Saturday, March 08, 2008
இரத்தம் பூக்கின்றது உன் இதழ்களின் ஓரம்.
சில சொற்கள் வலி தருவன என்பதை அறிவாயா? சில நிழலின் நேரத்தைக் கூட்டுமென நினைத்திருக்கிறாயா?
சில பார்வைகள் பிளந்து செல்லும் கோடரி போன்று கூர்மையானவை என்பதனை உணர்ந்தனையா? சில முத்தமிட்டதும் குருதித் துளி எட்டிப் பார்க்கச் செய்யும் ஊசி போன்றன என்பது உனக்குத் தெரியுமா?
சில குறிப்புகள் மனதிற்குள் மல்லிகை பூக்கச் செய்யும் என்பதையும், சில இரணமாக்கிச் செல்லும் என்பது இப்போது தெரிந்து கொள்!
போதை கொண்ட பொழுதுகளின் இனிமை இன்னும் பெருங்காலத்திற்கும் தொடரச் செய்யும் சில புன்னகைகள், மதியப் பொழுதின் மந்தமான உள்ளத்திற்குள் பெருக்கெடுத்து ஓடச் செய்யும் சில உற்சாக வார்த்தைகள் என்பதும் தேன் சொட்டும் சிரிப்புகளைக் கொண்ட உன் மாலை நேரங்கள் அறியுமா?
முதலில் குளிரென ஜில்லிப்பூட்டும் பனியைப் பொழியச் செய்யும் தொலைதூர மேகம், பின் அப்பனியை உறிந்து கொள்ள அதனையும் விட தொலை தூரத்திலிருந்து பெருங்கொடுங் கரங்களை நீட்டும் வெயில் என்பதை காலத்தின் சக்கரங்கள் காட்டும் உனக்கு!
சாலையோரங்களில் கருப்பாய்ப் பூத்திருக்கும் வேல மரங்களின் இலைகளை அசைத்துச் செல்லும் நெடுந்தூரப் பேருந்துகளின் டீசல் புகையாய், வாரி இறைத்துச் சென்றாய் சில நினைவுகளை. அவை என் முகத்தின் மேல் இன்னும் பல வர்ணங்களை வரைந்து சென்றன.
பச்சைப் பாசிகளால் நிறைந்திருக்கும் குளத்தின் அலைகள் போல் அலைந்து கொண்டேயிருக்கும் என் மனதிற்கு ஆழ்ந்த முத்தத்தை இட்ட பின்பு, இரத்தம் பூக்கின்றது உன் இதழ்களின் ஓரம்.
சூ.. சூ.. வென விரட்டியும் விலகாத சூட்டைப் பொழியும் பகல் பொழுதில் ஒற்றைக் குடையாய் பாதையோரம் காத்திருக்கும் என்னைக் காணாது நீ நகர்ந்து செல்ல, கம்பிகளின் இடையே இழுத்துக் கட்டப்பட்டிருந்த கருந்துணி படபடவென வெடித்துக் கிழிந்த சத்தம் கேட்டும் திரும்பிப் பார்க்கவில்லையெனில், தூரப் புள்ளியெனத் தோன்றும் பேருந்தின் அடியில் சென்று சிதறட்டும் இம்மனம்...!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
rompa sogamaa iruku vasanth, indha padhivu...:(
///சூ.. சூ.. வென விரட்டியும் விலகாத சூட்டைப் பொழியும் பகல் பொழுதில் ஒற்றைக் குடையாய் பாதையோரம் காத்திருக்கும் என்னைக் காணாது நீ நகர்ந்து செல்ல,///
woww..azhagiya karpanai..
epadi irukeenga??
அன்பு மல்லிகை அவர்களுக்கு...
ரொம்ப சோகமாயிடுச்சில்ல... நானும் இந்த மாதிரி சோகமா எழுதக் கூடாதுன்னு தான் பாக்கறேன். எங்க..?
ரொம்ப நன்றிங்க...
ஓபிஸ்ல கொஞ்சம் வேலை ஜாஸ்தி ஆகிட்டதால இப்பல்லாம் இணையம் பக்கம் வர முடியறதில்லங்க... நல்லா இருக்கேங்க.. நீங்களும் உங்க குடும்பமும் சுகந்தன்னே..?
Post a Comment