
விட்டு விட்டுத் தூறிக் கொன்டிருக்கும் மார்கழியின் மாலை நேரம்.
பூப்பூவாய்ப் பறந்து கொண்டிருந்த குளிர்த் துளிகள் காது நுனிகளில் படலமாய்ப் படர்கையில், மெல்லிய சூடு புகையாய்ப் பறக்கும். தெளிவில்லாத மேகங்கள் சூறையாடும் வானின் நீல நிறம் பொழிந்து நிரப்புகிறது, பாசி படிந்த குளக்கரைகளை!
பொறிப் பூச்சிகளாய் நிறைந்திருக்கும் தோட்டத்தின் முடிவிலாத எல்லைகளில் நின்றிருக்கின்றது, எல்லைச் சாமிகளின் கூர்வேல். மேகக் கிரணங்களின் மெத்தைகளின் ஈரம் தேங்கி இருக்கும் தெருக்களின் மண் மேடுகளில் சகதிகள் உருக் கொள்ளத் தொடங்கி விட்டன.
வண்டுகளின் தேடலில் தலை கவிழ்ந்து தேன் சிந்துகின்ற வண்ண மலர்க் கண்களில் இருந்து நழுவி ஓடுகின்றது நாணம். குளிர்க் காற்றின் தீண்டலில் தலையாட்டுகின்ற செடிகளின் நுனிகளின் மலர் மொட்டுகள், இதழ் பிரியாமல் சிரிக்கின்றன.
மாலையின் நீட்சி நீண்டு தொட்டு அழைத்து இழுக்கும் இரவின் கரங்களை! பின் மெல்ல அதனுள் புதைந்து கொள்ள இரவின் கரும் இருள் ஆக்ரமித்துக் கொள்கின்றது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை!
சின்னச் சின்ன பொட்டுத் துளிகளாய் மீன்கள் எட்டிப் பார்க்கின்ற முன்னிரவின் மென் குளிர் பீடிக்கையில், மண் போர்த்திக் கொள்கின்றது பனியின் ஈரத்தை! மெல்ல வெண்ணிலவு எட்டிப் பார்த்து பாலமுதென பொழிகின்றது ஒளியை!
பகலின் வெம்மையைக் கைவிட்டு கொடுங்குளிருக்குள் தன்னை அடைக்கலமாக்கிக் கொண்ட பின், குளிர்க் கூடாரத்தின் போர்வைகளுக்குள் பத்திரமாய்ப் புகுந்து கொண்டு, சுகமாய் உறக்கம் கொள்ள முயல்கையில் சடசடவென பேயாய் பெய்யத் தொடங்குகின்றது, பெருமழை!
இந்த நிகழ்வுகளும், உணர்வுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன தீராத இரகசியங்களும், திகட்டாத அதிசயங்களுமாய்...!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
No comments:
Post a Comment