என் தொலைந்து போன இதயத்தின் சதைத் துணுக்குகளை உன் வீட்டின் கொல்லைப்புறத்தில் கண்டதாக கண்டுவந்த காகங்கள் சொல்லிச் சொல்லிக் கரைந்தன.
என் கண்களைக் கடந்து போன உறக்கத்தை, உன் விழிகளில் கண்டதாகக் கண்டு வந்த சுவர்ப் பல்லி, சொல்லிச் சொல்லி அழுதது.
எனது விடியா பகல் பொழுதுகளை, முடியா இரா நேரங்களை, உன் வீட்டு முற்றத்தில் கண்டதாக கண்டுவந்த வெடைச் சேவல் சலித்துச் சலித்துக் கூவியது.
உன் மேல் அனுப்பிய பார்வைகளை, உன் வீட்டுத் தோட்டத்தின் ஆட்டுக்குட்டிக்கு உணவாய் இட்டாய் என்று உண்டு வந்த குட்டியாடு குழறலாய்க் கூறியது.
உனக்காக நான் செதுக்கிய வார்த்தைகளை, உன் வீட்டுச் செவலைக் காளைக்கு, கழனி நீரோடு கலக்கிக் கொடுத்ததாக , குடித்து வந்த காளை கூறி விட்டுப் போனது.
உனக்காக நிரப்பி வைத்திருந்த கனவுகளை, உன் தோட்டத்தின் ரோஜாச் செடிக்கு உரமாக வைத்தய் என்று, பூத்திருந்த பூ, வாசத்தோடு ஊரெங்கும் பரப்பியது.
உனக்காக நான் மிச்சம் வைத்திருந்த வாணாளை, உன் தோட்டக் கிணற்றடியில் ஊற வைத்த துணிகளோடு, உறைய விட்டாய் என்று, நுரை நுரைத்த நீரில் கலந்திருந்த என் இரத்தத்தின் சிவப்பு சிதைந்திருந்து சிதறியது...!
28.SEP.2004
1 comment:
அன்பு வசந்த் வணக்கம்! உங்க இ-மெயில் கிடைக்குமா?
உங்களது கவிதையையும் இணைத்து ஐந்தாறு கவிதைகள் கிடைத்தது அந்த படத்துக்கு.உங்க லிங்கையும் தொடுப்பாக கொடுத்து ஒருதொகுப்புப் பதிவாக போட விருப்பம்.அந்த படக்கவிதையை தேடினேன்.கிடைக்கவில்லை.
முடிந்தால் லிங்க் கொடுங்களேன்.
நன்றி!
Post a Comment