Saturday, April 26, 2008

எனவே, நான், வேண்டாம். - 3.

ழகர்சாமியின் வாழ்வில் ஒரு பெண் வந்தாள் என்று சொல்லாமல், அ.வா.ஒ.பெ.வ. என்று நினைக்கிறேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? சொல்கிறேன். காரணங்கள் இருக்கின்றன.

அழகர்சாமி வாழ்வும் எல்லா Call Center பேச்சுலர்கள் போலவும் ஒரு சாரமற்றதாக இருந்தது. இரவு எழுந்தவுடன் வேலை; பின் களைப்பு நீக்க காபி; பகல் முழுதும் உறக்கம் என்று வழக்கப் படுத்திக் கொன்டிருந்தான். நான் கிளம்பும் போது என்னுடனே கிளம்பி விடுவான்; நான் திரும்புகையில் அவனும் திரும்பி வந்து விடுவான்.

மால்களில் அவன் கண்கள் விரிய காணும் போது, 'இவர்களை பெற்றார்களா இல்லை செய்தார்களா?' என்ற ஆதி நாள் ஐயத்தை உமிழ்வான். டி - ஷர்ட்களில் எழுதி இருக்கும் வாசகங்களைப் படித்தே அவனது ஆங்கில அறிவு விபரீதமான எதிர்த் திசைகளில் விஸ்வரூப தரிசனம் கண்டது. (உதா :Still U Think Twin Towers Demolished?)

அவனது வாழ்விலும் ஒரு பூங்காற்று வீசியது. அக்காற்று தென்னகக் காற்று அல்ல; வடக்குக் காற்று.

சில நாட்களில் புதியதாகக் காதலில் சிக்கியவர்கள் படும் அவஸ்தைகளில் மாட்டினான். தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினான். என்னிடமே 'ஃபேர் எவர், ஃபேர் அன்ட் லவ்லி.. எது மிக்க வலியது?' என்று விசாரித்தான். நான் இரண்டையும் வாங்கிக் கொடுத்தேன். என்னவோ, எனக்கு அவனிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மிக்கிருந்தது, அப்போது.

அவனது காதலியைப் பற்றியும், அவனுக்காக அவள் எதுவும் செய்யத் தயாராய் இருப்பதையும், வேண்டுமெனில் அவனுக்காக கட்டிய புடவையோடும் வருவாள் என்றும் (வேண்டாம். அசிங்கமாய் இருக்கும். ரவிக்கையும் போட்டுக்கோ.! நன்றி:எஸ்.வி.சேகர். (1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி.)), கூறலானான்.

சில சமயங்களில் அவன் கூறும் அவன் செய்த, அவள் செய்த காதல் காரியங்களில் எனக்கு பொறாமை கூட தோன்றியதுண்டு.

பின், எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும், ஏதோ ஒரு தடங்கல் ஏற்படல் ஆனது.

சில சம்பவங்கள் சொல்கிறேன்.

ஒரு தடவை ரெஸ்டாரண்டில் நாங்கள் இருவரும் காத்திருந்தோம். வெய்ட்டர் தளும்ப, தளும்ப தண்ணீர் கொண்டு வந்து, வைத்து விட்டு என்னிடம் "வாட் டு யு வான்ட் சார்?' என்றான். அழகர்சாமி சட்டென சுருக்கிட்டு, "என்ன இருந்தாலும் நகரத்து லுக் லுக் தான் . இல்ல?" என்று மெதுவாக என்னிடம் கேட்டான். கர்வத்துடன், "டூ சிகன்65.டூ சிக்கன் லாலிபாப். டூ பட்டர் நான் செட்" என்றேன். எனக்கு அவன் காதலி இன்று வர மாட்டாள் என்ற சந்தேகம் வலுப்பெற்றிருந்தது. பேரர் என்னிடம் "ஆர் யூ வெய்ட்டிங் ஃபார் சம் ஒன் சார்?" என்று பட்டர் ஆங்கிலத்தில் கேட்டான். அழகிரிசாமிக்காக "எஸ்!" என்றேன்.

அவள் வரவேயில்லை.

மற்றொரு முறை இருவரும் க்வின்ஸ்லேண்ட் செல்கிறோம் என்று சொல்லி விட்டு சென்றான். இரவு வெகுநேரம் கழித்து வருகையில் நன்கு நனைந்து இருந்தான். செல்போன் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அவள் பத்திரமாக ஹாஸ்டல் போய் சேர்ந்து விட்டாளா என்று விசாரிப்பதாகச் சென்னான். யதேச்சையாக (யதேச்சையாகத் தானா?) அங்கு சென்ற நான் தவிர்க்க இயலாமல் அந்த உரையாடலைக் கேட்க வேண்டியதாயிற்று.

"ஹாய்! நான் தான்!"

"என்ன, பத்திரமா ஹாஸ்டல் போய்ச் சேர்ந்திட்டியா?"

"நான் இப்ப தான் வந்தேன்!"

"இல்ல. சார் இன்னும் தூங்கல. எனக்காக முழிச்சுக்கிட்டு இருந்தார்."

"நீ நாளைக்கு பார்க் வந்திடற இல்ல?"

"என்னது? எந்த பார்க்கா?ம்.. பனகல் பார்க்!"

"பின்ன தெரியாத மாதிரி கேட்டா?"

"ஆமா. அதே தான்..."

"வர மாட்டியா? என்ன, இன்னும் சண்டையை ஞாபகம் வெச்சிருக்கியா?"

"சரி! அது தான் தவுஸன்ட் டைம்ஸ் சாரி கேட்டுட்டன் இல்ல..."

"எனக்கும் கோபம் வரும். அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது!"

"ஏய் என்னடி! ரொம்ப ஓவரா பேச்சிட்டே போற! நீ தான் பரவால்லனு சொன்ன. அதனால தான் தொட்டேன். என்னவோ என்னோட வீக்னஸ் மாதிரி பேசற!"

"போடி எனக்கும் சொல்லத் தெரியும். குட்பை. குட்பை..."

எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. மானாமதுரை அழகிரிசாமியா இப்படிப் பேசியது? அப்பாவி போல் வந்தவனா இந்தப் போடு போடுகிறான்.? இதில் எனக்கு ரொம்ப குழப்பம் வந்த இடம் ஒன்று தான். அ.சாமி பேசிய வாக்கியங்கள் மட்டுமே எனக்குக் கேட்டன. அந்த பெண் பேசிய எதுவும் துளி கூட கேட்கவில்லை. காற்றே கொஞ்சமும் வீசாத சென்னையின் கொடும் இரவு நேரத்தில் மற்றொரு பாதி டயலாக் கேட்க முடியாமல் போனது ஆச்சரியமாக இருந்தது.

என்னதான் காதலியுடன் பேசுபவன் காற்றுக்கும் கேட்காத குரலில் பேசுவான் என்றாலும், அதற்காக இவ்வளவு கோபம் கொண்டு ஒருவன் கத்தும் போது, எதிர் முனையில் இருந்தும் அதே அளவிற்கு ஒரு கத்தல் இருந்திருக்க வேண்டும். ஆனால் கேட்கவே இல்லை.

எனக்கு வந்த சந்தேகம் உரக்க தன் குரலை எழுப்பியது.

உண்மையில் அழகர்சாமிக்கு காதலி என்று ஒருவள் இருக்கிறாளா? இல்லை இது ஏதாவது மெண்டல் டிஸ் ஆர்டரா? அவனாகவே காதலி என்று ஒரு பெண் இருக்கிறாள் என்று முடிவு செய்து கொண்டு கற்பனை உலகில் வாழ்கிறானா?

அன்று இரவு முழுதும் அமர்ந்து யோசித்துக் கொன்டிருந்தேன்.

பதினைந்து சிகரெட்டுகள், முப்பது பெக் ஜானி வாக்கர் என்று செலவிட்டுக் கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுத்ததில் அந்த எண்ணம் சரி என்றே தோன்றியது.

ழகர்சாமி. மானாமதுரை என்ற டவுனில் இருந்து வருகிறான். அவனுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருந்து உள்ளது. தன் லுக் சிட்டி இளைஞன் போல் இல்லை. தன்னால் அவர்கள் போல் ஆங்கிலம் பேச முடியவில்லை. தான் பார்க்கும் அழகிய இளங்கள் பெண்கள் இவன் பக்கம் திரும்பக்கூட இல்லை. இவற்றை எல்லாம் எண்ணி எண்ணி, குமைந்து, குழம்பி, ஏதோ ஒரு நிலையில் மூளை குழைந்து ஒரு காதலியை சிருஷ்டித்துக் கொண்டான். அவளுடனே வாழ்கிறான். அவளுடனே ஊர் சுற்றுகிறான். அவளை எனக்கு அறிமுகம் செய்து வைக்க நினைத்த நிகழ்வுகள் ஒன்று கூட பலிக்கவில்லை. என்ன காரணம்? அவளுடனே சண்டை வேறு போடுகிறான்.

சில விஷயங்கள் செய்தால்,என் முடிவு ருசுப்படுத்தப்படும்.

மெல்ல, மெல்ல அவனது அறைக்குள் நுழைந்தேன். தலையணையைத் தலைக்கு கீழ் அழுத்தி, தூங்கிக் கொண்டிருந்தேன். அவனது மணிபர்ஸ் டேபிள் மீது, 'ஆ'வென வாய் பிளந்து கிடந்தது. மெதுவாக அதை எடுத்துப் பிரித்து தேடினேன். நான் தேடியது கிடைத்தது. சற்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு, மனதிற்குள் குறித்துக் கொன்டேன். அவனது செல்போன் தலைகீழாய்த் தூங்கிக் கொண்டு இருந்தது. ரீசன்ட் கால் லிஸ்டில் இருந்த கடைசி கால்ட் நம்பரைக் கையில் குறித்துக் கொன்டு வெளியே வந்தேன்.

எனது செல்போனில் அந்த எண்ணை அழைத்தேன்.

"The Number U r trying to reach does not exist!!!"

(தொடரும்.)

No comments: