Monday, March 17, 2008

உப்புக் காற்றில் உன் அருகில்...!தூரத்தில் போகின்ற புள்ளிக் கப்பல்களின் விலகல்களின் எதிரொலிகள் அதிர்கின்ற கடலடி.

பூநுரைகளின் புதையல்கள் மிதக்கின்ற கரையோரம் பதித்துள்ள பாத ஓவியங்களின் மேலெங்கும் நிறைகின்றது கடல் ஈரம். நீல வானோடு முத்தமிடும் நீண்ட எல்லைக் கோடுகளைக் கடக்கின்றன கரும்புகை கக்கிக் கொண்டு இரும்பு பேருடல்கள்.

தொலைக் கிழக்கின் மஞ்சள் மேனி கரைத்து, எதிர்ப்புறம் உருள்கின்றது பூமி. நிழல் போல் எதிர்பாராமல் எட்டிப் பார்க்கின்ற கருமேனி மேகங்களின் பின் ஒளிந்து கொண்டு விளையாடுகின்றது செவ்வுருண்டை.

சில்லென்று இருக்கிறதல்லவா விரல்கள்?

துகள்கள் தூவிய மணற்பரப்பெங்கும் ஆயிரமாயிரம் பாதப் பதிவுகள். எங்கிருந்து, எப்போதிருந்து பதியத் தொடங்கி இருக்கும் அவை?

சென்ற வருடத்தில் நாம் இணைந்து பதித்த முதற்பதிவு இந்நேரம் இருக்குமா?

படபடத்துப் பறக்கின்ற புறாக்கள் நிரம்பிய தேவாலயத்தின் முன் வாசலின் முகப்பெங்கும் துடிதுடித்துக் கொண்டே இருக்கின்றன சின்னச் சின்ன ஒளித் துணுக்குகளைச் சுமந்து கொண்டிருக்கும் மெழுகுகள். எல்லை கட்டிய கார்த் தார் சாலையின் அதட்டலையும் தாண்டி, அவ்வப்போது எட்டிப் பார்த்துத் தான் செல்கின்றது ஈரக்காற்று.

வீச்சைச் சுமந்த உப்புக் காற்றில் உன் அருகில் நின்றிருக்க தலை கலைத்துப் போகின்றது மென் சூட்டில் பொறிகின்ற காற்றின் உவர்ப்புத் துகள்கள். இரகசியமாக நம் காதுக்குள் சொல்லிச் செல்கின்ற சில சப்தங்களின் மெளனங்களால் கட்டமைந்த வெண் சங்கின் தியான ஒலியைக் கேட்டபடி நிற்கிறோம். உடலின் உள்ளெங்கும் பரவி விசிறுகின்றது பேரொலி. ஓயாப் பேரலைகளால் நம் காலடிகளைக் கழுவிச் சென்று கொண்டே இருக்கிறது களைப்பறியா கடலலை. பாதத்தின் கீழ் மணலைத் தன்னோடு அழைத்துச் செல்கின்றது அலை.

மெல்ல மெல்லக் கவிழ்ந்து வருகின்றது முன்னிரவு.

ஒன்றும் பேசாமல், மெளனத்தால் நாம் பரிவர்த்தனை செய்து கடலைப் பின்னோக்கித் தள்ளி நடக்க, நாம் விட்டுப் போகின்ற மிச்சமிருக்கும் கால் தடங்களை பெரும்பசியோடு தின்னப் பாய்ந்து வருகின்றது நீர்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

4 comments:

தமிழ்ப்பறவை said...

கண்முன் தெரிந்த கடல்(காதல்) காட்சி. வர்ணனை அழகு. உங்கள் 'டச்' கம்மி, பதிவில்தான்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள். இது போன்ற சரியான விமர்சனங்களையே எதிர் நோக்குகிறேன்.

தமிழ்ப்பறவை said...

கண்டிப்பாக.. நான் சொன்னது சரிதானே...உங்கள் பதிவுகள் படித்து முடித்ததும்,பின்னூட்டத்தில் என்னை எதையாவது எழுதத் தூண்டும்.அப்படி இல்லையேல் ஒன்று பதிவின் நிகழ்வு என்னைப் பாதிக்கவில்லை அல்லது பதிவே பாதிக்கவில்லை என என் எண்ணம்.
இத்ற்கு முன் உங்களின் வேறு சில கவிதைகளும் படித்து விட்டு வந்தான். பின்னூட்டமிட மனமில்லை.பெயர் கூட மறந்துவிட்டது.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

அப்படி பாதிக்காத வகையில் எழுதுவதைக் குறைத்துக் கொள்ள முயல்கிறேன்.