Tuesday, August 22, 2006

நீயும் நானும்...!



பொன் அந்தி மாலை நேரம்.

பூக்கள் தூவும் மெல்லிய கிளைகளில் புதைந்திருந்த குளிரின் வாசம் காற்றோடு கலந்து ராகமாய் புறப்பட்டது.

மனதை மாயமாய் மீட்டுகின்ற தென்றலின் கையால், மிரட்சியான கதிரொளி தடவிப் பாய்கின்ற, பச்சை இலைகளின் மேனியெங்கும் மஞ்சள் மினுமினுப்பு.

அசைத்து அசைத்து நடக்கையில் இலைகளின் இதழ்களிலிருந்து சூடாகத் தெறிக்கிறது வெயில்.

ரீங்காரிக்கின்ற சில்வண்டுகளின் தேனோசை, சிங்காரிக்கின்ற பொழுதின் எல்லைகள் காலத்தின் முடிவிலி வரை நீண்டிருக்கின்றன.

கார்கால முகில் கருத்திருக்கும், கருத்தரித்திருக்கும் முன்மாலைப் பொழுது.

ஒரு நீல நதியின் கரங்கள் தீண்டும் கரையொன்றில் காத்திருக்கிறேன்.
நாணல்கள் அசைந்தாடும் நுரை ததும்பும் கரைமணலில் அமர்ந்திருக்கிறேன்.

ஈரம் கலந்த தென்றல் மேல், யாரோ அனுப்பும் குழலோசை மிதக்கும் குளிர் காற்றின் குரல் கேட்கும் மாலை வேளையின் மயக்கத்தில் நீ ஆழ்ந்திருக்கிறாய்.

அந்தி மயங்கும் ஆகாய மன்னனின் ஒளிக்கற்றைகள் நனைந்து வழிகின்ற கருமேகங்களின் விளிம்புகள் மட்டும் பொன்னிறமாய் ஜொலிக்கின்றன.

வெண் பட்டாடை உதறி விரித்தது போல், பறக்கின்ற வெண் நாரைக் கூட்டம், பறந்து தொலைவில் புள்ளியாய் மறைவதைப் பார்த்து திரும்புகிறாய். 'கிளம்பலாமா' கேட்கிறாய்.

ஒரே ஒரு முறை மட்டும் குலை தள்ளுவதற்காக, வாழ்ந்து மடிகின்ற வாழை மரம் போல், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விட்டு கிளம்பப் பார்க்கிறாய்.

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றான பின்பு, வார்த்தைச் சாவிகளே இல்லாத வாய்ப்பூட்டு பூட்டிக் கொள்கிறேன்.

எத்தனையோ முறை நாம் சிரித்துப் பேசியதைக் கண்ட இந்த நதிக்கரை, இனி யாரைக் காணும்..?
சேர்வதாய் வந்து, பின்பு பிரிந்து செல்கின்ற இந்த நதியலை, இனி யார் கால்களை நனைக்கும்..?

நமது பொருள் இல்லாத வார்த்தைகளை சுமந்து சென்ற தென்றல் காற்று, இனி யார் வார்த்தைகளை அசை போடும்..?
நீ கேட்டாய் என்பதற்காக நீந்திச் சென்று, நான் பறிப்பதற்காக ஒற்றைப் பூ பூத்திருந்த அந்த ஈரச்செடி, இனி யார் பறித்தலுக்காக மஞ்சள் பூ சுமக்கும்..?

எழுந்து நடக்கிறோம் நீயொரு திசையிலும், நானதன் எதிரிலும்..!

பொருளாதார தூரங்களும், பெற்றோர் பாசங்களும் உன்னைக் கட்டிப் போட்ட பின்பு, நம் குழந்தைகளுக்கு சூட்ட வைத்திருந்த பெயர்கள் புகை போல் மறைகின்றன.

இனி உன் குழந்தைக்கு என் பெயரையும், என் குழந்தைக்கு உன் பெயரையும் வைத்த பின்பு, கனவில் வந்து அழுகின்ற நம் குழந்தைப் பெயர்களை நாம் எதைக் கொண்டு அமைதிப்படுத்துவது....?

No comments: