Wednesday, February 13, 2008
காதலெனும் மழையிலே...!
இராத்திரியில் மெளனமாகப் பெய்து கொன்டிருக்கின்றது மழை..!
போர்த்தியிருக்கும் போர்வையையும் மீறி, குளிரின் ஊசிகளால் குத்திக் கொண்டிருந்த காற்றாய் உன் நினைவுகள் இமைகளின் தடுப்பையும் தாண்டி விழிகளின் படலத்தில் படர்ந்தன.
ஒரு தோட்டத்தில் 'பறிக்காதீர்' என்ற பலகையின் அடியில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட மஞ்சள் பூ போல், உனக்குள் ஓர் உலகத்திற்குள் சுகமாய் ஒளிந்திருந்தாய். காவற்காரரை மீறி கை நீட்டும் சிறுவனாய், உன் கண்களின் வழி கள்ளன் போல் உள் நுழைந்தேன்.
மேகம் வந்து மறைத்த பின்னும் மெல்ல எட்டிப் பார்க்கும் கதிரின் கரங்கள் போல், உன் கண்டிப்பு அறிந்த பின்னும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் என் காதல்.
அமைதியால் ஒரு பெருஞ்சுவர் வகுத்துக் கொண்டு, நாம் கடந்து செல்ல, எல்லை தாண்டி தலை நீட்டும் சிவந்த ரோஜாவாய் மனம் பரப்பும் மணமாய் காதல்.
வெயில் கடந்த பின்னும் விலகாத வெப்பம் போல், நீ தொலைவிற்கு நகர்ந்த பின்னும் தொலையாத நினைவுகளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருப்பேன். திடீரென திரும்பி வருவாய். அசடு வழியச் சிரித்து, காதலை மறைப்பேன்.
புன்னகையோடு ஒரு நாள் கை கொடுக்க, விரல்கள் வழி பாய்ந்த மின்சாரம் கொண்டு ஊரே ஒளியில் எரிந்ததைக் கண்டேன்.
திருவிழாவின் மகிழ்வில் தொலைந்து போன குழந்தையாய் உன் பேச்சில் நான் தொலைந்து கொண்டேயிருக்க, இராட்டினத்தின் உச்சியில் நிற்கையில் தடாரென பேச்சை நிறுத்துவாய். மயக்கமா, அச்சமா என்று அறியாத குழப்பத்தில் கண்களை மூடிக் கொண்டு வேகமாய்க் கீழிறங்குவேன்.
ரோஜா பிடிக்கும் என்றாய், ஒரு நாள். இதழ்களைக் கொய்து நெய்து வந்த குடைக்குள் ஒளிந்து கொண்டோம்.
காதலின் சிவந்த மழையில் நாம் நனைகையில், அந்த இதழ்களில் இருந்து சொட்டுச் சொட்டாய்ச் சிந்திக் கொண்டேயிருந்தது, ஜென்ம ஜென்மமாய் நாம் திரிந்த வேடங்களின் நினைவுகள்.... சிவப்பாய்!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment