Tuesday, February 12, 2008

வாழும் இது...!



னவுகளின் கருவறையில் இருந்து எழுந்து வந்தது, முந்திய இரவின் ஒரு கனவு. ஏவாளைத் தூண்டிய சைத்தான் பாம்பின் காதல் கடியில் நீலம் பாரித்திருந்த வானம். சுவைத்த சுவையில், சிந்திய கிறக்க விஷம் பரவத் தொடங்கி இருந்தது கடலுக்குள்ளும்! கடலும் நீலம் கொள்ளத் தொடங்கியது.

பச்சை பூத்திருந்த சிறு தீவை மட்டும் நனைக்க முடியாமல், சுற்றிச் சுற்றி வந்தது காதல் சைத்தான். ஒரு மாலையில் பூத்திருந்த பூ போல் ஒரு மூலையில் நீ படுத்து உறங்கிக் கொண்டிருந்தாய். உன்னையும் ஒரு பூந்தோட்டம் என் எண்ணி நகர்ந்து சென்றது பாம்பு.

சிரித்திருக்க வேண்டும் நீ, ஒரு மழை போல்!

கண்டு கொண்ட மகிழ்வில் உன்னையும் தீண்ட ஓடி வந்தது. நிறுத்தினாய் உன் பார்வையால். உறுத்துப் பார்க்க பாம்பின் வாய் உலர்ந்து போனது.

"காதல் சாத்தானே! யாரென நினைத்தாய் என்னை? நீ தீண்டுகையில் மயக்கமுறும் பேதை அல்ல. பெரும் போதை நிறைத்த சொற்கள் கொண்டு ஒருவன் வருகின்றான். அவன் தோள் வலிவும், வாள் வலுவும் கண்டனையோ? அவன் என் நிழல்களின் மேலும் நின்று கொண்டு என்னைத் தீண்ட வருகின்றனன். உன் அமுத விஷம் தோய்ந்த பற்களைப் பதப் படுத்திக் கொள். இல்லை, பத்திரப்படுத்திக் கொள். அவன் விரல்களின் இடுக்குகளில் கழுத்தைக் கொடுத்து, ஜீவனை இழக்காதே. பூவானத் தேரின் முன் அமர்ந்து அவன் பேசும் சொற்களின் இனிமையில் பூத்திடும் எனக்குள் காதலின் பெரும் விடியல். குளிரோடையின் ஈரத்தில் நனைந்து நீராடுகையில், வெப்பம் பூக்கச் செய்யும் அவன் நினைவுகள்.

இருக்கும் ஒரு வாழ்வின் நாட்களின் நடை பயணத்தில் கூட வரும் அவனது கால்களில் ஒட்டிக் கொண்டு செல்ல, உன் தீண்டல் தேவையில்லை. மலர்களை நனைக்கையில் சிந்துகின்ற தேன் துளிகளின் சுவை அறிந்து கொள்ள எண்ணுகிறாயா? பச்சை ஆப்பிளைத் தூர எறிந்து விட்டு, அவனது வருகைக்குக் காத்திருக்கும் என்னுடன் சேர்ந்து கொள்.

அதோ அவன் வரும் ஒலி கேட்கிறதா? அவன் பேரைச் சொல்லி அழைக்கிறேன். கேள்.."

என் பேரைக் கூவி அழைத்தாய்.

காதல் காற்றில் ஒரு புகை போல் எழுகின்றது.

No comments: