Tuesday, November 11, 2008

திருக் குற்றாலக் குறவஞ்சி.

ரசிகமணி திரு.டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் கி.பி.1937-ல் கொடுத்திருக்கும் மதிப்புரையை வைத்துப் பார்க்கும் போது, திரிகூடராசப்பக் கவிராயர் இந்நூலை 1700களில் எழுதி இருக்க வேண்டும் என்று தெரிகின்றது. குற்றாலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருக் குற்றால நாதரையும், குழல்வாய்மொழியம்மையையும் நாயகன், நாயகியாகக் கொண்டு இந்நூல் வசந்தவல்லி, குறவன், குறத்தி என்ற சில பாத்திரங்களால் பாடுகின்றது.

இந்நூல் சிற்றிலக்கியம் என்ற வகைப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள். சின்ன இலக்கியம்.

இதில் இருக்கும் தமிழின் சுவை தான் எனக்கு ரசிக்கின்றது. கனிந்த ஆரஞ்சுப் பழச் சுளைகளில் எத்தனை இனிப்பாக, குளிர்ச்சியாக இனிநீர் ஒழுகும்..? அது போல!

தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு, தெரிந்த அர்த்தங்களைக் குறிப்பிடுவதுடன் கூட, தேன் தமிழ் புகுந்து விளையாடும் அழகை ரசிக்கலாம்.

http://pm.tamil.net/pmfinish.html மதுரைத் திட்டத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம்.

ஒரு குறிப்பு, நான் இதுவரை குற்றாலம் சென்றதில்லை.

***

திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி.

தற்சிறப்புப்பாயிரம்


விநாயகர் துதி

1.
பூமலி யிதழி மாலை புனர்ந்தகுற் றாலத் தீசர்
கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத் தருவி பாயு மலையென வளர்ந்த மேனிக்
காமலி தருப்போ லைந்து கைவலான் காவலானே.


இதழ்கள் நிறைந்த பூமாலைகள் அணிந்த குற்றாலத்தின் அரசனான ஈசனின் திருப்பாதங்களைப் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட, பெரும் அருவி பாய்கின்ற மலை போன்ற மேனியுடைய விநாயகர் காவலிருக்கட்டும்.

'மாமதத் தருவி', படித்தவுடன் நினைவுக்கு வருகின்ற ஒரு வாக்கியம் 'மரத்தில் மறைந்தது மாமத யானை; மரத்தை மறைத்தது மாமத யானை'. இந்த மாமத என்றால் என்ன..? பெரிய என்ற பொருள் இருக்கலாம்.

'ஐந்து கைவலான்'. யாருக்கு ஐந்து கை..? வழக்கமாக நமது தெய்வங்களுக்கு நான்கு கரங்கள் வைத்து படங்கள் பார்த்திருப்போம். பிள்ளையாருக்கு எப்படி ஐந்து கைகள்..? நான்கு கைகள் + தும்பிக்கை என்று கொள்ளலாமா...?

முருகக்கடவுள்

2.
பன்னிருகை வேல்வாங்கப் பதினொருவர் படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ்தந் தானே.


நல்ல ஒன்பது வீரர்களும் புகழும் வகையில், பன்னிரெண்டு கைகளிலும் வேல் முதலான ஆயுதங்கள் கொண்டு பதினொரு பேர் படைதாங்கி, பத்து திசைகளும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, வட கிழக்கு, வட மேற்கு, மேலே, கீழே), மலைகள் எட்டும், கடல்கள் ஏழும் சென்று, வென்று, தங்கத்தால் ஆன கிரீடங்களை தனது ஆறு தலைகளிலும் அணிந்து, என் பயப்படுதலை ஒழித்து, தனது இரு பாதங்களைத் தரும் முருகனே, குற்றாலக் குறவஞ்சி எழுதத் தமிழ் தந்தான்.

முருகனின் வரலாறு (கந்தபுராணம்) தெரிந்தால் மட்டுமே யாரந்த பதினொருவர்? மலைகள் எட்டும் கடல்கள் ஏழும் என்ன? புயநூல் மூன்று என்னென்ன..? என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து பாடலை முழுக்க ரசிக்க முடியும்.

இருந்தாலும் தமிழ்க்கடவுளைப் பாடலாம். மகிழ்வான்.

திரிகூடநாதர்

3.
கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ் சதர்வேதம் கிளைக ளீன்ற
களையெலாஞ் சிவலிங்கம் கனியெலாம் சிவலிங்கம் கனிகளீன்ற
சுளையெலாஞ் சிவலிங்கம் வித்தெலாஞ் சிவலிங்க சொரூ பமாக
விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டு வோமே.


கிளை கிளையாகக் கிளைத்திருக்கும் கொப்புகளாய்ச் சதுர் வேதம் உள்ளது. அந்தக் கிளைகளில் இருக்கும் களைகள் சிவலிங்கம். கனிகள் சிவலிங்கம். கனிகளில் இருக்கும் இனிப்பான சுளைகள் சிவலிங்கம். அவற்றில் இருக்கும் வித்துக்கள் சிவலிங்கம். அந்த சொரூபமான சிவக்கொழுந்தை வேண்டிக் கொள்வோம்.

வெறும் மரம், கிளைகளாக இதைப் பாடியிருப்பார் என்று தோன்றவில்லை. ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும் என்று சிந்தித்தால், இப்படி தோன்றுகின்றது.

நான்கு வேதங்களும், அவற்றின் பாடல்களும், அவற்றின் உட்பொருட்களும், அதிலிருந்து வரும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்... அத்தனையும் சிவரூபமே!

சதுர் வேதம் (சதுர் = சதுரம் = நான்கு) மரமாக உருவகிக்கப்பட்டிருக்கலாம். கொப்பு என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியவில்லை. 'கொப்பும் குலையுமாக' என்றால் புரிகின்றது. குறும்பலவின் முளைத்தெழுந்த...? தெரியவில்லை. ஒரு வரிசைப்படி வருவதால், களை என்றால் காயாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

குழல்வாய்மொழியம்மை

4.
தவளமதி தவழ்குடுமிப் பனிவரையின் முளைத்தெழுந்து தகைசேர் முக்கட்
பவளமலை தனிலாசை படர்ந்தேறிக் கொழுந்துவிட்டுப் பருவமாகி
அவிழுநறைப் பூங்கடப்பந் தாமரையு மீன்றொருகோட் டாம்பலீன்று
குவலயம்பூத் தருட்கொடியைக் கோதைகுழல் வாய்மொழியைக் கூறு வோமே.


குளிர்ச்சியான நிலா ஈசனின் தலை மேல் தவழ்கின்றது. அவன் இருக்கும் இடமான கயிலையிலே பிறந்து, ஈசனை அடைய வேண்டி, பவளமலைக்கு வந்து வளர்ந்து பருவமடைந்த மங்கை குழல்வாய்மொழியம்மையை வேண்டுவோம்.

தவளம் என்றால் குளிர்ச்சி. பவளமலை என்பது மரங்கள் அடர்ந்த பசுமையான குற்றால மலையைத் தான் குறித்திருக்க வேண்டும். பவளம், பச்சையாகத் தான் இருக்கும் அல்லவா..? அம்மனை பல பூக்கள் கொண்டு வர்ணிக்கிறார். சரியாகத் தெரியாதலால், அவற்றை விட்டு விட்டேன்.

தாமரை, கோட்டாம்பல், குவலயம் என்ற பூக்களை மட்டுமே அடையாளம் காண முடிகின்றது.

சைவசமயாச்சாரியார் நால்வருள் மூவர்.

5.
தலையிலே யாறிருக்க மாமிக் காகத்
தாங்குகட லேழழைத்த திருக்குற் றாலர்
சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்
செழித்தகுற வஞ்சிநா டகத்தைப் பாட
அலையிலே மலைமிதக்க ஏறினானும்
அத்தியிலே பூவையந்நா ளழைப்பித் தானும்
கலையிலே கிடைத்தபொரு ளாற்றிற் போட்டுக்
கனகுளத்தில் எடுத்தானுங் காப்ப தாமே.


அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்ற சைவக்குரவர் நால்வருள் மாணிக்கவாசகர் தவிர்த்த (அவர் அடுத்த பாடலில் அகத்தியரோடு சேர்ந்து வருகிறார்) மூன்று பேரை வாழ்த்திக் காப்பிருக்கப் பாடுகிறார். பெரிய புராணம் தெரிந்தால் மட்டுமே இப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை எடுத்துச் சொல்ல முடியும்.

எனினும் 'அலையிலே மலை மிதக்க ஏறினான்' என்பது திருஞானசம்பந்தரைச் சமணர்கள் பாறையோடு கட்டி வைகையில் தள்ளி விட்டதைச் சொல்கிறது எனத் தோன்றுகிறது. 'கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டுக் கன குளத்தில் எடுத்தான்' என்பது ஓடுகின்ற ஆற்றில் செல்வங்களைப் போட்டு குளத்தில் எடுத்த நிகழ்ச்சியைச் சொகிறது. ஆனால் யார் என்பது தெரியவில்லை. மற்றொரு நிகழ்ச்சி தெரியவே இல்லை.

தலையிலே ஆறு கொண்டவன் கங்கையணிந்த ஈசன்.

அகத்திய முனிவர், மாணிக்கவாசக சுவாமிகள்

6.
நித்தர்திரி கூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி
முத்தர்திரு மேனியெல்லா முருகவே தமிழுரைத்த முனியைப் பாடி
இத்தனுவி லாத்துமம்விட் டிறக்குநாட்சி லேட்டுமம்வந் தேறா வண்ணம்
பித்தனடித் துணைசேர்ந்த வாதவூ ரானடிகள் பே ணுவோமே.


இப்பாடலைச் சொற்களைப் பிரித்து எழுதினாலே எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி, முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியைப் பாடி, இத்தன் விலாத்துமம் விட்டிறக்கும் நாள் சிலேட்டுமம் (இதை சரியாகப் பிரிக்கவில்லை என்று நினைக்கிறேன்) வந்து ஏறா வண்ணம், பித்தன் அடித் துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே.

தமிழ் உரைத்த முனி..அகத்தியர்.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றும் உடலில் மாறுபட்டால் நோய்கள் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் அடிப்படை. இப்பாடலில் சுவையாக சிலேத்துமத்தை மட்டும் பிரச்னையாகச் சொல்லி விட்டு, பித்தத்தை இறைவன் பேராகச் சொல்லி ('பித்தா பிறைசூடிப் பெருமானை'), வாதத்தை மாணிக்கவாசகர் ஊரான திருவாதவூர் பெயரில் சொல்கிறார்.

சரசுவதி

7.
அடியிணை மலருஞ் செவ்வா யாம்பலுஞ் சிவப்பினாளை
நெடியபூங் குழலு மைக்க ணீலமுங் கறுப்பினாளைப்
படிவமும் புகழும் செங்கைப் படிகம்போல் வெளுப்பாம்ஞானக்
கொடிதனைத் திருக்குற்றலக் குறவஞ்சிக் கியம்புவோமே.


மலர் போன்ற இரு பாதங்கள். செவ்வாயோ ஆம்பல் மலர் போன்ற சிவப்பு. பூக்கள் நிறைந்த நெடிய கூந்தல் கறுப்பு. மை பூசிய கண்கள் நீலவிழிகள் போன்ற ஞானக் கொடியான சரசுவதிக்கு இந்நூலைச் சொல்வோம்.

'செங்கைப் படிகம் போல் வெளுப்பு' என்றால் என்ன...? அன்னை வெள்ளை ஆடை அல்லவா அணிந்திருப்பாள்..? அதைப் பற்றி ஏதேனும் குறிப்பா..?

நூற்பயன்

8.
சிலைபெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச்
செல்வருக்குந் தேவருக்கு மிரங்கி மேனாள்
கொலைகளவு கட்காமங் குருத்து ரோகங்
கொடியபஞ்ச பாதகமும் தீர்த்த தாலே
நிலவணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள்
நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப்
பலவளஞ்சேர் குறவஞ்சி நாட கத்தைப்
படிப்பவர்க்குங் கேட்பவர்க்கும் பலனுண் டாமே.


சிலை பெரிய வேடனுக்கும், நரிக்கும் வேதச்செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள், கொலை, களவுகள், காமம், குருத்து, ரோகம், கொடிய பஞ்சமா பாதகங்களைத் தீர்த்ததாலே, நிலவணிகின்ற (நாயகர் இருக்கும்) குற்றாலத்தை நினைத்தவர்கள் நினைத்தவரம் பெறுவர். அது போல இந்தக் குறவஞ்சி நாடகத்தைப் படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பல வளங்கள் உண்டாகும்.

பெரிய வேடன் யார்...? பசுபதிநாதருடன் வில் போர் நடத்திய அர்ஜுனனா? கண்ணப்பனா..? மேனாள் என்றால் என்ன..?

நமக்கு, நாம் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது உறுதி!

அவையடக்கம்

9.
தாரினை விருப்ப மாகத் தலைதனில் முடிக்குந் தோறும்
நாரினைப் பொல்லா தென்றே ஞாலத்தோர் தள்ளு வாரோ?
சீரிய தமிழ்மா லைக்குட் செல்வர்குற் றாலத் தீசர்
பேரினா லெனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே.


ஒரு பூமாலை இருக்கின்றது. அதை ஆசையாகத் தலையில் வைத்துக் கொள்ளும் போது, மணமே இல்லாத நாரைத் தேவையற்றது என்று உலகத்தார் ஒதுக்கி விடுவார்களா என்ன? அது போல அழகிய தமிழ் மாலைக்குப் பூக்கள் போல் குற்றாலத்து ஈசர் பெயரை வைத்து, மணமற்ற நாரைப் போல் எனது சொற்களை வைத்திருக்கிறேன். இந்த மாலையையும் பெரியோர்கள் ஒதுக்க மாட்டார்கள்.

என்ன ஒரு ஒப்புமை...! என்ன ஓர் அடக்கம்...!

பூமாலையில் பூக்கள் தான் வாசம் தரும். நார் வாசம் தருவதில்லை. அதற்காகப் பூச்சூடும் போது நார் தேவையற்றது என்றா ஒதுக்கி வைக்கிறோம்? நமக்குத் தெரியும், அந்த நார் தான் பூக்களைத் தாங்கி நின்று, இணைத்து வைக்கின்றது என்று! பூமாலைக்கு பூக்களும் முக்கியம்; நாரும் முக்கியம். ஆனால் நார் இல்லாமலும் பூக்களால் மணம் தந்து இருக்க முடியும். ஆனால் பூக்கள் இல்லாமல் நாரால் பயன் ஏதும் இல்லை.

தார் = மாலை. ஞாலம் = உலகம்.

ற்சிறப்புப்பாயிரம் நிறைவுற்றது. அடுத்த பதிவில் நூலுக்குள் நுழைவோமா...?

4 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
//நன்னவவீ ரரும்புகழ//
நவவீரர்களை விட்டு விட்டீர்கள்...
பள்ளியில் 'குற்றாலக்குறவஞ்சி' படித்ததை நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள்...ஆனால் பாடல்தான் இன்னும் நினைவுக்கு வரமாட்டேங்கிறது....

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

வசந்தவல்லி பந்தாடும் விதத்தை பதினைந்து வரிகளுக்கு மிகாமல் எழுதுக.

அந்தப் பாடலும் வருகின்றது.

காக்க.

Indian said...

wow!!

இரா. வசந்த குமார். said...

Hai Indian...

Thanks..! And visit often. :)