Sunday, September 21, 2008

பல்லி.

ன்னியுங்கள். கதை இன்னும் தொடங்கவில்லை. இன்னும் சில வரிகளுக்கு அப்பால் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரையில் நாம் ஏதாவது பேசுவோமே?

உங்கள் பையனுக்கோ, பெண்ணுக்கோ ஸ்கூல் அட்மிஷனுக்கு வெயிலில் நின்றது, கல்யாணமாகிப் போகும் பெண்ணுக்காக கான்சுலேட்டில் விசாவுக்காக காத்திருந்தது, மேனேஜரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போனது, மழை நின்ற ஒரு சண்டே மாலை பீச்சுக்கு ஃபேமிலியோடு போனது, பார்பர் ஷாப் போனது, மச்சினிக்காக மனைவியுடன் ஷாப்பிங் போனது, உத்தமனாகவே இருந்தாலும் சென்ட்ரல் மெட்டல் டிடெக்டரைக் கடக்கும் போது 'பீப்'படித்து விடுமோ என்ற பயத்தோடு கடந்து போனது, சபித்துக் கொண்டே ஆட்டோ டிரைவரிடம் பைசா கொடுத்தது...

கதை ஆரம்பிக்கப் போகிறது என்று நினைக்கி...

வன் திடுக்கென விழித்துக் கொண்டான். காதுகளில் விழுந்த மெல்லிய தொடர்ச் சத்தம் தூக்கத்திலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வந்திருந்தது. பெரிய வெடிச் சத்தம் ஏதும் இல்லை. சுவரைத் தாண்டி ஓடும் ரயிலின் சத்தமும் இல்லை. ஒரு பல்லியின் கீச்சுக் குரல்.

க்றீச்...க்றீச்...

அவன் திரும்பிப் படுத்தான். காதுகளைப் பொத்திக் கொண்டான். ஒருக்களித்துப் படுத்து, தோளால் ஒரு காதையும், விரல்களால் மற்றொன்றையும் பொத்தினான். ம்ஹூம்.

க்றீச்...க்றீச்...

எழுந்து சுவர்களில் தேடினான். நான்கு மூலைகளிலும் உற்றுப் பார்த்தான். வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்த எறும்பு வரிசை ஒன்று, ஏதோ ஓர் இருட்டில் இருந்து கிளம்பி, மற்றுமொரு இருட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. பல்லியை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அவனுக்கு தூக்கத்தின் போது சிறு சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்து விடும். காற்றில் உருண்டு பாட்டில் சுவற்றில் இடிப்பது, கதவின் தாழ் திருகுவது, ஓர் இருமல், மெல்லிய நடை எதுவும் அவனது தூக்கத்தைக் கலைத்து விடும். இன்று பல்லியின் முறை.

சென்ற முறை குணா வீட்டுக்குச் சென்றிருந்த போது, இந்த வேலையை ஓர் ஆடு மேற்கொண்டிருந்தது. கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவனது ஓர் இரவை சிவந்த கண்களால் நிரப்பியது அந்த ஆட்டின் குளிரில் நனைந்த தொடர் 'ம்மே...ம்மே..'

அடுத்த நாள் மதியம் பிரியாணியோடு பரிமாறப்பட்ட அதன் குரல், இரவில் கேட்ட அதன் கடைசிக் கேவல்களை, சேலம் சென்று சேரும் வரைக்கும் மினிபஸ்ஸின் பாடல்களோடு அவன் வயிற்றில் கேட்டுக் கொண்டே இருந்தது. அவனுக்கு அப்போது ஒரு பெரியவரின் இளம் வாழ்க்கையிலும் இதே போன்று நடந்த நிகழ்ச்சி நடந்ததாய் எப்போதோ படித்தது அகஸ்மத்தாய் நினைவுக்கு வந்தது.

அவனுக்கு சின்ன ஆச்சரியம் கூட! தன்னை காந்தியோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டதில்! தனக்கும் அவருக்கும் எத்தனை வித்தியாசங்கள்..? அவர் அஹிம்ஸை என்பவர்.

சன்னல் போன்ற குல்லாய், வெள்ளை முடிகள் படர்ந்த நெஞ்சை மறைக்கும் பனியன், வயிற்றோடு இழுத்துக் கட்டிய லுங்கி, அதில் தெறித்திருக்கும் இரத்தத் துளிகள், குடல் பிசிறுகளோடு கரீம்பாய். கொத்து அரிவாளோடு உரசி உரசி, கீறுகள் விழுந்துப் பள்ளமான அடிமரத் துண்டு. எத்தனை ஆட்டுத் தலைகளைப் பார்த்திருக்கும்! எத்தனை உயிர்த் துடிப்புகளைக் கேட்டிருக்கும்! சிறு பாத்திரத்தில் ரத்தத் தேக்கம். தோல் கிழித்து, குடல் வெளிவந்து, வாலின் நுனி ஆணியில் தொங்க விடும் கரீம்பாயைக் கேட்டால் சிரிப்பார்."இது தான் என்னுடைய அஹிம்சை..!" என்றும் சொல்லலாம் அவர்.

இவருக்கும், நெடுஞ்சாலையின் புளியமரங்களின் அடியில் ப்ளாஸ்டிக் கவரில் கலர் கலர் ஸ்ட்ராக்களைத் தொங்க விட்டு, சாக்கின் மேல் பச்சை இளநிகளைக் குவித்து, கழுத்தைச் சீவித் தள்ளும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

இரண்டு இடங்களிலும் அரிவாளின் வேலை ஒன்று தானே? கழுத்தறுபடும் போது கண்களில் தெறிக்கும் பயம், துடிக்கும் கால்கள், குரலில் எழும்பும் வேதனை... ஆட்டுக்கு இருக்கும் இதே வலி தான் இளநீர்க் காய்க்கும் ஏற்படுமா? நமக்கு கேட்கவில்லை என்பதற்காக இளநீர்க்கு வலிக்கவில்லை என்று எடுத்துக் கொள்ள முடியுமா...?

அவனுக்கு அந்த அரிவாளின் உருவம் நினைவுக்கு வந்தது. முனையில் சற்றே வளைந்திருக்கும். மரத்தாலான கைப்பிடி. கூர் தீட்டப்பட்டிருக்கும். அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுக்கும். ஆனால் பெரும்பாலும் கோடை நிலவும் வறண்ட பிரதேசங்களின் நெடுஞ்சாலைகளில் இளநீர் சீவிச் சீவி அதன் வெட்டும் நுனிகளில் லேசான வழுவழுப்பும், ஈரமும், காய்த்த வாசமுமாக இருக்கும்.

ஆனால் பழனனின் கழுத்தில் வெட்டும் போது, அதன் உடலில் படர்ந்த சிவப்பு இன்றும் கழுவப்படாமல், காய்ந்து போயிருக்கக் கூடும்.

அந்த சிவப்பு அவனது கழுத்தில் இருந்து பீறிட்டடித்த குருதியில் இருந்தும் எழும்பி இருக்கலாம். அல்லது உயிர்ப்பயம் கிளைத்த, நரம்புகள் விறைத்துக் கொண்டு நின்ற, விரல்கள் நடுங்கிய கடைசி கணங்களில் அவனது கண்களில் கொழித்த சிவப்பில் இருந்தும் தொற்றி இருக்கலாம்.

அந்த கண்கள்! அந்த கண்கள்!

அவை தான் எத்தனை செய்தன? ஆபீஸுக்கு செல்லும் தன் மனைவியைக் கவ்வும் பார்வையைப் பொழிந்தது அந்த கண்கள் தானே? அவள் செல்லும் வழியெங்கும் வழிந்தது அந்த கண்கள் தானே? ஆபிஸ் விட்டு மாறினாலும் பின் தொடர்ந்த பாதையைக் கண்டு கொண்டதும் அவை தானே? டூரில் தான் வெளியூர் சென்றிருந்த போது, கதவை உடைத்துச் சென்று அவள் மேலே கை வைத்ததும் அவன் தானே?

எத்தனை பெரிய கட்சி ஆளாக இருந்தால் தான் என்ன? அவன் கைகளை உடைத்து, கழுத்தை வெட்டிய போதும், அதே ரத்தம் தானே சீறியது.

அதே ரத்தம்.

தூக்கில் தொங்கிய அவளின் கடைவாயில் நேர்க்கோடாய்க் கசிந்திருந்த அதே சிவப்புச் சாயம்.

அவனது தலையைப் பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்த போது, வழியெங்கும் இரவின் நிலவோடு சொட்டிக் கொண்டே வந்ததும் அதே சிவப்பு தானே!

வன் திடுக்கென விழித்துக் கொண்டான். பல்லியின் சத்தம் வெகு நேரத்திற்கு முன்பேயே நின்றிருந்தது. இனி அவன் இன்றிரவு மட்டும் தூங்கப் போக வேண்டும்.

நாளை அவனுக்குத் தூக்கு...!

ன்ன கதையைப் படித்து விட்டீர்களா..? நல்லது.

அப்படியே, எஸ்.எம்.எஸ்., ஈ-மெயில், போஸ்டர், விளம்பரம் எதுவும் இல்லாமல், ஒரு கார்டு வாங்கி உங்கள் கருத்தை எழுதி அனுப்பி விடுங்களேன். புண்ணியமாகப் போகும்...போஸ்டல் டிப்பார்ட்மெண்டுக்கு!

6 comments:

வெண்பூ said...

அருமையான கதை வசந்த். நாளுக்கு நாள் உங்கள் எழுத்துக்கள் மெருகேறுவது நன்றாக தெரிகிறது. பாராட்டுக்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள், வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்...!

ஜூனியர் வெண்பூ நலமா..?

thamizhparavai said...

நண்பர் வசந்துக்கு....
அகரம் அமுதா சொன்னது போல் நான், மானை வளைத்துப் பிடிக்கும் அளவு சிறுத்தை இல்லையெனினும், மானின் சுவடுகளைப் பின்பற்ற முயலும் சிறு பறவை.
கதை இயல்பாக ஆரம்பித்து, இறுக்கத்தில் முடிந்தது.
கரீம்பாயையும்,இளநீர்க்காரியையும் மற்றும் கதைநாயகனையும், தேவை எனும் பொதுப்புள்ளியில் அரிவாள் கொண்டு இணைத்தவிதம் அருமை.
ம‌ன்னிக்க‌வும் அஞ்ச‌ல‌ட்டையை ம‌ற‌ந்தே ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌து என‌க் குற்ற‌வுண‌ர்வுட‌ன் கூறிக்கொள்கிறேன். அத‌னால் இந்த‌ மின்ன‌ஞ்ச‌ல்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் கதைப்பார்வைக்கு!

போஸ்ட்டல் கார்டை நாம் உபயோகித்தே பல ஆண்டுகள் ஆகின்றன என்பதை கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்க்கத் தான் 'புண்ணியமாகப் போகும்...போஸ்டல் டிப்பார்மெண்ட்டுக்கு' என்று எழுதப்பட்டது!

கவிதைகளைப் பற்றி - 'இரவின் மென் குளிர்' கவிதைக்கு தங்கள் கேள்விக்கு கொடுத்த பதிலே! கதை திட்டவட்டமான உருவம். கவிதை நாம் நம் மனதிற்கேற்றாற்போல் உருவம் கொடுத்துக் கொள்வது. அவ்வளவே...!

Anonymous said...

//அருமையான கதை வசந்த். நாளுக்கு நாள் உங்கள் எழுத்துக்கள் மெருகேறுவது நன்றாக தெரிகிறது. பாராட்டுக்கள்.//

+100

நல்லா எழுதியிருக்கீங்க.. :)

இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், +100 வாழ்த்துக்கும்..!

இந்தக் கதையில் இருக்கும் சில கூறுகளை அடுத்த முறை நாம் சந்திக்கையில் பேசுவோமே..!