Wednesday, February 13, 2008

இதயத்தில் இசைக்கும் மென்னிசை...!



ரு மியூஸியத்தில் தூசு பூத்திருக்கும் பியானோ போல் இருந்தேன். தடவித் தடவி மென் இசையை எழுப்பும் விரல்கள் போல் வந்தாய்.

காட்டில் ஓசையெழப் பெய்யும் மழை போல் இருந்தேன். மஞ்சள் குடை பிடித்துப் பூத்திருக்கும் காளான் போல் எங்கிருந்தோ பூத்தாய்.

நடைபாதையின் ஓரங்களில் ஒளி உமிழும் தெருவிளக்காய் இருந்தேன். இரவில் சுற்றி வரும் சின்னச் சின்னப் பூச்சிகள் போல் மொய்த்துக் கொண்டாய்.

எங்கே பாதை, எங்கே பயணம் அறியாத காட்டாறு போல் பாய்ந்து கொண்டிருந்தேன். தென்றலுக்குத் தலையாட்டும் நாணல் செடிகளாய் என் கரைகளில் முளைத்தாய்.

மாலை விழுங்கும் கதிர் போல் வெப்பம் உமிழ்ந்தேன். மழைத்துளிகளில் சிறகு விரிக்கும் வானவில்லாய் என் வானில் வர்ணங்கள் பூசினாய்.

சுவைப்பவர்க்கு கசக்கும் நெல்லியாய் வாழ்ந்திருந்தேன். இனிப்பும் உண்டு என்று காட்டும் தெளிந்த நீராய் வந்தாய்.

மெளனங்களால் மொழி பேசும் விழிகளாய் உற்று வாழ்ந்தேன். அவ்வப்போது தழுவிக் கொண்டு உறங்கச் செய்யும் இமைகள் போல் அணைத்துக் கொண்டாய்.

ஏதுமற்ற தேசத்தில் முட்செடியாய் வறண்டிருந்தேன். இரத்தம் வழியக் கடித்தாலும் சுவைத்துச் செல்லும் ஒட்டகம் போல் உண்டாய்.

பனி பெய்யும் துருவங்களில் குடிசை கட்டி வாழ்ந்தேன். உருகி ஓடச் செய்யும் தீப்பந்தமாய் வெப்பம் கொடுத்து உருக்கினாய்.

யுக, யுகாந்திரமாய் தேடி அலைந்து கண்டு கொண்ட அன்பைப் பெற நின்றேன். விரல்களை அசைத்து, விழிகளால் அழைத்து உன்னுள் புதைத்துக் கொண்டாய்.

No comments: