Saturday, March 08, 2008

காற்றே, பொய் வா!



ன்மையாக நனைத்து கொண்டிருந்தது வெயில்.

சின்னச் சின்ன ஆணிகளைத் தூவிக் கொண்டிருந்த வெயிலின் கூர்க் கரங்கள், புதைத்தன சூடான தீத் துளிகளை!

அலைந்து கொண்டிருந்த வறண்ட காற்றின் மேனியெங்கும் பதிந்திருந்த இரணப் புள்ளிகளின் முனைகளில் இருந்து சொட்டிக் கொண்டே இருந்தன, புழுக்கத்தின் கூரான துகள்கள்.

பிரம்மாண்ட வெளிச்சமாய்த் திறந்திருந்த வெண் வானத்தின் கூடுகளில் சிறைப்பட்டிருந்த மேகக் கூட்டங்களைக் கலைத்துச் செல்ல தோன்றவேயில்லை, பெருங்காற்று!

ஈரத்தைத் தேடிய விரல்களைக் கொண்ட என் கைகளில் தட்டுப்பட உன் நிழலைத் தர வரவேயில்லை நீ!

அச்சமூட்டும் எலும்புகளால் என் தலையைக் கலைத்துப் போட்டதும் அல்லாமல், வாரி வாரி என் மேல் தூற்றிக் கொண்டே இருந்தது, அனல் காற்று!

நடுப் பகலின் நர்த்தனம் கோரம் கொண்டு, கொதித்துத் தள்ளத் தொடங்குகையில், தூரே ஒளிப் புள்ளியாய் உன் பிம்பம்.

என் மேலிருந்த மணல் பொட்டுகளைத் தள்ளி விட்டு எழ, காற்றின் போக்கில் கலைந்து பாதையில் ஓடும் சருகைப் போல் நீ பாய்ந்து வருகிறாய். இதயத்தை வெளியெடுத்து, விரல்களில் செருகிக் கொண்டு துடிக்கின்ற இமைகளின் வழி, இரகசியமாய்க் கசிகின்ற கண்ணீர்த் துளிகளால் நனைத்த ஒரு பொக்கிஷம் போல் சுமந்து நிற்கின்ற என்னைக் கண்டு கொண்டனையா...? சரசரவென அசைந்தாடும் புல் புதர்களின் ஊடாக வீசுகின்ற கொடுங்காற்று, கடத்திச் செல்லப் பார்க்கின்றது என் பிம்பத்தை, தொலைவில் மினுக்கும் கானல் நீரின் தளத்திற்கு! அதனைக் கண்டனையோ, காதலி...?

காய்ந்த பூக்களும், ஓய்ந்த இலைச் சருகுகளும், தலைகீழாய்க் கவிழ்ந்த பூச்சிகளின் உடல்களும், விரிசலிட்ட தரையின் மேல் பாய்கின்ற வெயிலின் பாய்வும் நிரம்பிய பாதையின் வழி நீ ஓடி வந்து என்னை நெருங்கினாய்.

இன்னும் என்ன நமக்கிடையில்? யுக, யுகமாய்த் தொடரும் ஏதோ ஓர் இழையின் இரு நுனிகளில் நம்மைக் கோர்த்து விட்டு, உருட்டி விளையாடுகின்ற தீராத விளையாட்டுப் பிள்ளையான விதியின் கடுங்கரங்கள் இன்னும் நம்மைப் பிரித்து விடுவதற்குள், காற்றும் தீண்ட அஞ்சும் இடைவெளியைக் கொன்று, கட்டிக் கொண்டாய், என் இதயப் பரிசை வாங்கிக் கொண்டு!

வேறு யாருமற்ற பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருக்கும் நம் இருவரின் பேரன்பில் மெல்ல மெல்ல வன்மை இழந்து கொண்டே இருக்கிறது பொசுக்கும் வெயிலின் வீரம்...!

No comments: