11.DEC.2005
காதலின் விஷம் பாரித்த நீல மனம் போல், விரிந்துக் கிடக்கின்ற பெருவானமெங்கும், பாரத்தில் சிந்திய கண்ணீர்த் துளிகளாய்ப் பொறித்த விண்மீன்கள், நிறைந்த மென் இரவுப் பொழுது.!
ஈரம் கரைத்த போர்வையாய்ப் பனிக்காற்று வீசிக் கொண்டிருக்கும் காலம்.!
பகலில் பொழிந்த வெம்மையை உறிஞ்சிய பெரும் மணற்பரப்பு, குளிரில் நனைந்து கொண்டிருக்கிறது.
முட்கள் முளைத்த கள்ளிச் செடிகளும், செதில் செதிலாகச் செதுக்கிய ஈச்ச மரங்களும் நிரம்பிய, பாலைவனப் புழுதிக் காற்று, மணல் தூறலை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது.
நூல்களின் நரம்புகளின் மேலெல்லாம் மருதாணிச் சிகப்பு பூசிய ஒற்றை லாந்தர் விளக்கை, மூடிய கூடாரக் கூட்டுக்குள், நானும், நீயும்..!
நம்மைச் சுமந்து வந்த ஒட்டகத்தின் திமிலெல்லாம் திமிறுகின்ற நீர் போல, நம்முள் நிறைந்த நினைவுகள், நம்மை உறங்கச் செய்யாமல், கண்களின் மேல், சூழ்ந்த உறக்கத்தைக் கழுவித் தளும்பிக் கொண்டிருக்கின்றன.
நிலவின் ஒளியைச் சல்லடைத் துளிகளால் வடிகட்டித் தருவது போல், இந்த நட்சத்திரங்கள் ஒளிச் சாரல் பொழிகின்றன.
பெரும்பயணத்தின் இறுதியில் பெறுகின்ற, நிலைத்துயராய் ஒரு கனம் வந்து, குடியேறுகின்றது, என் மனதில்..!
எந்த நொடியில் உடைந்தது இந்த உறவு? எந்தப் புள்ளியில் பிறழ்ந்தது நமது ஒத்திசைவு?
கொடுஞ் சூட்டைப் பொழிகின்ற பெரு வெயிலில் உருகிய கறுப்பு வைரங்களெல்லாம் திரண்ட பெட்ரோல் மறைத்த மணற்பரப்பின் மேல், லாந்தர் விளக்கின் இருளும், ஒளியும் போல் பிரிந்தே இருக்கிறோம் நானும், நீயும்..!
மணற்காற்றில் படபடக்கின்ற கூடாரத்தின் ஜன்னல் துளைகள் வழியே தூரத்தில் தெரிகின்ற நகரத்தின் ஒளிப்புள்ளிகளை வெறிக்கின்றேன்.
இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுகின்ற, உன் பயணக்கப்பலுக்காகக் காத்திருக்கிறாய்..!
பட்டுக் கம்பளிகள் பதித்த, உன் வீட்டின் ஜன்னல் கம்பிகளின் வழியே இனி எப்படி என் காதல் நுழைந்து வரும்? சந்தையின் வழியே நீ நடந்து வருகையில், ஈரானிய வளையல்களும், ஷார்ஜா கொலுசுகளும் சிமிட்டி நீ அனுப்பும் செய்திகளை, இனி யாருக்குத் தெரிவிப்பாய்? சிரிக்கையில் கண்கள் மட்டும் தெரிகின்ற அந்தக் கறுப்பு உடைக்குள் இனிப் புகுந்து கொள்ளும் வகையில் வலி நிறைந்த கவிதைகளை இனி யார் உனக்கு எழுதித் தருவது?
உன்னை அழைத்துச் செல்ல வந்து விட்ட ஒட்டகத்தின் மேல் அமர்ந்து நகர்கின்றாய். என் பெருமூச்சுகளைச் சுமந்து செல்கின்ற பயணத்தின் முடிவில் நீ அடையப் போவது நீர் ஊற மறந்து போன சுனை கொண்ட பளிங்கு வீடு..!
பாலைவன மணல் நிரம்பிய குளிர்க்காற்று இந்த ஒற்றை விளக்கை மட்டுமல்ல, அணைத்துச் செல்கின்றது, நீயற்ற இனி எந்தன் வாழ்வின் மேல் நான் கொண்டிருந்த பற்றையும்...!
***
குறிஞ்சி!
நெய்தல்!
மருதம்!
3 comments:
//ஈரம் கரைத்த போர்வையாய்ப் பனிக்காற்று வீசிக் கொண்டிருக்கும் காலம்.!//
//நூல்களின் நரம்புகளின் மேலெல்லாம் மருதாணிச் சிகப்பு பூசிய ஒற்றை லாந்தர் விளக்கை, மூடிய கூடாரக் கூட்டுக்குள், நானும், நீயும்..!//
//நிலவின் ஒளியைச் சல்லடைத் துளிகளால் வடிகட்டித் தருவது போல், இந்த நட்சத்திரங்கள் ஒளிச் சாரல் பொழிகின்றன//
//பெரும்பயணத்தின் இறுதியில் பெறுகின்ற, நிலைத்துயராய் ஒரு கனம் வந்து, குடியேறுகின்றது, என் மனதில்//
வார்த்தைகளை மட்டுமல்ல வலிகளைக்கூட பிரதியெடுக்க முடிகிறது உங்கள் பதிவுகளில்...
எல்லோர் மனத்தின் மூலைகளிலும் வெளிப்படுகிற மௌன அலறலின் ஒரு சிதறல் இப்பாலை.
'சிந்தனை செய் மனமே' பதிவில் போட்ட புகைப்படத்திற்கு விளக்கம் இன்னும் வரவில்லை வசந்த்....
அன்பு தமிழ்ப்பறவை...
தமிழ் நிலங்களில் எழுதி இருந்தாலும், அத்தனையிலும் அடர்ந்திருந்தது மனவலி. பாலையில் அது தானே இயல்பு நிலை. வறட்சியும், தாகமும், வெப்பமும், அலைதலும், தனிமையும் பாலையின் பாரம்பரியம் அல்லவா..?
புகைப்பட விளக்கம், Where is the Party....Tonight...? பதிவில் ஏற்றப்பட்டு உள்ளது. ;-)
Post a Comment