Sunday, October 26, 2008

சென்னையில் ஒரு விழாக்காலம்.

திருவனந்தபுரம் - சென்னை டி.வி.சி. எக்ஸ்பிரஸ் சனி காலை 09.40க்கு சென்ட்ரலில் எண்ட்ரி கொடுக்கும் போது, எனக்கு சந்தேகமாக இருந்தது. இது நாம் விட்டுப் போன சென்னை தானா?

வானம் கறுப்பாய் இருந்தது. முந்தின நாளில் பெருமழை மாலையில் பெய்து, 'மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி'.

கூட வந்த நண்பர் ஒருவர்க்கு கார் வரும் வரை, துணை இருக்கலாம் என்று தீர்மானித்து, அந்த பத்து நிமிடங்களைச் செலவழிக்க எனக்குத் தெரிந்த ஒரே ஸ்தலமான 'ஹிக்கின்பாதம்ஸ்' சென்றேன். புனைவு எழுத்துக்களில் ஆர்வங்கள் குறைந்து கொண்டே வருவதால், வாத்தியாரின் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். 'தோரணத்து மாவிலைகள்' மற்றும் 'கற்பனைக்கும் அப்பால்'. விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இந்த நூல்கள் மொத்தம் ரூபாய்.113. (75 + 38). ஹி.பா.வில் கூடவே ஜக்கி அவர்களின் 'ஆனந்த அலை' என்ற ல்லி சி.டி. இலவசம்.

முன்னது இலக்கிய நூல்கள் குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகள் எனில், பின்னது அவரது ஃபேவரைட்டான அறிவியல் ஆர்ட்டிகிள்கள்.

வழக்கமாக வெளியே வந்து சப்வேயில் புகுந்து, நுழைந்து, வெளி வந்து ஜி.ஹெச். ஸ்டாப்பில் நின்று, சைதை சென்று, வேளச்சேரி செல்வேன். இந்த முறை பறக்கும் ரயிலை முயல்வோம் என்று தீர்மானித்து, பார்க் ஸ்டேஷன் சென்றேன். சரியான தகவல் தெரியாததால், பீச்சுக்கு டிக்கெட் எடுத்து விட்டேன். பிறகு தான் கூப்பிடு தொலைவில் பார்க் டவுன் ஸ்டேஷனுக்குச் சென்றாலே போதும் என்று தெரிய வந்தது.

பீச் ஸ்டேஷன் போய், நெடிய வரிசையில் நின்று, டிக்கெட் எடுத்து, பறக்கும் ரயிலில், மாடி ஏறி, சேறாய்க் குழம்பியிருந்த ட்ரிப்ளிகேன் க்ரிக்கெட் க்ரவுண்ட்களையும், மின்னும் மயிலை கோபுரங்களையும், பசுமை பூத்த ஐ.டி. ஹைவே சாலை ஓர டைடல் பார்க்கையும், ஏரியை மீறிய சாக்கடை நீரில் மூழ்கி மிதக்கும் தரமணி குடிசைகளையும் பார்த்து, காலியான வேளச்சேரி டெர்மினஸில் இறங்கிக் கொண்டேன்.

கூடவே, தோரணத்து மாவிலைகளைச் சுவைத்துக் கொண்டே வந்தேன்.

காலச்சுவடு ஆண்டுச் சிறப்பிதழ் ('91), கூனன் தோப்பு, புதுமைப்பித்தன் படைப்புகள், ஆதம்பூர்காரர்கள், அன்று, திசைகளின் நடுவே நூல்களின் விமர்சனங்களும், புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள், கன்னட சினிமா, பாரதிதாசனும் தந்தை பெரியாரும் (இக்கட்டுரையின் கடைசி வரி :: ... அதுபோல் பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் தமிழ் நாட்டின் பொதுச் சொத்தாக்கி படிக்க விரும்புவோர்க்கு எளிதில் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.) போன்ற பொதுக் கட்டுரைகளுமாக வாத்தியாரின் ஒரு புது(எனக்கு)முகத்தைப் பார்க்க/படிக்க முடிந்தது.

சென்னையில் இருந்த காலகட்டத்தில் ஒரு ஞாயிறு நாள் மாலை ஸ்பென்ஸர் லேண்ட் மார்க்கில் புத்தகவாசங்கள் பிடித்துக் கொண்டிருந்த போது, வலது புற மூலையில் ஓவியங்கள் செக்ஷனின் முன்புறம் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஈர்த்தார். அருகில் சென்று பார்த்தால், இனிய அதிர்ச்சி.

பொன்னியின் செல்வனைத் தூரிகைகளால் வரைந்து உயிர் கொடுத்த மணியம் அவர்களின் செல்வன், அவர். திரு.மணியம் செல்வன் அவர்கள்.

கொஞ்சமாக ஓவியங்கள் பற்றி அவரிடம் பேசி விட்டு வழக்கம் போல் ஒர் ஆட்டோகிராப், ஒரு நிழற்படம் என்று எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஆ.விகடனில் அவரது பாரீஸ் சுற்றுப்பயணம் பற்றி ஒரு கட்டுரை வந்தது. 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய ஓவியங்கள் பற்றி அவ்வப்போது விசிட் அடித்து, க்ளாஸிக்கல் ஓவியக் கூறுகளை நான் ருசிக்கின்ற இத்தளத்தைப் பற்றி அவரிடம் தொலைபேசினேன்.

மூன்றாம் முறையாக, இன்று நானும் என்னை விட சிறப்பாக படம் தீட்டும் ஆற்றலுடைய என் இளைய சகோதரருமாக அவரது இல்லத்திற்குச் சென்றோம்.



திரு ம.செ. அவர்கள். பின்புலத்தில் அவரது தந்தை திரு.மணியம் அவர்களின் ஓர் ஓவியம்.

பறக்கும் ரயிலில், மந்தைவெளியில் இறங்கி, எப்பொதும் போல் நான்கைந்து தெருக்கள் தேடித் தேடி கடைசியில் அவர் சொல்லி இருந்த விலாசத்திற்கு வந்தடைந்தோம். மாலை ஐந்து மணியில் இருந்து இரண்டு மணி நேரங்கள். பல விஷயங்கள்; பல கருத்துக்கள்.

எளிமையாக இருக்கிறார். மேன் மக்களின் குணமாகிய 'சிறியோரை இகழ்தலும் இலமே' என்பது போல், நமது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் பதில் உகுக்கிறார்; தலைமுறை இடைவெளிகள் அற்ற பேச்சு!

Excerpts ::

* 'பற்பல ஓவியர்களின் படைப்புகளைக் கண்டு வருவதால், அவற்றின் பாதிப்பு உங்களின் படைப்பிலும் தோன்றினால், அதை சுலபமாக 'காப்பி அடிக்கறான் சார், இவன்' என்று சொல்லி விடும் சாத்தியம் உள்ளதே?' என்று கேட்டதற்கு,

'ஆரம்ப நிலையில் இருக்கும் எந்த படைப்பாளியின் படைப்பிலும் இத்தகைய தாக்கம் இருக்கும். அதை Influence எனலாம். மற்றபடி பாதிப்பு என்று சொல்லக் கூடாது. ஆனால், வளர வளர, இத்தகைய தாக்கங்கள் மறைந்து, தான் காணும் ஓவியங்களை Reference ஆக வைத்துக் கொண்டு, அவற்றின் core-ஐ மட்டும் உள் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் அடைந்து தனது ஸ்டைலில் தான் தன் படைப்புகளைக் கொடுப்பான்' என்றார்.

ஆச்சரியம்! நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து இதே போன்ற கேள்வியைக் கேட்ட போதும் இதனை ஒத்த பதிலைத் தான் சொன்னார்.

* பல நவீன பெய்ண்ட்டிங் சாஃப்ட்வேர்களைப் பயன் படுத்தினாலும், கைகளால் வரைவது போல் வருவதில்லை என்றார். அது மைக்கேல் ஏஞ்சலோவின் ஆதிமனிதனும், இறைவனும் விரல்களால் தொட்டுக் கொள்வது போல், தனது கை விரல்களும், ட்ராயிங் போர்டும் தொடர்பு கொள்கின்றன என்றார். என்ன ஒரு விளக்கம்!

எனக்கு இது ஞாபகம் வந்தது.

எனினும் ஃபைனல் டச்களுக்காகவும், இன்னும் ப்ரெசிஸன் வேண்டும் என்றால் மட்டும் கோரல் ட்ரா, போட்டோ ஷாப் பக்கம் போவதாகக் கூறினார்.

* ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வி. மாருதி அவர்களின் பெண் படங்கள் அழகின் சாரத்தை வர்ணங்களில் பிழிந்து திகட்டாமல் தருகின்றன. ரசிக்கிறோம். ஜெ. அவர்களின் பெண் படங்கள் வேறோர் உணர்வு நிலைக்கு நம்மை உசுப்பி விடுகின்றன. திருட்டுத்தனமாக ரசிக்கிறோம். உங்கள் படங்களின் பெண்களைப் பார்த்த மாத்திரத்தில், ஒரு மரியாதை காட்டத் தோன்றுகின்றதே..! இதற்கு நீங்கள் சரித்திரத் தொடர்கள் அதிகம் வரைவதாலும், உங்கள் தந்தையின் கவனிப்பின் தாக்கமும் காரணம் என்று கொள்ளலாமா..?

இக்கேள்விக்கு நீண்ட பதில் சொன்னார். சில மட்டும் ::

இருக்கலாம். பெரும்பாலும் நான் எடுத்துக் கொள்ளும் அசைன்மெண்ட்டுகள் அப்படிப்பட்டவையாகப் பார்த்துக் கொள்வதால் அப்படி ஓர் இமேஜ் வந்திருக்கலாம்.

நான் பெண்களை வரைகையில் அவர்களது முகத்திலேயே முழு அழகையும், முழு உணர்வையும் கொண்டு வர முயல்வேன்.

வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் படிக்கக் கூடிய வகையில் கதைகள் நான் எடுத்துக் கொள்வதால், என் படங்களும் அந்த லிமிட்டைத் தாண்டாமலேயே இருக்கும். சரித்திரக் கதைகளிலும், வெறும் மார்க் கச்சைகள் மட்டும் இருக்குமாறு வரையும் சூழ்நிலை இருந்தாலும், அதிலும் ஒரு மரியாதை ஏற்படுமாறு வரைகிறேன்.

* அவர் சந்தித்த, சந்திக்கின்ற காப்பிரைட் பிரச்னைகளை விரிவாகப் பேசினார். கல்யாணப் பத்திரிக்கை அடிக்கின்ற நகரின் இரு பிரபலமான கார்டு கம்பெனியினர், அவரது படைப்புகளைப் பயன்படுத்துவதில் காப்பிரைட் பிரச்னைகள் வரும் என்ற எண்ணமே இல்லாமல் பயன்படுத்துவதில் இருந்து, கூச்சமே இல்லாமல் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவது வரை சொன்னார்.

*புத்தகங்கள் பார்த்து வரையக் கற்றுக் கொள்வது என்னைப் போன்ற அமெச்சூர் ஓவியர்களுக்கு உகந்த வழியா?

ஆரம்பத்தில் சரி. பின் போகப் போக ரியல் பொருட்களைப் பார்த்து வரையப் பழக வேண்டும். ஆனால், வெறும் புத்தகங்களை மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பது, புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு சமைக்க முயல்வது போன்றது எனலாம். சரி, நீ என்னென்ன புத்தகங்கள் வாங்கி இருக்கின்றாய்?

'ராஜா ரவிவர்மா கலெக்ஷன் மற்றும் எழுத்தாளர் இளவேனில் தொகுத்த 'அழியாத கோடுகள்' என்ற ஓவியர் ஆதிமூலம் பற்றிய நூல்' என்றேன்.

அதிலிருந்து பேச்சு லைன் ட்ராயிங், கான்டெப்ரரி ட்ராயிங், லிட்ரேச்சர் உலகத்திலும் நிலவும் இதே போன்ற கமர்ஷியல், மாடர்ன் ரைட்டிங், அந்த டிவிஷன் என்றெல்லாம் பேச்சு திசைகள் அற்றுப் பறந்தது.

'கலை வளர்ச்சிக்கு இது போன்ற பிரிவுகள் தேவையாக இருந்தாலும், ஓரளவிற்கு மேல் போய் விடக்கூடாது. பல எக்ஸ்பிரிமெண்ட்டுகள் செய்து பார்ப்பது எல்லா கலைகளிலும் அவசியமான ஒன்று. ஆனால் அவற்றில் நல்லது காலத்தால் நிற்கும்; மற்றவை கழிந்து போகும்' என்று முடித்தார்.

*திருவனந்தபுரத்தில் இருக்கும் நேப்பியர் மியூசியத்தில் இருக்கும் சித்ரா ஆர்ட் கேலரி மற்றும் ரவிவர்மா கேலரி பற்றியும் விசாரித்தார். நாம் தான் முதல் பயணமே அங்கே சென்று வந்திருக்கிறோமே! என்று கொஞ்சம் சொன்னேன்.

விரல் வழி விளக்கின் ஒளி பரவும் ரவிவர்மாவின் ஓவியம் அவரது கேலரியின் வாசலை அலங்கரிப்பதை நினைவு கூர்ந்தார்.

* மேலும் அவரது மவுண்ட் கைலாஷ் யாத்திரை, இப்போது செய்கின்ற ப்ராஜெக்டுகள், நடிகர் / ஓவியர் சிவகுமாரோடான ஓவிய அனுபவங்கள், அந்தக் கால ஓவிய மெதட்கள், கவிஞர் வைரமுத்து படைப்புகளுக்காக அவரது கிராமம் சென்றது, வாழ்நாள் பலனான கவிஞர் வாலியுடனான இரு பெரும் ப்ராஜெக்டுகள் என்று பல தரப்பட்டு பேசினார். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.

* அவர் வீட்டம்மா கொடுத்த காஃபி சூப்பராக இருந்தது.

* 'டொம்.. டொம்' என்று அணுகுண்டுகளும், 'பட...பட...'என சர வெடிகளும் தீபாவளி முன்னிரவை ஒலியால் அதிரடித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது நிறுத்தி, பின் பேச்சைத் தொடர்ந்தார்.

* நடுவில் ஒரு கால் வர, நாங்கள் அவர் வரைந்த காலண்டரில் இருந்த நடன நாரீணிகளின் அதிஸ்வரூப அழகை அருந்திக் கொண்டிருந்தோம். அவரது தந்தையார் திரு.மணியம் அவர்கள் வரைந்திருந்த சிவ - பார்வதி சொக்கட்டான் ஆடும் ஓவியம், தெய்வாம்சம். (சொல்லவும் வேண்டுமா..?)

* கிளம்பும் போது, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பொதுவாக இவ்வளவு நேரம் (2 மணி நேரம்) பேசுவதில்லை என்றாலும், சற்று ஓய்வாக இருந்தபடியாலும், ஞாயிறு மாலை என்பதாலும் பேசினார்.

* எனது ப்ளாக்கைச் சொன்னேன். (சார்! நான் கூட கதை எழுதுவேன் சார்...!). குறித்து வைத்துக் கொண்டு, பார்ப்பதாகச் சொன்னார்.

எனக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில், நகுலன் அவர்களின் கவிதை நினைவுக்கு வரும்.

என்னைப்
பார்க்க வந்து,
தன்னைப் பார்
என்று
சொல்லிச் சென்றான்.

கிட்டத்தட்ட இது போன்று தான் வரும்.

மீண்டும் பறக்கும் ரயில் வழியாக வீடு திரும்பினோம். சில ஸ்நாப்ஸ் ::











இப்போது இந்திய நேரம் 01.40, திங்கட்கிழமை..! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!

9 comments:

Sridhar V said...

சுடச்சுட தீபாவளி வாழ்த்துகள் கிடைத்தது. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் :)

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு....
கொடுத்துவ்ச்ச ஆளுப்பா நீயி.. இதுக்கு மேல நான் என்ன சொல்றது.
கடைசியில் நீ போட்டிருந்த நகுலன் கவிதை, யாருக்கு நான் பின்னூட்டமிடும்போது இருக்கும் நிலையை அழகாகப் பிரதிபலித்துவிட்டது.
தீபாவளி நல்வாழ்த்துக்கள் வசந்த் உனக்கும், குடும்பத்தினருக்கும்....

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆகுக...!

***

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆகுக...!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வசந்த் அவர்களுக்கு,


எதிர்பாராத விதமாக உங்கள் தளத்தை கண்டேன். அருமை.

மா செ வின் அனுபவ பகிர்வும் தித்திப்பாக இருந்தது.



சில ஆன்மீக ரீதியான ஓவியம் அவரின் தூரிகையிலிருந்து பெற விரும்புகிறேன்.

உங்களுக்கு செளகர்ரியப்படுமாயின் அவரின் விலாசமோ தொலைபேசி எண்ணோ தர இயலுமா? எனது மின்னஞ்சலுக்கு?

நன்றி

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்வாமி ஓம்கார்...

ஒரு முறை சாரிடம் கேட்டு விட்டு, அவர் ஒப்புதல் கொடுத்தால் தருகிறானே...! உண்மையில் கலைஞர்கள், ரசிகர்களைக் காண்பதில், அவர்களுடன் அளவுளாவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் என்பது திண்ணம் என்பதால், நிச்சயம் ஒத்துக் கொள்வார் எனினும், ஒருமுறை அவரிடம் கேட்டு விடுவது நல்லது அல்லவா....!!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வசந்த் அவர்களுக்கு,

விரைவாக பதில் அளித்தமைக்கு நன்றி.

காத்திருக்கிறேன்.

swamiomkar at gmail.com

இது எனது மின்னஞ்சல்.
நன்றி.

வெண்பூ said...

கொஞ்சம் லேட்டான தீபாவளி வாழ்த்துக்கள் வசந்த். உங்கள் விடுமுறைகளையும் நீங்கள் வாசிப்பிற்கும் அது தொடர்பான சந்திப்புகளுக்குமே செலவிடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

தீபாவளி வாழ்த்துக்கள்.

நான்கு நாட்கள் விடுமுறையில், நீங்கள் ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஒரே ஒரு சந்திப்பு தான்! மற்ற நேரம் எல்லாம் உண்பது, உறங்குவது...!!! ;-)

சதங்கா (Sathanga) said...

ம.செ.வை சந்தித்திருக்கிறீர்கள் எனும்போதே உள்ளம் ஆனந்திக்கிறது. அதிலும்

//எளிமையாக இருக்கிறார். மேன் மக்களின் குணமாகிய 'சிறியோரை இகழ்தலும் இலமே' என்பது போல், நமது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் பதில் உகுக்கிறார்; தலைமுறை இடைவெளிகள் அற்ற பேச்சு!
//

உணர்வுபூர்வமான வரிகள்.

மீண்டும் அவரை சந்திக்கையில் எங்களது அன்புகலந்த வணக்கத்தையும் தெரிவியுங்கள்.