Monday, March 17, 2008

நெய்யார் அணைச் சுற்றுலா!

சென்ற சனிக்கிழமை. வைகறைப் (காலை) பொழுது. (இங்கே வைகறை என்றால் மாலை நேரம்...!) எட்டு மணி இருக்கும். கழக்குட்டம் சந்திப்பில் திருவனந்தபுரம் செல்லும் திசையில் காதுகளில் ஒலி கேட்பானைச் செருகிக் கொண்டு, செல் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டு எந்தப் பக்கம் இருந்து பேருந்து வரும் என்று எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பெயர் கேட்டிருந்தால், என் பெயர் சொல்லி இருப்பான். ஆம்..! அப்படி தான் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு கால் மணி நேரம் கழித்து பிரத்யேகப் பேருந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டேன். உள்ளே ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர். மெல்லப் புன்னகைத்துக் கொண்டோம். வண்டியின் பின்புறம் பார்க்க, ஒரு பெட்டி இருந்தது. இறுக்கி மூடியபடி.

"உள்ளே எல்லாம் இருக்கின்றது அல்லவா?" என்று கேட்டேன்.

"எல்லாம் சரியாக இருக்கின்றது. இன்னும் சில பெட்டிகள் வைக்கும் இடத்தில் இருக்கின்றன."

"Good..!" சொல்லிக் கொண்டேன்.

அதற்குள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஒவ்வொருவராக வந்து ஏறிக் கொண்டார்கள். பின் ஒவ்வொன்றாக எடுத்து வகை பிரித்து வைத்தார்கள். தனித்தனியாக பேக்குகளில் வைத்து அடுக்கி, குளிரூட்டும் ஐஸ் கற்களையும் எடுத்துப் போட்டு, பிரித்து கடைசி இருக்கையின் அடிப்புறங்களில் வைத்தார்கள்.

BagPiper.

KingFisher Beer.

அட.. நாங்க நெய்யார் அணைக்குச் சுற்றுலா சென்ற கதையைத் தாங்க கொஞ்சம் த்ரில்லிங்கா சொல்ல வந்தேன். என்ன பயந்துட்டீங்களா..? (அடிங்க....!)

தம்பானூர் சென்று காலை உணவை முடித்துக் கொண்டோம். (நான் பொங்கல் 2 வடை மட்டும்..!)

பின் பாடு பாடிக் கொண்டு, (அவிட மக்கள் தாங்க பாட்டு பாடிக் கொண்டே வந்தது. நாம வெறும் கைத் தட்டு தான்..)

மலை நாட்டிற்கு வந்து சில சுற்றுலாக்கள் சென்று வந்திருந்தாலும், இது தான் உண்மையான கேரள ஸ்பெஷல் சுற்றுலாவாக இருந்தது. காலையில் இருந்தே மழைத் தூறல். அவ்வப்போது கொஞ்சம் பெரியதாக. பின் அமைதியாக என்று வகை வகையாக வழியெங்கும் பெய்து கொண்டிருந்தது.

காலை 10.30 மணி சுமாருக்கு அணைக்கட்டுப் பகுதியை அடைந்தோம்.

மெல்ல நடை போட்டு, மேலேறினோம். அணைக்கட்டைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஒற்றை வழி போல் இருந்தது. அதில் நடந்து தான் செல்ல முடியும். வண்டிகள் எல்லாம் செல்ல முடியாது. அதைக் கடக்கையில் கீழே எட்டிப் பார்த்தோம். மெயின் மதகுகள் திறக்கப் படவில்லை. இருந்தாலும் நீர் வெளியேற்றத்திற்காக சிறிய மதகுகள் வழி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. அதிலேயே நீர் பேய் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.

இந்தப் பக்கம் பார்த்தால், அணைக் கட்டு அமைதியாக தோற்றம் அளித்தது.

அதனைக் கடந்து அந்தப் பக்கம் சென்றோம்.

படகுச் சவாரிக்கு இன்னும் படகு வந்து சேரவில்லை என்று தெரிந்தது. ஏற்கனவே ஒரு சவாரிக்குச் சென்றிருந்தது. அதற்குள் சும்மா இருக்க மாட்டாமல், கையோடு கொண்டு வந்திருந்த கால்பந்தை உதைக்க ஆரம்பித்து விட்டார்கள். நானும் சும்மா இருக்கவில்லை..! அங்கிருந்த பெட்டிக் கடைக்குச் சென்று, பெரிய சைஸ் நெல்லிக்கனிகள், ஏதோ ஒரு பழம் பேர் சொன்னார்கள், அது, மாங்காய்த் துண்டுகள் (உப்பு மிளகாய்த் தடவி) என்று வாங்கி வந்து அவர்கள் ஆட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பின்னே, எல்லோரும் விளையாடப் போய் விட்டால், யார் தான் சப்போர்ட் செய்வதாம்..!

இரு படகுகள் வந்தன. ரூஃப் மற்றும் டாப்லெஸ்.

தண்ணி சைவர்களான சில பேர் மற்றும் தண்ணி அசைவர்கள் என்று இரு அணிகள் பிரிந்து, த.அ. ரூஃபை எடுத்துக் கொள்ள, நாங்கள் டாப்லெஸ்க்கு வந்தோம். அதுவரை தூறிக் கொண்டிருந்த காலநிலை சட்டென்று மாறி, வெயில் கொளுத்த ஆரம்பித்தது. என்ன கொடுமை சார் இது? டாப்லெஸ் கடுமையாக வறுத்தெடுத்தது. சுற்றிலும் தண்ணீர், ஆனாலும் உடலிலிருந்து வேர்வை பொங்கிப் பிரவாகித்தது.

'கெட்ட ப்ராஜெக்டே கிடைக்கும்! விட்ட பக்கே துரத்தும்' என்ற பழமொழிக்கேற்ப படகு பாதி வழியில் மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டது. ஓட்டுநர் அப்படியேத் திருப்பி, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப ஆரம்பித்தார். பாதி வழியில் படகு நின்று விட்டால், இறங்கித் தள்ளக் கூப்பிடுவார்களோ' என்ற சந்தேகம் எல்லோர்க்கும் இருந்து கொண்டே இருந்தது. நல்லவேளையாக பத்திரமாக புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ப்பித்தார். வெயிலின் கொடுமை எந்தளவிற்கு இருந்ததென்றால், கையில் வைத்திருந்த கால்பந்து, சரியாக படகுக் குழாமை அடைந்த நொடி, 'படாரென' வெடித்துப் பிளந்து, உண்மையிலேயே 'கால்'பந்து ஆனது தான்..!

அதற்குப் பின் மீண்டும் காலநிலை மாறியது. மீண்டும் தூறல் விழ ஆரம்பித்தது. 'இதைத் தான்டா நேரக் கொடுமைனு சொல்லுவாங்க' என்று நினைத்துக் கொண்டேன். பின் எல்லோருடனும் மொக்கை போட்டுக் கொண்டே (இங்க சூப்பர் ஸ்டார் யாரு? என்னது மோகன்லாலா? ரஜினி மாதிரியா? கொஞ்சம் ஓவர் தான்..!)

பின் ரூஃப்டாப் வர அதில் எல்லோரும் ஏறிக் கொண்டு மெதுவாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டே, மிச்ச மக்கள் இறங்கிய இடத்திற்குச் செல்ல, அங்கு எதுவுமே மிச்சமில்லை. வெறும் கொஞ்சம் மிக்சர் பாக்கெட்டுகள், 7அப் மட்டும் தான் இருந்தன. மனம் வெறுத்துப் போய் அதற்கும் அடித்துக் கொண்டு சாப்பிடோம். இருந்தாலும் இப்படி ஆகியிருக்கக் கூடாது. ;-(

பின் அங்கே யானைகள் கட்டியிருந்த இடத்திற்குப் போனோம். யானை சஃபாரி (அது தாங்க யானை சவாரி!) அன்று இல்லை. காரணம் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது தான். பின் யானைகளைத் தொட்டுக் கட்டிப் பிடித்து, தும்பிக்கைக்கு முத்தம் கொடுத்து என்று எல்லாம் போஸ் கொடுத்து எங்களது வீரத்தைப் புகைப்பதிவு செய்து கொண்டோம். பாவம் அந்த ஐந்து வயது யானைக் குட்டி தான் திணறிப் போய் விட்டது. அது நினைத்திருக்க வேண்டும், 'ஏண்டா எனக்கு மட்டும் இவ்ளோ முத்தம் கொடுக்கறீங்க..! போங்க..! போங்க..! அங்க எங்க தலைவர் இருக்கார்.அவர்கிட்ட நெருங்குவீங்களா..? நாங்க அப்பிரணிங்ககறதால தான எங்களை இப்படிப் படுத்தறீங்க..!'

பின் மதிய உணவை முடித்துக் கொண்டு, முதலை காப்பு மையத்திற்குச் சென்றோம். 'ஸ்டீவ் இர்வின்'. நினைவிருக்கிறதா? அவர் பெயரைத் தான் இந்த மையத்திற்கு வைத்துள்ளார்கள். அங்கும் அரை கி.மீ. தூரத்திற்குத் தள்ளி நின்று 'க்ளிக்'.

பின் சிங்கராஜா இருக்கும் பகுதிக்கு பாதுகாப்போடு சென்றோம். அங்கிருந்த போர்டில் எழுதி இருந்தது. 'இரண்டு ஆண் சிங்கங்கள். ஆறு பெண் சிங்கங்கள்'. (மச்சம்டா மகாராஜாவுக்கு..!).

பின் அவற்றின் அருகிலேயே சென்று க்ளிக்கிக் கொண்டோம்.

என்ன கொடுமை! அவை எங்களை மதிக்கவேயில்லை. இது போல் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்களோ..! சில பேர் 'சூ..சூ..' என்று வீட்டு ஜிம்மியைக் கூப்பிடுவது போல் கூப்பிட்டார்கள். காட்டு ராசாவைக் கூப்பிடும் முறையா அது என்று வருந்தினேன். 'இராஜாதி ராஜ இராஜ மார்த்தாண்ட இராஜ குல திலக....' மனசுக்குள் ஓடியது.

பின் மலையை விட்டு இறங்கி ஊரைப் பார்க்கக் கிளம்பினோம்.

இரவு 7.30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்து, புகைப்படங்களை உற்றுப் பார்க்க, விரக்தியால் சுருங்கிப் போன கண்களோடு மகாராஜாவின் சோக முகம் மனதில் பதிந்தது. யானைக் குட்டி இதைப் பற்றியும் நினைத்திருக்குமோ...?

'மின்னிய பழம்பெருமையின்
மிஞ்சிய வெறும் நினைவு...!' (மேற்கோள் நன்றி : மதன். வந்தார்கள் வென்றார்கள்)







No comments: