
ப்ரிய முகிலே! இள வயதின் மிகப் பெரும் கனவுகள் போல், மழை நீரைத் தளும்பத் தளும்ப நிறைத்து வைத்திருக்கிறாய் போலும்! சற்று தெளித்து விட்டுத் தான் செல்லேன்! என் தேவதை பாதையில் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். குளிர்ந்திருக்கும் பூமியின் மேல் மென் பாலாடை போல் பனித் துளிகள் போர்த்தி இருக்கும் இம்முன்னிரவில், ஒரு காதலின் கைப்பிடித்து அவள் வருகிறாள்.
சிலுசிலுவென உள் நரம்புகள் வரை ஊடுறுவும் தென்றல் குயிலே! அவள் தேகத்தை நடுக்கச் செய்ய முயலாதே! தீண்டத் தீண்ட நீ நடுங்கிப் போவாய், அதன் வகையில் குளிர்விப்பதற்கு வார்த்தைகளைக் கொண்டு வருகிறாள்.
விழிகளில் துள்ளித் துள்ளி விளையாடும் கரு முத்துக்களை பாதரசப் பூக்களில் குழைத்து விசிறி அடித்த இருள் பூத்திருக்கும் இவ்வேளையில், பச்சை விளக்கின் தூறல்களாய் ஒளி தெளிக்கும் மின்மினிக் குட்டிகள் திரும்பிப் பார்க்க கொலுசின் ஒளியைப் பறைசாற்றி வருகிறாள்.
ஜெகஜ்ஜோதியாய் ஒளிப் பிரவாகம் பொழியும் அமுத நிலவே, உன் வெண்ணொளி வெள்ளத்தில் நிறைக்க ஒரு அட்சயப் பாத்திரம் போல், முல்லைப்பூ சரத்தின் சரள நடையை மேற்கொண்டு வருகின்றனள்.
பிரபஞ்சத்தின் எண்ணிலா வெண் முத்துக்களைக் கொண்டு மூடிக் கொள்ள, ஒரு பூமியென காத்திருக்கிறேன். பிரம்மாண்ட இரவின் பனிக் கரங்களில் பூத்திருக்கும் வியர்வைக் குருதிப் பொட்டுக்களை உறிந்து, ஆழ்ந்த மெளனத்தின் விரியில் அமிழ்ந்து, காலக் கடிகாரம் அற்ற, கோடானு கோடி கற்பக் காலங்களில் பேரின்பப் பெருவெளியில் நிறைந்து துளித் துளியாய் காணாமல் போக,
வா
அழகே.. அழகே நித்தியத்தில் இன்று கலந்து போவோம்!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
No comments:
Post a Comment