Sunday, July 20, 2008

உன் பாதம்.

சொற்கள் சொல்ல இயலாமல் பரிதவிக்கின்ற எண்ணங்கள் காற்றில் அலைப்புறுகின்றன. இலைகளின் இடை புகுந்து சற்றே இளைப்பாறுகின்றன. காம்புகளின் வழியாக நழுவி, மரத்தின் பெரு உடலோடு இறுகுகின்றன.

பெய்கின்ற மழையோடு பின் நனைந்து, முன் நகர்ந்து செம்புல நீராய் மாறுகின்றன. போன போக்கில் போய், நதியோடு கலந்து, கடலோடு நிறைந்து, காற்றில் ஆவியாகி கடுகிப் போகின்றன.

பின் எந்த சொல்லை நம்பி, மீண்டும் எண்ணங்கள் பிறவியெடுக்கும்?

உளத்தின் உள் வெற்று வெளியை நிரப்ப ஓர் எண்ணம் கொள்ளும் வடிவம், சொற்களின் மேல் கொண்ட அதன் காதலால் தானோ...?

***

உன் பாதம்.

எப்பொழுது என்னால் உன் கண்களைக்
காண முடிவதில்லையோ,
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளை எலும்புகளாலான பாதம்.
சிறிய, கடின பாதம்.
உன்னை அவை தாங்குகின்றன என்பதை
அறிகிறேன்.
மற்றும் உன் இனிய எடை
அவற்றின் மீதே
எழும்பி அமைகின்றது.
உன் இடை, உன் மார்புகள்,
பர்ப்பிள் நிற
இரட்டை மார் நுனிகள்,
பறந்து சென்ற கண்களின் இமைகள்,
உனது அகன்ற இனிய வாய்,
உனது சிவந்த நிறம்,
என் சிறிய அழகு.
ஆனால் நான் உன் பாதங்களை
விரும்புகிறேன்.
ஏனெனில்
அவை மட்டுமே
பூமியின் மீதும்,
காற்றின் மீதும்,
நீரின் மீதும்
நடந்தன,
என்னைக் கண்டடையும் வரை.

Pablo Neruda- வின் Your feet.

3 comments:

thamizhparavai said...

//பின் எந்த சொல்லை நம்பி, மீண்டும் எண்ணங்கள் பிறவியெடுக்கும்?

உளத்தின் உள் வெற்று வெளியை நிரப்ப ஓர் எண்ணம் கொள்ளும் வடிவம், சொற்களின் மேல் கொண்ட அதன் காதலால் தானோ...?
//
நன்றாக உள்ளது..
Pablo Neruda- வின் யுவர் ஃபீட் தமிழாக்கம் அருமை.. நன்றி வசந்தகுமாரன்..
பி.கு..வார்ப்புருவில் உள்ள சிங்கம் படம் நன்று..(வயில் என்ன உள்ளது..?)

நீல. பத்மனாபனுடன் தங்கள் பேட்டி படித்தேன்.. இயல்பு.. அவர் எழுத்துக்கள் படித்ததில்லை.. அடுத்தமாதம் தமிழகம் வருகையில் வாங்க வேண்டும்...

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி தமிழ்ப்பறவை...

அந்தப் படம் சும்மா லுலுலாய்க்கு வைத்தது. வாயில் அதன் மேய்ப்பரின் உயிரின் மிச்சம்.;-)

நீ.ப. சாரின் புத்தகங்கள் படித்துப் பாருங்கள். மற்றும் ஜெயமோகன் அவர்கள் அவரைப் பற்றி கூறியுள்ளதையும் பாருங்கள்.

thamizhparavai said...

கண்டிப்பாக....