Friday, September 26, 2008

பாட்டில் நிறைய உண்மை!

ரும்புக்குதிரைகள் நாவல் படித்திருப்பீர்கள். பாலகுமாரன் அவர்களின் நாவல். விஸ்வநாதனையும், தாரிணியையும், அய்யரையும், ராவுத்தரையும், முதலியாரையும், மண்ணடியையும், ஹார்பரையும் 'குதிரைப் பேரரசன்' கவிதைகளையும் என்னால் இன்றும் நினைவில் வைத்துக் கொள்ள முடிகின்றது.

இந்த வீடியோவில் வருகின்ற ரோபாட்டைப் பார்த்தால், எனக்கு 'இரும்புக் குதிரைகள்' என்று தான் பெயர் வைக்கத் தோன்றுகிறது. பாஸ்டன் டைனமிக் சிஸ்டம்ஸால் உருவாக்கப்பட்ட இக்குதிரையை உதைத்தாலும் விழாமல் சமாளிக்கிறது. திருப்பி உதைக்க மட்டும் தான் செய்யவில்லை. அடுத்த வெர்ஷனில் அதையும் கொண்டு வந்து விடுவார்கள்.

உண்மையான ரோபோ!

பார்க்க. :: Boston Dynamics ரோபோ.

விக்கி Translation எப்படி செய்வது என்பதைப் பற்றி என்ன சொல்கிறான் என்று தெரிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தால், கிடைத்தது ஒரு முத்து!

Fidelity (or "faithfulness") and transparency are two qualities that, for millennia, have been regarded as ideals to be striven for in translation, particularly literary translation. These two ideals are often at odds. Thus a 17th-century French critic coined the phrase, "les belles infidèles," to suggest that translations, like women, could be either faithful or beautiful, but not both at the same time.

les belles infidèles என்பதை இவர்கள் சரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்களா என்பதே இப்போது என் சந்தேகம்!

ரு பாட்டில் நிறைய உண்மை இருக்கிறது. அதில் இருந்து எந்த வகையில் முயன்றாலும் கொஞ்சம் உண்மை கீழே சிந்தி விடும். எனில் எப்படி அதில் இருந்து உண்மையை எடுப்பது? சிந்தும் இடைவெளியில் புகுவது உண்மை அல்லாத ஒன்றாகத் தான் இருக்கும். அந்த பொய் கலந்து போனால் பாட்டிலில் இருக்கும் மிச்ச உண்மை என்னவாகும்?

ஒரு சிந்தனை தான்.

காலையில் சென்ற பேருந்தில் வழக்கமாக ஒரு விதமான டெம்ப்ளேட் கூட்டமே வரும். கோலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் ஸ்டாப்பில் இறங்கி விடும் கவலையற்று மிதக்கும் இளைஞர்/ஞி கூட்டம். கசங்கிய காக்கி உடுப்பில் கண்டக்டர். பத்திரத் தனிமையில் டிரைவர். கழுத்துப்பட்டை அணிந்து தனி கிரக ஜந்துக்கள் போல் டக் இன் பண்ணிய லைன் ஷர்ட், அழுத்த பேண்ட், இறுக்க ஷூ என்று ஒரு கோஷ்டி, சில வயதானவர்கள், சில இல்லத்தரசிகள். இப்படி.

இன்று, ஒரு வித்தியாசம். ஒரு சிறுவர் கூட்டம்....என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. 15வயதிற்குள் தான் இருக்க வேண்டும்.

பூனை முடி மீசை. வெட வெட உடல். அங்கங்கே சாயம் கழிந்த ஜீன்ஸ். மடக்கி விடப்பட்ட ஷர்ட். பெரிய பக்கிள் போட்ட பெல்ட். தடித்த ஸ்ட்ராப்பிட்ட ரிஸ்ட் வாட்ச். கலைந்த தலை. 'சாம்ஸங் தான் இப்ப டாப்... N-சீரிஸ் வேஸ்ட்' என்று டெக்னிக்கல் பேச்சு.

சிலர் படிக்கட்டை விட்டு மேலே ஏறாத பயணம். ஒருவன் 'முதல் மழை என்னை அழைத்ததே' என்று சத்தமாக வைத்த கூட பாடிக் கொண்டே வந்தான். இருவர் அமரும் சீட்டின் கம்பியில் அரைவாசி அமர்ந்து ஒருவன். அழுக்கான ஜீன்ஸ் பைகள். உள்ளே எதுவும் இல்லாதது போல் ஒல்லியாக காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது. வாட்ச் இல்லாத கையில் ஒரு கயிறு. அல்லது மர உடுக்கைகள் கொண்ட ப்ரேஸ்லெட். பேண்ட் பாக்கெட்டில் குட்டியாகத் தேவையே இல்லாத சீப்.

யாரும் அவர்களை அதட்டவில்லை. அட்வைஸ் செய்யவில்லை. ஒரு மாதிரி ஒவ்வொருவரும் அவர்களில் தங்களைக் கண்டு வந்தார்களோ என்று தோன்றியது.

குளத்தூர் ஸ்டாப்பில் எல்லோரும் இறங்கிச் சென்று விட, பஸ்ஸே அமைதியாக ஆனது. அதற்கு வேறொரு பெயரும் சொல்லலாம். வெறுமை.

ன்று மாலை கம்பெனியில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வரும் போது கண்ட ஒரு நிகழ்ச்சி - விபத்தாக ஆகியிருக்க வேண்டிய நிகழ்வு - தவிர்க்கப்பட்டது. ஒரு சிறுகதைக்குத் தேவையான கருவாகத் தெரிந்தது. எனினும் வெண்பாவாக அதை இன்னும் குறுக்கிச் சொல்ல முடியும் எனப்பட்டது.

இண்டிகேட்டர் லெப்ட்காட்டி இந்தப்பக் கங்கைநீட்டி
வண்டியை நேராக ஓட்டினானுக்(கு) - முன்பல்ஸர்
ரைட்சிக்னல் கண்சிமிட்ட, 'ஹூம்!எனக்கே வா?'முந்த,
சைட்வெட் டினான்முன் னவன்.

4 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு....
'இரும்புக்குதிரைகள்' இரு வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். சரியாக நினைவிலில்லை. ஆனால் 'குதிரைகள்' பற்றிய கவிதைகளை யோசிக்கையில் படலம்,படலமாக நினைவுக்கு வருகிறது.
'பெட்ரோல் திருட்டு',ஒரு சரக்கு குடோனில் நாயகி(தாரிணி..?) என நினைக்கிறேன்... இதில்தானே...
'பூவில் வண்டு கூடும் ' பாடல் கூட வரும்...ஆம்.. இதேதான். தாரிணி பாலச்சந்தர் நாயகி போல் புரட்சி செய்வாளே....
//இந்த வீடியோவில் வருகின்ற ரோபாட்டைப் பார்த்தால், எனக்கு 'இரும்புக் குதிரைகள்' என்று தான் பெயர் வைக்கத் தோன்றுகிறது. //
என்னால் வீடியோவைப் பார்க்க இயலவில்லை. சிஸ்டம் ப்ராப்ளம்.. படம் பார்த்தேன்... நீங்கள் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
//விக்கி Translation எப்படி செய்வது //
முதலில் விக்கி என்பவர் உங்கள் மானுட நண்பன் என நினைத்தேன்... இப்பொழுதுதான் புரிந்து கொண்டேன்...(மரமண்டை)
//ஒரு பாட்டில் நிறைய உண்மை இருக்கிறது. அதில் இருந்து எந்த வகையில் முயன்றாலும் கொஞ்சம் உண்மை கீழே சிந்தி விடும். எனில் எப்படி அதில் இருந்து உண்மையை எடுப்பது? சிந்தும் இடைவெளியில் புகுவது உண்மை அல்லாத ஒன்றாகத் தான் இருக்கும். அந்த பொய் கலந்து போனால் பாட்டிலில் இருக்கும் மிச்ச உண்மை என்னவாகும்?
//
நல்ல சிந்தனை.. ராஜா இத தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதிட்டு அப்படியே பக்கத்துல உக்காந்துக்கோ.. இனி வர்ற சந்ததியினர் இதப் படிச்சுட்டு உன்ன வாழ்த்திட்டு போவாங்க...(ச்சும்மா ட்டமாஸ்)
//கோலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் // ஆஹா பாஷையே மாறிடுச்சா... இதுக்குதான் அதிகமமா சேச்சிகள்ட்ட கடலை போடக்கூடாதுன்றது...
இறுதியாக வெண்பா.. அதிக ஆங்கிலத்துடன் வன்பா வாகி விட்டது எனக்கு..ம்றுபடியும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

அ. தாரிணி விஸ்வநாதனின் மனைவி. லாரி மண்டியில் கணக்கு எழுதுபவள் கிராமத்து தமிழ் ஆசிரியரின் மகள். அவள் பெயர் எனக்கு நினைவில்லை. எனவே குறிப்பிடவில்லை. எனக்கு நாவலில் வரும் குதிரைக் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

அருமையான ஞாபக சக்தி உங்களுக்கு! ஆமாம், 'பூவில் வண்டு கூடும்' அடிக்கடி கதையில் நினைவுபடுத்தப்படும். நீங்கள் சொல்லித் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஆ. வேற எங்கேயாவது பார்க்க முடிந்தால் பாருங்கள். அருமையாகச் செய்திருக்கிறார்கள். ஒரு விலங்கு போலவே நடக்கிறது. பனியில் வழுக்கினாலும் சமாளிக்கிறது. மலை ஏறுகிறது. இறங்குகிறது.

இ. விக்கி நமது நண்பர் தான். 'இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணூங்கறது. டேய் கோமுட்டி தலையா...' என்று தெளிவாக விளக்கம் கொடுக்கிறது.

ஈ.தஞ்சாவூர் கோயில் கல்வெட்டு பக்கத்துல ஆல்ரெடி தலைவர் செந்தில் சீட் புடிச்சிட்டாராம். நான் வேற ஏதாவது கோயில் கல்வெட்டு தான் பார்க்கணும்.

உ.ஆத்யம் ஞான் நல்ல குட் போய் ஆனு. பக்சே, இவிட வந்த பின்ன சேச்சிகளிண்ட வல்லிய பியூட்டியும், கேரளத்திண்ட சீனரிஸும் மனசினுள் டீப்பா போயி. ஈ ரீஸன் தன்னே ஸ்டேட் ஃபுல் ட்ரேவல் செய்ய பூஸ்ட் தருனு.

ஊ. வெண்பா உங்களுக்கு புரியவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன். இருந்தாலும் உரைநடையாக ::

இண்டிகேட்டர்(ரில்) லெஃப்ட் காட்டி, இந்தப் பக்கம் கை நீட்டி, வண்டியை நேராக ஓட்டினவனுக்கு, முன்னாடி சென்ற பல்ஸர் ரைட் சிக்னல் இண்டிகேட்டரில் போட, 'ஹூம்! எனக்கே ரைட் சிக்னல் காட்டறீங்களா?' என்று அவன் ரைட்டில் முந்த முயல், முன்னாடி சென்றவன் ரைட் சைடில் திரும்பினான்.

thamizhparavai said...

வரிசைப்படுத்தி விடை தந்தமைக்கு நன்றி...
வெண்பா புரிந்தது. முதலில் கருத்துதான்(கதை) விளங்காமலிருந்தது. இப்பொழுது ஓ.கே...நல்லா ஓட்டுறாய்ங்கய்யா வண்டியை...
//வேற எங்கேயாவது பார்க்க முடிந்தால் பாருங்கள். அருமையாகச் செய்திருக்கிறார்கள். ஒரு விலங்கு போலவே நடக்கிறது. பனியில் வழுக்கினாலும் சமாளிக்கிறது. மலை ஏறுகிறது. இறங்குகிறது.//
முழுதாகப் பார்க்கவில்லை.. ஒரு நிமிடம் பார்த்தேன். முழுதாகப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.
//ஆத்யம் ஞான் நல்ல குட் போய் ஆனு. பக்சே, இவிட வந்த பின்ன சேச்சிகளிண்ட வல்லிய பியூட்டியும், கேரளத்திண்ட சீனரிஸும் மனசினுள் டீப்பா போயி. ஈ ரீஸன் தன்னே ஸ்டேட் ஃபுல் ட்ரேவல் செய்ய பூஸ்ட் தருனு//
எஞ்சாய் பண்ணுங்க தல...
//அருமையான ஞாபக சக்தி உங்களுக்கு//
அவ்வளவு ஞாபக சக்தியெல்லாம் இல்லை... ஒரு சில நாவல்கள் நெஞ்சில் நின்று விடும்...(மெர்க்குரிப் பூக்க‌ள், மகாப‌லி,செம்ப‌ருத்தி(தி.ஜா.ரா),துள‌சித‌ள‌ம்.... இன்னும் சில‌)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்.

மெர்க்குரிப் பூக்கள், நான் ரசித்த மற்றொரு பாலகுமாரன் நாவல். வாத்தியாரின் 'பதவிக்காக' என்ற நாவலைப் படித்து முடிக்கும் போது, இறுதிகளில் எனக்கு பாலகுமாரன் நாவல் படித்தது போல் இருந்தது.

மெர்க்குரிப் பூக்களில் எனக்கு நினைவில் இருக்கும் ஒரு விஷயம், கதை ஆரம்பமும், இறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பது போல் ஒரு மாதிரி சர்க்குலர் லூப்பில் கொண்டு வந்து முடித்திருப்பார்.