Sunday, March 16, 2008

மோக்ளி in uniform.

சீருடைகளில் மோக்ளியின் அனுபவங்கள் எத்தகையன?

4-ஆம் வகுப்பு படிக்கையில் சிண்ட்ரெல்லா நாடகம் பள்ளியின் ஆண்டு விழாவில் நடத்தப்பட்டது. அவள் நடன மேடையில் விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்புகிறாள். இளவரசன் அந்த ஒற்றைச் செருப்பை வைத்து சிண்ட்ரெல்லாவைக் கண்டு பிடிக்க முயல்கிறான். கண்டு பிடித்து விடுகிறான். அவனும், அவனது பாதுகாப்பு வீரர்களும் அவளது சித்தி வீட்டில் இருக்கும் அவளைக் கண்டுபிடித்து மணந்து கொள்கிறான். They lived happily thereafter.

இதில் இளவரசனோடு போகின்ற பாதுகாப்பு வீரர்களில் இரண்டாவது வரிசையில் இடது மூலையில் அந்த ஒற்றைச் செருப்பைப் பிடித்துக் கொண்டு வந்தான் மோக்ளி. அது ஒன்றும் பெரிய செருப்பு இல்லை. பள்ளியில் அணிகின்ற கருப்பு லேஸ் ஷூ.துவைக்காத சாக்ஸின் கப்புடன் அதைக் கையில் பிடித்து பாதுகாப்பு கூட்டத்தின் தலைவனின் பின்னால் வந்தது தான் மோக்ளியின் முதல் சீருடை அனுபவம்.

பச்சை நிறத்தில் மேலே ரெண்டு, கீழே ரெண்டு என்று நான்கு பாக்கெட்டுகள். தோள் பட்டைகளில் வெள்ளை நட்சத்திரங்கள் மூன்று. இடது தோள் பட்டையின் இடையில் புகுந்து, பாக்கெட்டின் வழியாகச் சுற்றி ஒரு முடிச்சு போட்டு, பாக்கெட்டிலேயே செருகிக் கொள்கின்ற விசில். அதே பச்சை நிறத்தில் பேண்ட். டைட்டான பெல்ட். போதுமா? அனைத்திற்கும் மகுடம் போல் அதே பச்சை நிறத் தொப்பி. அதில் ஏதோ பேட்ச் வேறு இருந்தது.

இப்படி ஒரு கெட்டப்புடன் கையில் அழுக்கடைந்த ப்ளாக் ஷூவைப் பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? அது தான் அன்றைய இரவில் மோக்ளியின் நிலை.

இதில் இத்தனை கெட்டப்புடன் லெப்ட் - ரைட் வேறு போட்டுக் கொண்டு வர வேண்டும். எப்படி?

பின் அதே சீருடையில் ஆண்டு விழாவின் பரிசுகளைப் பெற்று நடு இரவில் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினோம். பள்ளியை இரவில் பார்க்கின்ற அனுபவம் எப்போதும் நினைவில் நிற்கின்ற ஒன்று அல்லவா?

யர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது ஸ்கெளட் - ல் சேர்த்துக் கொண்டார்கள். அங்கு நடந்த கதைகள் வேறு விதமானவை.

இங்கு ஒரு தொப்பி. அதை மறக்காமல் இடது பக்கம் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும். வலது புருவத்தில் இருந்து மூன்று விரல் தொலைவில் தான் தொப்பி வர வேண்டும். வலது விழிக்கு மேல் பேட்ச் வர வேண்டும். இறுக்கமான சாம்பல் நீலக் கலரில் சட்டை. பெல்ட். ஹூம்... இங்கே டிராயர் போட வைத்து விட்டார்கள். அது வேறு இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். இப்படி ஒரு சீருடை.

இதில் தான் பயிற்சிகள் எல்லாம்.

என்ன பெரிய பயிற்சி?

சின்னச் சின்னப் பசங்களின் விளையாட்டு வகுப்பில் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். யாராவது பெரிய மனிதர்கள் வந்தார்கள் எனில் வரிசையில் நின்று சல்யூட் வைக்க வேண்டும். குடியரசு தினம், சுதந்திர தினம் வந்தால், நாங்க தான் முன்னால் நின்று எல்லாம் செய்ய வேண்டும்.

பள்ளிச் சீருடையில் இருந்து, ஸ்கெளட் சீருடைக்கு மாற வேண்டும், அவசர அவசரமாக! வீட்டில் இருந்து பள்ளிச் சீருடையில் வந்து, வகுப்பறையில் நுழைந்து, யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே அந்த உடைக்கு மாற வேண்டும்.

அதுவும் ட்ராயருக்கு ஜிப் வைக்க மாட்டார்கள். பட்டன்கள் தான். அது எப்போது பிய்ந்து போகும் என்று யாருக்கும் தெரியாது. அவ்வளவு டைட்டாக இருக்கும்.

அப்போது தான் ஒரு கேம்ப் இருக்கிறது என்று கூட்டிச் சென்றார்கள். கேம்ப் கோபி 'வைரவிழா மேனிலைப் பள்ளிக்கு'.

அது தான் முதன்முதலாக வீட்டை விட்டு வெளியே தங்குவது. Home Sick. பின் அதிலேயும் சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நேர அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்க வேண்டும்.காலையில் வகுப்புகள் சரியாக 9 மணிக்கு ஆரம்பித்து விடும். நோட்ஸ் எடுக்க வேண்டும்.கஞ்சி மாதிரி ஏதோ தருவார்கள். மதியம் உணவு. அது முடிந்ததும் அவுட்டோர் வேலைகள்.

சீக்கிரம் எப்படி கூடாரம் கட்டுவது? முடிச்சுகளின் வகைகள். ஓடுதல், விளையாடுதல் என்று பல களப்பணிகள் இருந்தன.

காலை ஆறு மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்படும். அதற்குள் எல்லோரும் குளித்து மைதானத்தில் அசெம்பிள் ஆகி விட வேண்டும். மாலை சரியாக ஆறு மணிக்கு கொடி இறக்கப்படும். அப்போது யார் எங்கு என்ன செய்து கொண்டிருந்தாலும், அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து நிற்க வேண்டும். இதைக் கேள்விப்பட்டு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஆனால் யாரிடமும் அதைக் கேட்டுத் தொலைக்கவில்லை. ;-)

கடைசி நாள் தான் ஒரு காமெடியாகி விட்டது.

பிரிவு நாள் என்பதால், ஆளாளுக்கு கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகபட்சம் எட்டு மணிக்குள் காலை உணவு உண்ட பழக்கம் அப்போது இருந்தது. (இப்போது ஹூம்..!) அந்த அசெம்பிள் கூட்டம் போய்க் கொண்டே இருந்ததில் காலை 9:30 ஆகி விட்டிருந்தது.

'தடால்'.

கண்களில் ஒரே இருட்டு. எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை. முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது புரிந்தது. கஷ்டப்பட்டு விழித்துப் பார்க்க மைதானத்தின் ஓர் ஓரத் தூணில் சாய்ந்து கிடக்கிறேன். மயக்கமாகி விழுந்து விட்டதும், அரிகில் இருந்தவர்கள் தூக்கி இங்கு கொண்டு வந்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் வெட்கமாகிப் போய் விட்டது.

பின் காலை உணவு உண்டு விட்டு அவசர அவசரமாக மூட்டை கட்டி, பேருந்து நிலையத்தில் 21 பிடித்து ஊருக்கு வந்து வீட்டில் சாப்பாடு சாப்பிட்டதில் தான் வீட்டுச் சாப்பாட்டின் அருமை புரிந்தது.

ல்லூரியில் சேரும் போது NCC, NSS, NSO இம்மூன்றில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக சேர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஏற்கனவே நாங்க எல்லாம் மிலிட்டிரி ரேஞ்சில் இருந்தவர்கள் என்ற நினைப்பில் NCC தேர்வு செய்தான். அதிலும் இரண்டு வகை NCC ARMY, NCC NAVY. சரி தான் கழுத, NCC ARMY எடுப்போம் என்று எடுத்தான். அங்கே தான் ஆரம்பித்தது வினை.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பரேடு நடக்கும் அரை நாளிற்கு. பளிச்சென்ற ஷேவ் முகத்தோடு வர வேண்டும். தடவிப் பார்த்தால் சொர சொரப்பாக இருக்கக் கூடாது. தலை முடியை ஒண்ட வெட்டி விட்டு வர வேண்டும். அதே தாங்க, மிலிட்டிரி கட்டிங். பிடரியைப் பிடிக்கவே முடியாது. என்னவோ இப்போதே டெம்போவில் ஏற்றி, வாகா தாண்டி போஸ்டிங் செய்யப் போவது போல், யூனிஃபார்ம் விறைப்பாக இருக்க வேண்டும். கசங்கி இருக்கவே கூடாது.

வேறு வழி இல்லை. மெக்கானிக்கல் லேபிற்கு வாங்கி வைத்திருந்த காக்கி சட்டை, காக்கி பேண்ட் தான் சீருடையானது கொஞ்ச நாளைக்கு! பிறகு அவர்களே அளவெடுத்து, தைத்துக் கொடுத்தார்கள். கண்கள் பிதுங்கி வெளியே வந்து விட்டது. அந்தளவிற்கு இறுக்கம்.

சட்டையில் மூன்று பொத்தான்களுக்கு மேல் வெளியே தெரியக் கூடாது. பெயர் பேட்J, ரிச்சி ஸ்ட்ரீட்டில் செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலத்திலும், இந்தியிலும்.

பரேடு சரியாக நடக்கவில்லை என்றால், தவளை குதி தான் (Frog Jump). குதித்தபடியே அலுவலகத்திலிருந்து, EEE துறை வழியாக, மெக்கானிக்கல் துறையை அடைந்து, கெமிஸ்ட்ரி துறையைக் கடந்து, மீண்டும் அலுவலகம் வர வேண்டும். ஒரே ஒரு முறை தான் அதில் செமத்தியாக மாட்டினான்.

இதில் மற்ற பிரிவு தேர்வு செய்தவர்கள் செய்யும் எஞ்சாய்மெண்ட் பார்த்து பார்த்து ஆர்மிக்காரர்களுக்கு புகை புகையாய் வரும்.

NSS என்றால் குப்பை கூட்டுவது, களை பிடுங்குவது என்று சமூக சேவையைச் செய்து கொண்டு தங்கள் கடலை சாகுபடியையும் குறைவே இல்லாமல் முப்போகமும் விளைவித்து அறுவடை காட்டுவார்கள். NSO என்றால் விளையாட்டு மட்டுமே! கேட்கவும் வேண்டுமா? மைதானத்தைச் சுற்றி வர வேண்டியது. தாகசாந்தி செய்து கொள்ள வேண்டியது. ஓரமாக உட்கார்ந்து மொக்கை போட வேண்டியது. இதில் இந்த மெக்கானிக்கல் மாணவர்கள் பண்ணும் அழும்பு தான் ரொம்ப ஓவராக இருக்கும்.

மொத்த வகுப்பிற்கும் ஒரே ஒரு மாணவி மட்டுமே இருந்ததால், 'இருக்கறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு டோட்டல் தமிழ்நாடு' என்ற நினைப்பில் கண்ணில் பட்ட, கூட ஓடி வரும், களைப்பாக ஓரமாய் உட்காரும் புள்ளைகள் என்று மானாவாரியாக தீயத் தீய வறுத்தெடுப்பார்கள்.

எங்கள் அளவிற்கு இல்லாவிடினும் கொஞ்சம் கடினமாக பயிற்சி செய்பவர்கள் NCC NAVYக்காரர்கள். ஆனால் அங்கே வேறு ஒரு அனுகூலம் இருந்தது. அட வேற ஒண்ணும் இல்லைங்க! கொஞ்சம் பொண்ணுங்க இருந்துட்டாங்க அங்க. அவ்வளவு தான்!

ஆர்மினாலே ஆம்பளப் பசங்க இராஜ்ஜியம் தானே! அது வேற மாதிரி ஜாலி! ரொம்ப ரீஜண்ட்டா எல்லாம் இருக்க வேண்டியதில்லை. நம்ம இஷ்டத்துக்கு சாஞ்சுக்கலாம். தண்டனை ஏதாவது கிடைச்சுட்டா கவலையே பட வேண்டியதே இல்லை. வெட்கப்படவும் வேண்டியதில்லை. அதையே அட்வென்சரா எடுத்துக் கொண்டு சின்சியரா அதை செய்யலாம்.

இங்கு கற்றது தான் ரைஃபிள் ஷூட்டிங்! அது இப்போது தென்மலா டூரில் 4/5 டார்கெட் அடிப்பது வரை துணையாய் இருந்திருக்கிறது என்பது எனக்கே வியப்பாக இருக்கிறது.

முதல் வருஷக் கடைசியில் கேம்ப் அழைத்துப் போனார்கள். எங்கே? காஞ்சிபுரம் போகும் வழியில், செங்கல்பட்டு செல்லும் இரயில்வே தடத்தில் 'சிங்கப் பெருமாள் கோயில்' நிறுத்தத்தில் இறங்கி வடக்குப்பட்டு என்ற இடத்தில் இருந்த 'திரிவேணி அகாடமி' என்ற ரெஷிடெண்ட்ஷியல் ஸ்கூல்!

'சிங்கப் பெருமாள் கோயில்' நிறுத்தத்தில் இறங்கும் போதே முந்தின (வேறு கல்லூரி) பேட்ச் ஒன்று திரும்பி வந்து கொண்டு நின்றிருந்தது. எப்படி? தவளைக் குதி செய்து கொண்டு! எங்களுக்கு அப்படியே எல்லாம் ஆடி விட்டது. 'ஆஹா! என்னடா இது ! ஆரம்பமே சரி இல்லையே! திரும்பி போகும் போதும் பரேடு பழுக்குதே! அப்ப, உள்ள என்ன ரேஞ்சில இருக்கும்' என்று பயம் வந்தது.

ஆனால் அப்படியே தலைகீழ்!

வந்த அன்றைக்கே ஒருவன் 'படி தடுக்குச்சு! பதறி விழுந்தேன்! கால் உடைஞ்சிடுச்சு! காவலா இருக்கேன்!'னு ஒரு பிட்டைப் போட்டு, அங்கிருந்த 15 நாளும் எங்கள் மூட்டைகளுக்கு காவலாய் படுத்துக் கொண்டான். அப்படி என்ன அதில் பொக்கிஷமா இருந்தது? துணி மூட்டை தான்!

முதல் இரண்டு நாட்கள் மட்டுமே கண்டிப்பு இருந்தது. அப்புறம் செம ஜாலி! பரேடெல்லாம் சும்மா வெயில் பறக்கும், முற்பகல் நேரம்! பிறகு 'பிற்பகல் முழுதும் விளையாடு பாப்பா' என்று விளையாடித் தீர்க்க, புழுதி தான் நம்ம சட்டை ஆக்கும்.

அவ்வப்போது மீட்டிங், கதைகள், அரட்டை என்று நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் டைம் மிகச் சரியாக மெய்ண்டைன் செய்தோம். சரியாக ஆறு மணிக்கு எழுந்து, இரவு பத்து மணிக்கு படுத்து விட வேண்டும். அது போலவே இன்று வரையும் கடைப் பிடித்து வந்திருந்தால், வாழ்க்கையே வேறு மாதிரி போயிருக்கும். ஹூம்....!

பத்து மணிக்கு சொன்னாலும், சொல்லா விட்டாலும் தூக்கம் சொக்கி வந்து விடும். கண்ட்ரோல் செய்யவே முடியாது. அப்படி ஒரு உழைப்பில் உடல் வாடிப் போய் இருக்கும். அது தாங்க உழைப்பு.! இப்ப ஏன் நேரங்கெட்ட நேரத்துல படுத்தாலும் தூக்கமே வர மாட்டேங்குதுனு புரியுது.

ஒரு முறை எங்கள் சிறு குழுவின் மேற்பார்வையில் உணவு பரிமாறுதல். அன்றைக்குப் பார்த்து இட்லி வந்து விட்டது. அதை ஆளாளுக்குச் சண்டை போட்டு பிய்த்து காலி செய்து விட, கடைசியில் எங்களுக்கு வெறும் மாவுத் துணுக்குகள் தான் மிஞ்சி இருந்தன. விடவில்லையே அதையும்!

எல்லோரும் சொல்வது தான். இருந்தாலும் சொல்கிறேன். காலையில் கொளுத்தும் (மே மாதம் தான் கேம்ப் நடக்கும். சென்னையின் மே மாத வெயில்! எப்படி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்!) வெயிலில் பரேடு நடத்தி விட்டு கால் மணி நேர இடைவெளியில் மதிய உணவு முடித்து வர வேண்டும் என்ற அவசர கதியில் உண்ணும் அந்த உணவிற்கு, சத்தியமாகச் சொல்கிறேன், ஈடு இணையே இல்லை. அவ்வளவு ருசியாக இருக்கும். மற்ற நேரங்களில் அதை வாயில் வைக்க முடியாதபடி இருக்கும்.

ஓர் 5 நாட்களில் பள்ளி மாணவர்கள் வேறு வந்து விடுவார்கள். அவர்களை மேய்ப்பதும் ஓர் எக்ஸ்ட்ரா வேலையாகச் சேர்ந்து விட்டது. வெறும் பசங்க மட்டும் என்பதால், அடித்த கூத்துக்கு அளவே இல்லை.

இப்படியே 15 நாட்கள் போன பின், மிக்க வருத்தத்தோடு தான் எல்லோரும் பிரிந்தோம். யாரும் எதிர்பார்க்கவேயில்லை, NCC Army கேம்ப் இந்த அளவிற்கு எஞ்சாய்மெண்ட் ஆக இருக்கும் என்று!

ப்போது வெறும் ப்ளெய்ன் அல்லது லைன் அல்லது செக்கர் ஷர்ட், டார்க் பேண்ட், சம்பந்தமே இல்லாத டை, ப்ளாக் ஷூ என்று வேறு மாதிரி ஒரு ஆடைக்கு பழக்கப் படுத்திக் கொண்டாலும், அந்த சீருடைகளின் உழைப்பு இல்லை என்பதில் இன்றைய ஆடைகளை நான் 'யூனிஃபார்ம்' என்ற கேட்டகிரியிலேயே சேர்ப்பதில்லை.

இன்னும் போலீஸ் யூனிஃபார்ம் தான் மாட்டிப் பார்க்கவில்லை. அலுவலக கலைக் குழுவில் எப்படியாவது ட்ராமாவில் போலீஸ் வேஷங் கட்டிட வேண்டியது தான்.

அப்போ மலையாளத்துல சம்ஸாரிக்கணுமே..! பேசாம சிரிப்பு போலீஸ் ஆகிட வேண்டியது தான். என்ன சொல்றீங்க..?

No comments: