Friday, September 26, 2008

பிறழ் இல்லாப் புலர்தல்! (A)



ச்சைப் பூவுடல்! முத்து முத்தாய்ப் படர்ந்திருக்கும் மொட்டுத் துளிகளாய் ஈரக் கணுக்கள்! பனிப் பூக்களாய் கடுங் காட்டுக்குள் முகிழ்த்திருக்கலாம். வியர்வைப் பருக்களாய் விழித்திருக்கலாம். மஞ்சள் போர்வையாய் உள் துடிக்கும் உயிரைப் போர்த்தியிருக்கும் மென் சூட்டுத் தேகம். நகக் கூர்மைகள் காற்றில் விசிறுகையில் கிழிபடும் இருள் அணுக்கள்.

புற்களின் விரிப்பில் மண் துகள்கள். முன்னிரவு மழையின் முத்தப் பதியல்கள். எங்கிருந்தோ பெருகி வரும் பழுப்புக் காட்டாறு பொங்கிக் களித்துப் பெருகி, ஆரவாரமாய் அகோரமாய் மேட்டிலிருந்து பள்ளம் தேடிப் பாயும் பேரொலி கேட்கிறது. கூர் முகடுகளில் இருந்து கலைந்து, கரைந்து சிறு சிறு துகள்களாய்த் துவங்கி, ஒன்றோடு ஒன்று சேர்ந்து, இணைந்து பல்கிப் பெருகி உச்சத்திலிருந்து அச்சம் விட்டு, பிரவாகித்து வருகிறது பனிமழை.

அடிமரத் தடம் போன்ற இறுக்கம் உருகுகிறது. குழைவாய், குளிர்வாய், தீச் சூட்டின் தீண்டலின் உரசலில் நெகிழ்ந்து பிரியும் வெண்ணெய் வெள்ளம் போல்!

குளிர் நிலவின் கிரணங்கள் தடவுகின்றன. கழுத்தணியும் தங்கச் சங்கிலி கோணங்கள் மாற்றி குழறுகின்றது. ஒவ்வொரு திரும்பலும் அதன் முகத்தின் முனையை முற்றிலும் மாற்றிப் போடுகின்றது. கூந்தலின் சிறு சிறு குச்சிப் பாம்புகள் சிக்கிக் கொள்கின்றன சங்கிலியின் கூர் நுனிகளில்! செவிக்குள் பாயும் இரு இதயத் துடிப்புகள். கிடுகிடுக்கும் காடே நடுநடுங்கும் பேரிடி வானில் தடம் பதிக்கும் போதும், படபட துடிப்புகள் இதயம் வழி ஆழ கேட்கும்.

மடல்கள் முழுதும் ஈரம் சரம் சரமாய்க் கோர்த்திருக்கும். பூனை முடிகள் சிலிர்த்து நின்றிருக்க, மழைத் துளிகள் இணைக்கும் இலைகள் உரசும் சிலீர் சத்தமும் கூசச் செய்கின்றது. பூவிதழ் அழுத்தம் தாங்கா மகரந்தப் புறாக்கள் மடங்கி விழுதல் போல், புருவக் கோடு கலைகின்றது. ஒற்றை வியர்வைத் துள்ளி உச்சிப் புள்ளியிலிருந்து நாசியின் நடுக்கோட்டில் நடை போடுகிறது. இறுதிக்கு வந்து சொட்டுகிறது, சிவந்த உதடுகள் மேல்!

விழிகளின் கோட்டைக் கதவுகள் இறுக மூடியிருக்கும். காவல் வீரர்களாய்த் தனித்தனியாக காவல் காத்திருக்கும் இமை முடிகளின் வழியே கசிவது கண்ணீரா, மழைத்துளியா, வியர்வையா?

கல்வெட்டுப் பாறைகளின் மேலான அர்த்தம் கொள்ள இயலா ஆதி எழுத்துக்கள் போன்று வரிகள் வளைந்திருக்கும் உதடுகளின் மேல் வெப்பம் அனலடிக்கிறது. பொருள் அறிந்து உச்சரிக்க நெருங்க, ஒவ்வொரு வரியின் மேலும் ஏதோ சில காந்தத் பிசிறுகள். ஒட்டிக் கொண்ட துருவங்கள் பிரியும் முயற்சிகள் அனர்த்தமாகின்றன.

வெட்க நூலாடை மெல்ல மெல்ல விலகிப் பறந்தோட, படர்கிறது ஒரு போர்வையாய் பதற்றம். கரையைத் தாண்டி கரையத் துடிக்கும் பளிங்கு கரங்கள் மர்ம தேசங்களில் வெற்றி உலா போகின்றன. தடுப்பார் இல்லை. தடுப்பினும் விடுப்பார் இல்லை. விளிம்புகளின் நிறங்கள் மாறும் போது, பருந்துக் கொத்தலில் பரிதவிக்கிறது பகல் தெரியாப் பழுதிலா எழில்.

கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் பூத்திருக்கும் வானப் பெருவெளி போல் உடலெங்கும் சிலிர்ப்புப் பருக்கள். கரு மேகங்களாய் மறைத்திருக்கும் கடுங்கூந்தல். சுடுங்கூந்தல். மலரென மணமா, விழுந்த மண்ணின் மணமா, தகிக்கும் நெருப்பின் பூசல் நிறமா..?

நிறம் கழிந்த சங்கிலிகள் உரசும் தடாகம். குளக்கரையில் உரசும் அலைகள். தாமரை மொட்டுகள் காற்றின் கரங்களின் தீண்டல்களுக்கெல்லாம் தலையாட்டும். இலைகள் மறைக்கும் மலரின் கால்கள் ஒற்றையாய் நிற்கும். மீன்கள் துள்ளும். தேன் சுரக்கும் இதழ்கள் மெல்லத் திறக்கும் போது வண்டுகள் வாசம் செய்யும் பின்னிரவு நேரத்தில்...

பெரும் அமைதியில் அமிழ்கிறது சூழல்!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் நன்றி :: iaolvz

***

குட்டிக் கதைகள் எழுதி தமிழ்ப் பரப்பை சுத்தப்படுத்தும் ஜென் குருஜிக்கு சமர்ப்பணம்.

5 comments:

யோசிப்பவர் said...

என்னப்பா எழுதிருக்கீங்க?! முதல் பாரா படிச்சதுமே தூங்கிட்டேன். ஆவ்!! இன்னும் நீங்க அந்த ஜென் குருவை விடலையா?! ஆவ்!! ;-))

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

மிக்க நன்றிகள் தாங்கள் தூக்கத்திலும் வந்து பார்த்து, கருத்து சொன்னதற்கு!

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
பிறழ் இல்லாப் புலர்தல் (தப்பில்லா விடியலா..?)....
ஏதோ மேட்டர் கதை மாதிரி இருக்கு...ஃபுல்லா படிச்சுப் பார்த்தேன்.ஃபுல் அடிச்ச மாதிரி கேரா இருந்துச்சு.இதுதான் பின்நவீனமா...?என்ன எழவோ...
ஆனா எனக்குப் பிடிச்ச வரிகள்...
//நகக் கூர்மைகள் காற்றில் விசிறுகையில் கிழிபடும் இருள் அணுக்கள்.
//
//கூந்தலின் சிறு சிறு குச்சிப் பாம்புகள் சிக்கிக் கொள்கின்றன சங்கிலியின் கூர் நுனிகளில்//
//மழைத் துளிகள் இணைக்கும் இலைகள் உரசும் சிலீர் சத்தமும் கூசச் செய்கின்றது//
ஒற்றை வியர்வைத் 'துளி' என்றுதானே இருக்க வேண்டும்.
அல்லது 'ஒற்றை வியர்வை துள்ளி' என்றிருந்தாலும் சரியாக இருக்குமென எண்ணுகிறேன்.
'காந்தத் பிசிறுகள்' அல்ல 'காந்தப் பிசிறுகள்' தானே...
'செல்லமே செல்லமே' பாடல் இனிமை... பாடல் குறிப்புகள் ப்ளீஸ்....

thamizhparavai said...

ஜென்குருன்னா சாருவா.... அப்படித்தானிருக்க வேண்டும். இலவசக் கொத்தனாரின் தளத்தில் சுட்டிகளை முகர்ந்து பார்த்தேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

சரியாகப் புரிந்து கொண்டீர்கள். 'பிறழ் இல்லாப் புலர்தல்' = பிரச்னை இல்லாம விடியறது. இப்படி புரியாத மாதிரி எழுதினா தான் பெரிய ஆளுன்னு அர்த்தங்க.

நீங்க சொன்ன பிழைகள் எல்லாவற்றிற்கும் மன்னிக்கவும். ரீ செக் செய்யாமல் பதிவு பப்ளிஷ் செய்வதால் வரும் பிழைகள். கவனமாக இருக்கிறேன்.

செல்லமே செல்லம் - சத்யம் படத்தில் புரட்சித் தளபதியுடன், நயன் தாரா நடித்த பாடல். காண்க :: http://www.youtube.com/watch?v=RDNC7qn5E_w