19.Nov.2005.
ஒரு நாள் பொழுதின் இறுதியில், உடைந்த நிலாவின் உலா துவங்கும் நேரம்! பூமியின் மேனியைப் பல்லாங்குழி மேடையாக்கியபடி பெய்கின்ற அடர்மழையின் பெய்தல் எல்லாம் ஈரமாக்குகின்ற பின்மாலைக் காலம்.
சின்னஞ்சிறு குமிழிகளில் சிரித்துக் கொண்டிருக்கும், திரிமுனைச் சுடர் விளக்குகள் நிரம்பிய மாடங்கள் கொண்ட உன் வீடு!
பாசிகள் படர்ந்திருக்கும் சுவர்கள் சூட்டிய, உன் வீட்டில் ஒரு மென்பனிக் காலப் பூ போல் நீ பூத்திருந்தாய்.
நீ அசையும் போதெல்லாம், ஆனந்தக் கூச்சலிடுகின்ற மணிகள் கட்டிய வெண்தந்தத் தொட்டிலில் நீ துயில்கின்றாய்.
தொட்டிலில் தொங்கியபடி இருக்கும் வைரங்கள், தங்க மாலைகள், முத்து அணிகலன்கள், ,மரகதம் பதித்த பேடுகள் என்ன பேசுகின்ரன?
"அம்மா! இங்கே இருக்கும் பொன் நகைகளில் நான் தானே அழகு?" குட்டி வைரம் தாய் வைரத்திடம் கேட்கின்றது.
"இல்லை, என் கண்ணே! அதோ, அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் தேவதையைப் பார்! பிரியாமல் சிரிக்கின்ற உதடுகளின் சிவப்பைப் பார்! இந்த மரகத மொட்டுகள் நிறத்தைப் போல் இல்லை? தெரியாமல் முளைத்து விட்டது போல், கொஞ்சம் கொஞ்சம் பூத்திருக்கும் புருவமுடிகளைப் பார்! ஊதாப்பூவாய் இருக்கும் ரூபிக்கல்லை விட அழகல்லவா அது! மல்லிகைப் பூ மொட்டின் மேல் பனித்துளி சொட்டுகையில், மடங்குகின்ற நுனிகள் போல் சுருண்டிருக்கின்ற பிஞ்சு விரல் நுனிகளைப் பார்! அமைதியாக மூடியிருந்தாலும், அசைகின்ற சிப்பிமுத்து போல் அசைகின்ற கருவிழிகளைப் பார்! பஞ்சுப் பொதி போல் படர்ந்திருக்கும், அந்த பிஞ்சு வயிற்றைப் பார்! கைகள், கால்கள் எனப் பெயர் பெற்ற கண்ணின் மணியைப் பார்! கொலுசுகளும், வளையல்களும் நிரம்பிய ஒரு குட்டிப் பாப்பாவைப் பார்! நாம் அழகா, இவள் அழகா?"
"நான் எப்போது இவள் போல் அழகாவேன்?"
"அழாதே என் வைரமே! நாம் விரைவில், இவள் மேனியை அலங்கரிப்போம்! அப்போது இவள் அழகைத் திருடிக் கொஞ்சம் ஊட்டி விடுகின்றேன். நீயும் அழகாவாய்! ஆனால் மறந்து விடாதே! இவள் அழகைத் திருடத் திருட, மேலும் இவள் அழகு தான் திரளும்!"
சின்னச் சின்னதாய்ப் பேசுகையில், சிணுங்கிக் கொள்கின்ற உன்னைப் பார்த்து, வைரங்கள் இரண்டும் வாய் மூடிக் கொள்கின்றன.
2 comments:
நண்பர் வசந்த்திற்கு...
வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள் போல அக்காலத்திலேயே....
//இவள் அழகைத் திருடத் திருட, மேலும் இவள் அழகு தான் திரளும்!"//
சூப்பர்....
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். எல்லோரும் 'என்னவளை' குழந்தையாக கற்பனை செய்து பார்ப்பது இயல்பே! (இப்பவே இவ்ளோ அழகா இருக்காளே... குழந்தைல எப்டி இருந்திருப்பா..!)
Post a Comment