Tuesday, April 22, 2008
நன்று என்று ஆன பின்!
நீலக்கடலில் இருந்து
உறிந்து கொண்டதா
தனது அலங்காரத்தை
வானம்?
இல்லை,
வானின் நிறத்தில்
இருந்து
தனக்கான ஆடையை
அணிந்து கொண்டதா
கடல்?
அசைந்தாடும் காற்றில்
இருந்து
அறிந்து கொண்டதா
மஞ்சள் நிறத்தை
வெயில்?
இல்லை,
கொதிக்கும்
கதிரிலிருந்து
கற்றுக் கொண்டதா
பகலின் நிறத்தைக்
காற்று?
பனியின்
மினுமினுப்பில் இருந்து
பறித்துக் கொண்டதா
வெண்மையின் அழகை
நிலா?
இல்லை,
வெண்ணிலவின்
அமுதிலிருந்து
பகிர்ந்து கொண்டதா
குளிர்மையை
பனித்துளி?
பச்சைக்
குளிர் நீரைப்
பார்த்து
பசியல் ஆனதோ
தாவரம்?
இல்லை,
பச்சையம் கரைந்து
பாசிகளால்
ஆனதோ
பாயும் நீர்?
பெண்மையின்
மென்மையில்
பதுங்கிக் கொண்டதோ
ஆண்?
இல்லை
ஆணின்
வன்மையில்
வழுவிக் கொண்டதோ
காதலின் பெண்?
இரண்டென்று
ஏதுள?
எல்லாம்
ஒன்று
என்று
ஆன
பின்!
சேர்தலே
நன்று
என்று
ஆன பின்!
***
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment