
மென் அழகின் பொன் நிழலே! மாலை கவிழும் பகலின் தடங்கள் மறைகின்ற வரை நந்தவனத்தின் இருக்கைகளில் அமர்ந்திட்டுச் செல்!
முக்கனிகள் பூத்துக் காய்த்துக் கனிந்து, பின் வாசனையோடு வசந்தம் பரப்பும் காலம் அல்லவா இது? தேரோடும் வீதிகள் பாயும் ஊரோடும் ஒதுங்கி இருக்கும் தோட்டத்தில் மேகங்கள் பொழிவது பொல் குளிர்ச்சியென பொழிந்து போ, தமிழை!
சீதளமென படர்ந்திருக்கும் குளக்கரையில் அன்னம், நாரை, வெண் தாமரை, செந்தாமரை, யாவும் தேன் சுமந்து நிரம்ப மாட்டாமல் நிற்க, நீ நடந்து வருகையில் கவிழ்ந்து வணக்கம் செய்கையில் சிந்தித் தெறிக்கின்றன சேர்த்து வைத்த இனித்தேன் துளிகள். வண்டினம் மகிழ வலம் வருகிறாய் நீ!
மோகன இரவின் நிலாக் கிரணங்கள் நனைக்கின்ற பொழுதுகளில் உறக்கம் விழுங்கிய விழிகளை வீசி எறிய, நீ நடை பயின்ற பாதைகளில் தடம் தேடுகின்றன. குளிர்த் தென்றல் கோதுகின்ற காலை நேரத்தில் நடை வர, பாதங்கள் உன் நிழல் கலந்திருந்த நிழல்களைக் காலடியில் மிதித்திருந்த மாமரங்களின் அடியில் சென்று சேர்க்கின்றன.
மல்லிகை, முல்லை, ஆவாரம்பூ, பூசணிப்பூ, நாகவட்டை, செவ்வரளி குவிந்திருக்கும் வனத்தில் மேலும் ஒரு மலரென மலர்ந்திருக்கும் இராஜராணி, தேகத்தில் ஊறி காய்ந்த பின் கழற்றித் தூர எறியும் முகம் சூம்பிய பூ போல் வீசி எறிவாயோ என்னையும் பின் ஒரு காலம்?
திருக்கோயிலின் தூண்களில் ஆதுரமாய்த் தடவிச் செல்லும் போது தமக்குள் புன்னகைத்துக் கொள்ளும் சிலைகளில் நானும் ஒன்றாய் ஒரு இடத்தில் நின்று கொள்ளவா, நினது பூ விரல்கள் தீண்டும் இன்பம் பெற?
உமையொரு பாகனின் நாயகியென நீ நர்த்தனமிட தெறிக்கின்ற கொலுசின் மணிகளை அள்ளி வந்து திருக்கரங்களில் வழங்கிட, சிந்துகின்ற புன்னகையில் மற்றும் ஒரு மணித் துகளாய் சிதறி ஓடி விழுகின்றேன்.
மலை நுனியில் விளைந்திருக்கும் தேனுமினிய நெல்லியென விளைந்திருக்கும் இனிக்கும் சொற்களைச் சொல்லச் சொல்ல, பல நாள் பெரும் பசியினோடு மல்லுக்கட்டிய வேடனின் முன் பேரின்பம் நல்கும் அமுதப் பொழிலைச் சரிக்கப் பாய்கின்ற புயல் வேகத்தோடு சுவைக்கத் தொடங்குகிறேன்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
No comments:
Post a Comment