Friday, April 27, 2007

பின்னிரவுப் பொழுது...!


ச்சகட்டமாக இணைந்து விட்டு, இரண்டு மணி இறந்து விட்டதை, கடிகார முட்கள் முனகின பின்னிரவுப் பொழுதில் விழித்துக் கொள்கிறேன். என் போர்வையைக் குட்டிப் பூனைக்குப் போர்த்தி விட்டு பேகனாகிறேன். ஜன்னலோரம் வந்து, கம்பிகளின் வெளியே என் கண்களைப் பிய்த்து எறிகிறேன்.

பனித்துகள்கள் எல்லாம் பாதைகளில் பந்தல் போட்டுக் கொண்டிருக்கின்றன. பச்சை ஆல்பைன் மரங்களின் இலைகள் வெள்ளைப் பனியால் நிறைந்து இருக்கின்றன. சாலைகளின் ஓர விளக்குகள் சிறு நெருப்புக் குமிழ்களில் சிரிக்கின்றன. கம்பளித் தோலணிந்த சிலர் நடக்கின்றனர்.

பூவிதழ்கள் தென்றலில் மிதப்பது போல், பனித்துகள்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. இரவின் மெளனப் போதையில் ஆழ்ந்திருக்கின்றது நகரத்தின் இயக்கமற்ற இருப்பு!
சலனமற்று நகர்கின்ற நதியின் கரைகள் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கின்றன. அழகான ஒரு படலமாக நதியை நனைத்திருக்கும் பனியின் கீழே, அசைந்து கொண்டே இருக்கும் நீர்..!

விடியலின் விதைகள் விண்ணில் இன்னும் விழாத நிலையில், இருளின் பேராட்சியில் நிசப்தமாய் அமிழ்ந்திருக்கின்றது நகரம். பாலத்தின் மேல் தடதடக்கும் இரயிலின் ஓசையே நகரத்தின் குறட்டையாகத் தோன்றுகின்றது.
வெள்ளை நிலவும் வெள்ளி மீன்களும் நீந்துகின்ற பேரண்டத்தின் பெருவெளியெங்கும் நனைய நனையப் பொழிகின்றது பனிப்பொழிவு!
மஞ்சள் பூக்கள் சிரித்துக் கொண்டிருக்கும் வாசலின் முகங்கள் பனித்திருக்கின்றன. என்னோடு கூடவே வந்து படுத்துக் கொள்கிறது குளிர்!

உறங்குகிறோம்!

பொழிந்து கொண்டே இருக்கின்றது பனி!
நனைந்து கொண்டே இருக்கின்றது நகரம்!

No comments: