Monday, September 22, 2008

வெண்பா முயற்சிகள் - 3.

'தீயிற் கொடியதோ தீ' என்ற் ஈற்றடிக்கு மீண்டும் முயன்றதில், மேலும் சில வெண்பாக்கள் கிடைத்தன. ::

உணவுண்ணத் தோன்றா உடுப்பணிய எண்ணா
கனவிலுங் கூடலின்பங் கவ்வும் - தினமிரா
பாயிற் படுத்திளைக்கப் பற்றும் பசலைநோய்த்
தீயிற் கொடியதோ தீ!

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"

'சோம்புவதால் உய்வுண்டோ சொல்' என்ற ஈற்றடிக்கு எழுத முயன்றதில் ::

சும்மா இருந்திட்டால் சோறு வருமாநீ
கம்மாக் கரையில் கடிதுழை - நம்மபூமி
சொம்பு நிறையுமாறு சொர்ணரி தந்திடுவாள்
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

ஈரத்தில் ஓர்விறகாய்ச் சும்மாயி ருந்தவன்மேல்
பாரமாய்ப் பாய்ந்தவள் கேட்டாள் - "விரகத்தில்
காம்பும் கனியும்! கசங்காப் படுக்கையில்
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

கிராமத்து வெண்பா எழுத முயன்றதில் ::

ஆத்துதண்ணி அய்ரமீனு அத்தமவ அள்ளிவந்து
சோத்துமேல சூடாச் செவச்செவன்னு - ஊத்திவிட்டா!
மென்னுதின்னு கிட்டபோயி முத்தம்வைக் கப்பார்த்தா
பொண்ணொதடே துள்ளுதுமீ னாட்டம்!

***

சேர்க்கப்பட்டது ::

இங்கு குறிப்பிட்டிருக்கும் வெண்பாக்களில் எக்கச்சக்கத் தவறுகள் இருப்பதாக ஆசிரியர் சொல்லி இருக்கிறார். மேல் விவரங்களுக்கு காண்க, கமெண்ட் செக்ஷன் ஆஃப் உயர்வு நவிற்சியணி!

***
வெண்பா முயற்சிகள் - 2.

வெண்பா முயற்சிகள் - 1.

13 comments:

அகரம்.அமுதா said...

தீஇல் கொடி!...அதோ தீ...!"


!!!!!!!!

இரா. வசந்த குமார். said...

???????

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்துக்கு....
முதல் மற்றும் நான்காம் வெண்பாக்கள் உங்கள் 'இன்பகவி' முத்திரையைப் பறை சாற்றும் வெண்பாக்'கள்'....
//சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"
//
'தீ இல் கொடி' நன்றாகப் பிரித்திருக்கிறீர்கள்... ஆனால் என் மரமண்டைக்குத்தான் எட்டவில்லை. நான் நினைத்தது 'தீயில் கொடி'(ராவணனின்).. சரியா...? இல்லையெனில் நேரமிருந்தால் விளக்கவும்.
'சொர்ணரி' என்றால்...? (சொர்ண அரி(சி)...?

தமிழ்ப்பறவை said...

//???????//
ஏன் இத்தனை கேள்விக்குறி...? அகரம் அமுதா வியந்து பாராட்டிதானே உள்ளார்...(பல ஆச்சரியக்குறியோடு)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் எனது வெண்பாவைப் பாராட்டியதற்கு!!
-இன்பகவி.

இராமாயண வெண்பாவைப் பிரித்துச் சொன்னால்,

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் (வாயு புத்திரன் அனுமன், அவனது வாலில் தீ பற்ற வைத்ததால்) வந்த கோபத்தால், இலங்கை நாடெங்கும் தீ பற்ற வைத்தான். அதனால் இலங்கையின் அரசனது (இராவணன்) மாளிகை (கோ = அரசன், இல் = இல்லம்) தீப்பற்றி எரிகிறது. உனது கோபம் தணிந்து அமைதி கொள் தீமை இல்லாத கொடி போன்ற (தீஇல் = தீமை இல்லாத) சீதா! (அசோகவனத்திற்கும் தீ பரவி வந்து விட, அதைச் சுட்டிக் காட்டுகிறாள் நல்ல அரக்கி) அதோ தீ!"

விளக்கம் போதுமா..? பன்னீர் சோடா ப்ளீஸ்...!!! ;-)

//'சொர்ணரி' என்றால்...? (சொர்ண அரி(சி)...?

சரியாகச் சொன்னீர்கள். அரி என்றால் அரிசி என்ற பொருளும் உண்டு. சொர்ணம்/தங்கம் போன்ற அரிசி. உயர்வு நவிற்சி அணி.

/*//???????//
ஏன் இத்தனை கேள்விக்குறி...? அகரம் அமுதா வியந்து பாராட்டிதானே உள்ளார்...(பல ஆச்சரியக்குறியோடு)*/

அகரம்.அமுதா அவர்கள் எந்த அர்த்தத்தில் ஆச்சரியங்கள் காட்டியுள்ளார் என்று தெரிந்து கொள்ளவே கேள்விகள் போட்டுள்ளேன்...!!!

தமிழ்ப்பறவை said...

உடனடி விளக்கத்திற்கு நன்றி வசந்த்...
//"கலங்காதே வைதேகி! காற்றுமகன் (வாயு புத்திரன் அனுமன், அவனது வாலில் தீ பற்ற வைத்ததால்) வந்த கோபத்தால், இலங்கை நாடெங்கும் தீ பற்ற வைத்தான். அதனால் இலங்கையின் அரசனது (இராவணன்) மாளிகை (கோ = அரசன், இல் = இல்லம்) தீப்பற்றி எரிகிறது//
டாய்... சாருக்கு ஒரு பன்னீர்சோடா பார்சல்...
இந்நேரத்தில பன்னீர்சோடாவை நினைவுபடுத்தி என் மனதை எனது ஊர்ப்பக்கம் அனுப்பி விட்டீர்கள்..

அகரம்.அமுதா said...

//தீஇல் கொடி!...அதோ தீ...!"///

இவ்வெண்பாவிற்கு நான் புரிந்து கொண்டதைவிட மிக அழகாகவே பொருளுரைத்துள்ளீர்கள். வாழ்த்துகள். !!!!!!!-இதுக்கு ரொம்பரொம்பரொம்ப வியக்கிறேன்னு பொருள்!

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

பன்னீர்சோடா கேட்டா உங்களுக்கு உங்க ஊர் ஞாபகம் வருதா..? அப்படியே கொஞ்சம் ஊர்க்கதையும் சொல்லிடறது...!!!

***

அன்பு அகரம்.அமுதா...

நீங்க என்ன மாதிரி புரிஞ்சுக்கிட்டீங்க்ன்னு சொன்னீங்கனா, இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது...! விளக்குங்களேன் ப்ளீஸ்...!

/*ஈரத்தில் ஓர்விறகாய்ச் சும்மாயி ருந்தவன்மேல்
பாரமாய்ப் பாய்ந்தவள் கேட்டாள் - "விரகத்தில்
காம்பும் கனியும்! கசங்காப் படுக்கையில்
சோம்புவதால் உய்வுண்டா சொல்?*/

இப்ப இந்த வெண்பாவைப் படிச்சு பார்த்தா எனக்கே மூன்று விதமான அர்த்தங்கள் தோன்றுகிறது. விளக்கலாம் என்றால் வெட்கம் வருகிறது.

அகரம்.அமுதா said...

//////அன்பு அகரம்.அமுதா...

நீங்க என்ன மாதிரி புரிஞ்சுக்கிட்டீங்க்ன்னு சொன்னீங்கனா, இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது...! விளக்குங்களேன் ப்ளீஸ்...!//////


கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால் இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"


மேலிரு வரிகளுக்கு இயல்பாகப் பொருள் புரிந்துவிடும். நான் கீழிரு வரிகளுக்கு வருகிறேன்.

இலங்கையை ஆறும் இராவணம் மாளிகை தீப்பிடித்து எரிகிறது. எரியும் தீயில் தோன்றும் ஒளி உன் தனிமை இருளை துன்பப் பொழுதை விரட்ட வந்ததாகும் அமைதிகொள். தீய சிந்தை தீயநடத்தை அறியாத கொழுதனையே கொழுக்கொம்பாய்ச் சுற்றும் கொடி நீ. உன் கற்புத் தூய்மைக்கு உவமை உரைப்பதெனில் அதோ தீ!

இப்படித்தான் புரிந்து கொண்டேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம்.அமுதா...

நீங்கள் சொன்ன விளக்கக்திற்கும், நான் சொன்ன விளக்கத்திற்கும் இருக்கும் வித்தியாசம் தான், கவிதையில் சிந்திக்கும் உள்ளத்திற்கும், கதையாகச் சிந்திக்கும் உள்ளத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என்று படுகிறது எனக்கு!

அகரம்.அமுதா said...

இருக்கலாம். நாம் ஒன்றை நினைத்துக்கொண்டு கவிதை எழுதும் போது நம்மையறியாமல் அது மேலும் சிறப்புடைய பொருள் தந்துவிடுவதுண்டு. இருப்பினும் என்னைக் கேட்டால் கவிஞன் என்பவன் மான். வாசகன் அல்லது ரசிகன் என்பவன் சிறுத்தை. மானுக்குப் பின்னால் சிறுத்தை ஓடுமானால் அதற்கு மான் இரையாவது இயலாது. தப்பிவிடும். மாறாக மான் ஓடும் திசையறிந்து பக்கவாட்டில் ஓடி வளைத்தடிப்பதே சிறுத்தையின் பண்பு. வாசகனும் அப்படி இருந்தால் மட்டுமே கவிஞனின் உண்மை உணர்வையும் கற்பனைத் திறத்தையும் அறிந்து களிக்கமுடியும். இல்லாவிட்டால் எத்துணை உன்னதமான கவிதையும் குப்பையே.

அகரம்.அமுதா said...

நான் சொல்ல வந்தது - நீங்கள் கவிதையாக சிந்திக்கும் உள்ளத்திற்கும் கதையாக சிந்திக்கும் உள்ளத்திற்கும் வேறுபாடு இருப்பதாகப் படுகிறது என்று எழுதியுள்ளீர்கள் அல்லவா? அதைத்தான் இருக்கலாம் என்று சொன்னேன்.

மேலும் நம்மையறியாமல் சிலவேளைகளில் உயர்ந்த கற்பனைத்திறனுடைய கவிதை வரிகள் வெளிப்பட்டுவிடும். அதை உணர வேண்டுமெனில் மானைத் துரத்தும் சிறுத்தைப்புலி குறுக்கு வழியில் சென்று அடிப்பது போல் வாசகனும் துரிதமாக செயல்பட்டு அதாவது கவிஞனில் கற்பனை என்ற மானைப் பிடிக்க இவனது கற்பனை சிறுத்தை போல் செயல்பட வேண்டும் என்பதே!

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம்.அமுதா...

மிக்க நன்றிகள்...! தங்களது கருத்துக்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.