Monday, February 11, 2008

வெட்கம் சிந்தியது...!



டசடவென மழை பெய்யத் தொடங்கி இருந்தது.

நம் குடைகளுக்குள் இருக்கும் இடைவெளியில் நம் நிழல்களே நிற்க முடியாமல், எங்கோ சென்றிருந்தன. பொசுக்கென போய் விட்ட தெரு விளக்குகளின் உயிரைத் தேடி இருக்குமோ?

மெல்ல நடை போடுகிறோம். குடைகள் பிடித்திருந்த நமது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது சத்தியமாய்க் குளிரால் இல்லை என்பதை நாம் நன்கறிவோம்.

அவ்வப்போது கடக்கின்ற வாகனங்களின் முன் வரிசைப் பற்களின் ஒளியை வெட்டிச் செல்கின்றன பெய்கின்ற பெருமழைச் சரங்கள்.

சாலையின் இரு மருங்கிலும் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்த பூச்சிகளும், தவளைகளும் இன்னுமொரு குளிர் இரவில் களித்திருந்தன. மரங்களின் கிளைகளின் இடைவெளியெங்கும் இறுக்கமாய் நெய்து கொண்டிருந்த ஈரத்துளிகள் நமது குடைகளில் பட்டுத் தெறிக்கையில் மட்டும், அதிரச் செய்யும் குடைக் கம்பிகளை!

மினுக் மினுக்கென துடித்துக் கொண்டிருந்த அரசரடி பிள்ளையார்க் கோயிலின் சிறு தீபம், உன் இமைகளைக் கூறுதடி என்று சொன்னால் நீ கோபிக்கவா போகிறாய்?

சளக் புளக்கென நாம் மிதித்து நடக்கையில் விளக்கின் தீப ஒளியைப் போல சுற்றிலும் பரவுகின்ற சேற்று நீர் , நீ மஞ்சள் குளித்த நீர் போல் இருக்கிறது என்று கூறினால், நீ ஏன் இன்னும் வெட்கப்பட்டு மஞ்சள் உன் முகத்தில் இன்னும் மிஞ்சியுள்ளதைக் காட்டுகிறாய்?

கிடு கிடுவென இடி முழங்க, 'அர்ஜுனா, அர்ஜுனா' என்கிறாய். யாரவன் என்று பொய்க் கோபத்துடன் நான் கேட்க, 'அர்ஜூன் அம்மா யார் என்ற கேள்வியின் விடை நான்' என்கிறாய். பெருமிதமாய் உணர்கிறேன்.

மின்னலிலும் மின்சாரம் பாய்கிறது என்றேன். 'இந்தப் பின்னலிலும் கூடவா?' என்று என் உதடுகளை அழுந்த உரசிப் பின் உன் வீட்டிற்கு ஒடினாய்!

கீழே சிந்தியவாறு சென்ற உன் வெட்கத்தை அள்ளிக் கொள்ள குடையை விட்டு வெளியே கை நீட்டினேன். வானிலிருந்து முன்னோர்க் காதலர்களின் இதயங்கள் விழுந்து கொண்டிருந்தன, அமரக் காதலின் அடையாளங்களாய்...!

No comments: