Tuesday, August 11, 2009

உரையாடல் போட்டி முடிவுகள் மற்றும் பிற.

ழிந்த சனிக்கிழமை காலை கரூரைக் கடந்து சாலைப்புதூரில் திரும்பிக் கொண்டிருக்கும் போது தமிழ்ப்பறவையின் அழைப்பு வந்தது. அப்போதே ஒருவாறு விவரத்தை ஊகித்துக் கொண்டு விட்டாலும், ஆதாரபூர்வமாக அறிந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது தானே..?

முந்தின இரவு முழுதும் செய்த பேருந்துப் பயணம் முழுதும், டாக்டர்கள் செக் செய்வதற்காக பீய்ச்சிப் பார்க்கும் சிரஞ்சு போல் சரக்.. சரக்.. என சுரந்து கொண்டே இருந்தது அட்ரீனலின். கதை தேர்வு பெறுமா...?

தமிழ்ப்பறவை வாழ்த்தியதும் சந்தோஷமாக இருந்தது. பஸ்ஸில் கேட்டுக் கொண்டு வந்த 'கல்லெலாம் மாணிக்கக் கல்லாகுமா..?' வகையறா பாடல்களும் பிடித்துப் போயின. ஈரோட்டை நெருங்கும் போது, தூத்துக்குடியில் இருந்து மற்றொரு நண்பரும் தகவல் சொல்லி வாழ்த்தினார். அவருக்கும் திருப்பி வாழ்த்தினேன்.

'ஜூலை முடியட்டும், எல்லாக் கதைகளுக்கும் விமர்சனம் எழுதுகிறேன்' என்று ஜம்பமாகச் சொல்லி விட்டு, 250 கதைகள் என்றானதும், சொல்லாமல் கொள்ளாமல் ஜகா வாங்கி ஒதுங்கி விட்டேன். அத்தனை கதைகளையும் படித்துப் பார்த்து, அலசி, இருபது கதைகளைத் தேர்வு செய்வது என்பது மெய்யாலுமே மெர்சலான வேலை தான்..! அதைத் துணிந்து செய்து, நிகழ்வை அழகாக நிறைவு செய்த உரையாடல் குழுவினருக்கும், குறிப்பாக பைத்தியக்காரன் மற்றும் சுந்தருக்கு வணக்கங்கள்.

முடிவுகளை அறிவித்த பதிவுக்கு வந்த அத்தனை விமர்சனங்கள், வாழ்த்துக்கள், வாழ்த்தை ஒட்டிய ஒரு சர்ச்சை, எதிர்பார்த்த கதை வராத ஏமாற்றங்கள், எஸ்டாப்ளிஷ் ஆகிவிட்ட எழுத்தாளர்கள் பதிவர் போட்டியில் பங்கேற்கலாமா விவாதங்கள் அனைத்தும் தமிழ்ப் பதிவுலகம், ஓர் இயங்குகின்ற சமூகமாக இருக்கின்றது என்பதன் அடையாளம்.

அ. கதை தேர்வு பெறாதவர்கள் வருத்தத்தில் இருப்பது இயல்பு. ஆனால் போட்டிக்காக மட்டும் கதை எழுத வருவது, முந்தின இரவில் படித்து விட்டு, பரீட்சை எழுதுவது போன்றது; தேர்வாகலாம். முதல் மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு தானே? சிறுகதை நுட்பங்கள் பற்றிய கட்டுரைகள் படிப்பது, நிறைய நிறைய சிறுகதைகள் தொடர்ந்து படிப்பது போன்ற அடித்தளங்கள் மட்டுமே ஒரு நல்ல சிறுகதையை எழுத, காணும் நிகழ்ச்சியில் இருக்கும் சிறுகதையைக் கண்டுகொள்ள உதவும் என்பது என் அனுபவத்திலிருந்தே தெரிகின்றது.

சுய விளம்பரம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். சிறுகதை எழுதுவது தொடர்பாக முன்பே எழுதியிருக்கும் சில பதிவுகள் ::

நானும் எழுதுகிறேன் 10!

கதைகள் வந்த கதைகள்.

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!

இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை, குறைந்தது இருமுறையாவது படித்துப் பாருங்கள். அவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் இலக்கணம் முதலில் தெரிந்து கொண்டு அதில் எழுதிப் பழகிய பின் இலக்கணம் மீறலாம்.

ஆ. அடுத்த 17 கதைகளையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். மிரட்ட முடியாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் விதிமுறைகளின் படி 20 கதைகளைத் தேர்வு செய்வோம் என்று சொல்லப்பட்டது. சொல்லியாகிவிட்டது. மேலும் அவற்றையும் வெளியிட்டு அதிலும் நம் கதை இல்லையென்றால், இன்னும் சோர்வு தான் ஏற்படும். விட்டு விடுவோமே..! அந்த 17-ல் நம் கதை இருக்கும் என்று பொய்யாக நம்புவது கொஞ்சம் தளரச் செய்யாமல் இருக்கும் அல்லவா..? தேர்வு பெற்ற கதைகள் நல்ல கதைகள் தான் போலும் என்று நான் நம்புவதைப் போன்று தான் அதுவும்...!!

இ. மீண்டும் மீண்டும் சொல்வது தான். தோல்வி என்று ஒன்றும் இல்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் எழுதியவர்கள், முந்தைய பல போட்டிகளுக்கு அனுப்பிய கதைகள், கடைசி இடத்திற்கு கூட தேர்வு செய்யப்படாமல் துரத்தப்பட்டிருக்கின்றன. என்னை வைத்து மட்டுமே நிறைய சொல்ல முடியும். வாழ்க்கைக்கே சொல்லிக் கொள்ளும் ஒரே மந்திரம் தான் இங்கும் செல்லுபடியாகக் கூடிய ஒன்று ::

Never Never Never Give up..!

அடுத்த போட்டிகளுக்கு இன்னும் பல தரமான கதைகளை எதிர்நோக்குகிறேன்.

***

ரவுப் பேருந்தில் ஜன்னல் வழி எட்டிப் பார்த்து கிறுக்கிய இரு கவிதைகள்.

1. மின் கம்பிகளின்
குறுக்கே
மீட்டப்படுகின்றது
நிலா!


2.என்
விரல்களுக்கப்பால்
ஒரு வானம்
விரிகின்றது.

சொற்கள் எனும்
செங்-
-கற்கள் கொண்டு
ஏணி கட்டி
எட்ட முயல்கிறேன்.

உயிர்கள்
மெய்களைத் தழுவிட,
மெய்கள்
உயிர் விட்டு விட,
உயிர்மெய்கள்
உயிர் மெய்களாய்த்
திரிந்து
அடித்துக் கொண்டன.

சிலவற்றின்
கொம்புகள்
உடைக்கப்பட்டன;
கொக்கிகள்
நொறுக்கப்பட்டன.

கால்கள் இழந்து
முடமான
சில
மெல்ல மெல்ல
நடந்தன!

பொட்டுக்கள்
களவாடப்பட்டவை
கைம்பெண்களாகி
கலங்கின.

சுழிகளை
நொந்து கொண்டு
முட்டிக் கொண்டன.

உதிர்ந்தவற்றைக்
கொத்தாய் அள்ளி
வீசி உதறினேன்.

ஜன்னலுக்கு வெளியே
விழுந்தவை,
ஒன்றுகூடி
'கவிதையாவதிலிருந்து
தப்பினோம்'
என்று ஓட்டமெடுக்க,

வானம்
எப்போதும் போல்
எழுதப்படுகிறது.

***

ரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் நூல் அழகம் நடந்து கொண்டிருந்தது. அங்கே வால்பையன், ஈரோடு - கதிர், கார்த்திகைப் பாண்டியன் மற்றும் ஸ்ரீதரை போதை ஸ்தலத்தில் சந்தித்துப் பேசினேன். வெகு நேரம் பேச முடியாமல், கிளம்ப வேண்டியதாகப் போனதில் வருத்தம் தான். எத்தனை பைசாவுக்கு புத்தகங்கள் வாங்குவது என்று பட்ஜெட் போட்டுக் கொண்டு வந்தேன். உரையாடலில் 1500/- ரூ தருகிறார்கள் என்றதும், பட்ஜெட் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினேன். ஆம், அதே 1500/-க்கு தான் புத்தகங்கள் வாங்கினேன். உரையாடல் குழுவினரே, கொக்கி போட்றாதீங்கப்பா..!!

என் கஸின் பாலாஜியிடம் 'கதை பரிசு பெற்றிருக்கிறது' என்றேன். அசுவாரஸ்யமாய், 'எந்த கதை?' என்று கேட்டான். 'அதான்.. அந்த ட்ரெய்ன்.. தாத்தா வருவாரே..! அது..!' என்றேன். 'அதுக்கா..? ஒரு பைத்தியக்காரன் தான் அதுக்கெல்லாம் ப்ரைஸ் குடுப்பான்...!' என்றான். ;)

என்னென்ன புத்தகங்கள் வாங்கினேன் என்பதெல்லாம் அவ்வப்போது படித்த அனுபவத்தில் பந்தாவாக சொல்லப்படும். இப்போது ஒன்றே ஒன்று..!

நேஷனல் புக் ட்ரஸ்ட்டில் எப்போதும் தரமான மொழிபெயர்ப்புகள், நல்ல புத்தகங்கள் வெளியிடப்படும் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவர்களின் நூல் வைப்பியில் தேடும் போது, பைசா கிட்டத்தட்ட காலி என்பதால், ஒரே ஒரு 'கன்னடச் சிறுகதைகள்' தொகுப்பு மட்டும் வாங்கினேன். ரசீது எழுதும் போது, அங்கிருந்த ஒருவர் பொருள்விளங்கா கனி போல் என்னையே ஒருமாதிரி பார்த்து விட்டு, 'ஒருவேளை இலக்கியவியாதியோ?' என்ற நினைப்பில் கையில் காதுகளைக் கொடுத்து மாட்டியிருந்த கைப்பைகளைப் பார்த்தார். அதில் ஒன்று உயிர்மை. ஐயம் அறவே தீர்ந்தவராக,

'உயிர்மையில் என்ன வாங்கினீங்க..?'

'ஜெயமோகனின் கண்ணீரைப் பின் தொடர்தல், ஆதவனின் என் பெயர் ராமசேஷன்'

'ஆதவனா..? நல்ல ரைட்டர். இதை விட காகித மலர்கள் படிங்க. நல்லாயிருக்கும்..'

ரசீது எழுதிக் கொண்டிருந்தவர் தலையுயர்த்தி, 'ஆதவன் வைஃபும் நானும் ஒரே ஆஃபீஸ்' என்று சொல்லி விட்டு, எந்த ஆஃபீஸ் என்று கேட்பதற்குள், பில்களுக்குள் தலை புதைத்துக் கொண்டார்.

'சரிங்க..! இதில் ஆரம்பிக்கிறேன். பிடிச்சிருந்தா மத்ததையும் படிக்கறன்..' சொல்லி விட்டு விடுபட்டேன்.

ஒரு படைப்பாளி அந்தத் துறையில் சிறந்தவர் எனில், அவரது ஒரு படைப்பு அவரது மற்ற படைப்புகளை நம்மைத் தேட வைக்க வேண்டும். இன்று மாலையிலிருந்து நானும் ஆதவனைத் தேடுபவர்களில் ஒருவன்.

'என் பெயர் ராமசேஷனில்' நம் இயல்பான மனநிலைகளையும், அதில் போடுகின்ற வேஷங்களையும் கதறக் கதறப் பிய்த்துக் காட்டுகிறார். சில பத்திகள் ::

...
ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன். அவள் எதுவுமே நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அ. அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம்.
ஆ. அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள்.
இ. ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்துக்காகக் காத்திருக்கிறாள்.
ஈ. கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொட வேண்டும் அல்லது பேசாமலிருக்க வேண்டும்.
...

...

"நீ ஒரு மேல் ஷாவனிஸ்ட்."

"நான் ஒரு நார்மல் மனிதன். உன்னைப் போல இன்ஹிபிஷன்ஸ் உள்ளவனில்லை" என்றேன் நான். "உடலுறவு பற்றிய உன்னுடைய குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, அல்லது நீ புழங்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமான ஸெக்ஸ் அனுபவங்களுக்கான வாய்ப்புகள் இல்லாததையே ஒரு virtueவாகக் காண்கிற முயற்சியில் ஆண்-பெண் இண்டலெக்சுவல் பரிமாற்றங்களைப் பற்றிய பெரிதுபடுத்தப்பட்ட கற்பனைகளில் நீ திளைக்கிறாய்-உன்னுடைய தரத்துக்கு எந்தப் பெண்ணும் வராதது போலவும், எனவே உன் இயலாமை மன்னிக்கப்படுவது போலும்! இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதே தவிர வேறில்லை... லுக், உன்னை ஒரு பெண் நேசிக்க வேண்டுமென்றால் உனக்கு எஸ்கிமோக்களைப் பற்றியும் சூரியப் பொட்டுகள் பற்றியும் தெரியுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்தப் பிரயோஜனமுமில்லை... பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியாவது அழைத்துச் சென்று, எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது, எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறெதுவும் வேண்டியதில்லை என்று சொல்லு. நீ ரொம்ப அழகாயிருக்கிறாய், உன்னுடைய எல்லாமே அழகாயிருக்கிறது என்று அவளுடைய மாரை அமுக்கு...."

"என்ன?" என்றான் மூர்த்தி.

...

...

சினிமாவில் வேறு வழியில்லை, விளக்குகளை அணைத்துவிடுவதால் திரையைத் தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அங்கும் எல்லாரும் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் இன்னொன்றைப் பார்த்துக் கொண்டிருப்பேன். 'டாக்டர் நோ'வில் உர்ஸூலா ஆண்ட்ரெஸ் பீச்சில் குளித்து விட்டு செல்லுகிற காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காட்சியில் எல்லோரும் உர்ஸூலாவைத் தானே பார்த்துக் கொண்டிருப்பார்கள்! ஆனால் நான் ஸீன் கானரியின் இடுப்புக்குக் கீழே ஏதாவது அசைவு தென்படுகிறதா என்று அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

...


மேற்கண்டவற்றைப் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். சொல்லியவை கூழாங்கற்கள்; நதியின் போக்கோ வேறு!

பல நாட்களுக்குப் பின் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நாவல். இன்று இரவு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்று அங்கே ஸீன் கானரி பாராவைப் படித்து விட்டு நான் மட்டும் கிறுக்கு போல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

புத்தகம் : என் பெயர் ராமசேஷன்

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : ஆதவன்.

பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்.

கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம். நூற்கடைகள்.

விலை : 100 ரூ. (ஆனால் ஸ்டிக்கரில் 120 போட்டு அது தான் வாங்கினார்கள்.)

***



13 ஆகஸ்ட் 2009 குங்குமத்தில் ஒரு சிறுகதைக்கு வரையப்பட்ட ஓர் ஓவியம். இந்த மனிதரின் தூரிகைக்கு மட்டும் உயிர் கொடுக்கும் திறன் இருந்தால் எத்தனை அழகிகள் கிடைப்பார்கள்...! என் ஓவிய ஆர்வத்திற்கு முதல் குருஜி மாருதி தான். அந்தப் பித்து பற்றி பிறகு பேசுவோம்..! :)

***

சேர்க்கப்பட்டது :: 7:19 PM 8/12/2009

கூச்சமாகத் தான் இருக்கின்றது. ஆனால் பாபாஜி போன்ற பதிவுலகில் எனக்கு மூத்தவர்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சி தருவதால், அந்த மகிழ்ச்சியை நீங்களும் பெறுவதற்காக இங்கே சேர்க்கிறேன்.

/*
இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
*/

மற்ற கதைகளைப் பற்றிய பாபாஜியின் 'உண்மையான' கருத்துக்களுக்கு இந்தக் கண்ணியைத் தொடருங்கள்.

***

றுபடியும் சேர்க்கப்பட்டது :: 6:46 PM 8/13/2009

கே.ரவிஷங்கர் என்ற பதிவர் அதே பாபாஜி பதிவில் 'மனையியல்' பற்றி ஒரு விமர்சனம் வைத்திருக்கிறார். அதையும் படிக்கலாமே!

/*
//இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.//

இந்தக் கதையில் சுஜாதா நடை நெடி தாள முடியவில்லை.அவர் சொந்த நடையிலேயே எழுதலாமே!இது லேசுப்பட்ட காரியம் அல்ல??????????

கடைசியில் ஒரு hardcore
பாசாங்குத்தனம்.அவருடைய பயணத்தின் பிம்பங்கள் ஒட்டவில்லை.

இடலி விற்பவரின் உரையாடலோடு கதையை ஆரம்பித்து எதிலாவது முடித்திருக்கலாம்.

பிடித்த வரிகள்:
//புது வெப்பம், புது ஸ்பரிசம் உணர்ந்த டெய்ஸி அவரை உற்றுப் பார்த்தாள். //
*/

15 comments:

ny said...

வாழ்த்துக்கள்!!

எதோ இங்க மொத வரியில சொல்லிட்டாலும்..
உங்க கொங்கு நாடு பகுதியில் எனது கரூர் tag இல்லையென்ற வருத்தம் நீண்ட நாளாக. கொஞ்சம் பாத்து செய்ங்க :)

//வானம்
எப்போதும் போல்
எழுதப்படுகிறது//

delightful!!

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக‌ள்!!!

யோசிப்ப‌ரிட‌ம் பேசும் போது கூட‌ சொல்லிக் கொண்டிருந்தேன். ம‌னையிய‌ல் நிச்ச‌ய‌ம் வெற்றி பெறும் என்று.

உங்க‌ளோட‌ விம‌ர்ச‌ன‌த்திற்காக‌ ஆவ‌லாக‌ இருந்தேன்... கொஞ்ச‌ம் ஏமாற்ற‌ம் தான் :(

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கவிதைகள் இரண்டும் அழகு!

//இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் எழுதியவர்கள், முந்தைய பல போட்டிகளுக்கு அனுப்பிய கதைகள், கடைசி இடத்திற்கு கூட தேர்வு செய்யப்படாமல் துரத்தப்பட்டிருக்கின்றன. என்னை வைத்து மட்டுமே நிறைய சொல்ல முடியும். வாழ்க்கைக்கே சொல்லிக் கொள்ளும் ஒரே மந்திரம் தான் இங்கும் செல்லுபடியாகக் கூடிய ஒன்று ::

Never Never Never Give up..!//

மிகச் சத்தியமான வார்த்தைகள். எனக்கும் இந்த அனுபவம் பலமுறை வாய்த்திருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

Chan said...

Vaazhthukkal...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆதவனின் இரண்டு நாவல்களுமே நன்றாகயிருக்கும். அவரது முழுக் கதைகள் அடங்கிய தொகுப்புகூட வந்திருக்கிறது - முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்.

Karthik said...

பெரிய பதிவா? தோ, வந்துடறேன். :)

Sridhar V said...

//இந்த மனிதரின் தூரிகைக்கு மட்டும் உயிர் கொடுக்கும் திறன் இருந்தால் எத்தனை அழகிகள் கிடைப்பார்கள்...! //

மாருதி நிறைய மாடல்களை வைத்தும் வரைவார். மாலைமதியா என்று நினைவில்லை... அதன் அட்டைபடத்தில் நிறைய நடிகைகளை அழகாக வரைந்திருந்தார். படத்தில் பார்ப்பது போலவே இருக்கும்.

உங்கள் வரிகளைப் பாத்ததும் சொல்லத் தோன்றியது ‘அந்த படங்கள் ஏற்கெனவெ உயிர் கொண்டு உலவிக் கொண்டிருக்கலாம்... மாருதிக்கே தெரியாமல்’ :)

அந்த வரி்யையே ஒண்ணுங்கீழே ஒண்ணாப் போட்டு கவிதையா சொல்லிக்கலாம் ஜ்யோவராம் போன்றவர்கள் வந்த் உதைக்காமல் இருந்தால் :))

இரா. வசந்த குமார். said...

அன்பு kartin...

நன்றிகள். உங்கள் கவிதைகளும் படிக்க நன்றாக இருப்பதாக சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். படிக்கத் தான் முடியவில்லை. இனி படிக்கிறேன்.

கொங்கு நாடு பதிவு என்னுடையதல்ல. அது ஒரு கூட்டுப் பதிவு. கொங்கு நாட்டைச் சேர்ந்த யாரும் சேர்ந்து கொண்டு, தாம் கண்டவற்றை எழுதலாம் (கொங்கு நாடு தொடர்பாக மட்டும்!). அனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக ஈரோடு வரும் போது கரூரைக் கடந்து சென்று விடுவேன். இறங்கி பார்ப்பதில்லை என்பதால், கரூர் தொடர்பாக என்னால் ஏதும் எழுத முடியவில்லை. நீங்கள் உங்கள் சிறுவயது அனுபவங்களை அங்கே எழுதலாமே! எங்களுக்கும் கரூர் பற்றித் தெரிய வருமல்லவா..?

கவிதை அனுபவித்ததற்கு நன்றிகள்..!

***

அன்பு வெட்டிஜி...

உண்மையில் சொல்லப் போனால் எனக்கும் 'மனையியல்' ரொம்பப் பிடித்திருக்கின்றது. பாபாஜி சொன்னது போல் ஒரு... அந்தக் கதை ஒரு நேர்த்தியான, ஸ்ட்ரக்ச்சரில் இருக்கிறது. ஒரு ஹை க்ளாஸ் படம் பார்ப்பது போல், மணிரத்னம் படம் போல் ஒரு ஸ்டைலிஷ் இருப்பதாக எனக்கும் தோன்றும். அந்தக் கதையில் சொல்ல வரும் கருத்து என்ன என்பதைப் பற்றி அவ்வப்போது யோசிக்கும் போது அச்சரியமாக இருக்கிறது. இதற்கு அடுத்து சிறுகதை ஒன்று எழுதுவதற்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இந்த அளவுக்கு எனக்கே பிடித்தாற்போல் வருமா என்று! இருந்தாலும் கதை வருவது நம் கையில் இல்லை. கதை நம்மை தேர்வு செய்து நம் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதே என் எண்ணம். எனவே வருவதை எழுதுவோம் என்றே எழுத விரும்புகிறேன்.

84 கதைகள் என்று பட்டியல் போட்டுக் கொண்டாலும், எனக்கே பிடித்தது ஒரு 21 கதைகள் தான். மனையியல் உட்பட..! the list is here :: http://blogintamil.blogspot.com/2008/12/blog-post.html

உங்கள் கதைகளுக்கு மட்டும் என் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். மெயிலுகிறேன். :)

***

அன்பு சேரல்...

ஒவ்வொருவரும் அடிபட்டுத் தான் அனுபவப்பட வேண்டியிருக்கின்றது. ஆனால் தொடர்ந்து முயல்வதன் மூலம் மட்டுமே எழுத்து மெருகேறும் என்பது எல்லோரும் அனுபவமும் சொல்கிறது.

***

Dear Chan...

Thanks Man...!!!

***

அன்பு சுந்தர்ஜி...

கண்டிப்பாக..! ராமசேஷன் என்னை ஆதவனின் மற்ற நூல்களையும் வாங்கத் தூண்டியிருக்கிறார்.

***

Dear Karthik...

Y..Y...Y....!!! :)

***

அன்பு ஸ்ரீதர்...

நீங்களே சொல்லிட்டீங்களே! இன்னொரு பதிவுக்காக அதையெல்லாம் எழுதணும்னு இருந்தேன். ஆனா, மாருதியின் மங்கைகள் அத்தனை பேரும் தமிழ்க் கலாச்சாரப் பெண்கள்.

ஸ்கூல்ல பார்த்த பொண்ணு மீனா மாதிரி இருந்துச்சா, மாருதி மீனா முகத்தை நிறைய வரைஞ்சாரா, ஓவியம் வரையப் பிடிச்சதால மாருதி பிடிச்சாரா, மாருதி வரைஞ்ச மீனா மாதிரி ஸ்கூல் பொண்ணு இருந்துச்சா.... இப்படி பல combinational vice-versaக்கள் இருக்கு அந்த நிலா நாட்கள்ல..!! :)

வெட்டிப்பயல் said...

//உங்கள் கதைகளுக்கு மட்டும் என் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். மெயிலுகிறேன். :)//

மெயிலுக்கு காத்திருக்கேன் :)

thamizhparavai said...

ரெண்டு கவிதையும் நல்லா இருக்கு வசந்த்...
மாருதியின் படத்தைத்தவிர்த்தால் பதிவுக்கு முதலிடம்...
ஒரு கணம் பார்வையைப் பிடுங்கிக்கொண்டது ஓவியம்...
http://mankuthiray.blogspot.com/2009/08/2.html
மேற்கண்ட லிங்கில் ஒரு ஓவியம் இருக்கிறது..பார்க்க ரசிக்க,...

இரா. வசந்த குமார். said...

அன்பு வெட்டிப்பயல்...

விரைவில் அனுப்புகிறேன். :)

***

அன்பு தமிழ்ப்பறவை...

மாருதி சார் படம் இருக்கும்ம் போது, நாம் என்ன தான் எழுதினாலும் கவனத்தைக் கவர முடியுமா..? அப்படியே ஓரமா ஒதுங்கி நின்று கொள்ள வேண்டியது தான். ஆமா... இவ்ளோ நாளா இது போன்ற ஓவியங்களை ஏன் சொல்லாமல் வைத்திருந்தீர்கள்? இனிமேல் எங்காவது நல்ல ஓவியங்கள் கண்டால் உடனடியாக ஒரு இன்பர்மேஷன் தட்டி விடுங்கள். :)

Karthik said...

//Dear Karthik...
Y..Y...Y....!!! :)

எனக்கும் தமிழிலேயே பதில் சொல்லலாமே? LOL. :))

எல்லா சுட்டிகளையும் ஒரே பதிவில் தந்ததற்கு நன்றி. :)

PPattian said...

முதலில் வாழ்த்துகள் வசந்த்... மனையியல் எனக்கு பிடித்திருந்தது.. ஆனால் "உரையாடல்" அதிலும் அதிகமாகப் பிடித்திருந்தது..

அப்புறம் "SnapJudge" இலிருந்து ஒரு கட் & பேஸ்ட்

//இது என்ன hardcore பாசாங்குத்தனம் என்று இரண்டு நாட்களாக ‘ப்ரோட்டீன் குழப்பத்தை’ உருட்டிக் கொண்டிருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது கொஞ்சூண்டு விளக்கமாகச் சொன்னால் தேவலாம்.
//

படிக்கும்போது எனக்கு அது பாசாங்காகத் தெரியவில்லை.. கதையின் ஓட்டத்தில்.. It looked so natural.. ஆனால், அப்படி மனைவியை ஓடும் ரயிலில் பிறர் முன்னிலையில் முத்தம் கொடுப்பது என்பது நமக்கு அந்நியமானது என்றும் தோன்றுகிறது… ”நான் அப்படி செய்வேனா”.. என்று ரவி அவரை அங்கு பொருத்திப் பார்த்ததில் விளைந்த கேள்வி போலும்..

எனக்கு உங்கள் கதையில் உறுத்திய ஒன்றே ஒன்று.. “குழந்தை எறும்பு கடித்து அழுவது".... அது கொஞ்சம் பழைய ஐடியாவாகவும், Stereotype ஆகவும் தோன்றியது..

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

உனக்குத் தமிழில் சொன்னால் புரியுமா..? :)

எல்லா சுட்டிகளையும் படிச்சு (மேலும்) நல்ல கதைகள் எழுதுங்கள்...!!

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன்...

நன்றிகள். எல்லோரும் 'மனையியல்' பற்றி மட்டும் சொல்கிறார்களே, 'ஓர் உரையாடல்' பற்றி யாரும் சொல்லவேயில்லையே என்று லேசான வருத்தம் இருந்தது. 'மனையியல்' அளவிற்கு இல்லாவிட்டாலும் அதுவும் எனக்குப் பிடித்திருந்தது. நன்றிகள் நீங்கள் குறித்துச் சொன்னதற்கு...!

நாயகன் மனைவிக்கு முத்தம் கொடுத்தது இயல்பா என்பது கேள்வி. கதைப்படி ராகவன், ப்ரின்ஸி காதலித்து மணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்குப் பின்னரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் பொதுவிடங்களில் எத்தகைய அன்யோன்யமாக நடந்து கொள்வார்கள் என்பது பலருக்குத் தெரியும் (வயித்தெரிச்சலோடு கவனிப்பார்கள்!). நானே நிறைய பார்த்திருக்கிறேன்.

திருமணத்திற்குப் பின் குழந்தை பிறந்த பின் வருகின்ற லேசான சலிப்பில் நாயகன் இருக்கிறான். ஆனால், அந்த தாத்தா காதலித்த பெண்ணின் மீது, வைத்திருக்கும் அப்பழுக்கில்லாத காதலை உணர்ந்து கொண்ட பின், 'தான் எவ்வளவு லக்கி' என்பதைப் புரிந்து, தன் அன்பை வெளிப்படுத்தும் முறை அந்த முத்தம். இப்படி விளக்கமாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கு கதை சொல்லப்பட்டிருக்காவிட்டால், அது என் எழுத்தின் குறை தான்.

குழத்தை எறும்பு கடித்து அழுவது கொஞ்சம் பழைய ஐடியா தான். அது கதைக்கு 'லீட்' கொடுக்க மட்டுமே! சொல்ல வந்த கருத்துக்கு எந்த பிரச்னையையும் அது ஏற்படுத்தவில்லை என்றே நினைகிறேன். ஸாரி.. இனிமேல் இது போல் ஸ்டீரியோடைப்களைத் தவிர்க்க முயல்கிறேன்.

நன்றிகள்.