Thursday, March 20, 2008

மோக்ளி Labs - Intriguing Innovations.

மேனிலை வகுப்புகள் முடிக்கும் வரை ஆய்வகங்கள் பக்கம் செல்லும் வேலையே இல்லை. எப்போதாவது ஆசிரியர் வரவில்லையானால், சென்று அங்கு அவர் இருக்கிறாரா என்று பார்த்து வர வேண்டும். அவ்வளவு தான்.

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்காக பள்ளியிலேயே இரவு தங்கிப் படிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்த போது தான் நின்று அவ்வப்போது ஆய்வகங்களை கவனித்தோம். ஆணியில் கழுத்தை மாடித் தொங்க விட்டிருக்கும் எலும்புக்கூடு, கலர் கலர் புகை பூக்கும் வேதியியல் கூடம், இரவு முழுதும் எரிய விட்டு மஞ்சள் ஒளியைப் பொழிந்து கொண்டே இருக்கும் சோடியம் லைட் (அப்போது எங்கள் ஊருக்கு சோடியம் வேப்பர் சாலை விளக்குகள் வந்திருக்கவில்லை..!)இயற்பியல் கூடம் என்று விசித்திரமாய் இருந்தது.

பதினொன்றாம் வகுப்பு வந்த பின்பு தான் ஆய்வுச்சாலைகளில் நேரடி படையெடுப்பு நிகழ்ந்தது. ஆங்கிலம், தமிழ் செய்முறைப் பயிற்சிகளும் இருந்தன. ஆங்கிலத்திற்கு ஏதேனும் பாராவைப் படித்துக் காட்ட வேண்டும். அதற்கே மூச்சு வாங்கி விடும். தமிழுக்கு மற்றுமொரு விளையாட்டு. திருக்குறள் முழுவதையும் படிக்க வேண்டும், மனதிற்குள்! வழக்கம் போல் பொண்ணுங்க மட்டும் முழுதும் மூச்சு முட்ட படித்துக் கொண்டிருக்க, நாங்கள் எல்லாம் ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாம் பாலுக்கு ஜம்ப். அட..அட.. வள்ளுவர் என்னமா ரசிச்சி, அனுபவிச்சு எழுதி இருக்கிறார் என்று புரிந்தது. அதில் ஒன்று மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. தலைவி சொல்றாப்ல, 'இந்த கண்கள் ரொம்ப பாவம். தலைவனைப் பிரிஞ்சா அந்தக் கவலையிலேயே தூங்க மாட்டேங்குது. தலைவன் இருந்தாலோ அவன் தூங்க விடறதில்லை. ரொம்ப பாவம்ல?' என்று ஃபீல் பண்ணுவது போன்ற குறள்! என்ன ஒரு ரொமாண்டிக் வரிகள் இல்லை..?

அப்புறம் பொண்ணுங்க 'முடிச்சுட்டேன் ஐயா' என்று சொல்லி கொஞ்ச நேரம் கழிச்சு நாங்களும் 'ஆங்..! ஆச்சு சார்!' என்று மூடி வைத்தோம்.

இயற்பியல் கூடத்தில் இந்த ஸ்பெக்ட்ராமீட்டர் ஓர் ஆட்டம் காட்டும். அந்த மஞ்சள் ஒளித் துணுக்கை கண்ணில் கொண்டு வந்து பார்ப்பதற்குள், மூச்சு முட்டி விடும்.

அது தவிர எத்தனை முறை விலங்கியல் ஆய்வேடு பக்கங்கள் கிழித்தெறியப் பட்டிருக்கின்றன என்பதற்கு கணக்கே இல்லை.

வேதியியல் ஆய்வுக் கூடத்தில், கையில் கிடைத்த பொடிகளை, பேர் தெரியாத, புரியாத கரைசல்களோடு கலக்கி புகை புகையாய் வருவதையும், கலர் கலராய் வருவதையும் வேடிக்கை பார்ப்போம். ஒருமுறை அது போல் எதையெதையோ கலக்கி, சும்மா இராமல் அடியில் சூடு வைக்க, கொஞ்ச நேரத்தில் கலவை டுபுக்கென மேலே பொங்கி உயரே சீறிப் பறந்து, சாரலாய் சுற்றி இருந்த எல்லோர் மேலும் கொட்ட... யப்பா செம கப்பு! சட்டையெல்லாம் கறுப்பு கறுப்பாய் புள்ளிகள்.

என்ன தான் நன்றாகப் படித்திருந்தாலும், பரீட்சை என்று வரும் போது எப்படியும் கை நடுங்கி, ரிசல்ட் சரியாக காட்டி வெளி வருவதற்குள் திக்கித் திணறித் தான் போவோம். வேதியியல் இறுதித் தேர்வுக்கு ஆய்வக உதவியாளரிடம் 'சால்ட் என்னங்ணா ' என்று கேட்டு மஞ்சள் பேப்பரில் கட்டியது 'சோடியம் குளோரைடு', வெள்ளை பேப்பரில் ' சோடியம்-பை-கார்பனேட்' என்று இரகசியக் குறிப்புகள் பெற்று, கொஞ்சம் அதற்கேற்றார் போல் சோதனைகள் செய்து, 'முடிச்சாச்சு சார்' என்று சொல்லி, ரிசல்ட் அளவுகள் எழுதும் போது, தவறாய் எழுதி விட, அழிப்பான் கூட இல்லாமல் பரிதாபமாக நிற்க, எதிரில் இருந்த ஒப்ரு பெண் எச்சி தொட்டு அழி (?) என்று சொல்ல, அது படி கேட்டுச் செய்ய, பேப்பரே கிழிந்து வர (உனக்கெங்கடா அறிவு போச்சு, அது என்ன ஸ்லேட்டா..?)... ஒரு மாதிரி தான் +2 இறுதித் தேர்வு முடித்து வந்தேன்.இயற்பியலில் எதிர்பார்த்தது போலவே ஸ்பெக்ட்ரோமீட்டர் தான். அதிலும் இல்லாத தடங்கலகள் (ஒண்ணுமில்லைங்க.. கொஞ்ச நேரம் கரண்ட் போயிடுச்சு..! சோடியம் லைட் மீண்டும் ஃபுல் ஃபார்மிற்கு வர அரை மணி நேரம் ஆகும்.) ஏற்பட்டு, அப்புறம் மஞ்சள் துணுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, 'ஒரு மாதிரி வெளிச்சம் மட்டும் கொண்டு வா' என்று சொல்லப்பட, 'ஒரு ஆரஞ்சு புள்ளி தெரியுது பாருங்க' என்று எதையோ காட்ட, அது எதிரே நின்று வேறொரு ஆய்வு செய்து கொண்டிருந்த சக மாணவியின் வளையல் மேல் சூரிய ஒளி பட்டு தெறித்தது என்று தெரிந்து எக்ஸ்டர்னல் சூப்பர்வைஸர் டென்ஷனாகி, அப்புறம் ஸ்பெக்ட்ராமீட்டரின் ரெண்டு கைகளையும் கால்களாய் நினைத்துக் கொள்கிறேன் என்று கும்பிட்டு அப்படி, இப்படி என்று திருப்பி, மஞ்சள் ஒளியைக் கொண்டு வந்து காட்டி, 'தப்பித்தேன். பிழைத்தேன்' என்று தலை தெறிக்க ஓடி வெளியே வந்து விழுந்தேன். சுற்றி என்ன நடந்தது என்று கேட்டவர்களிடம், 'ஜூஜூபிடா எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ்! என்ன தான் காட்டினாலும் இது அந்த லைட் இல்லைனு டார்ச்சர் பண்ணிட்டார்! அவருக்கு கண்ல ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன்' என்று சொன்னேன். உடனே 'நான் சொன்னேன்ல, அவர் கண் ப்ராப்ளம்னு' என்று ஒரு சக மாணவன், தன்னருகில் நின்ற பெண்ணிடம் அறுவடையை ஆரம்பித்தான். நான் கடுப்பாகி 'உனக்கும் ஸ்பெக்ட்ராமீட்டரா?' என்று கேட்டேன். சைலண்டாக அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

தாவரவியலுக்காக மட்டும் தான் ரொம்ப மெனக்கெடவில்லை. பள்ளி கிராமப் புறத்தில் இருந்ததால் 'ஹெர்பேரியத்திற்கு' அலைய வேண்டிய தேவையே வரவில்லை. இறுதித் தேர்வில், 'இது என்ன செடி', 'இதுக்கு லத்தீன்ல என்ன பேரு' என்று திருப்பித் திருப்பி மூன்று செடிகளை மட்டும் காட்டி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாம தான் எப்பவுமே கடைசி பேட்ச். (என்ன செய்ய ! பேர் ராசி அப்படி!) முன்பே களம் கண்டு வாகை சூடி வந்த வீரர்களிடம் தகவல் பெற்று, சரியாகச் செய்து விட்டு வந்தேன்.

விலங்கியலுக்கும் இதே போல் ஏதோ கூத்து நடந்தது. சுத்தமாக நினைவில்லை.

ஆனால், எங்களுக்கு மொத்த கடுப்பும் இந்த கணிப்பொறியியல் மாணவர்கள் மீது தான். மாங்கு மாங்கென்று காடு, கழனி, வயல் வரப்பென்று அலைந்து செடிகளை ஒட்டி, அக்காக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி உயிரியல் படங்களை வரைந்து ஆய்வேடு தயாரித்து ( இதில் ரஃப் காப்பி, ஃபேர் காபி என்று 2 வகை வேறு! ரஃப் காபி உயிரியல் ஆசிரியர் கிழித்தெறிய, ஃபேர் காபி எக்ஸ்டர்னல் வாத்தி காறித் துப்ப..! ) என்று அவனவன் உயிரைக் கொடுத்து உழைக்க, அந்தப் பசங்க மட்டும் 1 + 2 = 3? என்ற கஷ்டமான சந்தேகத்தை ஸால்வ் செய்ய வட்டம், சதுரம், சாய்ந்த கட்டம் என்று சும்மா ஸ்கேலாலேயே கிறுக்கி விட்டு (அதையெல்லாம் படம் என்றே எந்த தன்மானம் உள்ள உயிரியல் மாணவனும் சொல்ல மாட்டான்..!) full mark எடுத்துச் செல்வார்கள்.

இப்படிப்பட்ட திருப்பணிகளால் ஆய்வகங்களை முடித்து விட்டு, கல்லூரியில் கால் வைத்தேன்.

ள்ளியிலேயே பிராணனை பிய்த்து எடுத்த விதி, கல்லூரியில் கை, கால்களை வைத்து சும்மா இருக்குமா என்ன?

கல்லூரியில் சேர்ந்து விடுதி அறை எல்லாம் பிடித்தது புதன்கிழமை. நன்றாக நினைவு இருக்கிறது. அன்று சூரிய கிரகணம். வெள்ளிக் கிழமையில் இருந்து வகுப்புகள் துவங்கும் என தெரிய வந்தது. 'ஆஹா நல்ல நாள் பார்த்து தான் ஆரம்பக்கிறார்கள்' என்று மகிழ்வாகிற்று. நடுவில் வியாழக்கிழமை என்று சும்மா இருப்பானேன் என்று கல்லூரியில் சேர்ந்து முதல் வேலையை நல்லபடியாக ஆரம்பிப்போம் என்று முடிவு செய்து ஒரு மூன்று பேர் படத்திற்கு கிளம்பினோம். வியாழன் ஃபர்ஸ்ட் ஷோ! சத்யம். படம் ஏதோ கப்பல் பற்றிய படம். பெயர் மறந்து விட்டது.

அது தான் முதன்முறையாக DOLBY எஃபெக்டில் படம் பார்க்கிறோம். திரையின் இடது ஓரத்தில் கப்பலின் கதவு திறக்கிறது. (படம் பேர் : THE VIRUS ). தியேட்டரின் இடது ஸ்பீக்கர்களில் மட்டும் அந்த சத்தம் கேட்கிறது. சொல்வதற்கே வெட்கமாய் இருக்கிறது. அம்மாம் பெரிய தியேட்டரில், நாங்கள் மூன்று பேர் மட்டும் 'யார்ராது படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது, உள்ள வர்றது' என்று இடது பக்கம் திரும்பிப் பார்க்கிறோம். நினைத்துப் பாருங்கள். எல்லா தலைகளும் ஸ்ட்ரெய்ட்டாக திரையைப் பார்த்து இருக்க, நடு தியேட்டரில் மூன்று தலைகள் மட்டும் , டென்னிஸ் நடுவர் போல் இடது பக்கம் திரும்பினால் எப்படி இருக்கும்? என்ன செய்ய? அது அறியாத வயசு! புரியாத மனசு! (சுவாரஸ்யம் என்னவெனில் அந்த மூன்று பேரில் நானும் மற்றொருவனும் 3D Surround Audio துறையில் தான் இப்போது பணி ஆற்றுகிறோம். மற்றொருவன் Bio Tech Ph.D., செய்ய US பறந்து விட்டான்.)

மங்களகரமாய் வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தது. அதற்குள் வகுப்பு கால அட்டவணை கொடுத்து விட்டிருந்தார்கள். முதல் வகுப்பு என்ன என்று பார்க்க, எங்கள் பேட்சிற்கு லேப் என்று இருந்தது. கொஞ்சம் திக் என்று இருந்தது. அதுவும் நம்ம பேர் ராசிக்கு செகண்ட் பேட்சின் செகண்ட் க்ரூப்புக்கு என்ன என்று பார்க்க 'இயற்பியல் லேப்'. பயந்து கொண்டே ஆய்வகத்திற்குள் நுழைய, சரியாக, மிகச் சரியாக எனக்கு அன்று கொடுக்கப்பட்ட பரிசோதனை.. அதே தாங்க.. ஸ்பெக்ட்ரோமீட்டர் ! 'என்ன தம்பி எப்படி இருக்கற? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?' என்று விஷமமாக அது கேட்க, 'ம்ஹூம்... ம்ஹூம்ம்' என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டே , வேறு வழியே இல்லை, அதன் கைகளையும் கால்களாக்கிக் கொண்டேன்.

'எல்லோரும் பள்ளியிலேயே செய்திருப்பீர்கள். 50 மார்க் வாங்கி இருப்பீர்களே! நீங்களே செய்யுங்கள்' என்று சொல்லி விட்டார் லேப் ஆசிரியர். 'நாம எந்த ரேஞ்சில் வந்திருக்கோம்' என்று நமக்குத் தானே தெரியும். வழக்கம் போல் மஞ்சல் ஒளி..ம்ஹூம்.. கிடைக்கவேயில்லை. ஆனால் மற்றொன்று கிடைத்தது. 'காதல் கொண்டேனில்' டெஸ்டரை முகத்தில் எறிந்து சரமாரியாக பொழிவாரே ப்ரொபஸர், அது போல் வார்த்தை விளையாட்டு விளையாடினார் அந்த லேப் ஆசிரியர். 'சரி தான்! ஆரம்பத்திலேயே வாங்கிக் கட்டிக்க ஆரம்பிச்சாச்சா..! உருப்புட்டாப்ல தான்' என்று முடிவுக்கே வந்து விட்டேன். கொஞ்ச நாட்களில் 'இவங்க எப்பவுமே இப்படி தான்! சும்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க! நமக்கு இதெல்லாம் பழகினது தானே! விடுங்க பாஸ்' என்று மனசாட்சி சொல்லி விட அப்புறம் என்ன, திட்டுகள் எல்லாம் பூமாரியாய் தோன்ற ஆரம்பித்தது.

வேதியியல் லேபில் ஏதும் சொல்லிக் கொள்வது போல் நடக்கவில்லை. வழக்கம் போல் கலர் கொண்டு வந்தோமா, அளவு கொண்டு வந்தோமா என்றே ஓடியது.

கணிப்பொறி லேபில் ஆதிகால மெஷின்களில் Lotus123, Foxpro எல்லாம் கற்று தெய்வீக நிலைக்கு உயர்ந்தோம். பசங்க அதிலேயே சில சித்து விளையாட்டுகள் விளையாடி, 'படம்' பார்க்க ஆரம்பிக்க, விடுதி மாணவர்கள் இரவெல்லாம் கணிப்பொறி லேபிலேயே குடியிருக்க ஆரம்பித்தார்கள்.(சரி.. சரி..! மக்களே கோபிச்சுக்காதீங்க.! 'குடியிருக்க ஆரம்பித்தோம்'. இப்ப ஓ.கே.வா?)

மெக்கனிக்கல் லேபில் தான் ஒரிஜினல் இஞ்சினியர்கள் போல் 'வெட்டு, குத்து, கண்ணே, காதலி' என்று பி.கே.பி. நாவல் தலைப்பு கணக்காக சத்தம் வரும் அளவிற்கு வேலை நடக்கும். அங்கு ஒரு துணைப் பிரிவில், மெட்டல் உருக்குவதற்கு, ஈர மண்ணைக் குவித்து, அதில் இடை இடையே இருக்கும் காற்று இடைவெளியை நீக்க, குச்சிகளை வைத்து குத்திக் கொண்டே இருப்பார்கள் என்று செய்து காட்ட, 'சார்! அப்ப பெரிய பெரிய மெட்டல் பாடிகளை செய்ய ஏக்கர் கணக்கில் மண் கொட்டி, அதில் இருக்கும் காற்று இடைவெளிகளை நீக்க, எல்லோரும் அதற்குள் இறங்கி ஜங், ஜங் என்று குதிப்பார்களா சார்?' என்று கேட்டு அவரின் கடுப்பைச் சம்பாதித்துக் கொண்ட நண்பன் இன்று Entrepreneur ஆக இருக்கிறான்.

முதல் செமஸ்டரின் இறுதித் தேர்வு வந்தது.

'கடவுளே! தயவு செய்து ஸ்பெக்ட்ரோமீட்டர் மட்டும் வரவே கூடாது' என்று வேண்டிக் கொண்டே செல்ல, நல்ல வேளையாக அது வரவில்லை. மாறாக வெர்னியர் ஸ்கேல் மூலம் ஊசல் எண்ணிக்கை அளக்கும் ஓர் ஆய்வு வந்தது. 'சரி! சப்பையான ஆய்வு ' என்று சந்தோஷமாக அங்கு போய் ஊசல் எல்லாம் சரியாக ஆட்டி, எண்ணிக்கை எல்லாம் கணக்கிட்டு, கடைசியாக ஊசல் குண்டு தொங்க விட்டிருக்கும் மெல்லிய நூலின் ஆரம் (radius) கண்டு பிடிக்க வேண்டும், வெர்னியர் ஸ்கேல் கொண்டு!

அங்கு ஆரம்பித்தது சிக்கல்!

வெர்னியர் ஸ்கேல் மூலம் நாம் பார்ப்பது ஆரமா, இல்லை வேறெதாவது அளவீடா என்று சந்தேகம் வந்து விட்டது. அந்த மெல்லிய கம்பியை வெர்னியரில் வைத்து அளவு பார்க்க, அது எப்படியும் மில்லிமீட்டருக்கும் குறைவாகத் தான் காட்டும். அது எதைச் சுட்டுகிறது என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஸ்பெக்ட்ரோமீட்டர் பயத்தில் அதை மட்டும் நன்றாக படித்துச் சென்றதில், கோட்டை விட்ட மற்ற ஆய்வு இது. வேர்க்க ஆரம்பித்து விட்டது.

யோசி! யோசி!

கொஞ்ச நேரத்தில் செம ஐடியா வந்தது.

பள்ளியை விட்டு சென்ற முதல் செமஸ்டர் என்பதால், இன்னும் நான் இங்க் பென் தான் உபயோகப் படுத்திக் கொண்டிருந்தேன். அதுவும் சும்மா சாதாரணமாக ஒல்லிப்பிச்சான் போல் எழுதும் ஹீரோ பேனாக்கள் மீது எனக்கு என்றுமே நாட்டம் இருந்ததில்லை. எழுத்து சும்மா பட்டை அடிக்க வேண்டும். அப்படி ஒரு குண்டு பேனா வைத்திருந்தேன் , அப்போது!

திருவாதிரைத் திருநாளில் அள்ளி அள்ளி மாவைத் தின்று விட்டு, கையை நீட்டினால் மஞ்சள் பூசிய கயிறு கட்டி விடுவார்கள் வீட்டில்! அதுவும் 'புள்ள மெட்ராஸில் படிக்கப் போறான்ல' என்று, கட்டி விட்டதில், வலது கையில் கலர் கலராய் கயிறுகள்!

ஒரு கயிரைப் பிய்த்து எடுத்தேன். குண்டு பேனாவை ஒரு வட்டமாய்ச் சுற்றினேன். நூலின் அந்த நீளத்தை ஸ்கேலால் அளவிட்டேன். அந்த அளவு நூலின் நீளம் என்பது வட்டமான குண்டு பென்னின் சுற்றளவு (circumference) தானே? அந்த நீளம் = 2 * (22 / 7) * r தானே! அதிலிருந்து r குறித்துக் கொண்டேன். பின் அதே குண்டு பேனாவை வெர்னியரின் இரு முனைகளுக்கும் இடையில் வைத்து, வெர்னியர் காட்டும் அளவைக் குறித்துக் கொண்டேன்.

இந்த இரண்டு அளவுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்ததில், என்ன ஆச்சரியம்! வெர்னியர் அளவு, முந்தைய அளவை விட சற்றேறக் குறைய இரண்டு மடங்கு இருந்த்து. பிறகென்ன? வெர்னியர் காட்டுவது விட்டம் (diameter) என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.

ச்சும்மா கடகடவென அளவுகள் எடுத்து, ஆய்வை வெற்றிகரமாய முடித்து, சந்தோஷமாய் வெளியே வந்து நண்பர்களிடம் நம்ம சிந்தனையைச் சொல்ல, 'அட அற்பப் பதரே' என்பது போல் பார்த்தார்கள். 'ஏண்டா நாயே! ஆறாவதில் இருந்து வெர்னியர் ஸ்கேல் பற்றி படித்துக் கொண்டு வருகிறோம். அது diameter அளக்க பயன்படும் என்பது கொஞ்சம் கூட ஞாபகம் வரவில்லையா' என்று கேட்க... டன் கணக்கில் அசடு....!

கெமிஸ்ட்ரி லேபில் அப்படியே அருகில் இருந்த நண்பனைப் பார்த்து அடி காப்பி! பின்ன என்னங்க, எல்லாம் ஆங்கிலத்திலேயே எழுத என்றால், எவ்ளோ கஷ்டம்.

கணிப்பொறி லேபில் அவுட்புட் காட்ட கோல்மால்கள் பல!

மெக்கானிக்கல் லேபில், நம்ம அதிர்ஷ்டம் மணல் குத்து விளையாட்டு தான் வந்தது. 'குத்தடி குத்தடி சைலக்கா! குனிஞ்சு குத்தடி சைலக்கா' என்று விளையாடியதில், அதுவும் ஜாலியாகவே போனது.

இன்னும் அடுத்த எழு செமஸ்டர்களிலும் இது போல் டப்பா டான்ஸ் ஆடியும், கம்பீரமாகவும் ரிசல்ட்கள் காட்டி ஒரு மாதிரி நானும் எஞ்சினியர் ஆனேன்.

லேப்கள் பற்றி மட்டும் சொல்ல இன்னும் பலப் பல கதைகள் உள்ளன என்பதால், அவை பின்பொரு முறை நினைவு கூறப்படும். இப்போது சில துணுக்குச் செய்திகள் மட்டும்!* Wien Bridge என்று ஒன்று உள்ளது. அதில் சரியாக ரெஸிஸ்டரும், கெப்பாஸிட்டரும் வைத்து, எந்த ஒரு பகுதியிலும் வோல்டேஜ் zero என்று காட்ட வேண்டும். அதற்கேற்றாற் போல் வைக்க வேண்டும். ஒரு நண்பன் அது போல் சரியாக கணக்கு எல்லாம் போட்டு, சர்க்யூட் செட் செய்து விட்டு, இண்டர்னல் எக்ஸாமினரைக் கூட்டி வந்து காட்டினான். வோல்ட்மீட்டரை ஒவ்வொரு armமிலும் வைத்து 'நல்லா பார்த்துக்கோ சார்! அப்பாலிக்கு ராங்கு காட்டக் கூடாது. இன்னா புரிஞ்சுதா? இக்கட சூடு. நோ வோல்டேஜ். இங்க பாரு. நோ வோல்டேஜ்' என்று எல்லா பக்கமும் காட்டி விட்டு, சந்தோஷமாய் அவர் முகம் பார்த்து 'இன்னா ஓ.கே தான?' என்றான். அவர் மிக அமைதியாக் 'எல்லாம் சரி தான்! முதலில் பவர் ON பண்ணுப்பா! பவரே இல்லாட்டி எல்லா armஸ்லயும் zero வோல்டேஜ் தான் காட்டும்' என்று சொன்னாரே பார்க்க வேண்டும்.

தலைவர் என்று எங்கள் துறையில் ஒரு மாணவர் இருந்தார். அவருடைய பராக்கிரமங்களை எழுத மட்டும் 500 ப்ளாக்போஸ்ட் வேண்டும். சாம்பிளுக்கு அவருடைய சில லேப் சித்து விளையாட்டுகள். ( தலைவரே மன்னிச்சிடுங்க...! கண்ட்ரோல் பண்ண முடியல.! )

* ஓர் எலக்ட்ரானிக்ஸ் லேப் வைவா. ப்ரொபஸர் கேட்கிறார். "From this circuit, how can you get the output?". தலைவர் அசரவே இல்லை. பதில் கொடுத்தார் பாருங்கள். "Sir, If you give input, output will come..!". ப்ரொபஸர் அப்படியே பேஸ்தடித்துப் போய் விட்டார். அவரது 30 வருட பொது வாழ்க்கையில் இப்படி ஒரு பதிலை அவர் கேட்டதே இல்லை. இனிமேல் கேட்க என்ன இருக்கிறது? "O.K. Your viva is over. Please you can go..!". விட்டால் அழுதே விடுவார் போல் இருந்தது. தலைவருக்கு ரொம்ப சந்தோஷம். 'ஒரே கேள்வியோடு முடித்து விட்டாரே என்று!'

* Communications Lab Viva. "Can you draw the block diagram of the Amplitude Modulation Process?" Professor asked. Thalaivar never got worry about this type of questions. He took the pen and put it on the paper. He started to draw a transistor and started to explain, " Sir! This is PNP transistor...". "Stop! Stop! Your viva is over! Please go..!" the shocked professor.

தலைவரின் லேப் சரித்திரத்திலேயே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நிகழ்வு இப்போது கூறப் போவது.

ஆறாம் செமஸ்டரில் Bio Medical Lab மற்றும் Instrumentation Lab என்று இரண்டு லேப்கள் ஒரே நேரத்தில் வரும். பேட்ச்கள் பிரித்துக் கொண்டு செல்ல வேண்டும். செமஸ்டர் இறுதித் தேர்வு. சீட்டு குலுக்கப்பட்டு விட்டது. 'B' என்று வந்தால் Bio Medical லேபிற்கும், 'I' என்று வந்தால் Instrumentation லேபிற்கும் செல்ல வேண்டும். எல்லோரும் 'I' தான் வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு எடுத்தோம். ஏனெனில் அது கொஞ்சம் ஜாலியாக இருக்கும். Bio Medical Lab என்றால் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருக்கும். தலைவரும் சீட்டு எடுத்துப் பார்த்துக் கொண்டார். ' 'B' வந்தவர்கள் எல்லோரும் இடது புறமும், 'I' வந்தவர்கள் எல்லோரும் வலது புறமும் நிற்கவும்' என்று சொல்லப்பட எல்லோரும் அது போல் நின்றோம்.

தலைவர் இரண்டு புறமும் நிற்காமல், நடுவில் நின்றார். 'என்னடா, தலைவர் ஒண்ணு இடது பக்கம் நிற்க வேண்டும். இல்லையெனில் வலது பக்கம் நிற்க வேண்டும். வித்தியாசமாக நடுவில் நிற்கிறாரே' என்று எல்லோர்க்கும் குழப்பம் வந்து விட்டது. 'உனக்கு என்னப்பா வந்திருக்கு?' என்று லேப் ப்ரொபஸர் கேட்க, தலைவர் கூறிய பதிலில் ஆய்வகமே அதிர்ந்தது.

"மேடம் எனக்கு 'H' வந்திருக்கு. இப்ப நான் என்ன செய்ய?' என்று பரிதாபமாக கேட்டார்.

புரிந்திருக்கும்...! தலைவர் 'I' என்பதைத் தான் குறுக்காக வைத்துக் கொண்டு 'H' என்று குழம்பிக் கொண்டு இருந்தார்.

தலைவர்....! தலைவர்....!

2 comments:

பின்னோக்கி said...

சிரித்து சிரித்து :))
வெர்னியர்..மேட்டர் சூப்பர்..ஆனாலும்..உங்கள் பேனா..நூல் மேட்டரை பாராட்டியே தீர வேண்டும்... நானாக இருந்தால் டென்சனில் தப்பாக எழுதிவிட்டு வந்திருப்பேன்.

அந்த T and H matter is superb

இரா. வசந்த குமார். said...

அன்பு பின்னோக்கி...

நன்றிகள். தலைவரைப் பற்றி எழுதினாலே அது கலக்கல் தான்..!!! :)