Monday, April 23, 2007

மஞ்சள் பாதை.


ஞ்சள் பூக்கள் நிரம்பி வழிகின்ற பாதையின் நடுவே நாம் நடக்கிறோம். மாலை நேரப் பொன்னொளி இலைகளின் இடுக்குகளில் நுழைந்து நிறைக்கிறது.

எங்கிருந்தோ வருகின்ற , மெல்லிய தென்றல் நம்மையும் தடவிச் செல்கின்றது. லேசான குளிர் அடிக்கின்ற நேரத்தில் கோர்த்துக் கொண்ட விரல்களோடு நடக்கிறோம்.

உன் ஆடையின் நுனிகளிலிருந்து சொட்டுகின்ற மென்னொளியைக் குடித்துக் கொண்டே நடக்கிறது, என் நிழல்.
நம்மிடையே பூத்திருக்கும் மெளனப் பானையை கொத்திக் கொத்தி உடைக்கின்றன, சிட்டுக்குருவிகளின் கீச்சுக் கீச்சுக் குரல்கள்.
சற்றே காலாற நடப்போம், வருகிறாயா?

முற்றுப்புள்ளியை அழித்து விட்டு, முடிவிலாப் பெருவெளியின் மூலைப்புள்ளிகள் வரை நடப்போம்.

கடற்கரையோர மணலில் கால்கள் புதைய,
கரும்பச்சைக் காட்டின் சருகுகள் நொறுங்க,
உலக உருண்டையின் மேல் குதித்து நிலா போவோம்.
உடையாத நிலாவின் மேல் உலா போவோம்.
நம் பாத ரேகைகளில் பதிந்து செல்லும் பாதைகள், நாடுகளின் எல்லைகளை நகர்த்திச் செல்லட்டும். காலச் சக்கரத்தின் காலடியில் நசுங்கி காணாமல் போவதற்கு முன், காண வேண்டிய எல்லைகளைக் கண்டு கொள்வோம்.

No comments: