Monday, April 21, 2008

பாப்பா போட்ட தாப்பா...

பாப்பா போட்ட தாப்பா...

இருவரும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டோம்.

பிளாஸ்டிக் நார் பைகளில் புத்தகங்களையும், கழுவி வைத்து வெயிலில் காயப் போட்ட டிபன் பாக்ஸ்களையும், கழட்டிப் போட்டு சுருட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளிச் சீருடைகளையும், காம்பஸ் ஆணிகளால் பொறிக்கப்பட்டிருந்த பெஞ்சுகளையும், 'விளையாட்டு வகுப்பு' என்று பெரிதாக எழுதியும், 'மொட்டு :38 மலர்:35" என்று வலது ஓரத்தில் எழுதி இருந்த ப்ளாக் போர்டையும், சுண்ணாம்புக் காரையைப் பெயர்த்து தொங்கிய காந்தி புகைப்படத்தையும் தவிர்த்து வகுப்பறையில் நாங்கள் இருவர் மட்டும் இருந்தோம்.

மாஞ்சள் சாணி பேப்பாரில் இருந்தது 'குயில்'. முன் அட்டையில் ஜெயமாலினி உதட்டைக் கடித்து கீழ் பார்வை பார்த்தார். அதன் பின்புறம் புள்ளி புள்ளிகளாய்த் தெரிந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் சோப்பு நுரைகளில் நெஞ்சு தாழ படுத்திருந்த நடிகை பெயர் தெரியவில்லை. முதல் பக்கத்திலேயே கதை ஆரம்பித்து விட்டது.

இருவரும் எச்சில் விழுங்கிக் கொண்டோம்.

நெற்றியில் வியர்வை பூத்திருந்தது. உள்ளங்கைகள் வேர்த்திருந்தன. கம்பி ஜன்னல்கள் வழியாக அனல் காற்று அடித்தது. எல்லா இடத்திலும் வேர்த்தது.

சுரேஷ் மெதுவாகப் படித்தான். ஒவ்வோரு வாக்கியத்தின் மேலும் விரல்களால் தடவியபடி படித்தான். பாடப் புத்தகம் போல்...! அப்படிப் படித்தால் தான் அவனுக்குப் படிக்க வரும்...!

"பாப்பா பதினெட்டு வயது கிளி. அவள் பண்ணையாரின் ஒரே மகள். அன்று குளிப்பதற்காகப் பம்பு செட்டுக்குச் சென்றாள். அப்போது கட்டிளம் காளையான கோபால் அங்கே...."

"டேய்..! என்னடா பண்ணிட்டு இருக்கீங்க , ரெண்டு பேரும்..?"

ஒரு அதட்டல் கேட்டது.

அப்படியே விதிர்விதிர்த்துப் போய் விட்டோம். சண்முகவேல் ஐயா. முறுக்கு மீசையும், முங்கில் பிரம்பும், தோளில் துண்டும், சட்டையின் கீழ் இரண்டு பட்டன்களைத் தள்ளிக் கொண்டு பிதுங்கும் தொப்பையுமாக வந்து நின்றார். கணித ஆசிரியர்.

"விளையாட்டுப் பீரியட்னு போட்டிருக்கு..! ரெண்டு பேரும் போகாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?" கேட்டுக் கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்து அருகில் வந்தார்.

அனிச்சை செயல் போல் எழுந்து நின்றோம். கை கால்கள் நடுங்கத் தொடங்கின. இன்னும் வேர்வை அதிகமாகியது. நாக்கு அப்படியே உலர்ந்து போய் விட்டது. இதயம் துடிப்பது துல்லியமாகக் கேட்டது.

சுரேஷ் அப்போது ஒரு வினோதமான காரியம் செய்தான்.

தடாலென கீழே விழுந்தான். தரையில் அல்ல. நின்றிருந்து அப்படியே டெஸ்க்கில் தலை விழுந்து, பெஞ்சுக்கும், டெஸ்க்குக்கும் இடையே இருந்த இடைவெளியில் உடல் விழுந்து, அப்படியே படர்ந்தான். சார் இன்னும் வேகமாக வந்தார். பெஞ்சில் இருந்த ஆணியின் தலைநுனி பட்டு கீறல் விழுந்து இரத்தம் வர ஆரம்பித்தது.

"என்னடா பிரச்னை..?" பதற்றத்தோடு கேட்டார்.

இடையில் ஸ்கூல் பேக்குகள் இருந்ததால் அவரால் அவன் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. நான் பார்த்து குனிகையில் என்னைப் பார்த்து கண்ணடித்தான். புரிந்து கொண்டேன். கையில் இருந்த புத்தகம் அவன் ஒருக்களித்துப் படுத்திருந்ததால், அப்படியே வலது உடம்போடு ஒட்டிக் கொண்டது.

"சார்..! சார்..! இவனுக்கு அடிக்கடி மயக்கம் வரும் சார். அதுவும் இப்ப சம்மர்ல, வெயிலில நடந்தாலே டீஹைட்ரேட் ஆகி மயங்கி விழுந்திடுவான் சார். அதான் இன்னிக்கு கேம்ஸ் பீரியடுக்குப் போக வேண்டாம்னு இங்கயே இருந்திட்டான் சார். அவனுக்குத் துணைக்கு நானும் இருக்கேன். இப்போ திடீர்னு உங்க மிரட்டல்ல பயந்து மயங்கி கீழ விழுந்துட்டான்... இப்ப என்ன சார் பண்றது...?" நடிப்பாகவே இருந்தாலும், சுரேஷின் நெற்றியில் இருந்து ரத்தம் கோடாய் வழிவதைக் கணடு பதற்றம் இயல்பாகவே வந்தது.

"சரி..! சரி..! பேசிட்டு இருக்காத..! அவனைத் தூக்கு. ஃபர்ஸ்ட் எய்ட் ரூமுக்கு கூட்டிட்டு போவோம்..!"

"சார்! நான் கூட்டிட்டு வர்றேன் சார்..! நீங்க போய் ஃபர்ஸ்ட் எய்ட் ரெடி பண்ண சொல்லுங்க சார். நீங்க சொன்னா தான் கேப்பாங்க. நானே போய் சொன்னா, விக்ஸ் சாப்பிட வர்றதா நெனச்சிட்டு அய்யாசாமி துரத்திடுவார்...!"

"சரி..! நான் போய் சொல்லிட்டு, அவனை வரச் சொல்றேன்.." என்றபடி சுரேஷை ஒருமுறை பார்த்தபடி வெளியேறினார்.

அடுத்த கணம் சுரேஷ் எழுந்து உட்கார்ந்தான். என் கர்ச்சீப்பை எடுத்து ரத்தத்தைத் துடைத்தேன். பெஞ்சின் மீது ஏறி, புத்தகத்தை கூரைகளின் இடுக்கில் செருகி வைத்தான்.

"டேய்..! தப்பிச்சோம்டா..! கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தது, மானமே போயிருக்கும். கடவுளாப் பார்த்து நமக்கு வார்னிங் குடுத்திருக்காருடா. இனிமேல் இந்தத் தப்பெல்லாம் பண்ணக் கூடாது..." என்றேன்.

"ஆமாண்டா..! இனிமேல் இந்த மாதிரி புக்கெல்லாம் படிக்கக் கூடாது. ஸ்கூல் விட்டவுடனே இந்தப் புக்கை பாரிகிட்ட திருப்பிக் குடுத்திடணும்...!". பாரி +2 மாணவன். சீனியர்.

"சரி..! சரி...! படுத்துக்கோ..! அய்யாசாமியும், மேக்ஸும் வர்றாங்க..!ரொம்ப வலிக்குதாடா..?"

"இல்ல..! இப்ப பரவால்ல...!"

"பரி..! பர்ஸ்ட் ஷோ ரத்னால அலெக்ஸாண்ட்ரியா போட்டிருக்கான். வர்றியா போகலாம்.."

"என்னடா படம் அது..?"

"சூப்பர் படம்டா..! நேத்து தான் மார்க்கெட் போகும் போது போஸ்டர் பார்த்தேன். கரெக்டான எடத்துல போஸ்டர் ஒட்டி மறைச்சிட்டான்டா..! அப்பயும் நெறய கில்பான்ஸ் இருந்ததுடா..! நீ வர்ற இல்ல...! இன்னிக்கு காலையில பதினோரு மணிக்கு..!"

"டேய்..! போன வாரம் தான் புக் படிச்சு மாட்டிக்க வேண்டியது. தப்பிச்சோம். இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் பண்றதில்லைனு சத்தியம் பண்ணிட்டோம். மறந்திடுச்சா..?"

"அப்படி சத்தியம் பண்ணலயே..! புக் படிக்கறதில்லைனு தான் சத்தியம் பண்ணினோம். படம் பாக்க மாட்டோம்னு பண்ணலயே..!"

"அடப்பாவி...!"

"நீ வராட்டி போ..! இந்த தடவ நாம மாட்டுவோம்னு தோணல...!"

"எப்படிடா சொல்ற..?"

"அங்க பாரு லைன்ல யாரு நிக்கறாங்கனு...!"

பார்த்தேன். ரெண்டு பேர் பளிச்சென தெரிந்தார்கள். சண்முகவேல் சாரும், பாண்டியன் சாரும்...!

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

2 comments:

சென்ஷி said...

ஹி.. ஹி...

இங்க எந்த பழமொழி யூஸ் செய்ய தெரியலைண்ணே... நீங்க எங்கயோ போயிட்டீங்க... :)

இரா. வசந்த குமார். said...

அன்பு சென்ஷி... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்!