Wednesday, February 13, 2008

என்ன பெண்ணடி நீ?



பிடி.. பிடி.. அதோ ஓடுகின்றது பார்!

ஆம், நீ குத்தி விட்டு, பார்வைகளால் கொத்தி விட்டதனால் வழிந்தோடுகின்ற என் இரத்தத் துளிகள் தாம் இவை. பாரேன், அதுவும் என் இதயத்தின் வடிவிலேயே ஓடுகின்றது!

என்ன திமிரடி உனக்கு? குருதியில் உறங்கிக் கொண்டிருந்த காதலை எழுப்பி விட்டு எப்படி ஒய்யாரமாய் நிற்க முடிகின்றது உன்னால்? துளித் துளியாய் உருண்டோடுகின்றது, பிடி..பிடி!

நீ சேர்த்து வைத்துக் கொள். உன் படுக்கையில் தெளித்துக் கொள்ளத் தேவைப்படலாம்.

என்னடி எடுத்து சுவைத்துப் பார்க்கிறாய்? இனிப்பாய் இருக்கிறதா? தினம் உன் பெயரைச் சொல்லிப் பார்த்து ஓடுகின்ற துளிகள் வேறெப்படி இருக்கும்?

நீ அதன் நிறத்தில் தான் இருக்கிறாய் என்று வெள்ளை அணுக்களும், சிவப்பணுக்களும் தினம் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. இதோ, இப்பொது எட்டிப் பார்த்து உன்னிறம் கண்டு வெட்கித் தலை கவிழ்ந்து கூறிக் கொண்டன, 'நல்ல வேளை போட்டியிட்டுப் பெருமிதப் பட்டுக் கொள்ள, பொன் மஞ்சள் அணுக்கள் இல்லை'.

இதயத் துணுக்குகளின் இடைவெளியில் நுழைந்த பின், என்ன செய்வது என்று திணறிய என் நினைவுகள் இன்று விடுதலை பெற்று விட்டன.

எங்கே சென்றது இவன் உறக்கம் என்று கேள்வி கேட்டுக் குழம்பிய மூளைக் கீறல்கள், இன்று அதன் விடை கண்டன.

உன்னையே மொய்த்துக் கொண்டிருந்த இந்த சிவப்புத் துளிகள், இன்று ஈ மொய்க்கச் சிந்தி இருக்கின்றன. எடுத்துக் கொள்.

அட, எறும்புகள் கூட எட்டிப் போகின்றன. அள்ளிப் போட்டுக் கொள் உன் கைப்பையில்!

காய்ந்து போன பின், உன் கண்ணீரால் கழுவிப் பார். ஈரம் வந்து இருமி என் நிலைமை சொன்னாலும் சொல்லலாம்.

என்ன சொல்லியும் கேளாமல் போகின்றாயே... என்ன பெண்ணடி நீ..!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

2 comments:

thamizhparavai said...

அடடா... இதுவும் இரத்தமும்,இதயமுமாக இருக்கிறதே... தற்பொழுது இதய்ம் பலகீனமாக இருக்கிறது.பிறிதொரு சமயம் படித்துக் கொள்கிறேன்.
என்ன வசந்த்..'வாவா வஞ்சி இளமானே' பாடலா? எனக்குக் கேட்கவில்லையே...? ஓ.. அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஃபைன்ட்யூன் செய்யப் பட்டுள்ளதா...?!

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

பொறுமையாகப் படிங்க..! காதலின் உள்ளே எப்போதும் ஒரு வலி இருக்கும்...! சீரக மிட்டாய் போல...! கடைசியில் காதலும் 'ச்சீ ரகம்' ஆகி விடும். :)

வா வா வஞ்சி இள மானே உங்கள் மனதிற்குள் ஓடுகின்றது அல்லவா..? அது மதி!