Friday, April 25, 2008

எனவே, நான், வேண்டாம். - 2.

ழகர்சாமி கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போகலானான்.

இரண்டு மாதத்திற்கு முன்னால் என் ஆஃபீஸுக்கு முன் மலங்க, மலங்க விழித்த மதுரைக்கார மச்சான் இல்லை இப்போது! வேறு தினுசில், வேறு வகையில் மாறி இருந்தான்.!

ஒரே மாதத்தில் கோடம்பாக்கம் ரெயில்வே ஓவர் பிரிட்ஜில் ஏறி இறங்கி, லெஃப்ட் டர்ன் செய்து, மேனகா கார்ட்ஸ் கார்னரில் ரைட் டர்ன் அடித்து, உள்ளே சந்துகளில் இருக்கும் மற்றொரு கால் சென்டரில் அவனுக்கு வேலை கிடைத்து விட்டது.

ஒரு விதத்தில் அவனுக்கு சரியான வேலை தான். ஃபாரின் கஸ்டமர்ஸ், ஊர் சுற்றிகள், ஹிப்பிகள், கை நிறைய, பாஸ் புக் நிறைய, கிரெடிட் கார்டுகளையும், பணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் சிவந்த கனவான்களுக்கும், சீமாட்டிகளுக்கும் உலகம் முழுதும் டூர் அரேஞ்ச் செய்து தரும் அமெரிக்க நிறுவனத்தின் சப்போர்ட் டீம் இந்த கால் சென்டரில்! அ.சாமி தான் பி.ஏ. ஹிஸ்டரி ஆயிற்றே! அந்த ஒரு தகுதிக்காகத் தான் அங்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்! மற்றபடி அவனது ஆங்கில உச்சரிப்பு மேல் எனக்கே, அவனுக்கே துளியும் நம்பிக்கை இருந்ததில்லை.

நானும் அங்கு ஒரு முறை ட்ரை செய்தேன். அதிகச் சம்பளம். கிடைக்கவில்லை! அதுவும் கூட அழகர்சாமியின் மாற்றங்களுக்கு காரணமாய் இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.

வீட்டிற்கு வந்த புதிதில், The Indian Express கொடுத்து படிக்கச் சொன்னேன். எடுத்தவுடனே The Hindu வேண்டாம். அது மிக்க ஆங்கிலம் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். அ.சாமி பத்திரிக்கையைப் பார்த்து விட்டு 'இது ரெயில்வே பத்திரிக்கையா?' என்று கேட்டான். புரிந்தது. சிரிப்பதா, வேண்டாமா என்று முடிவெடுக்கவில்லை! விளக்கி வாய் விட்டுப் படிக்கச் சொன்னேன்!

ஆரம்பத்தில் தடுமாறினான். மப்பில் மட்டையாகி விட்டு, அடுத்த நாள் காலையில் எழும் போது, முகமெல்லாம் அந்த கெட்ட வாடை அடிக்குமே, அது போல், தென்னக வாசம் அவனது ஆங்கிலத்தில் பரவி இருந்தது.

பகலில் நான் தூங்கிப் போனவுடன் அவன் என்ன செய்வான் என்றே தெரியாது. உணவு செய்து வைத்து விட்டு, தூங்கி விடுவேன். சாயந்திரம் விழித்துப் பார்த்தால் சாப்பாடு அப்படியே இருக்கும். விழித்துப் பார்த்தால் அவன் இருப்பான். 'எங்கே சாப்பிடுகிறான்?' என்று கேட்டால் மழுப்பலாகச் சிரித்து சமாளிப்பான். ஒருமுறை ரொம்பக் கட்டாயமாகச் சொல்லி விட்டேன். நீயும் இங்கு தான் இனிமேல் சாப்பிட வேண்டும் என்று! அன்று இரவு விழித்துப் பார்த்தால் பூனை உருட்டியது போல் பத்திரங்களை உருட்டி வைத்திருந்தான். தலையில் அடித்துக் கொண்டேன்.

சில சமயம் பகலிலேயே கண்ணில் தென்பட மாட்டான். அப்போதெல்லாம் அவனைப் பற்றி நினைக்கவே மாட்டேன். இரவில் வேலையில் இருக்கும் போது, 'திடீரென அவன் நினைவு வரும். பகலில் எங்காவது இண்டர்வ்யூ சென்றிருப்பான் என்று சமாதானப் படுத்திக் கொள்வேன்.

இருவருக்கும் கிடைக்கின்ற லீவுகளில் மெரினா பீச், சமாதிகள், செத்த ம்யூஸியம், உயிருள்ள ம்யூஸியம், மயிலை கோயில், பறக்கும் ரயில், அஷ்டலட்சுமி கோயில், எலியட்ஸ் பீச், கிண்டி ரேஸ் கோர்ஸ் (7-ம் நம்பர் இன்னிக்கு கெலிச்சிடுச்சு சார்!), மின்சார ரயில் (கள்ளழகர் வைகையில் எறங்கும் போது, இருக்கற கூட்டம் மாதிரி இல்ல இருக்கு!), 21G, 12B, கோயம்பேடு, மால்கள், சென்ட்ரல், மவுண்ட் ரோடு ஹிக்கின் பாதம்ஸ், பர்மா பஜார் (சார்! சி.டி., டி.வி.டி., எல்லாம் போதுமா சார்? நம்ம கையுல நல்ல குட்டிங்க இருக்குது! சுத்தம். எந்த நோயும் இருக்காது! எல்லாம் டீஸ்ண்டான கேள்ஸ்! அவருக்கு 100 ரூபா தான். வர்றியா சார்?), ஹை கோர்ட், மண்ணடி லாரி ஆபீஸ்கள், ஹார்பர், தி.நகர் எறும்பு மனிதர்கள், கடைகள், புரசை துணிக் கடை.. இல்லை. துணிக் கடல்கள், திருவல்லிக்கேணி பாதசாரி புத்தக கடைகள், லஸ் கார்னர் ஆழ்வார் புத்தக விரிப்பு, சாந்தோம் சர்ச், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் (அப்பாடா! இது ஒண்ணு தான் எங்க ஊர்ல இருக்கற மாதிரி இருக்கு!), L.I.C., The One and Only கூவம்.....

தருமமிகு சென்னையின் பெருமைகளைக் கிராமத்து Migrantக்கு காட்டவேண்டியது, தலைமுறை சென்னைவாசியின் தார்மீகக் கடமை என்றே உறுதியாக நம்பினேன்.

முதல் மாற்றம் செல்போனில் வந்தது.

நான் பயன்படுத்தி ஓரம் கட்டி இருந்த, ஒரு மாடல் செல்போனைக் கொடுத்தேன். (இப்போது அந்த மாடல் Production-லேயே இல்லையாமே!). ராமரிடம் பாதரட்சையை வாங்கும் போது பரதன் கூட அப்படியொரு பணிவு காட்டி இருக்க மாட்டான். அப்படி ஒரு பணிவுடன் வாங்கிக் கொண்டான். நானே ரீசார்ஜ் செய்து கொடுக்க, முதல் கால் எனக்கே பேசினான்.

பக்கத்து பக்கத்து சோபாவில் அமர்ந்து கொண்டு இருவரும் போனில் பேசுவது, அவனுக்கு மிக்க வினோதமான காரியமாகத் தோன்றியிருக்க வேண்டும். முகம் கொள்ளாத சிரிப்பு அவனுக்கு!

பீரோவில் இருந்த என்னுடைய பழைய உடைகளை எடுத்துக் கொடுத்தேன். அணிந்து கொண்டான். அவனுக்கு ஓரளவு சரியாகத் தான் இருந்தன.

"வண்டி வாங்கலாம்னு இருக்கேன்! எது பெஸ்ட் சொல்லுங்க சார்! DTS-i, Pulsar, Unicorn?" என்று ஒரு தோரணையில் கேட்டான்.

பணம் ஸார், பணம்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்! பணத்தை எல்லாம் பாட்டிக்கு அனுப்பிட்டு, என்னோட பழைய வண்டியை யூஸ் பண்ணிக்கோ!" என்றேன். சரி என்றான் உடனடியாக. Hero Honda.

இப்படியாகச் சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்வில், இல்லை... இல்லை.. மானாமதுரை அழகர்சாமியின் வாழ்வில் ஒரு பெண் வந்தாள்....

என்று நினைக்கிறேன்.

(தொடரும்.)

No comments: