கவிஞர்கள் பெரும் காதலர்கள். அல்லது காதலர்கள் கவிஞர்கள் ஆகின்றார்கள்.
எதிலும் உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் அனுபவத்தை எழுத்துக்களில் கொண்டு வருவது யார்க்கும் சுலபம். ஆனால் எங்கும் காதலையே காண்பவர்கள் சொல்லும் மொழியில் சொற்களின் மேல் சொர்க்க வாசம் வீசுகின்றது.
பெரும் சல்லாத் துணி விரித்த நீல ஆகாயம். மிதிக்க மிதிக்க கால்களின் நரம்புகளின் வழி பூக்கின்ற அழுத்த பூமியின் ஸ்பரிசம். போதைக் குழறலாய்த் தலையாட்டும் வண்ண மலர்கள். குடிக்கவா, கொடுக்கவா என தள்ளாடும் வண்டுகள். பொங்கும் குதூகலாமாய்ப் பேரிரைச்சலோடும், பிரம்மாண்டமோடும் பாய்ந்து வரும் பேரருவி. மிதக்கிறானா, முகில்களில் மூழ்குகிறானா என்று கவனம் கலைக்கும் வெண்ணிலா. உற்சாகமாகக் கரம் பரப்பி, விரிசலிட்ட பானையின் இடுக்குகளில் இருந்து பீச்சியடிக்கும் செந்நிறத் துளிகளாய் எழுந்து வரும் பொன் கதிர். இரவின் மெளனச் சந்துகளில் காற்றோடு இரகசியம் பேசும் ஓங்கி வளர்ந்த காடும், மலைகளும்.
அனைத்திலும் அவன் காண்பது காதலையே!
கல்லிலும், காற்றிலும், காட்டிலும், காரிருளிலும் அன்பெனும் மாபெரும் அழகின் வடிவமாய்க் காதலைக் காணும் அவன் கண்களுக்கு உயிருள்ள விழிகளும், ஏதோ ஒரு கவர்ச்சியாய் மயக்கும் மென்னகைப் புன்னகையும், போதை தரும் தேன் தானோ என்று ஐயமுற வைக்கும் பேசும் சொற்களும் கவிஞனைக் காதலன் ஆக்குகின்றன.
ஐயகோ...! அந்த அமுத கணங்களைப் பிளந்து கொண்டு பிரிவு எனும் பேய் கிளம்பி அவன் முன் ஆங்காரமாய்ச் சிரிக்கும் போது, அப்படியே உடைந்து போகிறான். செய்வதறியாது குழம்புகிறான்.
அப்போதும் அவனுக்குத் துணையாக வருவது அவனது மொழி!
அவனது வார்த்தைகள்...!
உணர்ச்சிகளுள் பெரும் பாதிப்பைக் கொடுக்கும் பிரிவின் நிமித்தம் அவனை எழுத வைக்கின்றன நெஞ்சை அடைத்துக் கொண்டு துளிர்க்கின்ற துயரங்கள். அந்நிலையில் அவனது கவிதைகளும் கல்லறையில் இருந்து வந்தன போல் கரிய துக்கம் அப்பிக் கொண்டிருக்கின்றன. அவனது எழுத்துக்கள் சோகச் சாற்றில் மிதக்கின்றன. அழுகையுடன் கனம் மிதக்கின்ற தொண்டைக் குழியில் இருந்து சுரக்கின்ற கண்ணீர் நிறைந்த வரிகள், ஈரக் காற்றின் முதுகின் மீதேறி மிதக்கும் மண்ணுருண்டையின் காற்றில் கரைகின்றன.
காலங்கள் மெல்லப் பின் சென்று, அவனை முன் நகர்த்தி, நினைத்துப் பார்க்கையில்...!
இரண்டு வருடங்களுக்கு முன் தொலைந்து போனதாக நான் கருதி இருந்த ஒரு கவிதை நோட், சென்ற வாரத்தில் சர்ட்டிபிகேட் ஃபைலோடு பத்திரமாக இருப்பதாக இவன் சொன்னான். மறக்காமல் அனுப்பி வைத்து, இன்று கிடைத்தது.
நீண்ட நாள் பார்க்காத பள்ளி நண்பனைப் பார்க்கும் பிரியத்தில் அதைப் பார்த்தேன். முழுக்க முழுக்க வலி ததும்பும் வரிகள் நிரம்பி இருக்கின்றன.
இனி அவ்வப்போது அவை கொஞ்சம், கொஞ்சம் இங்கே...!!
நிறைய கவிதைகள், பேர் வைக்காத பிள்ளைகள். ஆனால் பேர் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
***
14.Oct.2005
வழிப் பயணியாய்
என்னை
ஏற்றிக் கொண்டது
காதல்...!
பயணம் முழுவதும்
உறங்கி விட்டு
திடீர் நிறுத்தத்தில்
அழுகின்ற
குழந்தையாய்
நான்...!
06.Jan.2006
தனியாய் ஓர் இடம் தேடினேன். இரவின் நிழல் படர்ந்த மொட்டை மாடியின் மூலையில் அமர்கிறேன். வறுமைத் தந்தையைத் துரத்துகின்ற, பிள்ளையின் பசிக்குரலாய், எங்கு நான் ஒளிந்தாலும் வந்து சேர்கின்றன உன் நினைவுகள்.
அது ஒரு மார்கழிக் காலம்.
குளிரும், பனியும் குதித்தாடும் காலம். மணம் பேசத் தொடங்கியதும், கன்னிப் பெண்ணின் கன்னங்களில் ஊடுறுவும் வெட்கம் போல், சூரியனின் மென்னொளி ஊதல் நிறைந்த காற்றில் ஊடுறுவிப் பாய்கிறது.
என் கடன் பேப்பர் போடுவதே, அப்போது! இளங்காலையில், மெல்லிய இருசக்கர வாகனத்தில், சூடான எழுத்துக்கள் கொண்ட தாள்களை, ஒவ்வொரு வீட்டின் முகத்திலும் வீசியடிப்பது, வீட்டைத் துரத்தும் கடன்காரர்கள் முகத்தில் கட்டுப்பணம் வீசும் இனிய நினைவுகளைத் தந்தது.
ஒவ்வொரு முறையும், உன் வீட்டைக் கடக்கும் போதெல்லாம், அறிவியலும், தமிழும் என் காதுகளைத் தாக்கும். அது உன் வீடென்று அறியுமுன், விரைவாய் நகர்ந்தது காலம்.
மற்ற நாட்களில் அப்பக்கம் பணியில்லை என்பதால், உன் முகம் பார்க்கும் நிலை இல்லை.
இது மார்கழிப் பருவம்.
பக்கத்துக் கோயிலில் படிக்கிறார்கள் திருவாசகம். முடிந்தபின் கிடைக்கும் சுண்டலும், பொங்கலும், முடிந்தால் கண்ணன் திருவருளும் என்று, என் பாட்டி, கொட்டைப்பாக்கை கொட்டினாள், என்னையும் சேர்த்து...!
காலைப்பணி முடிந்து, கோயில் சேர்கிறேன். என்ன இது...? குயில்கள் எல்லாம் தாவணி அணியுமா என்ன? மான்கள் எல்லாம் மைக் முன் அமர்ந்திருக்கிறதே? இது என்ன, மைனாக்களின் கைகள் எல்லாம், மை பூசிய தாள்களைப் பிடித்திருக்கின்றன...?
சாமந்திப் பூக்கள் கொட்டிக் கிடக்கும் கூடைக்குள், பூத்திருந்தது ஒற்றை ரோஜா..! சிரித்து நின்ற, சின்னக் கண்ணனைப் பார்த்தவாறு அமர்கிறேன், உனக்கு நேராய்..!
இந்த அம்மாக்களும், மாமிகளும் அறிவிழந்து போனார்களா என்ன? துணையாக அனுப்பியிருக்கும் சிறுவர்கள் தூங்கி வழிந்து அமர்ந்திருக்கையில், அந்தக் கூட்டத்தில், அமர்கிறேன் நானும்.!
பாடத் தொடங்குகிறாய் நீ..! கொட்டும் பேரருவியின் பெரும் இரைச்சலோடு சேர்ந்து கொள்ளும் சிற்றோடைகளின் கீச்சுக்குரல்களாய்ச் சேர்ந்து கொள்கின்றன, தோழிகளின் குரல்கள்..!
தினம், தினம் வெப்பமானிகள் பற்றியும், மனப்பாடப் பாடல்களையும் மொழிந்த குரல் தான் நீ என்று நான் உணர்முன், நீ பொழிந்த திருப்பாவை, தீர்த்தாமாய் நனைக்கிறது, என் செவிகளை..!
இனிப் பொங்கலும், சுண்டலும் எதற்கு வேண்டும்? இனிப்புப் பொங்கும் உன் பாடல்கள் கேட்ட பிறகு?
தினம் தவறாமல் நான் அமர்கிறேன், உன் முன்னால்! நிமிர்வதில்லை உன் முகம், திறப்பதில்லை உன் கண்கள்! நிற்பதில்லை என் பயணம்!
மற்றுமொரு நாள், உன் வீட்டின் முன், வெண் கோடுகள் நீ வரைகையில், சைக்கிளை நகர்த்தி நான் செல்கையில், நிமிர்ந்து ஒரு நன்றி பகர்ந்தாய்.உன் கைவிரல்களில் இருந்து உதிர்கிறது கோலப்பொடி மாவுடன், என் மனம்..!
மற்றொரு மழை தூறிக் கொண்டிருந்த, அதிகாலை..! நீ போட்டு வைத்த கோலம் மேல், மழைத்தூறல்கள் பருவப்பெண்ணின் பருக்கள் போல் புள்ளி போட்டன. ஒரு பழைய தாள் எடுத்து, கோல மையமான, மஞ்சள் பிள்ளையார் மேல் குடையாய் விரித்து வைத்தேன். மழையில் நனைந்த கோலம் மெல்ல கரைகையில், கடந்து செல்கிறது மற்றொரு இனிப்பு!
தினம் உன் வீட்டைக் கடக்கையில், திறந்து மூடுகின்றது உன் வீட்டின் ஜன்னல்..! 'கணகண' என்று கனைக்கிறது என் சைக்கிள் மணி..!
நாடகம் முடிவதாய் இருக்கிறது, திரை விழுவதற்குள்..!
திடீர் இடமாறுதலால், உன் குடும்பம் வெளியூர் பெயர்ந்ததையும், வேலை தேடி நான் வேற்றூர் நகர்ந்ததையும், வெறித்துப் பார்த்தபடி வேதனையாய் முனகுகின்றன, கொக்கி உடைந்த உன் வீட்டு ஜன்னலும், கம்பி அறுந்த என் சைக்கிள் மணியும்..!
மீண்டும் ஒரு மழை வந்து கழுவிச் செல்வதற்கு பூக்கவேயில்லை, உன் வீட்டு வாசலில், எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்ற அறியவியலா, வெள்ளைக் கோலமும், நம் மெளன உறவும்..!
4 comments:
நண்பர் வசந்த்துக்கு....
நீண்ட நாள் கழித்து காதல்பந்தி வைத்திருக்கிறீர்கள். நல்ல விருந்து.
//எங்கும் காதலையே காண்பவர்கள் சொல்லும் மொழியில் சொற்களின் மேல் சொர்க்க வாசம் வீசுகின்றது.//
நுகர்ந்தேன்...நல்ல வாசமாய் இருக்கிறது.
//விரிசலிட்ட பானையின் இடுக்குகளில் இருந்து பீச்சியடிக்கும் செந்நிறத் துளிகளாய் எழுந்து வரும் பொன் கதிர்//
தைலவண்ண ஓவியமாய்க் கண்முன் விரிகிறது காட்சிகள்.
கவிதை அழகு காதலைப் போலவே.
பேருந்தில் சாத்திய சன்னலுக்குள்ளேயும் ஊடுருவி உயிர் நனைக்கும் காலைப் பனியின் குளுமையாய்த் தங்களின் கதை(அ) அனுபவம்....
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள். காதலின் கரம் தீண்டாத மனதிற்குப் பஞ்சம் உண்டா என்ன..?
உங்களது வரிகளில் வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளிலும் எட்டிப் பார்க்கின்றது, பொத்தி வைத்த உங்கள் காதல்.
அப்படியொன்றும் அதிக இடைவெளி விடவில்லை என நினைக்கிறேன் நான்.
கவிஞருக்குக் கண்டதெல்லாம் காதல்தானே...
கவிஞர் கண்டாலே கவிதை;
காண்பவர் கண்டாலே காதல்...!!
Post a Comment