10.JAN.2006.
இலைநுனி
மேல்
பனித்துளி
என்று தோன்றவில்லை,
உன்
இமைநுனிகளில்
கண்ணீர்த் துகள்..!
***
தவிர்க்க விட்டு
நீ செல்லும்
நேரம் வருகையில்,
தவிக்கத் தவிக்க,
வருகிறது
இருள்..!
***
மெளனமாய்
நீ
நகர்ந்து
சென்று விட்டபின்
சாலை
விளக்குகளைக்
கவ்விக்
கொள்கிறது
அமைதி!
***
கூடவே வருகிறதா,
காவலாக
அனுப்பி வைத்த
என் நிழல்..!
***
நீ
கலைத்து
விட்டுச் சென்றாயா?
போதையில்
என்னைப் போல்
தலையாட்டுகிறது
தென்னை மரம்..!
***
வேறென்னவென்று
சொல்வது?
உன்னைப்
பார்ப்பதற்கு
இரவெல்லாம்
விழித்திருக்கும்
என் மனதை,
உன் அடிமை
என்பதை விட..?
***
பேயென்று
சொல்கிறார்கள்,
முத்தங்களால்
அடித்தது
நீயென்று,
எப்படிச் சொல்வது
கலங்கி நிற்கும்
தாயிடம்..?
(இதுவரை நடந்த எதையும் அம்மாவிடம் மறைத்திராத மனம் (பையனோ, பெண்ணோ) சட்டென்று மனதில் பூக்கும் இந்த உணர்வை மொழிமாற்றம் செய்ய முடியாமல் மறைக்கிறான். அது அவனது மனதை உறுத்தி, குற்ற உணர்ச்சியில் தள்ளுகின்றது.
இந்த நிலை அத்தனை கவிஞர்களுக்கும் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
'தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சந் துடித்த தடீ' எனத் துவங்கும் மகாகவி பாரதியின் 'கண்ணன் என் காதலன்' பாடலின் இடையில் வரும், 'தாயினைக் கண்டாலும் - சகியே சலிப்பு வந்ததடீ'யும், 'ரன்'னில் 'என் தாயோடும் பேசாத மெளனத்தை நீயே தந்தாய்' என்ற வரிகளும் இதனை ஒத்தவையே..!)
***
முன்கூட்டியே சென்று,
கைகட்டி நின்று,
காத்திருக்கும்
இந்த மனதிற்கு
எப்படித் தெரிகிறது
நீ
போகப் போகும்
பாதைகள்..?
***
மற்றுமொரு முறை
சொல்!
என் இரவுகளின்
மேலெல்லாம்
விழுகின்றன,
விண்மீன்கள்!
***
பச்சைத் தண்ணீரில்
குளித்து,
மஞ்சள் பூசிக்
கரைத்து,
சிகப்புப் பொட்டு
வைத்து
நீ நடந்த
சாலைச் சந்திப்பு
விளக்குகளில்,
எல்லாம்
நிறங்கள்
இல்லை..!
***
போயொரு முறை
பார்க்கலாம்,
கேட்கின்றன
வறண்டு நிற்கும் கண்கள்!
போயொரு முறை
பேசலாம்,
அழைக்கின்றன
காய்ந்து போன உதடுகள்!
ஏதேனும் பேசி
சிரிக்கலாம்,
இழுக்கின்றன,
கருத்துப் போன இமைகள்!
உன் எல்லையில்
தடுக்கின்றன
அமிலம் பூசிய
உன் வார்த்தைகளும்,
ஆகாயம் நோக்கிய
உன் பார்வைகளும்..!
3 comments:
நண்பர் வசந்த்துக்கு...
சிறுகற்கள் கவிதைக்குவியல் அழகாக இருந்தது...
சாலைவிளக்குகளைக் கவ்விக் கொண்ட அமைதியும், தாயின் முன் ஏற்பட்ட பேச்சற்ற தன்மையும், நிறமிழந்து போன சாலைச் சந்திப்பு விளக்குகளும், எல்லையிறுத்துவிட்ட அமில வார்த்தைகளும், ஆகாயப் பார்வைகளும் காதலின் கனத்தினைச் சிறு,சிறு க(சொ)ல்லாக்கி, மென்வலி ஏற்படுத்தி விட்டன.
கவிதை அருமை.
நிறைய எழுதுவீர்கள் எதிர்பார்க்கிறேன்.
அன்பு தமிழ்நெஞ்சம்...
நன்றிகள். பழைய படைப்புகளே நிறைய நீங்கள் படிப்பதற்கென்றே இருக்கின்றன.
Post a Comment