Saturday, March 08, 2008

இதயத் தூது.



சின்னக் கீறல் சத்தம் கேட்டது.

விழித்துப் பார்த்தேன். மலைச்சரிவில் இருந்து, சறுக்கி விளையாடும் பளிங்குக் கல் போல் இதயம் வெளி வந்து கொண்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது.

'என்ன செய்கிறாய்' கேட்டேன். 'எத்தனை காலம் தான் தனிமையின் அறைகளில் அடைபட்டிருப்பது என்று தான் வெளியே வருகிறேன். இன்று ஒரு நாள் என்னை வெளியே விடு. சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன்' என்றது.

'நீ வெளியே போய் விட்டால், நான் எப்படி உயிர் பிழைத்திருப்பேன்' என்று பயத்துடன் கேட்டென். சிரித்துக் கொண்டு 'இப்போது மட்டும் நீ என்னாலேயா உயிர் வாழ்கிறாய்? அந்த நினைவுகள் தானே உனக்குள் உயிர் ஊற்றுகிறது' என்றது குறும்புடன்.

'சரி.. சரி.! இப்போது எங்கு சென்றாலும் நானும் உன்னுடன் வருவேன். எங்காவது அந்த அழகின் பெண்ணைக் கண்டால் நீ அவளைச் சென்று சேர்ந்து கொள்வாய்? பின் நான் என்ன செய்ய?'

'வருந்தாதே! உன்னைக் கேளாமல் நான் எங்கும் செல்ல மாட்டேன்' என்றது.

ஆனால் என்ன மாயம் செய்தனை? என்ன வசியம் வைத்திருந்தாய் உன் விழிகளிலும், இதழ்களிலும்?

சமர்த்தாய் என்னுடன் வந்து கொண்டிருந்த சின்ன இதயம், உன்னைக் கண்ட மாத்திரம், 'சடாரென' தாவி உன்னை அணைத்துக் கொண்டது, என் இரத்தத் துளிகளோடு!

மெல்ல சிரித்துக் கொண்டாய். ஒரு குழந்தையைப் போல் கைகளில் ஏந்திக் கொண்டு, ஆதுரமாய்க் கேட்டாய் என் இதயத்திடம்,' என்ன வேண்டுமாம் இந்த குட்டி இதயத்திற்கு?'

குற்றம் சாட்டும் பாணியில் விரல்களை என் பக்கமாய்க் காட்டிக் கூறியது இதயம்.' பின் என்ன செய்ய? இந்தப் பையனின் தொல்லை தாங்க முடியவில்லை. நாளும் பொழுதும், உனது நினைவுகளைச் சுமக்க வைக்கிறான். பகலெல்லாம் அக்கனத்தைத் தாங்கிக் களைக்கிறேன். இரவிலாவது ஓய்வெடுக்க விடுகிறானா? இல்லை. அப்போதும் கனவின் வழி என்னை உறங்க விட மாட்டேன் என்கிறான். கவிதைகள் எண்ணுகிறான். அதன் எழுத்துக்களை என் இரத்தக் குழாய்கள் வழி அனுப்பி அனுப்பி ஓய்ந்து விடுகிறேன். ஒரு ரோஜாப்பூ போல் உன்னைத் தாங்கி வைத்து என் மேல் செருகி வைக்கிறான். உன்னிடம் நியாயம் கேட்கலாம் என்று தான் கிளம்பி வந்தேன்' என்றது.

மென் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, இதயத்தின் தலையை அன்பாய்த் தடவி விட்டு, 'சரி..! இனிமேல் உன்னைத் தொல்லை செய்ய மாட்டான். உன்னை நானே வைத்துக் கொள்கிறேன். என்ன.?' என்று கூறி விட்டு என்னைப் பார்த்தாய்.

அசடு வழிந்த முகத்தைக் கொண்டு, உன்னை நெருங்கினேன்.

இதயம் பட படவெனத் துடிக்கத் தொடங்கியது.

No comments: