Tuesday, March 18, 2008
H2SO4.
குளிரூட்டப்பட்ட அறையின் காற்றில் 'கம்'மென்ற சத்தம் கலந்திருந்தது.
விகாஸ் க்ரூப் வைஸ் சேர்மன் விகாஸ் தன் பொன்னிறக் கண்ணாடியை உயர்த்திக் கொண்டார். எதிரே வெண்மையாய் இருந்த பிளாஸ்டிக் திரையைக் கவனித்தார். இடது ஓரத்தில் ப்ரொஃபஸர் ரஞ்சன் குப்தா நின்றிருந்தார். நேரம் இரவு எட்டு மணியை எட்டிக் கொண்டிருந்தது. இடம் டெல்லியின் புறநகர்ப் பகுதி. விகாஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆர் அண்ட் டி லேப்.
"குப்தா! உங்களுக்கு என் நேரத்தின் மதிப்பு தெரியும். ஒரு புதிய கண்டுபிடிப்பிற்காக என்னை அழைத்துள்ளீர்கள். கொஞ்சம் விரைவாக கூறினால், நலம்.."
குப்தா என விளிக்கப்பட்டவர், குரலை மெல்ல கனைத்துக் கொண்டார். காலரில் பொருத்தியிருந்த மைக்கை சரி செய்து கொண்டார். பிளாஸ்டிக் மூடியை அகற்றி, கண்ணாடி டம்ளரில் இருந்து நீர் அருந்திக் கொண்டார். புரொஜெக்டரை ஆன் செய்து, திரையில் விழுந்த பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளை லேசர் புள்ளியால் ஒற்றி எடுத்து பேசினார்.
அறுபத்தைந்து என்று சொல்லத்தக்க வயதைக் கொண்டவர் என்பது பளபளவென மின்னிய முன் வழுக்கையில் தெரிந்தது. வெண் நிற ஃபுல் ஹேண்ட் சட்டையை பழுப்பு நிற பேண்டில் டக் இன் செய்திருந்தார். சம்பந்தமேயில்லாத பூ போட்ட சிவப்பு நிற டையை அணிந்திருந்தார்.
"இப்ப நான் சொல்லப் போற கண்டுப்பிடிப்பு நம் கம்பெனியின் இலாபத்தை பல மடங்காக்குகின்ற ஒன்று. எஸ். இது வரைக்கும் நம்ம வாட்டர் பிஸ்னெஸ்க்காக எல்லா ரிவர்ஸையும் டார்கெட் பண்ணி, ஃபாக்டரி வெச்சு, சுத்திகரிச்சு, பாக்கெட், பாட்டில் வாட்டர் ஸேல் பண்றோம். இதுக்கு பல பல பிரச்னைகள். கவ்ர்ன்மெண்ட், என்விரோன்மெண்டல் டிபார்ட்மெண்ட், உள்ளூர் மக்கள், பொலிட்டிகல் சைட் இப்படி பல. அதுக்கு பதிலாக இப்ப நாம பண்ணப் போற ப்ராடெக்ட் தண்ணிக்காக ரிவர்ஸை நம்பாம வேற வாட்டர் ரிஸோர்ஸை எடுத்துக்கப் போறோம்..."
விகாஸ் நிமிர்ந்து உட்கார்ந்தார். "கோ அஹெட்.."
"பாலைவனத்தில மழை பெய்யறது ரொம்பக் கம்மி. அதனால அங்க வளர்ற தாவரங்கள் தங்களோட சர்வைவலுக்காக கிடைக்கிற கொஞ்ச தண்ணியை சேர்த்து வெச்சிக்கும். அதே மாதிரி ஆப்ரிக்கா, செளத் அமெரிக்கா காட்டுப் பகுதிகள்ல இருக்கிற சில படர் தாவரங்கள் பெய்யற மழையை சேர்த்து வெச்சிக்கும். அதைப் பத்தி நேச்சர்ல கூட வந்திருக்கு. (டீப்பாயில் இருந்த நேச்சர் பத்திரிக்கையை லேசர் புள்ளி சுட்டியது.) அது தான் நம்ம டார்கெட். அதுக்காக நாம அதை எல்லாம் அழிக்கப் போறதில்லை. சல்ஃபியூரிக் ஆசிட்டுக்கு டீஹைட்ரேட் ப்ராபர்ட்டி இருக்கு. அது கூட இன்னும் சில கெமிக்கல்ஸ் கலந்து பெளடர் ஃபார்மெட்டுக்கு கொண்டு வந்து இந்தக் காடுகள்ல தூவினா அந்த தாவரங்கள் சேர்த்து வெச்சிருக்கற வாட்டர் அப்படியே உறிஞ்சிடும். ஆப்போஸிட் காம்பினேஷன்ல இன்னொரு கெமிக்கல் பவுடர் வெச்சு இந்தத் தண்ணி யெல்லாம் நாம எடுத்துக்கலாம். இதுக்கு ஆகற செலவு கம்பேரிட்டிவ்லி ரொம்ப கம்மி. இது மாதிரி டன் கணக்கில செடிகள் அந்தக் காட்டுப் பகுதிகள்ல இருக்கு. ஸோ... அந்த கெமிக்கல்ஸை தயரிச்சுத் தந்திடற வேலை என்னுடையது. இதிலிருந்து நீங்க எதிர்பார்க்கறது..."
"ஹை ரிட்டர்ன்ஸ்...!" கட்டை விரலை உயர்த்தி, புன்னகையோடு எழுந்து கொண்டார் விகாஸ்.
"பல்ராம்..! இன்னும் ஒரு ஆஃப் அன் அவருக்கு யாரையும் அலோ பண்ண வேணாம்.." இண்டர்காமில் உத்தரவிட்டு விட்டு தன் சீட்டில் சாய்ந்து கொண்டார் ரஞ்சன் குப்தா.
கண் மூடி சிந்தனையில் ஆழ்ந்து கொண்டார்.
15 நிமிடங்களில் இண்டர்காம் கிணுகிணு.
"எஸ்..!" பட்டனைத் தட்டி.
"சாப்..! உங்களைப் பார்க்க குணானு ஒருத்தர் வந்திருக்கார்..." பல்ராம்.
சட்டென வியர்வை முத்துக்கள் பூத்த நெற்றியை கைக்குட்டையால் தடவிக் கொண்டார் குப்தா.
"கூட யாராவது வந்திருக்காங்களா..?"
"இல்லை சாப்..!"
"ஓ.கே. அல்லோ ஹிம்.!"
சற்று நேரத்தில் அந்த குணா என்பவன் உள்ளே வந்தான்.
கொஞ்சம் தேசலான உடல். சொர சொரப்பாய் வளர்ந்திருந்த சில நாள் தாடி. காற்றில் கலைந்திருந்த சுருள் முடிகள். கைகள் மடக்கி விட்டிருந்த கட்டம் போட்ட சட்டை. வெட வெடப்பாய் படபடத்த பேண்ட். கண்களில் இப்போதே 'உன்னைக் கொலை செய்து விடுவேன்' என்ற கோபம் இருந்தது. உற்றுப் பார்க்கையில் கொஞ்சம் அறிவு ஒட்டி இருந்த நெற்றியைப் பார்க்கையில் டெல்லி யூனிவர்சிடியின் ஆராய்ச்சி மாணவன் என்று சத்தியம் செய்யலாம்.
ஆம. அவன் மாணவன் தான்.
"வாங்க மிஸ்டர் குணா..! குணா தானே..?"
"விளையாடாதீங்க சார்..! நான் தான் குணானு உங்களுக்குத் தெரியாதா. ஐ கம் டு தி பாய்ண்ட் ஸ்ட்ரெய்ட்ட்லி! ஒழுங்கா என்னோட ரிசர்ச் பேப்பர்ஸை குடுத்திடுங்க. நான் போய்க்கிட்டே இருக்கேன். அதர்வைஸ் ஐ வில் கால் போலிஸ்..."
"என்னப்பா சொல்ற..? எனக்கு நீ யார்னே தெரியாது. நான் யார்னு தெரியுமா உனக்கு? அம்ரிஸ்டர் யூனிவர்ஸிடில ப்ரொபஸரா இருந்திட்டு, இப்போ நீ நின்னுட்டு இருக்கிற விகாஸ் ஆர் அன்ட் டி லேப்ஸ் சீஃப் சயின்டிஸ்ட். என்கிட்ட விளையாடாதே. நல்ல டாக்டரா போய்ப் பாரு.."
"யூ சீட்..! உனக்கு மரியாதை குடுத்துப் பேசினதே தப்பு. என்னோட ஆராய்ச்சிப் பேப்பரைத் திருடிட்டு வந்திட்டு அதை வெச்சு பேர் வாங்கலாம்னு பாக்கறியா? அது மட்டும் இல்ல. என்னோட ப்ராடெக்ட் கெமிக்கல்ஸையும் திருடிட்டு வந்திருக்க. உன்னை.." குப்தா மேல் பாய்ந்தான் குணா.
"பல்ராம்..!" இண்டர்காமில் விரல் பதித்தவாறே கத்தினார் குப்தா.
வாசலிலேயே காத்திருந்த பல்ராம் உள்ளே ஓடி வந்தான்.
அதற்குள் குணா குப்தாவின் கழுத்தை இறுக்கத் தொடங்கி இருந்தான். பல்ராம் போராடி அவனைப் பிரித்து, முகத்தில் இரண்டு குத்துக்கள் விட்டு வெளியே இழுத்துச் சென்றான்.
பாதி உடைந்த மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து, கீழே விழுந்திருந்த பேப்பர்களை அடுக்கி வைத்தார் குப்தா. கவிழ்ந்திருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டார்.
டெலிபோனை எடுத்து டயல் செய்தார். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு பேசினார்.
"குருதாஸ்!"
"ஆமா சார். என்ன சார் குரல் ஒரு மாதிரியா இருக்கு. எனி ப்ராப்ளம்...?"
"அந்த குணா இங்க வந்திருந்தான்யா..! ரிசர்ச் பேப்பரும் ப்ராடெக்டும் திருடினியானு கேட்டான். இல்லைன்னேன். மேலே பாய்ஞ்சு மூக்குல குத்தி, கழுத்தை இறுக்கி...ஒரே அடிதடியாகி களேபரம் ஆகிடுச்சு. எப்படி அவனுக்கு விஷயம் தெரிஞ்சுது?"
"என்ன..? எப்படி அவனுக்குத் தெரியும்? இட்ஸ் இம்பாஸிபிள். என் மேலே சந்தேகப்படறீங்களா நீங்க..?"
"இல்ல..! உன் மேல சந்தேகப் படுவனா? நீ இந்த மாதிரி எத்தனை தடவை நிறைய ரிசர்ச் பேப்பர்ஸ் திருடி வந்து குடித்திருக்க. அதை வெச்சு நான் ப்ராடெக்ட்ஸ் பண்ணி விகாஸ் இண்டஸ்ட்ரீஸ்ல லாபமா குவிச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கும் பங்கு தர்றேன். இது வரைக்கும் யாரும் கண்டுபிடிக்கல. இந்த தடவை எப்படி மிஸ் ஆகிடுச்சு.வி மஸ்ட் பி கேர் ஃபர்தர்."
"ஒருவேளை இந்த தடவை நாம கெமிக்கல் ப்ராடெக்டையே எடுத்திட்டு வந்திருக்கோம். அது அளவு குறைஞ்சதால சந்தேகம் வந்திருக்குமோ? அந்த குணா எமகாதகன் ஸார். எப்படியோ மோப்பம் பிடிச்சு உங்க வரைக்கும் வந்திருக்கான் பாருங்க. இனிமே நாம ஜாக்கிரதையா இருக்கணும்."
"இப்ப உடனே கிளம்பி வா இங்க. கொஞ்சம் பேசணும் உங்கிட்ட..."
இரு புறமும் ரிஸீவர் வைக்கப்பட்டது.
குணா இருள் படர்ந்திருந்த புதரில் இருந்து மெல்ல விழித்து எழுந்தான். கொஞ்ச நேரம் ஒன்றும் புரியாமல், பின் சடசடவென எல்லாம் நினைவுக்கு வந்தது. ஜிவ்வென்று ரத்தம் சூடாக பாய்ந்தது.
'போலீஸுக்கு போனால் அவன் பணத்தைக் காட்டித் தப்பி விடும் வாய்ப்பு இருக்கிறது. ஏதாவது செய்தாக வேண்டும் அவனை! யோசி.! யோசி..! முதலில் யூனிவர்சிடி சென்று ப்ரொபஸரிடம் இதைப் பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டும் பின் பார்க்கலாம்.'
கை தட்டி அழைத்தான். "ஆட்டோ..!"
"குணா..! என்ன இது இந்த நேரத்திற்கு வந்திருக்க..! என்ன பிரச்னை..?" ரிஸர்ச் ப்ரொஃபஸர் நாராயணன் கேட்டார்.
"ஸார்..! உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். கேக்கணும்.."
சட்டென நினைவு வந்தவராக, "நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். நீ ப்ரிபேர் பண்ணி வெச்ச கெமிக்கல் பெளடர் எல்லாம் எங்க இருக்கு?"
"சார்! அதைப் பத்தி தான் சொல்ல வந்தேன். அது வந்து.."
" நோ மோர் டைம் மை யங் மேன்! உடனடியா அந்த கெமிக்கல்ஸ் எல்லாத்தையும் அழிச்சாகணும். இப்ப தான் பார்த்தேன். நாம மிக்ஸ் பண்ணின காம்பினேஷன்ல மெத்தில் ஆல்கஹால் ரேஷியோ 0.5% அதிகம் ஆகிடுச்சு. நீ ப்ரிபேர் பண்ணின கெமிக்கல் பெளடரும் சல்பியூரிக் ஆஸிட்ல கலக்க ஆரம்பிச்ச 15 ஹவர்ஸ்ல பர்ஸ்ட் ஆகிடும். அதோட வெடிப்பு 2 கி.மீ. சுற்றளவில எல்லாத்தையும் பொசுக்கிடும்.வி ஹேவ் டு ஸ்டாப் இட். லேப்ல ஃபுல்லா தேடிப் பார்த்திட்டேன். நாம ப்ரிபேர் பண்ணின அளவை விட 50 கிராம்ஸ் கம்மியா இருந்தது. லேப்ல இருந்த கெமிக்கல்ல ஆப்போஸிட் பேஸ் கலந்து அதை அயனைஸ் குறைச்சு வெச்சிருக்கென். மீதி 50 கிராம்ஸ் எங்க..? உடனடியா அதை அயனைஸ் குறைச்சாகாணும். உன் ரூம்ல இருக்கா என்ன?"
குணா மெளனமாகப் புன்னகைத்தான்.
"எஸ் சார்..! நீங்க பேஸ் குடுங்க! நானே அயனைஸ் பண்ணிடறேன்."
"க்விக்..!" ப்ரொபஸர் ஒரு குடுவையில் மஞ்சள் நிறத்தில் சுருள் சுருளாய் கலங்கலாய் இருந்த கலவையைக் கொடுத்தார்.
குணா அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். யூனிவர்சிடியின் காம்பவுண்டு தாண்டி வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தான். கையில் இருந்த கலவையைக் கீழே ஊற்றினான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, மிச்சத் தீக்குச்சியை அதன் மேல் எறிந்தான். 'ஜிவுக்'என்று சிவந்த தீப் பிழம்பு தெறித்து அடங்கியது. திரும்பிப் பார்க்காமல் தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
'நாளை பேப்பர் வாங்கி பார்க்க வேண்டும்'.
"குருதாஸ்! இந்தக் கெமிக்கல் கொண்டு வந்து எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்?"
"பதினைஞ்சு மணி நேரம் ஆகப் போகுது! எதுக்கு கேக்கறீங்க சார்?"
"எதுக்குனா இதோட ப்ராபர்ட்டீஸ் என்ன டைம் ஸ்கேல்ல மாறுதுனு தெரியணும் அதுக்கு தான். சரி..! நீ இங்க இருந்து பார்த்துக்க. அந்த குணா எப்ப வேணா வர சான்ஸ் இருக்கு. நான் அங்க உட்கார்ந்து இந்தக் கெமிக்கல் பத்தி என்ன எழுதி இருக்குனு டாகுமெண்ட்ஸ் பாக்கறேன்.."
"ஓ.கே. சார்..!"
சல்பியூரிக் ஆஸிட்டில் கலந்திருந்த அந்த கெமிக்கல் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்திற்கு மாறிக் கொண்டே வருவதை குருதாஸ் பார்த்துக் கொண்டே இருந்தான். குடுவையில் மெல்லிய விரிசல் விழுந்தது.
****************************************************************
இந்தக் கதை எழுதுவதற்கு காரணமாய் இருந்த நிகழ்வைக் கூறா விட்டால், நரகத்தில் நாலு கோடி வருஷம் ரவா உப்புமா தின்னும் பாவம் வந்து சேரும் என்பதால் அந்நிகழ்வு.
ஏழாவது படிக்கையில் ட்யூஷனில் அறிவியல் சார் வெண் பாஸ்பரஸை எடுத்துக் கொண்டு வந்து காட்டினார். அது நீரில் மூழ்கி இருந்தது. அதை எடுத்துத் தட்டில் வைத்துக் காட்டி விளக்கி, டேபிளில் வைத்து விட்டு, திரும்பி போர்டில் அதைப் பற்றி எழுதினார். அவர் திரும்பி எழுதி, மீண்டும் எங்கள் பக்கம் திரும்பும் சைக்கிள் கேப்பில், ஒரு நண்பன் கொஞ்சம் வெண் பாஸ்பரஸை அள்ளி சட்டைப் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.
அறியாத மனசு..! புரியாத வயசு..!
வெண் பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் தீப்பிடிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிக.
The white phosphorus allotrope should be kept under water at all times as it presents a significant fire hazard due to its extreme reactivity with atmospheric oxygen, and it should only be manipulated with forceps since contact with skin can cause severe burns. (நன்றி : விக்கிபீடியா).
கொஞ்ச நேரம் கழித்து எல்லோரும் ட்யூஷன் முடிந்து கிளம்புகையில் அவன் புத்தகங்கள் கொண்டு தன் மேலுடம்பை மறைத்துக் கொண்டே வந்தான். என்னடா என பார்க்க, சட்டை, பனியன் எல்லாம் பொசுங்கி இருந்தது. நல்லவேளை பனியன் போட்டிருந்ததால், உடலில் ஏது தீக்காயம் படவில்லை.
இப்படி கெமிஸ்ட்ரியோடு விளையாடிப் பார்த்த நிகழ்ச்சிக்கு ஆச்சி மசாலா தடவி எழுதிய கதை தான் மேலே படித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கதை வழக்கம் போல் உங்கள் பாணியில் கலக்கல் வசந்த்...
ஆனால் குறை சொல்லாவிடில் என் மண்டை வெடித்து விடுமே...
//
"இல்ல..! உன் மேல சந்தேகப் படுவனா? நீ இந்த மாதிரி எத்தனை தடவை நிறைய ரிசர்ச் பேப்பர்ஸ் திருடி வந்து குடித்திருக்க. அதை வெச்சு நான் ப்ராடெக்ட்ஸ் பண்ணி விகாஸ் இண்டஸ்ட்ரீஸ்ல லாபமா குவிச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கும் பங்கு தர்றேன். இது வரைக்கும் யாரும் கண்டுபிடிக்கல. இந்த தடவை எப்படி மிஸ் ஆகிடுச்சு.வி மஸ்ட் பி கேர் ஃபர்தர்."
//
மேற்கண்ட பாரா கதைக்கு அநாவசியம். இதைப் படித்தவுடன் ராஜேஸ்குமார் கதைகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அதில்தான் இது போல் பழைய ஃப்ளாஷ்பேக் வரும்..
அப்புறம் //திரும்பிப் பார்க்காமல் தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.//
இதிலேயே கதை முடிஞ்சிடுச்சு...
ஆனா இதே கதையை இப்போ எழுதுனா இப்படித்தான் எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்..
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். இதுவும் ராஜேஷ்குமார் சாயல் இருப்பது தெரிந்து விட்டது. இருந்தாகும் கதை போகும் வரை போகட்டும் என்று இருந்து விட்டேன். இந்தக் கதையெல்லாம் திட்டம் போட்டு எழுதவில்லை. அந்த நேரத்தில் எழுத உட்கார்ந்து கதை தன்னைத் தானே பின்னிக் கொண்டு செல்வதை கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துச் சென்றேன். அது இப்படி பின்னி விட்டது. என செய்வது..?
இப்போது எழுதினால் எப்படி எழுதுவேன் என்பது தெரியவில்லை. இப்போது எழுதினாலும், இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து, 'இப்போது எழுதினால்..?' என்று கேட்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்தந்த மன பக்குவத்திற்கேற்றாற் போல் வருகின்றன.
Post a Comment