Monday, November 24, 2008

சிந்தனை செய் மனமே...!

டைமுறையில் சிக்கலான இடைஞ்சல்களின் காரணமாகச் செய்ய இயலாத ஆய்வுகளைச் சிந்தித்துச் சிந்தித்தே (இப்படி இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்..? இப்படி இருக்குமோ..?) ஒரு கொள்கையையோ, காரண காரியங்களையோ அலசி ஆராய்வதை Thought Experiment என்கிறார்கள்.

நாம் அதனைச் சுலபமாக 'சிந்தனை செய் மனமே' என்று சொல்லலாம்.

பேடண்ட் அலுவலகத்தில் வேலையை சுளுவாக முடித்து விட்டு, சும்மா இருக்கும் போதெல்லாம் ஐன்ஸ்டீன் இத்தகைய யோசனைகளில் ஆழ்ந்து தான் 1905-ஐ 'ஐன்ஸ்டீன் ஆண்டு' என்று பெயர் பெற வைத்தார்.

கண்களைத் திறந்து கொண்டு பகல் கனவு காண்பது இந்த கேட்டகிரியில் வருமா.. என்றால் வராது. அது கேள்விகளைத் துவக்குவதோ, பதில்களைச் சொல்லி முடிப்பதோ கிடையாது. நமது ஆசைகளைத் தான் காட்சிகளாக ஓட்டிப் பார்த்து திருப்தியுறுகிறோம் (அ) பெருமூச்சு விடுகிறோம்.

இயற்பியல், தத்துவம், கணிணியியல், கணிதம், உயிரியல் மற்றும் சில துறைகளில் இந்த சிந்தனை செய் மனமே பயன்படுவதாக விக்கி கூறுகிறான்.

நாம் நம் பங்கிற்கு ஒரு ஆய்வைச் செய்வோமா?

ஒரு நீளமான ரயில் இருக்கின்றது. அது எஸ்1 முதல் எஸ்10 வரை கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அனைத்து பெட்டிகளும் நேரான பாதையால் இணைக்கப்பட்டு உள்ளன. எஸ்1 பெட்டி எஞ்சினுக்கு அடுத்து உள்ளது. மிஸ்டர்.பீன் எஸ்10ல் இருந்து எஸ்1 வரை சென்று மீண்டும் எஸ்10க்கே வந்து ஆரம்பித்த புள்ளியில் நிற்கிறார்.

சரி. இப்போது அவர் மொத்தம் கடந்த/நடந்த தூரம் எவ்வளவு என்பதை,

அ. ரயில் ஸ்டேஷனில் நிற்கும் போதும்,
ஆ. நேரான ட்ராக்கில் நிலையான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போதும்,

எத்தனை வகைகளில் கணக்கிடலாம்?

உதா. :: கணக்கிடுபவர் மிஸ்டர்.பீனுடன் ரயிலில் அமர்ந்திருப்பவராகவோ, ஸ்டேஷனில் நின்றிருப்பவராகவோ, அல்லது செவ்வாயில்/ நிலாவில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவராகவோ இருந்தால் விடையில் என்னென்ன மாறுபாடுகள் ஏற்படும்?

இந்த சிந்தனையை ஏற்கனவே ஒரு கதையில் சொல்லி இருக்கிறேன்.

ரயில் பயணங்களில் விதவிதமான மனிதர்களைச் சந்திக்கலாம். இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்டில் பெயர்க்கேற்றவாறு பெரும்பாலும் ரிசர்வ்டாகவே வருவார்கள். பேருக்கு கொஞ்சம் போல் பேசி விட்டு, டிபன் பாக்ஸையோ, புளியோதரைக் கட்டையோ பிரித்து, சத்தம் காட்டாமல் சாப்பிட்டு முடித்து விட்டு, சட்புட்டென்று படுக்கையை விரித்தோமா, லைட் எல்லாம் ஆஃப் பண்ணினோமா என்று நாளை முடித்து விடுவார்கள். கூட வருவது யார் என்பதையே அவ்வளவாகத் தெரிந்து கொள்ள விரும்பாதத்து, இந்தப் பெட்டியின் பொதுச் சுபாவம், திருவையாறு செல்லும் அம்பிகளைத் தவிர!

பொதுப் பெட்டி அப்படியே வேறொரு ரகம். லைட் அணைப்பது பொதுவாக முடியாது. ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும் போதும் எங்கோ ஓர் இடத்தில் இருந்து ரகளைச் சத்தம் வரும். கொஞ்ச நேரத்தில் அடங்கி விடும். 'டாய்லட்ல தண்ணி வர்ல' போன்ற பொதுக் கஷ்டங்கள் கொஞ்சம் நெருங்கப் பண்ணும். லக்கேஜ் கம்பிகள் மேல் படுத்திருப்பவரை எழுப்பலாமா வேண்டாமா என்ற சந்தேகம் சற்று நேரம் இருக்கும். அவரும் 'எங்கே எழுப்பி விடுவான்களோ?' என்ற பயத்திலேயே படுத்திருப்பார். கால்களுக்கு இடையிலும், நடக்கும் பாதையிலும் யாராரோ உருண்டிருப்பார்கள். முதல் சீனில் அறிமுகமாகும் ஹீரோ போல், பறந்து பறந்து தான் நடக்க வேண்டி வரும். அதிலும் மழை பெய்கின்றது என்றால் இன்னும் கச்சடா..!

ஆனால் பொதுப் பெட்டிகளில் தான் இதுவரை சந்தித்திராத கேரக்டர்களைக் காணலாம்.

மகாத்மா காந்தியின் மூன்றாம் வகுப்பு பயண அனுபவத்தைப் படியுங்களேன்.

சென்ற வாரம் ஊருக்குச் செல்லும் போது, ஒருவரைச் சந்தித்தேன்.

கொல்லம் கிறித்துவக் கல்லூரியில் பாஸ்டருக்கான படிப்பில் சேர்ந்து, முதலாண்டு படித்துக் கொண்டிருக்கும் காஞ்சிக் கோயிலைச் (கோபி அருகே!) சேர்ந்த... முத்துக் குமார்!

'ஆண்டவராகிய ஏசுகிறிஸ்து' என்று தான் குறிப்பிடுகிறார். மிகக் கொடும் வறுமையில் இருந்த குடும்பம் தந்தையின் எதிர்பாரா மரணத்திற்குப் பின், தடுமாறி, பின் கிறித்துவத்திற்கு மாறிய பின் தான் வறுமை ஒழிந்தது; வளம் பிறந்தது என்றார்.

ஏன், நீங்கள் இந்துக் கடவுள்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் வேறு மதம் தேடிய போது, இஸ்லாம், புத்தம், ஜைனம், சீக்கியம் என்றெல்லாம் போகாமல், கிறித்துவத்திற்குப் போனீர்கள் என்று கேட்டால், அவை எல்லாம் சரியல்ல என்றார். எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்று கேட்டால் மெளனம்.

பரலோகத்தில் இருந்து தேவன் வரும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது; இப்போது நடப்பதெல்லாம் பைபிளில் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் நடந்து கொண்டிருக்கின்றது; CERN LHC முடிவுகள் மட்டும் தெரிய வரட்டும்; அப்புறம் பாருங்கள், எல்லோரும் பைபிளை ஒத்துக் கொள்வார்கள் என்றார்.

பிறகு எல்லோரும் கேட்கும் கேள்வியான, 'ஏன் உங்கள் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்; முப்பத்து முக்கோடி தேவர்கள் என்னத்திற்காக?' என்று கேட்டார். தெரிந்ததைச் சொன்னேன்.

மற்ற மதங்களைப் பற்றிப் படிப்பீர்களா என்று கேட்டதற்குச் சொன்னார் பாருங்கள்; கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதில் தான் தெரிந்து கொண்டேன், ஜைன மத, புத்த மதக் கருத்துக்கள் எல்லாம் பைபிளில் இருந்து உருவப்பட்டவை; உதாரணம், 'அயலானிடத்தில் அன்பு வை' என்று ஆண்டவராகிய ஏசுபிரான் சொன்னார். அதையே தான் புத்தரும் 'அன்போடு இருங்கள்' என்றார். எப்படி திருடி இருக்கிறார்கள் பார்த்தீர்களா என்றார். என்ன சொல்ல..?

கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்கள் இருவரும் பேசிப் பேசிக் களைத்துப் போய் இறுதியாக ஒன்று சொன்னேன்.

'நீங்கள் மதம் மாறியதோ, அதன் காரணமாக பிற மதங்களைப் பழித்துப் பேசுவதோ எனக்குப் பிடித்தமாக இல்லை; ஆனால் நீங்கள் நண்பராகி இருக்கிறீர்கள். எனவே உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவது என் கடமை;

நீங்கள் சாதாரண கிறித்துவனாக இருந்தால் கவலை இல்லை; குதிரை கண்ணைக் கட்டியது போலவும், கிணற்றுத் தவளை போலவும் ஒரே மதத்தில் ஊறிக் கொண்டிருக்கலாம். ஆனால் பாஸ்டராகப் போகிறீர்கள் என்றால், நீங்கள் எல்லா மதக் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஏன் கடவுள் இல்லை என்ற பெரியாரின் கருத்துக்களையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

அப்போது தான் நாளை உங்கள் பாஸ்டர் பணியில் உங்கள் டார்கெட்டை அடைய முடியும். எங்கே உங்கள் சுவிசேஷத்தைப் பரப்பப் போகிறீர்கள்..?'

'மூன்றாண்டு காலங்கள் முடித்து விட்டு, ஒரிஸ்ஸா போய் விடுவேன். அங்கே தான் சுவிசேஷம் பரப்ப வேண்டும். ஏனெனில் அங்கே தான் தேவை இருக்கின்றது!' என்றார் என்னைப் பார்க்காமல்!

சரி தான்.

ந்தப் புகைப்படத்தில் எதையாவது நீங்கள் காண்கிறீர்களா..?



சென்ற வாரக் குமுதத்தில், சுஜாதா பற்றிய தொடரில், கடைசியாக ரஞ்சன் இப்படி முடித்திருக்கிறார்.

நினைவுகளைச் சேர்த்து வைப்பது பற்றி தெரிந்திருந்தால், சுஜாதா ஒரு அறிவியல் கதை எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார்.

(வார்த்தைகள் சரியாக நினைவில்லை!)

அவருக்கு யாரேனும், 'பேசும் பொம்மைகள்' என்ற நாவலை வாத்தியார், டவுன்லோடிங் (மூளையில் இருந்து ஞாபகங்களைச் சேகரித்து வைத்தல்) வைத்து எழுதி விட்டார் என்று சொன்னால் நல்லது.

றிவுரை சொல்லுமாறும், புரட்சி ஓங்குமாறும் வெண்பா நான் எழுதுவதில்லை என்று நண்பர்கள் சொன்னதால், ஒரு கடின முயற்சியில் விளைந்த ஒன்று ::

தீதுமெதிர் நன்றுந் திரும்புமாடி முன்பினென
ஏது வரினும் எளிதெதிர்க்கொண்(டு) - யாதும்
மறவா திருக்குமாறு மண்ணில்நீ வாழ்ந்து
இறவாப் புகழினைச் சேர்!

4 comments:

வெண்பூ said...

தாட் எக்ஸ்பிரிமென்ட் எனக்கு புதிய வார்த்தை. நன்றி வசந்த்...

சொல்லப் போனால் நீங்கள் கொடுத்த உதாரணம் போலவே ஐன்ஸ்டீனும் "ஒளி வேகத்தில் பயணம் செய்யும் ஒருவனுக்கு அதே வேகத்தில் அவன் செல்லும் திசையிலேயே செல்லும் ஒளி எப்படி தெரியும்?" என்று சிந்தித்ததன் விளைவுதான் ரிலேடிவிடி தியரியும், காலப் பயணம் குறித்து அவரது கண்டு பிடிப்புகளும் என்று படித்திருக்கிறேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

'காலப் பயணி'க்கிட்டயே காலப் பயணத்தைப் பத்தி சொல்றீங்களா..? இன்னா தில்லுபா உனக்கு...?

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
தாட் எக்ஸ்பெரிமெண்ட் பற்றிக் கோடிட்டுக் காட்டியதற்கு நன்றி...(சமீபத்துல ஓரிரு வாரமா எங்க டேமேஜர் என்கிட்ட 'தாட் ப்ராசஸ்' பண்ணவே மாட்டியான்னு உயிரெடுத்துக்கிட்டிருக்காரு)...
தங்கள் டிரெயின் நண்பர் போல் ஏகப்பட்ட பேரைப் பாத்திருக்கேன். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். தீவிரமாக வாதிடுவார். அவரின் அம்மா கிற்ஸ்தவர். அவர், எனது நண்பரை ஏதோ ஒரு விஷயத்திற்காக சென்னையிலுள்ள ஒரு பாதிரியாரைச் சந்திக்க அனுப்பியிருக்கிறார். அங்கு சென்றவேலை முடிந்த பின் இருவரும் கடவுள் நம்பிக்கை பற்றி வாதிட்டிருக்கிறார்கள். எனது நண்பனின் வாதத்திறமை கண்டு, இறுதியில் பாதிரியார் அவரை இவ்வளவு நல்லா வாதிடுறீங்களே, பாதிரியாராகுறதுக்கு பயிற்சில சேருங்கன்னு ஒரே போடாப் போட்டிருக்கார். என் நண்பர் எஸ்கேப்பு..
புகைப்படத்தில் எனக்குத் தெரிந்தது கைரேகை மற்றும் கண்ணாடியின் பின்னால் ஒரு வயதான பெண்மணியின் புகைப்படம் இருப்பது போல்....
நண்பா வெண்பா நன்பா.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள்.

கிறித்துவம் பரப்பும் நண்பர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவற விடுவதாக இல்லை. என்னுடன் பயணம் செய்த நண்பரும் ஈரோட்டில் இறங்கிய உடன் ஒரு டீக்கடைக்கு கூட்டிச் என்று, டீ வாங்கிக் கொடுத்து, அவர் கொண்டு வந்த பேக்கில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். அத்தனையும் மலையாளம். படிக்கத் தெரியாது என்றாலும் விடுவதாக இல்லை.

நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் போல் இருக்கின்றது.

புகைப்படத்தில் தெரிகின்ற உருவம் பற்றி அடுத்த பதிவில் சொல்லப்படும். :)

வெண்பா பாட்டிற்கு நன்றி...!