Saturday, April 26, 2008

எனவே, நான், வேண்டாம். - 4.

சிலுசிலுவென தான் இருந்தது.

ரூஃப் டாப்பில் இருக்கும் கேண்டீனில் இருந்து உயரமான, ஒல்லி கப்பில் கார்ன் சூப்பும், வெனிலாவும் வாங்கி வந்து அமர்ந்தேன். ப்ளாஸ்டிக் சேர்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருந்தது. மடிவாலா ஃப்ளை ஓவர் இன்னும் தெளிவாகவே தெரிந்தது. வரும் போது ஃப்ளைட்டில் சரியாகத் தெரியவில்லை. அடைத்துக் கொண்டு இருந்த சின்னச் சின்ன கார்களும், பைக்குகளும் இண்டு இடுக்கில் கூட வியர்வை உதிர நின்று கொண்டும் நகர்ந்து கொண்டும் இருந்த ஜனங்களின் தலைக்கு மேல் பறந்து 09:20 மணிக்கு பெங்களூர் ஹெச்.ஏ.எல். ஏர்போர்ட்டில் வந்து சேர்ந்த போது ,தெரிந்தது.

இன்னும் அந்த குளிர் மாறவேயில்லை.

"Good Morning Gentleman! Welcome to the Communication Triangle Workshop. And as you know me.."

அந்த ஜெர்மானியனின் கெட்ட ஆங்கிலம் இன்னும் காதுக்குள் வட்டமிட்டபடி இருந்தது. இவன் பேசும் மொழிக்கு, அழகர்சாமியின் ஆங்கிலம் கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது.

சட்டென ஞாபகம் வந்தது. என்ன ஆனது அவனுக்கு? ஏன் இன்னும் ஃபோன் செய்யவில்லை?

காலை இடைவேளையில் நடந்தது என்ன?

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நான் கண்டறிந்த்து உண்மை தானா? இல்லை நான் தான் குழப்பிக் கொள்கிறேனா?

அழகர்சாமி பேசிய கடைசிக் காலுக்கு நானும் கால் செய்தேன். ஆனால் கிடைத்த பதில் அதிர்ச்சி அளித்தும், கொஞ்சம் நான் நினைத்தது சரி தான் என்றது போலும் தோன்றச் செய்தது. அப்படியெனில் அப்படி ஒரு எண்ணே இல்லையா? க்வின்ஸ்லேண்ட் சென்று வந்த டிக்கெட் ரசீதை மறுபடியும் தான் செக் செய்தேனே! அதில் ஒரே ஒரு Allow தானே சீல் குத்தி இருந்தது. மற்றொரு டிக்கெட் அவளிடம் இருக்கலாம். இல்லாவிடில் கிழே தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். அல்லது ஏதேனும் ஆகி இருக்கக் கூடிய லட்சக்கணக்கான வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்து அதன் விதி அமைந்திருக்கலாம்.

அதைச் செக் செய்து கொள்ளத்தானே கால் செய்து பார்த்தோம்.

அப்படி ஒரு எண்ணே இல்லை என்றால், யாருடன் அ.சாமி அப்படிக் காதலோடும் கத்தலோடும் பேசிக் கொண்டு இருந்தான்?

ஒரு முறை கூட நான் பார்க்கவில்லையே அவளை! அவளைப் பற்றி என்ன எல்லாம் சொல்லி இருக்கிறான்? Accumulate செய்! எங்காவது லாஜிக் இடிக்கிறதா, இல்லை உள்ளதா என்று பார்ப்போம்!

"எக்ஸ்க்யூஸ் மீ சார்! திஸ் இஸ் நோ ஸ்மோக்கிங் ஸோன்! சோ ப்ளீஸ்...!" மென்மையாக மறுதலித்தான் வெண்ணுடை பேரர் ஒருவன்.

இரண்டாக மடித்து, நொறுக்கி 'வா.. என்னை உபயோகி' என்று காதலுடன் பார்த்த கரடி வாய் டஸ்ட் பின்னில் விசிற்னேன் ஃபில்டரை!

மாடியில் விளிம்பில் நின்று கொண்டு யோசித்தேன்.

அவள் பெயர் என்ன சொன்னான்..? என்ன? என்ன?.. மறந்து விட்டது. அப்புறம் ஞாபகம் வரும். படுத்திக் கொள்வோம். அவள் இவனுடன் படித்தவளா? ஆ.. எப்படி இருக்க முடியும். இவன் இருந்தது மதுரையில்! அவளோ வட நாடு என்றான். சரி! எப்படிப் பழக்கம்! சென்னையின் நெரிசல்களில் காதல் பற்றிக் கொள்ள ஆயிரம் நேரங்கள் இருக்கின்றன. மற. எங்கெல்லாம் சென்றான்? பலவித ரெஸ்டாரண்ட்கள். தியேட்டர்கள். பார்க்குகள். கடைசியாக க்வின்ஸ்லேண்ட். எங்கே தங்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறான். ஏதோ ஒரு ஹாஸ்டல்? விசாரிக்க வேண்டும். அவனைத் தவிர வேறு யாராவது அவளைப் பார்த்திருப்பார்களா. அவன் சொன்ன அத்தனையும் நிஜமாய் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக ஓர் ஆயிரம் பேராவது பார்த்திருப்பார்கள்.

அழகர்சாமி மயங்க வேண்டும் என்பதற்கு அவள் ரம்பையோ, மேனகையோ என்று இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பெண்ணாய்ப் பிறந்தாலே குறைந்தது 237 பேர்களின் (ஆண், பெண் சேர்த்து!) காதலுக்கு ஆளாகிறாள் என்று புள்ளி விவரங்கள் கூறுவது நினைவுக்கு வந்தது. மற்றும் ஒருவர் ஒரே ஒருவர் அவளைப் பார்த்திருப்பதாக தெரிய வந்தால்.. போதும்.

எனது கணிப்பு தவறாகி விடும் அப்படித்தான் ஆக வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

எதற்கும் ஒரு முறை கால் செய்து பார்ப்போம் அவனுக்கு!

மற்றும் ஒரு முறையா?

காலையில் ஷேவ் செய்து கொள்ளும் போது, ராகேஷ்ஷிடம் (ராகேஷ் யார்? அவன் என் பால்ய நண்பன். இந்தக் கதைக்கு இந்த இடத்தில் மட்டும் தேவைப்படுபவன். வேறு எந்த சீனும் இல்லை. எனவே இந்தக் கதையை நாடகமாக எடுப்பவர்கள், இக்கேரக்டருக்கு வெறும் குரலை மட்டும் யூஸ் செய்து கொள்ளவும். இல்லாவிடில் 'நடிப்பே என் மூச்சு' என்று கூறி அடங்க மறுக்கும் உங்கள் மச்சானுக்கு இந்த வேடத்தை ஒதுக்கி, அதைச் சொல்லி உங்கள் சகதர்மிணியிடம் இரண்டு நாட்கள் ஜாலிலோ ஜிம்கானா!) ஃபோன் செய்து பார்க்க சொன்னேன். பலமுறை முயற்சி செய்தும் அந்த நம்பர் கிடைக்கவே இல்லை என்று உதட்டைப் பிதுக்கினான். (ட்ராமா டைரக்டர்'ஸ் அட்டென்ஷன் : இல்லடா! லைன் கிடைக்கவே மாட்டேங்குது!)

பிறகு நான் முயற்சி செய்து பேசித் தான் மெல்ல மெல்ல விஷயத்தைக் கூறினேன். எப்படி பாலிஷாக கூறுவது என்று ஃப்ளைட்டில் உருப் போட்ட வசனங்கள் மறந்து போயின.

"அழகர்! இப்ப உங்கிட்ட ஒண்ணு சொல்லப் போறேன். அதிர்ச்சி அடையக் கூடாது! டென்ஷன் ஆகக் கூடாது. இது சில பேர்க்கு.. வொய் நாட், சில டைம்ஸ் எல்லார்க்கும் ஏற்படறது தான். சோ இதை ஒரு நோயா நீ பார்க்கக் கூடாது. இல்ல... குறுக்க ஏதும் பேசாத. நான் சொல்லி முடிச்சிடறேன். நீ காதலியா நெனச்சுக்கிட்டு இருக்கியே.. பேர் எல்லாம் வேணாம். எதுவும் பேசாத. சொல்றத கேளு. அந்தப் பேர் பொய். இல்ல, அவளே பொய். எல்லாம் பொய். நீ க்வீன்ஸ்லேண்ட் போய்ட்டு வந்ததா, அவ கூட ரெஸ்டாரண்ட்ஸ் போனதா, தியேட்டர்ஸ்ல இருட்டு மூலைகள்ல லிப் கிஸ் அடிச்சது.. ஆமா, கொஞ்சம் ஈரமா இருந்ததுனு சொன்னியே.. அது தான்.. எல்லம் பொய். ஷி இஸ் யுர் இமாஜினேஷன். ஜஸ்ட் இமாஜினேஷன். அப்படி ஒரு ஆளே கிடையாது. என்ன, நான் உளற்ரனா?

மை டியர் பாய்! நான் பொய் சொல்லல! அவள் உன்னோட ப்ரெய்ன் போட்ட ஒரு ட்ராயிங். நீ பார்த்த பல பெண்களோட பல பார்ட்ஸை வெச்சு நீயா வரைஞ்சுகிட்ட ஒரு பிக்சர். ஆமா.. அதே தான் நீ சொன்ன அந்த டைமன்ஷன்ஸ் எல்லாம் ஒரு பொண்ணுக்கு, அதுவும் நம்ம கண்ட்ரி பொண்ணுக்கு சாத்தியமே இல்ல. இட்ஸ் ப்யூர்லி எக்ஸ்ட்ரா ஆர்டினரி. அவள் உன்னோட கற்பனை. நீ அது மாதிரி பொண்ணு கூட வாழணும்னு நெனச்சு உன் கற்பனையில ஒரு லைஃப் வாழற. வெளிய வா.சரி.. அழாத... நெனச்சுப் பார். ஐ நோ யு ஆர் என் இண்டலிஜெண்ட் ஃபெல்லோ. யு கேன் அண்டர்ஸ்டாண்ட். இரு...! நான் வர்ற வரைக்கும் எங்கயும் போகாத. அந்த நம்பர்க்கு கால் பண்ணாத. இப்ப தான் பேசினியா...? இட்ஸ் தட் மேன். அது உன் கற்பனை.

ஒண்ணு செய்.

அந்த நம்பரை வேற ஒருவர்க்கு குடுத்து அவரைக் கால் பண்ணச் சொல். என்ன பதில் சொல்றார்னு மட்டும் சொல். அதை எனக்கு கால் பண்ணி சொல். அது வரைக்கும் எங்கயும் வெளியே போகாத. நம்ம பெருமாள் கிட்ட மட்டும் குடுத்துப் பேசச் சொல்.

நான் இந்த கான்ஃப்ரன்ஸ் முடிஞ்ச உடனே வந்திடுவேன். அது வரைக்கும் வெளியே எங்கயும் போகாத. ஃபுட் எல்லாம் ஃப்ரிட்ஜ்லயே இருக்கு. சாப்பிடு. நான் இன்னிக்கு வந்திடுவேன். தென் வி வில் டிஸ்கஸ்.. ஓ. கே.வா? பை."

ன் இன்னும் அவன் கால் பண்ணவே இல்லை? நான் சொன்ன மாதிரி செய்தானா? இல்லை... நான் சொல்லாததையும் செய்து கொண்டானா..! மை காட். தென் இட் வில் பி வெரி சீரியஸ்! ஐ ஹேவ் டு கோ டு சென்னை soon.

"ராக்கேஷ்..! ஆமா நான் தான்.. இல்ல, உடம்புக்கு ஒண்ணும் இல்ல. நான் இப்ப உடனே சென்னை போகணும். ஹவ் மச் soon இட்ஸ் பாஸிபிள்....! ஃப்ளைட் இப்ப இருக்காது. கார்..! உடனே ஒரு கார் அரேஞ்ச் பண்ணு! வொய் ஐ ஏம் ஒர்ரி? சொல்றேன். எல்லாக் கதையும் உனக்குச் சொல்றேன். உடனே வா! கான்ப்ரன்ஸா? லீவ் சொல்லப் போறேன் இப்ப..! உடனே வா! ஆமா! மாரத்தஹள்ளி இண்டல் ஆஃபீஸ்க்கு எதிர்ல, செகண்ட் க்ராஸ்..! ஜல்தி மேன்..!"

வியர்த்து விட்டிருந்தது எனக்கு! அவன் ஏதாவது விபரீதமாகச் செய்து விடப் போகிறான்.

ரவு எட்டு மணிக்கு வீட்டை அடைந்தோம் நானும், ராக்கேஷும்.

ஒரு மாதிரி ஓடினேன் என்று சொல்லலாம். ராக்கேஷ் காரை நிறுத்தி விட்டு வருவதற்குள்! கதவைத் திறந்து பார்க்க..

அழகர்சாமி சோஃபாவில் படுத்திருந்தான். அமைதியாக. லாங் ட்ராவலுக்கு டிக்கெட் புக் செய்து கன்பார்ம் செய்யப்பட்டவன் போல், மிக அமைதியாக. அவன் கைகளில் ஒரு குட்டி டப்பி. மாத்திரை டப்பி போல் தெரிந்தது. என்ன அதில் வெள்ளை வெள்ளை மாத்திரைகள்? ஸ்லீப்பிங் பில்ஸ்...! மை காட். உதறி விட்டு அழகர் சாமியை உலுக்கினேன்.

"அழகர்..! எழுந்திருடா..! என்னடா பண்ணிட்டே? ஏன்டா? உண்மையைத் தாங்க முடியாம இப்படி பண்னிட்ட. நான் தான் வர்றேன்னு சொன்னேன் இல்ல...!" இது நான் தானா என்றே எனக்குத் தெரியவில்லை. அழுகிறேன் நான்.

ராக்கேஷ் உள்ளே நுழைவதைப் பார்க்கிறேன்.

"பார்த்தியாடா அழகரை! நான் சொன்னேன் இல்ல! சீக்கிரம் போ, போன்னு! பார், இங்க செத்துக் கெடக்கறான்! அவன் காதலி ஒரு கற்பனைக் கேரக்டர்னு நான் சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியாம சூசைட் பண்ணிக்கிட்டான் பாரு! டேய் ஏண்டா செத்தா? ஏண்டா?"

அழகர்சாமியின் கழுத்துக் காலரைப் பிடித்து உலுக்கினேன்.

அகஸ்மத்தாய் அவள் பேர் ஞாபகம் வருகிறது. அவள்? அழகர்சாமியின் காதலி. கற்பனைக் காதலி.

ரீமா....

நெஞ்சில் ஏதோ பெரிய துக்கம் அலையலையாய் பொங்கிப் பொங்கி பாய்கிறது. நூறாயிரம் கீறல்கள் குறுக்கும் நெடுக்குமாய், ஆயிரமாயிரம் விசிறல்களால் நிரம்பிய என் மூளைக்குள் ஏதோ பெரும் ப்ரளயம் வெடித்தது போல் இருந்தது. கண்கள் பெரு வெளிச்சக் குடுவையாய் மாறித் துடித்தன. சிதறியது.

சூன்யம். இருளின் சூன்யம். அமைதி. காலங்கள் எல்லாம் கடந்தும் காற்றின் மேனி எங்கும் ஒரு ஆடை போல் பழங்கும் அமைதி.

மயங்குகிறேன் என்று நினைக்கி......

ராக்கேஷ் ஸ்விஃப்ட்டை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வந்தான். சந்த்ரூவின் அப்பார்ட்மெண்ட்டுக்கு நுழையும் போது ஒரு விசித்திரம். அவனது பழைய ஹீரோ ஹோண்டா பல வருட தூசிகளோடும், அழுக்கோடும் நின்று கொண்டிருந்தது.

கதவைத் தள்ளித் திறந்து பார்த்தவன், மூச்சு விட மறந்து நின்றான்.

வரவேற்பறை அமைதியாக இருந்தது. சந்த்ருவின் பழைய துணிகள் தரையெங்கும் சிதறிக் கிடந்தன. அலமாரி பாதி திறந்திருந்தது. கால் வைக்கும் இடங்களில் எல்லாம் ஃபேர் அன் லவ்லி, ஃபேர் எவர் க்ரீம்கள் வழிந்திருந்தன. பிதுங்கிய ட்யூப்கள் உடல் முழுதும் ஒடுங்கி இருந்தன. பழைய 1100 ஒன்று ஓர் ஓரமாய் அமர்ந்திருந்தது, வெறும் உடலாக!

சோபாவில் சந்த்ரூ அழுது கொண்டு அமர்ந்திருந்தான். ரக்கேஷைப் பார்த்தான்.

"பார்த்தியாடா அழகரை! நான் சொன்னேன் இல்ல! சீக்கிரம் போ, போன்னு! பார், இங்க செத்துக் கெடக்கறான்! அவன் காதலி ஒரு கற்பனைக் காதலினு நான் சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியாம சூசைட் பண்ணிக்கிட்டான் பாரு! டேய் ஏண்டா செத்தா? ஏண்டா?"

ராக்கேஷ் பார்த்தான். சோஃபாவின் மேல் போடப்பட்டிருந்த பூப்போட்ட பெட்ஷீட்டைப் பிடித்து குலுக்குதல் போல் உதறினான் சந்த்ரு.

மற்றபடி அங்கு யாரும் இல்லை.....!

எங்கோ ஒரு பூனை முனகும் சத்தம் மட்டும் கேட்டது.

No comments: