Thursday, September 25, 2008

வழியில் சில எறும்புகள்!

காஃபியில் சர்க்கரை கம்மி
என்று
கலங்கிக் கொண்டே
தாய் வீட்டுக்கு ஓடினாள்
தர்மபத்தினி!

மீண்டும் கூட்டி வர
செல்கிறேன் நான்.

வழியில்
சில எறும்புகள்!

குனிந்து பார்த்த
முதல் எறும்பு
வயதானது!
நரை விழுந்து,
கண்களில் திரை விழுந்து,
நடை தடவி
கடந்து போனது.

எனக்குப் பேசத் தோன்றினும்
அதற்கு
கேடகத் தோன்றுமா
என்ற சந்தேகத்தில்
அதை
நழுவ விட்டேன்.

அடுத்து ஒன்று
விசிலடித்து வந்தது.
இளம்.
கொஞ்சம் கிறக்கம்,
கொஞ்சம் மயக்கம்,
கொஞ்சம் சிரிப்பு,
கொஞ்சம் காதல்
கலந்து கிறங்கி
கலைந்து
கிடந்தன
அதன் கண்கள்!

முதல் காதலாக
இருக்கலாம்.

தொந்தரவு செய்ய
விரும்பவில்லை.
தொலைந்து போனது
அது!

தொடர்ந்து வந்தது
ஒரு பெண்!

எத்தனை நளினம்!
எத்தனை கவனம்!
எத்தனை நெளிவு!
எத்தனை கர்வம்!
வேலைக்குச் செல்பவளாக
இருக்கலாம்!

ஓர் அவசரம்
அவளது
சின்னக் கால்களில்
தெரிந்தது.

விரைந்து நடந்தேன்.

வழியெங்கும்
எறும்பு ஊர்வலங்கள்.

முத்தமிட்டும்,
பக்கத்தில் நகர்ந்தும்,
வளைந்தும்,
நேராகவும்,
திரும்பியும்,

எத்தனை பாதைகள்!

ஒரு துறவியைப்
பார்த்தேன்.

கண்களில் ஓர் அமைதி.
கைக்கால்களில்
சில மண்வளையங்கள்.

ஏதோ முணுமுத்தவாறு!

மெல்ல
உற்று கவனித்தேன்.

கண்கள் திறந்தார்.

கொஞ்சம் தள்ளி காண்பித்தார்.

ஒரு பிண ஊர்வலம்.

எறும்புகள் தூக்கிக் கொண்டு
வந்தன.

மெளனமாய் நகர்ந்தார்.

"கவனம்...! கவனம்..!
மனிதனின் கால்கள்...!
அருகில்..!"
கூச்சல் எழுப்பியது
ஓர் எறும்பு!

ஒற்றனாக இருக்குமோ..?
என்ற எண்ணத்துடன்,

ஓடோடி மறைந்தோம்!

No comments: