Tuesday, February 12, 2008
காதலின் கால் தடம்...
ஈரக்கரையின் மேனியெங்கும் கீறல் போட்டுக் கொண்டே சென்ற காற்று ஓர் இடத்தில் திகைத்து நின்றது. அங்கே தென்பட்டது நமது காதலின் கால் தடம்.
ஏதேதோ கண்டெடுத்து தன் கைப்பையில் வைத்துக் கொண்ட காற்று, இந்த தடத்தை என்ன செய்வது என்று தெரியாமல், இந்த இடத்திலேயே சுழலத் தொடங்கியது, உன்னைக் கண்டதும் என் நெஞ்சில் காதல் சுழலத் தொடங்கியது போல்....!
அமைதிக்காகப் பூத்திருந்த தோட்டம் அது. நூல்களில் நெய்த பட்டாடைகள் இல்லை அங்கே; நூலாம்படைகளின் போர்வைகள் போர்த்திய நூல்கள் மட்டும் இருந்தன. காலத்தைக் கடந்த ஷெல்லியும், பைரனும், கம்பனும், காளிதாசனும் எழுத்துக்களின் வளைவுகளில் உருண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மாடிகளின் படிக்கட்டுகளும் எழுத்தின் வாசனை அடித்துக் கொன்டிருந்தது.
பேரமைதியில் பொங்கிய கட்டிடத்தைச் சுற்றிலும் காவலுக்கு மரங்களின் நிழல்களின் துணை.
விரலுக்கும், விலகிய பக்கங்களுக்கும் வலிக்குமோ என்று தடவித் தடவி புத்தகத்தின் மேல் நீ தாவித் தாவிக் குதித்துச் சென்றாய். எதிரெதிரில் அமர்ந்தும் நம் முகங்களை மறைத்துத் தமக்குள் பேசிச் சிரித்துக் கொண்டன, நாம் படித்துக் கொண்டிருந்த நூற்கள்.
க்றீச்சிட ஒரு பக்கத்தைக் கடக்கையில், அது ஊர் உறங்கிய பின் எழும் தெரு நாயின் குரலாய் எதிரொலித்தது. சுற்று முற்றும் பார்த்தாய். யாரும் இல்லை என நினைத்து, நிமிர்கையில், எதிரில் புன்சிரிப்போடு பார்த்த என்னை பயத்தோடு பார்த்தாய்.
ஒன்றும் சொல்லாமல் நான் மீண்டும் புதைந்து கொண்டதும், அமைதியாக எழுந்து சென்று விட்டாய். நகர்ந்து செல்லும் உன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை இறுதித் திருப்பத்தில், திரும்பிப் பார்த்துக் கண்டு கொண்டாய். வெட்கம் சிவந்த முகத்தோடு, வேகமாய்க் மறைந்தாய்.
படபடத்தது கிழிந்த அப்பக்கம், என் இதயத்தோடு...!
பின் இருவருக்கும் நூலகம் தாய்மடியானது.
நம் வருகையைப் பார்த்தே தம் நேரத்தை சரிப் படுத்திக் கொண்டன, நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வரும் முட்களின் கூடு. 'அமைதி காக்கவும்' என்று மின்னிய அட்டைகளை கண்கள் கண்டாலும் அதைக் கண்டுகொண்டதுவா? வாய்ப் பூட்டுகளின் கதவை இறுக்கித் தாளிட்டு, விழிகளின் வழி பொங்கிச் சென்றன வார்த்தைகள்.
தம்முள் சிரித்துக் கொண்ட புத்தகங்களை தடவிச் சென்ற நம் கைகள், எட்டியே நின்றன.
மாலையின் மஞ்சள் ஒளி தன் நீண்ட கால்களை நம் முகங்களின் மேல் தடவிச் செல்ல கடல் விட்டு நடக்கையில் நம் கால் தடங்களின் வழி தன்னைப் பதிப்பித்துக் கொண்டது, நம் பித்துக் காதல். தன் முகம் பார்க்க நம் கால்களின் வழி தன்னை வரைந்து கொண்டு சிரித்துக் கொண்டது.
காற்றே காயப் படுத்தாதே. இது ஊமைக் காதலின் உருவம்.
சொன்னவுடன் கேட்டுக் கொண்டு கலைக்காமல் சென்றது கடற்காற்று, நல்ல பிள்ளை...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment