Tuesday, February 12, 2008
எழுதிப் பார்க்க என் காதல்...!
இதை என்ன செய்வது என்றே தெரியவில்லை.
புதிய பேனா வாங்கி முதலில் எழுதிப் பார்க்க உன் பெயரை நினைக்க, முந்திக் கொண்டு தன் பெயரை எழுதிப் பார்த்துக் கொண்டது இது!
எங்காவது கையெழுத்துப் போட எழுதத் துவங்கினால், என் பெயரை எழுதாமல், தன் பெயரை எழுதி என்னை மாட்டி வைக்கின்றது இது!
நம் பேரை யாராவது கேட்டால், இனிஷியல் போல் தன்னைச் சொல்லச் சொல்லிப் பின், நம் பெயரைச் சொல்லாமல் மெளனமாக்கி விடுகின்றது இது!
'அந்திப் பொழுது', 'காலைக் காலம்' என்று எதை எழுதத் துவங்கினாலும், கருப் பொருளைக் கலைத்துப் போட்டு அவ்விடத்தில் பருப் பொருளாய் தன்னை அடைத்துக் கொள்கிறது இது!
கடற்கரையில், பூங்காக்களில், கோயில்களில் தன் வயப்பட்ட யாரைக் கண்டாலும், உற்சாகம் பெருக்கெடுத்துக் கொள்ளும் இதற்கு! தாவி என் முன்னால் வந்து நின்று எழுது என்னை என்று கட்டளை இடும்!
எங்காவது உன்னைப் போல் காதோர பொன் முடி, கழுத்தோரம் மென் தங்கச் சங்கிலி, சிவப்புப் பூ பதித்த பொன் வளை, வெள்ளியின் ஒலியை ஒலிக்கும் கொலுசுகளைக் கண்டால், கையில் பிடிக்க முடிவதில்லை இதை! தாவி ஓடிப் போகின்றது ஒரு குழந்தை போல்!
தனிமையின் இரவுகளில் அடைகாத்து வைத்திருந்தாலும், பகலின் வெம்மையில் உன்னைத் தேடிப் பார்த்துப் பின் மாலையில் சோகமாய்த் தலை கவிழ்ந்து இருக்கையில் இதன் கண்களில் இருந்து சிந்தும் இரு துளிகளைத் துடைப்பதற்கென்று கொடுக்க மாட்டாயா, முன்பு மோதிரம் அணிவித்த விரல்களை?
இரவு கவிழ்ந்த பின், உன் வருகைக்காக, ஒற்றை விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு ஊர்க்காவலன் போல் உன் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகின்றதே, உன் கனவுகளில் இதன் வாசனை அடிப்பதில்லையா?
பொன் ஜென்மங்களின் புதைந்த நினைவுகளின் மீது, இப்போதும் தங்க முட்டையென வீற்றிருக்கும் இதன் கால் தடங்களை நனைப்பதற்கேனும் ஒரு மழையென நீ வராது போனால், கண்கள் குழிந்து, உடல் கவிழ்ந்து மரித்துப் போன குயிலின் சாம்பல் இறக்கையென காற்றில் படபடத்துக் கொண்டே இருக்கும், என் காதல்....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment