்கம் வந்து விடும். எனவே அந்த ஐடியா கைவிடப்பட்டது.
ஊருக்குச் செல்ல பேருந்தில் வரும் போதெல்லாம், பி.எம்.ஜி.யில் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ம்யூஸியம் ஒன்றைப் பார்ப்பேன். ஒரு நாளாவது அங்கு போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தது நினைவுக்கு வந்தது. சரி! இரண்டு மணி நேரம் ஓட்ட அதுவே சிறந்த இடம்.
ஆட்டோ பிடித்து முப்பது ரூபாய் செலவில், அடைந்தேன்.
அங்கே கொஞ்சம் கூட்டம் இருந்தது. மனைவி, குழந்தைகளுடன் கல்லூரி மச்சினிகளைக் கூட்டி வந்திருந்தது போல் சில குடும்பஸ்தர்கள். யாருக்காகவோ காத்திருந்தார் போல் இருந்தனர்.
நான் பாட்டுக்குச் சென்று டிக்கெட் வாங்க கவுண்ட்டருக்குச் சென்றேன். '3டி ஷோவா, கேலரியா?' என்று கேட்டார்கள். ஏதோ ஒன்று என்று கேட்க நினைப்பதற்குள், ஒரு குடும்பஸ்தர் அருகில் வந்து, 'சார்! 3டி ஷோ வாங்குங்க! கூட்டம் இல்லாததால் வெய்ட் செய்றாங்க!' என்றார். அதற்குள் காத்திருந்த சிலர் என்னைத் தள்ளிக் கொண்டு கவுண்ட்டர் பக்கத்தில் நிற்க வைத்தன்ர்.
டிக்கெட் கொடுக்கும் அம்மணியும் 3டி ஷோவுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். டிக்கெட்டில் 'Welcome to Travel to Technolohy'. ரசிக்க முடிந்தது.
எனக்கு ஒரு தகுதியில்லாத பெருமை வந்தது. 'ஆஹா! நமக்காக அன்றோ இவர்களைனைவரும் காத்திருந்தனர்' என்று! சடாரென மற்றொரு மனம், 'நீ வந்த பிறகு தான் கூட்டம் சேர்ந்திருக்கிறது என்று தோன்றுகின்றதெனில் என்ன அர்த்தம்? ஒத்தையில நீ நடந்தா ஊர்வலம் போகுதுன்னு ஊருக்குள் பேச்சிருக்கு, போகாதே ரோட்டில்' என்று பாடியது.
3டி ஷோ நன்றாகவே இருந்தது. எல்லோரும் பசுபதிகளாய் கருப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, திரையைத் தவிர அத்தனை சுவர்களும் டிஸ்ட்ராக்ஷனைத் தவிர்ப்பதற்காக கருப்புப் பெயிண்ட்டால் நிரம்பியிருக்க, அலுமினியம் போல் மினுத்த திரையின் மேல் ஒளிப் பூச்சு அடித்து, பாப் இசை ஸ்பீக்கர்கள் அடங்க, மல்டி டைமன்ஷனல் ஸ்டூடியோஸ் என்ற எழுத்துக்கள் ஊர்ந்து வந்தன.
முதலில் கடல் வெளிப் பயணம். மீன்கள் முகத்தின் மேல் விழுந்தன; ஆக்டோபஸ்களின் அஷ்டக் கரங்கள் நீண்டன; டைனோசர் வாய பிளந்து காட்டியது. சறுக்கி, சறுக்கி பயணம் போனோம்; நீரில் விழுந்தோம்; வானில் எழுந்தோம்; தலைகீழாய் உருண்டோம்; குட்டி டைனோசர் தலைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தது.
அடுத்தது, அலிபாபா.
அவனோடு கம்பளப் பயணம் செய்தோம்; ஜாஸ்மினை கிஸ் செய்ய அவன் முயல்கையில் எட்டிப் பார்த்த நண்டின் கொடுக்குகள் நம் மேல்! தப்பிக்க முயல்கையில் ஆணிகள் மேலே விழுந்தன. நட்சத்திரங்கள் தெறித்தன; வாட்டர் பவுண்டைன் ஆடல் பெண் சிலை தண்ணீரை வீசியது. தப்பித்தான்.
கடைசியாக, மேஜிக் அங்கிள்.
சயின்டிஸ்ட்டின் வினோத மேஜிக் விளைவுகளாக, எலும்பு மண்டையோடுகள் முகம் முன் வந்தன; பாம்புகள் நாக்கை வீசி வீசி பாய்ந்தன; நூற்றுக்கணக்கான பெருச்சாளிகள் எங்கள் மேல் பாய்ந்தன; பறக்கும் தட்டுகள் சுற்றி சுற்றி வந்தன.
முடிந்தது.
குழந்தைகளின் அலறல் சத்தமும், பய அழுகைகளும் மட்டுமே பின்னணி இசையாக கேட்டது. ஓரளவிற்கு மேல் டெக்னாலஜி தெரிந்து கொண்டதற்கு கொடுத்த விலை, இந்த இன்னொசென்ஸை இழந்தது தான்!
பத்து ரூபாய்க்கு மதிப்புடையது. மற்றுமொரு முறை இதன் தந்திரங்களை கண்ணாடியை ரிமூவி விட்டுப் பார்க்க வேண்டும்.
வெளியே வந்தேன்.
மற்றுமொரு பதினைந்து ரூபாய்க்கு கேலரிகள் பக்கம் போனேன். மணி 13:40 தான்.
ஸ்பேஸ் படங்கள், மெக்கானிக்கல் எஞ்சின்கள், பயோ இஞ்சினியரிங் மெஷின்கள் என்று பார்த்து விட்டு, கீழே செல்ல எலெட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் கேலரி. கொஞ்சம் பழையா ஞாபகங்களை எழுப்பி விட்ட அம்மீட்டர், வோல்ட் மீட்டர், ட்ரையோடு, எல்.சி.டி... ஏதோ டிப்பார்ட்மெண்ட் லேபுக்குப் வந்த மாதிரி இருந்தது.
மேலே சென்றால், மேதமேடிக்ஸ் கேலரி. இருபது பஸில்களில் ஒன்றில் மட்டுமே கெலிக்க முடிந்தது. ஒரு கேள்வி : மூன்று ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பனியன்களில் மூன்று, ஆறு, ஒன்று என்ற எண்கள் உள்ளன. அவர்களை ஏதோ ஓர் ஆர்டரில் நிற்க வைத்து ஏழால் வகுக்கப்படும் எண்ணாக்குங்கள். விடை பின்னூட்டத்தில் கொடுங்கள்.
எலெக்ட்ரிக்கல் எஞ்சின் கேலரி, கண்ணாடி பிம்ப விளையாட்டுகள் என்று கொஞ்ச நேரம் போனது.
மூன்று மணியை நெருங்கியது. ஸ்பேஸ் ஷோ மூன்று மணிக்கு ஆரம்பிக்கும். நமக்குத் தான் டைம் இல்லையே.
ஆட்டோ பிடித்து, தைகாடு சென்று திரு. நீல. பத்மநாபன் அவர்களைச் சந்தித்துப் பேசினேன்.
Excerpts ::
* தனது நாவலின் தலைப்பான 'பள்ளி கொண்ட புரம்' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் உருவாகுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பதையும், நோட்டிஸை வாங்கிக் கொள்வதை எதிர்த் தரப்பு செய்யவில்லை என்று கோபமும் வருத்தமும் கொண்டிருந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கங்களும் இதில் எதிர்பார்த்ததைப் போல் ஆதரவு கொடுக்கவில்லை என்றார். பேச்சு பதிப்பகங்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி திரும்பியது. காண்க :: பள்ளிகொண்டபுரம்:நீலபத்மநாபன் கடிதம்.
சரியான ராயல்டி தொகை கொடுக்காமல் இருப்பது, ஒரு மொழிக்கு அனுமதி வாங்கி பிற மொழிகளிலும் சந்தடி இல்லாமல் வெளியிடுவது, ஸ்டாக் தீர்ந்து போனால் சொல்லாமல் இருப்பது இப்படி ஏகப்பட்ட தகிடுதத்தங்கள். எழுதுவதை மட்டுமே தொழிலாக வைத்திருப்பவனின் கதி என்ன ஆகும்?
இவ்வளவு அவஸ்தைகளுக்கு இடையில் எழுத்தாளனாக இருப்பது அவசியமா என்ற கேள்வி எனக்குத் தோன்றியது.
* அவரது புத்தகங்களை இன்னும் முழுதாகப் படிக்கவில்லை என்று சொன்ன போது சிரித்தார். அதில் எரிச்சல் இருந்தது எனக்குப் புரிந்தது. 'இவன் ஒரு புத்தகத்தையும் படிக்காமல் வந்து பேசுகிறானே? போன முறையே எழுதியவற்றை படித்து விட்டுப் பின் வாருங்கள் என்று சொல்லி இருந்தோம்' என்று நினைத்திருப்பார்.
* அவரது எழுத்துக்களில் எனக்கு கொஞ்சம் ஜெனரேஷன் கேப் இருக்கிறது. ஆனால் அவரிடம் பேசுவதில் அது இல்லை. சும்மாவா, என்னை விட கிட்டத்தட்ட 50 வயது மூத்தவர். ஆனால் 'பொடியனிடம் பேசுகிறோம்' என்ற ஏளனம் அவரிடம் இல்லை.
* சரளமாக சில பெயர்களை உச்சரித்துச் சென்றார். சில பெயர்கள் மட்டும் தெரிந்தது. சு.ரா.கண்ணன். இரா.சுகுமாரன்.ஆ.மாதவன். மற்ற பெயர்கள் கமர்ஷியல் புத்தக சூழல் வாசகனுக்கு தெரியவில்லை. ஆனாலும் குறித்துக் கொண்டேன்.
* 'உன் ப்ளாக்கைப் பார்த்தேன். அபவ் ஆவரேஜ்' என்றார். பயங்கர மகிழ்ச்சியாக இருந்தது.
* திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் முதல் ஞாயிறு கதையரங்கம். கடை ஞாயிறு கவியரங்கம் நடக்கும். கதையையும், கவிதையையும் படித்துக் காட்டலாம். விவாதம் செய்யலாம். போன முறை சந்திப்பிலேயே என்னிடம் சொன்னார். 'வசந்த் என்று ஒருவர். வந்தாரா?' என்று கேட்டிருக்கிறாராம், சங்கத்தில். 'இல்லை' என்றிருக்கிறார்கள். சொன்னவுடன் உண்மையில் வெட்கிப் போனேன். என்னையெல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து கேட்டிருக்கிறார் என்றால்... என்ன சொல்வது... மேன்மக்கள் மேன்மக்களே! என்னைப் போல் சோம்பேறிகள் சோம்பேறிகளே!
* 'வரும் ஞாயிறு கவியரங்கம். கவிதை எழுதிக் கொண்டு வா' என்று சொல்லி இருக்கிறார். பயமாக இருக்கிறது.
* இவரைப் பார்க்கையில் ஒரு கண்டிப்பான வாழ்க்கை வாழும், அடர்த்தியான கொள்கைகளோடு வாழ்கின்றார் என்று தோன்றுகிறது. அவர் அருகில் அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்கையில், நான் எவ்வளவு தளர்ந்து போன வாழ்க்கை வாழ்கிறேன் என்று புரிந்தது. ஒரு கமிட்மெண்ட் இல்லை. 8.30க்கு அலுவலக நேரம் என்றால், 9.30க்கு போய்க் கொண்டிருக்கிறேன். முதலில் இதைச் சரி செய்தாக வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.
* 'வடக்கு வாசல்'என்ற இலக்கியப் பத்திரிக்கையின் ஆண்டு மலரில் வந்திருந்த இவருடைய 'இன்னொரு நாள்' என்ற சிறுகதையைப் படித்து கருத்து கேட்டார். நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டிருந்ததைச் சொன்னேன். அவரது கோணத்தைச் சொன்னார்.
* அவரது கணிப்பொறியில் இருந்து சில கவிதைகளை அவரது வலைப்பதிவுக்கு ஏற்றுவதில் உதவினேன்.கவனம். உதவினேன். அவரே தான் அனைத்தையும் செய்தார். கற்றுக் கொள்ளும் மனதிற்கு வயது தடையன்று என்பதைக் காட்டினார்.
* தமது உடல் நில்லை சற்று சரி இல்லை என்ற போதும், எனக்காக ரொம்ப நேரம் பேசினார். மிக்க நன்றி ஐயா.
பின் வழக்கம் போல் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, இண்டியன் காபி ஹவுஸில் பராத்தா சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து களைப்பில் தூங்கிப் போனேன்.
பி.கு.:: காலப்பயணியின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு முழுச் சுற்று நிறைந்து, அடுத்த ஆண்டு துவங்கிய நாள் சனிக்கிழமை. எனவே கோயிலில் கடவுளையும், சிறந்த எழுத்தாளர் ஒருவரையும் பார்த்து விட்டு வந்ததில் மகிழ்ச்சி.
***
குமுறும் வானம் ::
ஞாபகம் வருதே ::
பா.ரா. அவர்கள் டைப்-ரைட்டிங் பயின்ற மெஷின் ::
இந்த மெஷின்ல என்ன பண்ணியிருப்பாங்க? ::
சயின்ஸ் ம்யூஸியம் ::
15 comments:
//நம் மக்களின் கூர்மையான பார்வைக்கு ஓர் உதாரணம் கோயில்களில் காணலாம். இருக்கும் ஆயிரக்கணக்கான தூண்களில், சரியாக முருகனைக் கண்டுபிடித்து, அவன் கால்களைக் கற்பூரங்களால் தீய்த்திருந்தனர்; அனுமரைக் கண்டுபிடித்து, கண்ணனைப் போல் 'வெண்ணெய் உண்ட வாயன்' ஆக்கியிருந்தனர். எப்படி கண்ணனுக்கும், அனுமாருக்கும் வெண்ணெய் பிடித்துப் போனது? கண்ணன் கதை தெரியும். ஆஞ்சநேயர்?
//
தமிழனாச்சே...
//ஓரளவிற்கு மேல் டெக்னாலஜி தெரிந்து கொண்டதற்கு கொடுத்த விலை, இந்த இன்னொசென்ஸை இழந்தது தான்!
//
உண்மையான வார்த்தைகள் வசந்த்.,. கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டாலே எதையும் ரசிக்க முடியல... குறை சொல்றாதுக்குத்தான் மனசு வருது... ஒரு விமர்சனப் போக்கு வந்து எதையும் ரசிக்க முடியாமப் பண்ணிடுது...
//* 'உன் ப்ளாக்கைப் பார்த்தேன். அபவ் ஆவரேஜ்' என்றார். பயங்கர மகிழ்ச்சியாக இருந்தது.
* திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் முதல் ஞாயிறு கதையரங்கம். கடை ஞாயிறு கவியரங்கம் நடக்கும். கதையையும், கவிதையையும் படித்துக் காட்டலாம். விவாதம் செய்யலாம். போன முறை சந்திப்பிலேயே என்னிடம் சொன்னார். 'வசந்த் என்று ஒருவர். வந்தாரா?' என்று கேட்டிருக்கிறாராம், //
வாழ்த்துக்கள் வசந்த்..
//என்னைப் போல் சோம்பேறிகள் சோம்பேறிகளே!
//
நீங்களே சோம்பேறின்னா , நானென்னால்லாம் எங்க போறது...?
//.:: காலப்பயணியின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு முழுச் சுற்று நிறைந்து, அடுத்த ஆண்டு துவங்கிய நாள் சனிக்கிழமை. எனவே கோயிலில் கடவுளையும், சிறந்த எழுத்தாளர் ஒருவரையும் பார்த்து விட்டு வந்ததில் மகிழ்ச்சி. //
ஒரு வருடம் முடிஞ்சிருச்சா...? உளமார்ந்த வாழ்த்துக்கள்... ஆனால் நான் படிக்காமல் விட்டதுதான் ஏராளமாய் இருக்கிறது...
எனக்கு இலவசமாக இருந்த இடத்திலேயே திருவனந்தபுரத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி....
இன்னும் பதிவே முடியலையா...? சரி நாளைக்கு வந்து பின்னூட்டிக்கிறேன்...
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...!
ஒரு சின்ன திருத்தம் ::
//ஒரு வருடம் முடிஞ்சிருச்சா...?
சென்ற ஆகஸ்ட் 21 அன்றே வலையுலகத்தில் இரண்டாண்டுகள் நிறைவு பெற்று விட்டன. தற்போது மூன்றாம் ஆண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்பதிவில் குறிப்பிட்டது வாழ்க்கைப் பயணம். பிறந்த நாள் என்பதை அந்த லட்சணத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
ஹி..ஹி...
//மூன்று ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பனியன்களில் மூன்று, ஆறு, ஒன்று என்ற எண்கள் உள்ளன. அவர்களை ஏதோ ஓர் ஆர்டரில் நிற்க வைத்து ஏழால் வகுக்கப்படும் எண்ணாக்குங்கள். விடை பின்னூட்டத்தில் கொடுங்கள்.//
9 3 1 (ஆறு எண்ணுடையவர் தலை கீழாக நிற்க வேண்டும்).
சரியா வசந்த்..
நீங்கள் பேச்சுலர் போல் தெரிகிறது. வார இறுதியில் எங்கு செல்வது என்று குழப்பம் வரும் அளவிற்கு பல இடங்கள் செல்கிறீர்கள் :)))
நல்ல நடை. ஒரு நாட்குறிப்பு போல் உள்ளது..
உலகத்திலேயே சிறந்த கல்வி முறை எது தெரியுமா மச்சான் ?
உரையாடல் தான்.
பத்மநாபன் நான் மதிக்கும் ஒரு சில எழுத்தர்களின் ஆதர்ச எழுத்தாளர் . அவருடன் நீ உரையாடிய விஷயங்களை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம். சென்சார் பண்ணிட்ட போல . (அந்த ஆடியோ பைல் வேலை செய்யலை 10 தடவ கிளிக் பண்ணி பார்த்துட்டேன் )
நிறைய ஊர்சுற்றல், நிறைய உரையாடல், நிறைய அனுபவங்கள்
ஒரு படைப்பாளிக்கு தேவையான குணங்கள் உனக்கு வந்து கொண்டே இருக்கிறது.
வாழ்த்துக்கள்!
மறக்காம வேலையும் கொஞ்சம் பாருடா.
காசு பணமும் முக்கியம்
அன்பு வெண்பூ...
நீங்க சொன்ன ஆன்ஸர் கரெக்ட். எப்படி இப்படியெல்லாம்...?
பேச்சுலர் போல் தெரிகின்றதா..? நிஜமாலும் நான் பேச்சுலர் தாங்க..! டைரி எழுதற மாதிரி இருக்குதுன்னுட்டீங்க...! மாற்ற முயல்கிறேன்.
***
அன்பு நாடோடி...
சென்சார் எல்லாம் பண்ணலை! அவர் சொன்ன விஷயங்களை செல்போனில் ரெக்கார்டு பண்ண முயன்றதில், கொஞ்சம் சொதப்பிடுச்சு. இந்த முறை அப்படி எல்லாம் முயலாமல், நேரடியாக அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் நினைவுக்கு இருந்ததை, மக்களுடன் ஷேர் செய்யலாம் என்று 'எனக்கு' தோன்றியதை மட்டும் சொல்லி இருக்கிறேன்.
அந்த ஆடியோ ஃபைலை ஃப்ரீயா விடு. அது கேட்டாலும் ரொம்ப மெல்லிசா தான் கேட்கும். அது தான் நான் எழுதறேன்ல, என்ன பேசினார்னு. அது தான் ஆடியோலயும் இருக்கும்.
ஆபிஸ்ல வேலையும் பாத்துட்டு தாம்பா இருக்கேன். ஊர்சுத்தல்கள் எல்லாம் வீக் எண்ட்ல மட்டும் தான்.
Interested in sovling puzzles, thats why tried without googling the question.
You should be knowing the Yosippavar blog
http://yosinga.blogspot.com/
he publishes some of the good puzzles.
(Too much nails at office and hence typing on the run... so english)
அன்பு வெண்பூ...
நானும் அவ்வப்போது 'யோசிப்பவரின்' புதிர்ப் பதிவைப் பார்ப்பேன். என் ரேஞ்சுக்கு அவை எல்லாம் எட்டாத் தொலைவில் இருப்பதால், அங்கே கை வைத்து சுட்டுக் கொள்ள முயன்றதில்லை.
அப்படியா... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்....
நீங்க எழுத்து வலை(வீச) ஆரம்பிச்சு இரண்டாண்டு முடிஞ்சிடுச்சா...?
பெரிய சாதனைதான்...
//9 3 1 (ஆறு எண்ணுடையவர் தலை கீழாக நிற்க வேண்டும்).
சரியா வசந்த்..//
தலைகீழா நின்னு யோசிச்சாரோ வெண்பூ...?! இல்ல அவர் பையன் உண்மையான வெண்பூ கிட்ட விடை கேட்டு வாங்கினாரா..?
//டைரி எழுதற மாதிரி இருக்குதுன்னுட்டீங்க...! மாற்ற முயல்கிறேன்.
//
ஏங்க மாத்துறீங்க... இந்த நடை கூட நல்லாத்தானிருக்கு...
//நானும் அவ்வப்போது 'யோசிப்பவரின்' புதிர்ப் பதிவைப் பார்ப்பேன். என் ரேஞ்சுக்கு அவை எல்லாம் எட்டாத் தொலைவில் இருப்பதால், அங்கே கை வைத்து சுட்டுக் கொள்ள முயன்றதில்லை.//
விடுங்க வசந்த்... அதெல்லாம் 'யோசிக்கிறாவங்களுக்கானது'... நமக்கு காடு, கடல், கவிதை, சேச்சி, பாவனா...இந்த ஏரியாவே போதும்....
// மூன்று ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பனியன்களில் மூன்று, ஆறு, ஒன்று என்ற எண்கள் உள்ளன. அவர்களை ஏதோ ஓர் ஆர்டரில் நிற்க வைத்து ஏழால் வகுக்கப்படும் எண்ணாக்குங்கள். விடை பின்னூட்டத்தில் கொடுங்கள்.
//
931 = 7-ல் வகுத்தால் 122.
அதான் ஜிம்னாஸ்டிக்க்னு சொல்லிட்டிங்களே. அதனால நான் 6-ஐ கணக்கிலேயே எடுத்துக்கலை :-)) நேரடியா அவரை 9-ஆக்கிட்டேன்.
அன்பு தமிழ்ப்பறவை...
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
ஆம். குட்டி வெண்பூ இவரை வாசம் பிடிக்கத் தலைகீழாக நிற்கச் செய்திருக்கும் போது சீனியர் வெண்பூக்கு விடை தோன்றி இருக்கும் என்று நினைக்கிறேன். ;-))
ஓ.கே. நடையை மாற்றவில்லை. இம்ப்ரூவ் செய்கிறேன்.
கரெக்டுங்க. நமக்கு பாவ்குட்டி, கவிதை, கதை, ஊர் சுத்தல்.. இதுக்கே டைம் பத்த மாட்டேங்குதே..!!!
***
அன்பு ஸ்ரீதர்...
கலக்கிட்டீங்க. நீங்க சொன்ன விடை சரியானது தான். வாழ்த்துகள்.
அருமையான நடை வசந்த். நானும் ஈரோட்டுக்காரன் தான். உங்களுடைய ப்ளாகைப் படித்ததும் ஒரு நல்ல எழுத்தைப் படித்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அது சரி. /இங்கு வந்து பத்து // எங்கு வந்து? அல்லது நான் தான் அதை மிஸ் செய்துவிட்டேனோ?
அன்பு அமரபாரதி...
'இங்கு' என்று குறிப்பிட்டு இருப்பது, தற்போது நான் திருவனந்தபுரத்தில் இருப்பதைக் குறிக்கின்றது. எனது வலைப்பதிவின் இடதுபுறம் 'பயணம்' என்றொரு கேட்டகிரியில் கேரள அனுபவங்களைச் சொல்லி இருக்கிறேன்.
அதையும் காணலாம்.
உங்களது பதிவில் இன்னும் கணக்கைத் துவங்கவில்லை போலும்..! எழுத ஆரம்பியுங்கள்...!!! ;-)
Post a Comment