இயற்கையும், காதலும் கவிஞனுக்கு அள்ள அள்ள வற்றாத கற்பனை ஜீவ ஊற்றுகள். இயற்கையில் காதலையும், காதலின் இயற்கையையும் அவன் கலந்துக் களித்துக் கூடி முயங்கி புது வர்ணத்தில், பொதுக் குணங்களைப் பட்டியலிடும் போது... வார்த்தைகளுக்கே வெட்கம் வந்து வ்டுகின்றது.
தாகூரின் கீதாஞ்சலி படித்துப் பாருங்கள்...! ஆஹா..! அமரத்துவ அழகையெல்லாம் அல்லவா அவர் வரிகளில் வடித்துள்ளார்..! கிறக்கம், போதை, மயக்கம் வேண்டுமா...? கீதாஞ்சலி குடியுங்கள்.
25.Dec.2005.
பெயர் வைத்திடாத பூக்களையெல்லாம் தொட்டுச் செல்கிறது தேனீ.! பாதை தெரிந்திடாத நதிகளின் மேலெல்லாம் தடவிச் செல்கிறது வெயில்.! இருள் படர்ந்த காட்டின் மரங்களின் இடையில் எல்லாம் நுழைந்து செல்கிறது காற்று! எல்லைகள் தெரிந்திடாத நாடெங்கும் பறந்து திரிகிறது பறவை! எங்கேனும் நகர்ந்திடாத மரங்களின் அமைவிடம் தாண்டியும் அலைகிறது வேர்! எங்கோ உரமாகும் வகையில், உதிர்கிறது இலை! எதிர்க்காற்றுக்கும் அணைவதில்லை, எரிகிறது நெருப்பு! எந்த நாளிற்கும் மறந்தும் உதிப்பதில்லை, மேற்கில் கதிர்! நகர்ந்து சென்றாலும் பாதைகளை நனைத்து விட்டே செல்கிறது நதி! வெடித்துச் சிதற, நொடிகளே ஆனாலும் வர்ணம் காட்டி வாழ்கிறது நுரை! நெடுங்காலம் மறைந்தே இருந்தாலும், பெரும் அழிவிற்குப் பின் குடியேறுகிறது அமைதி!
காயங்கள் தந்தாலும், ரணங்களின் மேடுகளில் வசிப்பது நீ! காயங்கள் கசந்தாலும் நீ தந்ததால், அதன் கோடுகளை ருசிப்பது நான்.!
என்
தோட்டத்தின்
மரங்களிலிருந்து
இலைகளாய்
நீயே
உதிர்கின்றாய்.!
என்
காலைப்
புல்வெளியில்
பனித்துளிகளாய்
நீயே
பூத்திருக்கிறாய்.!
நான்
பார்க்கும்
இடங்களிலெல்லாம்
நீயே இருக்கின்றாய்,
பாதி புகைந்த
பீடித் துண்டுகளாகவும்,
முற்றும் கிழிந்த
பயணச்
சீட்டுகளாகவும்..!
4 comments:
//இயற்கையில் காதலையும், காதலின் இயற்கையையும் //
//காயங்கள் தந்தாலும், ரணங்களின் மேடுகளில் வசிப்பது நீ! காயங்கள் கசந்தாலும் நீ தந்ததால், அதன் கோடுகளை ருசிப்பது நான்.!//
//பீடித் துண்டுகளாகவும்,
முற்றும் கிழிந்த
பயணச்
சீட்டுகளாகவும்..!
//
காதல்...காதல்...காஆஆஆதல்....
அன்பு தமிழ்ப்பறவை...
அந்த குதூகல உணர்வு தான் எல்லாமே...!
நல்ல இருக்குங்க! வாங்க நம்ம வலைக்கு!
உங்கள மாதிரி கவிதை எழுதி இருக்கேன்
சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாகச் சொல்லுங்கள்
அன்பு ரவிஷங்கர்...
மிக்க நன்றிகள். வருகிறேன். பார்க்கிறேன்.
Post a Comment