
மருதாணி வைத்துச் சிவந்த மல்லிகை மொட்டுகள் விரல்களாய் மாறிக் களிநடனம் புரிகின்றதா..! மயிலிறகுகளின் வருடும் சிறகுகள் விழியிமைகளின் விளிம்புகளில் விளையாடும் மென் முடிகளா...!
மனமோகினி...!
இரவின் உண்மை நிறம் நின் கொலுசுகளின் குரல் குளுமையில் சிணுங்கும் பூச்சிகளின் ரீங்காரமா...! நதியலைகள் நடுக்கத்துடன் கரையோரப் படிக்கட்டுப் பாறைகள் மேல் வந்து வந்து மோதி உடைந்து, நுரை கவிழ்த்துப் பின்னோக்கி விரைகின்றனவே...! பாதரசத் துளிகளாய் வெண்மைப் பொழியும் நிலவின் வெண்ணிழல் மிதக்கும் ஆற்று மேனியை அள்ளும் கரங்களின் பொன் வளையல்கள் சலசலக்குமோ...!
மனமோகினி...!
எழிலாய் மேகப் பூக்கள் மறைக்கும் முகப் பதுமையே நாணல் புதர்கள் தலையாட்டும் வாடைத் தென்றல் தடவும் மெதுவான முன்னிரவுப் போதில், ஈர வேர்கள் குடிக்கும் நிலத்தடி நீர் கரைந்து குளிரெடுக்கும் பூஞ்சோலை நின் மேனியோ...! வயலின் பயிர்கள் கிறக்கத்தில் தலையசைக்கும்; வரப்போர தென்னை மரங்கள் வெண்ணொளியில் கூரை கட்டும் மண் மேடுகளில் மிதக்கின்ற எண்ணங்கள்... எண்ணம் கள்... என் நம் கள்....!!!
மனமோகினி.....!
ரதி தேவி ரதம் ஏறி வர, அமுதக் குரல் கொண்டு பாடும் பறவைகள் கீச்சுக்கீச்சென ரீங்காரமிடும் வண்டுகள் கைகோர்த்து ஆனந்தப் பெருவெளியில் ஆலோலம் ஆடிப் பாடிக் கூடி பாவம் பெருக்கெடுத்தோட, ஆகாயம் முழுதும் தெரியுதடி ப்ரேமையில் பதிந்த நினது திருமுகம்...! படலங்கள் படலங்களாய்ப் பனி படருதடி...! மென் சூட்டில் உருகும் மெல்லிய விளக்கொளியில் மெல்ல மெல்ல விலகிடும் பேரின்ப ரகசியங்கள் மிதக்கின்ற மோனத் திருக் கோலம் நின் புன்னகையின் ஒற்றை நொடியில் உருக்கொள்ளுதடி!
மனமோகினி....!
பொன் முலாம் பூசும் நேரத்தில் வாசம் வீசும் மலர் தேங்கியடிக்குதடி பாவை உன் பார்வை வீச்சுக்கள்! பாதங்கள் வந்து வந்து வைக்கும் ஓர் அடிக்கும் மிதக்கின்ற நறுமணம் காற்றின் கரைகளில் கவின் ஏற்றிச் செல்லுதடி! வனமெங்கும் வானமெங்கும் நினது ராகம் படரும் நொடிகளில் எந்தன் சிந்தை உந்தன் வழிகளில் வீழ்ந்து வணங்கி துளைகளில் உருகும் இசை போலவும், பொங்கும் பாலில் கரையும் பவித்ரம் போலவும், திரைகளின் பின்னே நடக்கும் ரகசிய ராக ஆலாபனைகளில் கலந்து மணக்கும் காலம் போலவும், தொழத்தக்க வடிவெடுக்கும் தெய்வப் பெருந்தகை நீ மோகன வடிவமெடுத்து வந்தது போலவும்....
மனமோகினி....! மனமோகினி....!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
***
படம் நன்றி :: http://www.naturemagics.com/kerala-oil-paintings/swinging.jpg
9 comments:
//மிதக்கின்ற எண்ணங்கள்... எண்ணம் கள்... என் நம் கள்....!!!//
பதிவே கள்ளூறுகிறது...ஓவியத்திற்கேற்ப வர்ண வார்த்தைகள்...
ஒட்டுமொத்தமாகப் படித்து முடிக்கையில் சற்றுப் பழங்கள்ளோ எனத் தோன்றி, பழங்கள் ருசிகூடும்..இதில் சற்றுக் கம்மி என எண்ணவைத்து விட்டது....
ரவிவர்மாவின் ஓவியமா...?
அன்பு தமிழ்ப்பறவை...
உண்மையில் சொல்லப் போனால், இந்தப் பாடலைக் கேட்டு அதில் ஊறிய வார்த்தைகளுக்காகத் தேடி மேட்சிங்கான இராஜா இரவிவர்மா ஓவியத்தை இணைத்துள்ளேன்.
பழங்கள் இனிக்கும்.
பழங் கள் சுவைக்கும்.
நன்றி.
பழங் கள் புளிக்கும்...
அன்பு தமிழ்ப்பறவை...
எனக்கு அனுபவம் இல்லையப்பா...!!!
எனக்கும் அடித்த அனுபவம் இல்லை... படித்த அனுபவம்தான்...
தங்களின் 'களிப்பேறுவகை' போல...
அன்பு தமிழ்ப்பறவை...
அது களிப்பேருவகை...!
;-))
i will answer for this after finishing my dinner...
'களிப்பு ஏறு வகை' இதை வினைத்தொகையாக வைத்துக் கொண்டால் நீங்கள் கூறும் பொருள் வருமல்லவா...?
தவறெனில் திருத்தவும்....
களிப்பேருவகை =
களிப்பு பெரு உவகை
களிப்பேறுவகை =
களிப்பு ஏறு(ம்) உவகை
களிப்பு ஏறு(ம்) வகை
களிப்பு பெறு உவகை
நிறைய எழுதிக்கிட்டே போகலாம் போல...!
Post a Comment