Wednesday, November 12, 2008

திருக் குற்றாலக் குறவஞ்சி - 2.

ட்டியக்காரன் வரவு

1.
தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர்
பார்கொண்ட விடையி லேறும் பவனியெச் சரிக்கை கூற
நேர்கொண்ட புரிநூன் மார்பும் நெடியகைப் பிரம்பு மாகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான்.


திருக் குற்றாலத்தில் வசிக்கின்ற ஈசன் பவனி வரப் போகிறார். அவர் சாதாரணமாகவா வருவார்? மகா நந்தியின் மீதல்லவா ஏறி வரப் போகிறார். அப்போது வீதியில் கலகலவென மக்கள் கூட்டம் இருந்தால் அவருக்கும் சிரமம்; மக்களுக்கும் சிரமம். வீதியைக் கொஞ்சமாவது ஒழுங்குபடுத்த வேண்டாமா..? நாயகர் வரப் போவதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டாமா..? அவரவரும் தத்தமது உலக வேலைகளில் மூழ்கி இருந்து, இறைவனையே மறந்திருக்கும் போது, அவன் வருகையை நினைவூட்ட ஒருவன் வருகிறான். அவன் தான் கட்டியக்காரன்.

அவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும்? சாதாரண ஆளாக இருந்தால் போதுமா..? இடி முழக்கக் குரல் இருக்க வேண்டுமல்லவா..? அவன் முனகல் போல சொன்னால், ஒருவருக்கும் ஒன்றும் கேட்காமல், 'ஏனப்பா..? என்ன விபரம்..?' என்று கேட்கும் அளவிற்கு வைத்துக் கொள்ளலாமா..? கூடாது அல்லவா..?

அவன் எப்படி இருக்கிறான் என்றால், மார்பில் நூல் அணிந்து, கைகளில் நீண்ட பிரம்பும் கொண்டு, கருமையான முகிலும், கர்ஜிக்கும் சிங்கம் போல் வருகிறான். கரும் மேகத்தின் இடியோசை அவன் குரல். சிங்கத்தின் கர்ஜனை அவனது முழக்கம்.

நீண்ட பிரம்பு எதற்கு..? கூட்டத்தின் கவனத்தைக் கவர்வதற்கு!

விடை = நந்தி; ஏறு = சிங்கம். அன்ன = போல.

இராகம் - தோடி, தாளம் - சாப்பு.

2.
கண்ணிகள்.

1. பூமேவு மனுவேந்தர் தேவேந்தர் முதலோரைப்
புரந்திடிஞ்செங் கோலான் பிரம்புடையான்

2.மாமேருச் சிலையாளர் வரதர்குற் றாலநாதர்
வாசற் கட்டியக்காரன் வந்தனனே.


அந்தக் கட்டியக்காரன் யாருடையவன்? மன்னர்கள், தேவர்கள், அவர்தம் தலைவர் ஆகியோரைக் காக்கின்ற செங்கோல் கொண்டவன்; பாம்புகளை உடையவன். அவன் மிகப் பெரிய மேருமலை போன்றவன். வரதன். குற்றாலநாதர். அவருடைய வாசலில் இருக்கும் கட்டியக்காரன் வருகிறான்.

பூமேவு, மாமேரு - பாடுவதற்கேற்ற இலகு.


திரிகூடநாதர் பவனி வருதலைக் கட்டியக்காரன் கூறுதல்

விருத்தம்
3.
மூக்கெழுந்த முத்துடையா ரணிவகுக்கும் நன்னகர மூதூர் வீதி
வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந் கரங்காட்டும் வள்ள லார்சீர்த்
தேக்கெழுந்த மறைநான்குஞ் சிலம்பெழுந்த பாதர்விடைச் சிலம்பி லேறி
மேக்கெழுந்த மதிச்சூடிக் கிழக்கெழுந்த ஞாயிறுபோல் மேவினாரே.


மேற்கிலே உதிக்கின்ற சந்திரனைத் தலையில் சூடிக் கொண்டு, கிழக்கில் எழும் சூரியன் போல் வருகிறார். எங்கே..? இந்த நல்ல நகர வீதிக்கு. அடேயப்பா..! எப்படிப்பட்ட வீதி இது..! முத்துக்கள் பதித்த மூக்குத்தி அணிந்த மக்கள் இங்குமங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியைக் கொடுத்த குறுமுனி வசித்த பொதிகை மலை அருகில் இருக்கிறது. தமிழ் வளர்ப்பவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும் வள்ளல்கள் பலர் வாழ்கிறார்கள். இப்பேர்ப்பட்ட வீதிக்கு, நந்தியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாய் இருக்க, ஈசர் வருகிறார்.

பாடலில், தமக்கு ஆதரவு தரும் வள்ளல்களைப் போற்றிப் பாடியிருக்கிறார் போலும்! தூத்துக்குடி குற்றாலத்திற்குப் பக்கம் தானே..! முத்துக்களுக்கா பஞ்சம் இருக்கப் போகின்றது..?


இராகம் - பந்துவராளி, தாளம் - சாப்பு

4.
பல்லவி

பவனி வந்தனரே மழவிடைப் பவனி வந்தனரே

அநுபல்லவி

அவனிபோற்றிய குறும்பலாவுறை மவுனநாயகர் இளமைநாயக்ர்
சிவனுமாயரி அயனுமானவர் கவனமால்விடை அதனிலேறியே

(பவனி)

விடை என்றால் நந்தி. மழவிடை என்றால் என்ன..? குறும்பலாவுறை என்றால்...?

உலகமே போற்றுகின்ற மெளன நாயகர். பின்னே, யோகேஸ்வரன் அல்லவா..? இளமை நாயகர். கல்பகாலமும் தியானமும், யோகமும் செய்கின்ற தட்சிணாமூர்த்தி அல்லவா..? தேஜஸும், இளமையும் பொங்கும் நாயகன் அல்லவா? இவன் யார்..? சிவனும் இவரே..! ஹரியும் இவரே..! பிரம்மாவும் இவரே..! அத்தகைய நாதர் நந்தி மீதேறி பவனி வருகிறார்.

சரணங்கள்

1.
அண்டர் கூட்டமு முனிவர் கூட்டமும்
அசுரர் கூட்டமு மனித ராகிய
தொண்டர் கூட்டமும் இமைப்பி லாரெனச்
சூழ்ந்து தனித்தனி மயங்கவே
பண்டை நரரிவர் தேவ ரிவரெனப்
பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும்
மண்ட லீகரை நந்தி பிரம்படி
மகுட கோடியிற் புடைக்கவே
(பவனி)


வீதியில் வசிப்பவர்கள், முனிவர்கள், அசுரர்கள், தொண்டர்கள்... இத்தனை பேரும் சூழ்ந்து கொள்கிறார்கள். அவனைச் சூழ்ந்து ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தக மயங்கிச் சொல்லிக் கொள்கிறார்கள். தமக்குள் தோன்றும் எண்ணங்களை எல்லாம் மறந்து, இவர் ஆதி நாதரா, தேவரா என்று தமக்குள் பேசிக் கொண்டிருக்க, நந்தியில் ஏறி வருகிறான்.

மண்டலீகரை நந்தி பிரம்படி மகுட கோடியிற் புடைக்கவே - என்ன சொல்கிறது..?


2.
தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரம்
தரித்த சுடர்மழு விரித்த தொருகரம்
எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம்
இலங்கப் பணியணி துலங்கவே
அடுத்த வொருபுலி கொடுத்த சோமனும்
ஆனை கொடுத்தவி தானச் சேலையும்
உடுத்த திருமௌங் கசைய மலரயன்
கொடுத்த பரிகல மிசையவே.
(பவனி)


ஈசன் அலங்காரம் தான் என்ன..? பக்தர்களுக்கெல்லாம் தீயன வராமல் தடுக்கின்ற ஒரு கரம், நல்லன எல்லாம் கொடுக்கின்ற ஒரு கரம். ஒரு கரத்தில் மழுவின் மேல் சுடர் ஜொலிக்கிறது. சும்மா ஜொலிக்குமா அது..? நான்கு திசைகளிலும் பரவி தகதகக்கிறது. எனவே அது 'விரித்த சுடர்மழு'! மிச்சம் இருக்கும் மற்றொரு கையில் சூலம். இவை தான் அவனது அலங்காரங்கள். புலித்தோல் தான் அவனது அரையாடை. இவை எல்லாம் அணிந்து, மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரம்மன் கொடுத்த குதிரை கூட வர, நந்திமேல் பவனி வருகிறான்.

எந்நாட்டவர்க்கும் இறைவனது அலங்காரங்கள் தான் எத்தனை எளிமை...! சும்மாவா, சுடலையாண்டி அல்லவா...?


3.
தொடரு மொருபெருச் சாளி யேறிய
தோன்றற் செயப்படை தாங்கவே
அடல்கு லாவிய தோகை வாகனத்
தரசு வேல்வலம் வாங்கவே
படலை மார்பினிற் கொன்றை மாலிகை
பதக்க மணியொளி தேங்கவே
உடைய நாயகன் வரவு கண்டுகண்
டுலகெலாந் தழைத்தோங்கவே.
(பவனி)


கூட யாரெல்லாம் வருகிறார்கள்..? பெருச்சாளி மீதேறி மூத்தவன் வருகிறான். தோகை மயங்கி, மயங்கி ஆட அதில் வேல் பிடித்த ஓர் அழகன் வருகிறான். மார்பினில் கொன்றை மலர்கள் பதித்த மணிகள் மின்ன மின்ன ஈசன் வரும் போது, கண்டவர் எல்லாம் களிப்படைகின்றனர்.

படலை மார்பு என்றால் என்ன..? படர்தல் என்ற வினைப்பெயரா..? பரந்த மார்பு என்பதைச் சொல்கிறதா..?

மயிலுக்குத் தோகை விரித்தாட தடையா என்ன..? குற்றால மலை..! மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி..! குறிஞ்சித் தலைவன் யார்...? குன்றெல்லாம் குடியிருக்கும் குமரன் அல்லவா..? பின்னே... மயிலின் குதூகலத்திற்கு குறைவு இருக்குமா என்ன...?


4.
இடியின் முழக்கொடு படரு முகிலென
யானை மேற்கன பேரிமு ழக்கமும்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
துதிக்கை யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை
அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ்த்திரு முறைக ளொருபுறம்
மறைக ளொருபுறம் வழங்கவே.
(பவனி)


அடடடடா...! ஈசன் வரும் போது ஆரவாரமான மகிழ்ச்சியான சத்தங்கள் தான் என்னென்ன..? கோலாகலமும், குதூகலமும் அல்லவா அங்கே கரைபுரண்டு ஓடுகின்றன...!

இடி முழங்குவது போல் பேரிகை முழக்கமிடுகின்றது. எங்கிருந்து..? மிதக்கின்ற பெரிய கரு மேகம் போல் யானை மேலிருந்து! உயரத்தில் இருந்து வருகின்ற முழக்கம், கீழிருப்பவர்களுக்கு வானில் இருந்து மேகங்கள் தான் 'டமார் டமார்' என மோதிக் கொண்டு எழுப்பும் சத்தமோ என்ற சந்தேகத்தைத் தருகின்றது. அது மட்டுமா..? மற்ற பல யானைகளின் பிளிறல்களும், எல்லாத் திசைகளிலும் புகுந்து புகுந்து பெருஞ் சத்தம் போடுவதால், யானைகளின் துதிக்கை கொண்டு தமது காதுகளை அடைத்தார்ப் போல் இருக்கின்றது. ஆனால் அப்படி ஈசன் பெருமை உள்ளே சென்று உவப்பு தராதவாறு, அடைத்தவாறு இருக்க விடுவார்களா அடியவர்கள்..? அவர்கள் தமது கூட்டமான பெருங்குரலில் திருப்பல்லாண்டு பாடி செவி அடைப்பைத் திறக்கிறார்கள். இப்படி மாறி மாறி செவி அடைத்து திறந்து கொண்டிருக்க, போதும் போதாதற்கு மூவர் தேவாரத் தமிழ் மறைகளையும், நான்கு வேதங்களையும் மற்றொரு புறம் வேறு சில அடியவர்கள் உச்சஸ்தாயில் பாடிக் கொண்டு வர... சுற்றுப்புறமே 'சலார் புலார்' என்று மந்திர மயமாக இருக்க, ஈசன் பவனி வருகிறான்.

4 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு....
கட்டியக்காரனுக்கே இவ்வளவு பில்டப்பா...?
//குறும்பலாவுறை என்றால்...?//
ஏதாவது பலா மரத்துல வசித்தவரோ... அதுக்கும் கூட ஏதாச்சும் கதை வச்சுருப்பாங்க நம்மாளுங்க...
அல்லது 'குறும்பலாவில என்ன இருக்கும் ? தித்திப்பு...
தித்திப்பானவன்னு சொல்ல வர்றாங்களோ என்னவோ?
//நந்தி பிரம்படி
மகுட கோடியிற் புடைக்கவே//
நந்தியின் முன் நெற்றி(மகுடகோடி)
, பிரம்பில் அடிபட்டுப் புடைத்திருக்குமோ என்னவோ...?
கடைசிப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது வசந்த்...
தமிழ் சினிமால ஹீரோ ஓப்பனிங் சாங் மாதிரி...நல்லா பரபரப்பா கண்முன்னால காட்சிகள் விரிஞ்சது....
எல்லாப் பாடல்களுக்கும் பொருள் நல்லாக் கொடுத்துருக்கீங்க...
பாடல்கள் எண்ணிக்கையைக் குறைச்சு இன்னும் தெளிவாக் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்குமோ....?மோ....?

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

பின்னே... கட்டியக்காரன் என்றால் சும்மாவா...? 'பராக்...பராக்...பராக்' சொல்பவர் இல்லையா...? அதுவும் பெருமானுக்கே கட்டியம் சொல்பவர் என்றால்...! அவர் சொல்லாமல் ஈசனே வெளியே வர முடியாது. அவருக்கு இவ்வளவு கூட சொல்லாவிட்டால் எப்படி...!

***

சிந்திக்கும் போது இப்போது தோன்றுகிறது. 'அவனிபோற்றும் குறும்பலாவுறை' = உலகம் போற்றும் திருவிளையாடல்களின் நாயகன் அல்லவா..? கி.பி.1700க்குள் அத்தகைய விளையாட்டுக்களை எல்லாம் நடத்தி முடித்து விட்டு, இப்போது மெளனமாக அமர்ந்திருக்கிறான்.

தித்திப்பானவன் என்பதில் ஐயம் ஏதாவது உண்டா..?

***

நந்தி பற்றிய வரிகளில் குழப்பம் இருப்பதால், skip.

ஒரு நாளைக்கு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டு தெரிந்த அளவிற்கு அழகாக கொஞ்சம் கற்பனை கலந்து சொல்லலாம் என்று தான் நினைத்திருக்கிறேன். தெரியாத வரிகளைத் தெரியவில்லை என்று ஒத்துக் கொள்வது நல்லது. தப்பாகச் சொல்லி விடக் கூடாது அல்லவா..?

இனிமேல் அழகு மங்கையரும், வசந்தவல்லியும் வரப் போகிறார்கள், பாருங்கள். பாடல்கள் பாடுவதற்கு ஏற்பச் சுவையாக இருக்கின்றன.

thamizhparavai said...

ஐந்து பாடல்கள் ஓ.கே.. நீங்களே எல்லாவற்றையும் விளக்குவதைவிட தெரியாததை எங்கள் சிந்தனைக்கு விட்டது மிகவும் சிறப்பு வசந்த். என்னையும் சிந்திக்க வைத்துவிட்டதல்லவா...?
அழகு மங்கையருக்காக வெயிட்டிங்....

இரா. வசந்த குமார். said...

அன்புத் தமிழ்ப்பறவை...

அப்படியே வர்ணித்து எழுதி இருக்கிறார், ராசப்பக் கவிராயர்...! படிக்கப் படிக்கத் தேன். காத்திருங்கள், அடுத்த பதிவிற்கு! பொறுமை இல்லையெனில், சொன்ன தளத்திற்குச் சென்று இறக்கிப் படித்துப் பாருங்கள்...!