Saturday, March 08, 2008
பாய்ந்த ஒரு வில்!
கோலப் புள்ளிகளைக் கலைத்துப் போட்டு நவீன ஓவியம் என்றாய். 'ஆமாம்' என்றேன்.
வானின் மீன்கள் போல் உதிர்த்தாய், மஞ்சள் ஆடை அணிந்திருந்த இலைகளை மரத்திலிருந்து. நனைந்தேன்.
கால்கள் மாறி மாறி நடக்க ஒற்றைத் தண்டவாளம் போதும் என்றாய். 'மிகச்சரி' என்றேன்.
நான் தீண்டா இடங்களைத் தொட்டுத் தழுவும் வகையில் காற்றை அனுமதிக்கும் ஆடைகளை அணிந்து 'எப்படி' என்றாய். 'கச்சிதம்' பதிலுற்றேன்.
நதிக்கரையில் நடக்கையில் ஒற்றை இலக்கத்தில் எடுத்துப் போட்டுக் கொண்டே வந்த கற்கள் 'எத்தனை' கேட்டாய். 'உன் வயது' என்றேன். மெளனாய்.
இருண்ட காட்டுக்குள் நடக்கையில், 'இரு விரல்களை மட்டும் பிடித்துக் கொள்' என்றாய். 'எந்த இரு விரல்கள்?' என்றேன். வெட்கத்தில் சிவந்த முகக்தைக் காட்டினாய்.
கூந்தலில் சிக்கிய பூக்களை அவிழ்க்கையில், என் உதவி கேட்டாய். பூக்கள் என்னிடம் கெஞ்சின 'எடுக்காதே' என்று. எந்தப் பூவின் பேச்சைக் கேட்க நான்?
தேவதூதன் முன் மண்டியிட்டு ஜெபித்தாய். அருகில் நின்று வேர்க்காமல் விசிறி நின்றேன். 'எனக்கெதற்கு விசிறி' என்றாய். 'உனக்கு நான் விசிறி' என்றேன். ஜெபித்த கைகளை என் மேல் வைத்து ஆசிர்வதித்தாய்.
'எதற்கு இவ்வளவு செய்கிறாய்' என்று ஒரு நாள் கேட்டாய். 'பாய்ந்த ஒரு வில்' என்றேன். மண் பார்த்து குனிந்து கொண்டாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment