Thursday, November 13, 2008

திருக் குற்றாலக் குறவஞ்சி - 3.


5.
கனக தம்புரு கின்ன ரங்களி
யாசை வீணை மிழற்றவே
அனக திருமுத்தின் சிவிகை கவிகைபொன்
ஆல வட்டம் நிழற்றவே
வனிதை மார்பல குஞ்சம் சாமரை
வரிசை விசிறி சுழற்றவே
தனதனிந்திரன் வருணன் முதலிய
சகல தேவரும் வழுத்தவே.
(பவனி)


பொன்னாலான தம்புரு கின்னரங்கள்ல், வீணை எல்லாம் இசைபாட, என்றும் உள திருமுகத்திற்கான பல்லக்கு, வெண்கொற்றக் குடை ஆல வட்டம் ஆட, மங்கைகள் பலர் குஞ்சம் வைத்த சாமரம் வீச, குபேரன், இந்திரன், வருணன் முதலான தேவர்களும் வந்து வாழ்த்த, ஈசன் பவனி வருகின்றான்.


6.
சைவர் மேலிடச் சமணர் கீழிடச்
சகல சமயமு மேற்கவே
கைவலா ழியங் கருணை மாலொடு
கமலத் தோன்புடை காக்கவே
ஐவர் நாயகன் வந்த னன்பல
அமரர் நாயகன் வந்தனன்
தெய்வ நாயகன் வந்த னன்எனச்
சின்ன மெடுத்தெடுத் தார்க்கவே
(பவனி)


சைவ மக்கள் துவங்கி சமணத் துறவியர் வரை அனைத்து சமய மக்களும் ஏற்று வணங்க, ஆழி அளவிற்கு கருணை உடைய திருமாலோடு, தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனும் கூட வர, மக்கள் அனைவரும் பாண்டவரைக் காத்த கண்ணன் வருகிறான்; தேவர்களின் தலைவன் வருகிறான்; இறைவன் வருகிறான் என்று ஆர்வமாகச் சுட்டிக் காட்டி வணங்க ஈசன் பவை வருகிறான்.

கைவல் ஆழியம் கருணை என்றால் என்ன..?


7.
சேனைப் பெருக்கமுந் தானைப் பெருக்கமுந்
தேரின் பெருக்கமுந் தாரின் பெருக்கமும்
ஆனைப் பெருக்கமுங் குதிரைப் பெருக்கமும்
அவனி முழுதினு நெருங்கவே
மோனைக் கொடிகளின் காடு நெடுவெளி
மூடி யடங்கலும் ஓடி யிருண்டபின்
ஏனைச் சுடர்விரி இடப கேதன
மெழுந்து திசைதிசை விளங்கவே
(பவனி)


சாதாரண கூட்டமா அங்கே இருப்பது...? ஒரு பக்கம் மக்கள் கூட்டம் கூட்டமாய் இருக்கிறார்கள். தேர்கள் நெருக்கமாக நிற்கின்றன. மணக்கும் மாலைகள் அத்தனை அத்தனை...! மலையில் இருந்து வந்த யானைகள் கொத்துக் கொத்தாய் நின்று பிளிறுகின்றன. 'பிர்ர்ர்...' என்று ஆஜானுபாகுவான குதிரைகள் கத்துகின்றன. இப்படி எல்லாப் பக்கமும் இருந்து அத்தனை நெரிசல் அடைத்திருக்கும் நிலையைப் பார்த்தால், அடர்த்தியாகப் பின்னிப் படரும் கொடிகள் இறுக்கமாக வளர்ந்து பெருங்காட்டையே மூடி அடங்குவது போலவும், அப்படி இருண்ட பின், ஒளிச்சுடர் விரிக்கும் சந்திரன் ஒளி எழுந்து திசையைக் காட்டுவது போல், ஈசன் பவனி வருகின்றான்.

தானைப் பெருக்கம்...?


8.
கொத்து மலர்க்குழல் தெய்வ மங்கையர்
குரவை பரவையை நெருக்கவே
ஒத்த திருச்செவி யிருவர் பாடல்க
ளுலக மேழையு முருக்கவே
மத்த ளம்புயல் போல்மு ழங்கிட
மயில நார்நடம் பெருக்கவே
சத்தி பயிரவி கெளரி குழல்மொழித்
தைய லாளிட மிருக்கவே
(பவனி)


கரிய கூந்தலிலே வாச மலர்ச் சூடிய தெய்வப் பெண்கள் குரவைப் பாட்டு பாடி தம் பங்கிற்கு தொடர்ந்து வர, பாடிய பாடல்கள் ஏழு உலகங்களையும் உருக்கி மயக்கவே, மத்தளங்கள் புயல் போல் முழங்கி...'தொம் தொம்' என அதிரடிக்க, மேகம் தான் இடி இடிக்கின்றதோ என்ற மயக்கத்தில் மயில்கள் தம் பசுந் தோகைகளை விரித்துப் பரவசமாக ஆட, பராசக்தி, பைரவி, கெளரி ஆகியோரோடு குழல்மொழி அம்மையும் இடது பக்கம் சேர்ந்து வர, ஈசன் பவனி வருகிறான்.

யார் அந்த ஒத்த திருச்செவி இருவர்...?

குற்றாலத்தின் திருவீதியிலே இத்தனை அலங்காரங்களோடும், இத்தனை பிரம்மாண்டமாகவும் ஈசன் பவனி வரும் போது, மனையில் வேலையாக இருக்கும் அழகிய தமிழ் மங்கைகள் மட்டும் இவனைக் காண ஓடோடி வர மாட்டார்களா என்ன..?

ஆர்வமாக வருகிறார்கள்... அடுத்த பதிவில்...!

No comments: